முத்தலாக் தடை மசோதா மக்களவையில் கடந்த 25-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. மசோதா தொடர்பான விவாதத்தின்போது, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும் வெளிநடப்பு செய்து மசோதா வெற்றி பெற உதவினர். அதேபோல, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால் மசோதா நிச்சயமாக மாநிலங்களவையில் நிறைவேறியிருக்காது.

muslim women 620ஆனால் இப்படியான ஒரு சட்டத்தை முற்போக்குவாதிகள் ஆதரிக்க வேண்டுமா, இல்லை எதிர்க்க வேண்டுமா என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதைப் பார்க்க முடிகின்றது. பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லிக் கொள்ளும் முற்போக்குவாதிகள் இந்த மசோதாவை எதிர்ப்பது தேவையில்லாததாகும். ஏற்கெனவே சாயிரா பானு வழக்கில் முத்தலாக் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தற்போது கொண்டு வந்திருக்கும் மசோதா மூலம் உரிமையியல் பிரச்சனையாக இருந்த முத்தலாக்கை குற்றவியல் பிரச்சனையாக மாற்றியிருக்கின்றார்கள். இதன் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆண் 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்துப் பெண்களின் உரிமைகளைப் பார்ப்பனியம் காலில் போட்டு மிதிக்கின்றது என்பது எந்தளவு உண்மையோ, அதே அளவுக்கு இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை இஸ்லாம் காலில் போட்டு மிதிக்கின்றது என்பதும் உண்மை. பெண் அடிமைத்தனம் என்பது எல்லா மதங்களின் சொத்தாகவே உள்ளது. எல்லா மதங்களும் பெண்களை ஒரு பொருளாகவே பாவிக்கின்றன. அந்தப் பொருளை முழு கட்டுப்பாடு செய்யும் உரிமையும் ஆண்களுக்கே மதங்கள் வழங்குகின்றன. நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் பிரதிகளில் பெண்கள் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஆண்களின் குரலே ஒழிய பெண்களின் குரலல்ல. இதைக் கருத்தில் கொள்ளாமல் பெண்களின் உரிமையைப் பற்றி பேசுவது நிச்சயமாக அபத்தமானதாகும்.

சிறுபான்மையின மக்களுக்கு முற்போக்குவாதிகள் தரும் ஆதரவு என்பது அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதற்காகவும், அவர்களை மதத்தை வைத்து சிறுபான்மை என்று சொல்வது அயோக்கியத்தனம் என்பதற்காகவுமே தவிர, அவர்கள் கடைபிடிக்கும் மூட நம்பிக்கைகளுக்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் சொம்பு தூக்குவதற்காக அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பார்ப்பன பிஜேபி இப்படியான ஒரு மசோதாவை நிச்சயம் இஸ்லாமியப் பெண்களின் நலனை முன்னிட்டுதான் கொண்டு வந்திருக்கும் என்று விபரம் தெரிந்த யாருமே நம்ப மாட்டார்கள்.

குஜராத்தில் இஸ்லாமியப் பெண்களின் கருவறுத்துக் கொன்ற கூட்டத்திற்கு இஸ்லாமியப் பெண்கள் மீது அக்கறை என்று சொல்வதே ‘ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுதது’ போல்தான். நிச்சயமாக இது முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்று தீய நோக்கில்தான் கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்றாலும், இதன் மூலம் இஸ்லாமியப் பெண்களுக்கு உண்மையில் ‘முத்தாலக்’ என்ற கொடிய வழக்கத்தில் இருந்து விடுதலை கிடைத்தால் அதை முற்போக்குவாதிகள் ஏற்றுக் கொள்வதுதான் முறையாகும்.

ஆனால் சில முற்போக்குவாதிகள் ஆண்கள் பெண்களை மணவிலக்கு செய்ய எப்படி ‘தலாக்’ இருக்கின்றதோ, அதே போல பெண்களும் ஆண்களை மணவிலக்கு செய்ய ‘குலாஅ’ இருக்கின்றது; எனவே தலாக் முறை சரியானது என சொல்லி அதை ஆதரிக்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பெண்கள் குலாஅ சொன்னாலும், கணவனுக்கு மணவிலக்கு தர விருப்பம் இல்லை என்றால் அதனால் எந்தப் பயனும் கிடையாது. தலாக், குலாஅ இரண்டிலுமே மணவிலக்கு என்பது ஆண்கள் சார்ந்தே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே முத்தலாக்கை சட்டப்படி தடுப்பதும், அதைக் கிரிமினல் குற்றமாக அறிவிப்பதும் வரவேற்கத்தக்கதே ஆகும். ஆனால் முத்தலாக்கை தடை செய்த இதே கும்பல்கள் சாஸ்திரத்தை காரணம் காட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதை உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்பும் தடுத்ததையும், கோயிலுக்குச் செல்ல முயன்ற பெண்களைத் தாக்கியதையும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு‌வயது சிறுமி ஆசிபாவை பாலியல் வன்முறை செய்து கொடூரமாகக் கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடவும் செய்த இந்தக் கும்பல் இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதைப் பார்த்து நாடே கைகொட்டி சிரிக்கின்றது. இன்றவுளம் பெண்களின் மாதவிடாயைக் காரணம் காட்டி அவர்கள் மீது தீண்டாமையைக் கடைபிடிக்கும் பார்ப்பனியம் கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் இஸ்லாமியப் பெண்களின் உரிமைக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றது.

முத்தலாக்கில் முற்போக்குவாதிகள் எடுக்க வேண்டிய நிலை என்பது இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளை நிலைநாட்ட முத்தலாக் தடை மசோதாவைக் கொண்டுவந்த பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிமைகளிடம் சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதைக் தடுக்கும் பொறுக்கிகளை சிறையில் அடைக்கவும், மாதவிடாயைக் காரணம் காட்டி அவர்களை இழிவு செய்யும் ஆணாதிக்கவாதிகளை தண்டிக்கவும், விவாகரத்து, ஜீவனாம்சம் போன்றவற்றை எல்லா மதத்தைச் சார்ந்த பெண்களுக்கும் ஒன்று போலவே இருக்கவும் தனிச்சட்டம் கொண்டுவர வற்புறுத்த வேண்டும் என்பதே. இதன் மூலம் பிஜேபியின் போலி பெண்ணுரிமை வேடத்தை மக்கள் முன் நம்மால் அம்பலப்படுத்த முடியும். அதைவிட்டுவிட்டு முத்தலாக்கை ஆதரிப்பது என்பது இஸ்லாமியப் பெண்களுக்கு தெரிந்தே முற்போக்குவாதிகள் செய்யும் துரோகம் ஆகும்.

- செ.கார்கி

Pin It