காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் ஆர்டிகிள் 370 மற்றும் 35 ஏ-வை மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு தற்போது நீக்கியுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து லடாக் பகுதியை சட்டமன்றமற்ற யூனியன் பிரதேசமாகவும், மற்ற பகுதிகளை இணைத்து சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் பாசிஸ்ட்டுகளின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை ‘ஜம்மு பிரதான் பரிஷத்’ போன்ற இந்துத்துவ அமைப்புகள் 1949 இல் இருந்து வைத்து வருகின்றன. இந்த கோரிக்கைக்கு செவிகொடுத்ததால்தான் இந்திய அரசியல் நிர்ணய சபை, அரசியலைப்பு சட்டத்தை வடிவமைத்தபோது ஆர்டிகிள் 370 இல் காஷ்மீர் இந்தியாவில் இருக்கும் வரை அந்த மாநிலத்திற்கு தனி அந்தஸ்து இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவுடன் இருப்பதா, இல்லை தனியாக இருப்பதா என்பதை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தர்கள், துரோகம் செய்தார்கள்.

kashmiri girl and soldiersஒருவேளை அன்றே பொதுவாக்கெடுப்பு நடத்தி இருந்தால் பெரும்பாலான காஷ்மீரிகள் இந்தியாவுடன் இணையவே விரும்பி இருப்பார்கள் என்றுதான் பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இன்று நிலைமை கைமீறிப் போய்விட்டது. இதற்குக் காரணம் இந்திய ஆட்சியாளர்களின் பாசிச நடவடிக்கையே ஆகும். அவர்கள் ஒருபோதும் காஷ்மீரிகளை நம்பியதும் கிடையாது, அவர்களுக்கு ஜனநாயகத்தைக் கொடுத்ததும் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் மூளைகளில் உறைந்து போயிருக்கும் இஸ்லாமிய வெறுப்பே ஆகும். அந்த வெறுப்புதான் இன்று வரையிலும் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடுவதற்குக் காரணமாக இருந்து வருகின்றது.

ஆர்டிகிள் 370-ன்படி இந்திய நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீர் மீது பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று அம்சங்களில் மட்டுமே அதிகாரத்தைப் பெற்றிருக்கும் எனவும், ஏதாவது ஒரு விவகாரம் இந்த மூன்றின் கீழ் வருகிறதா? இல்லையா? என்கிற சந்தேகம் எழுந்தால் இந்திய ஜனாதிபதி ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கத்தைக் கலந்து முடிவெடிப்பார் என்றும் கூறப்பட்டது. அது மட்டுமின்றி, இதர இந்திய மாநிலங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கத்திற்கு எந்தெந்த அதிகாரங்கள் இருக்குமோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சம்மதித்தால் அந்த மாநில விசயத்திலும், இந்திய அரசாங்கத்திற்கு ஒப்படைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு இருக்கும் என்று ஆர்டிகிள் 370 கூறுகிறது.

இதன்படி பார்த்தால் இதர மாநிலங்கள் விஷயத்தில் மத்திய அரசாங்க அதிகார எல்லைகளுக்கு உட்பட்ட ஏதாவது ஓர் அம்சம், ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசுக்கு இருக்கிற மூன்று அதிகார எல்லைகளுக்குள் வருகிறதா? இல்லையா? என்கிற விவாதம் தலைதூக்கினால், அதனைத் தீர்த்து வைப்பதற்கு மத்திய அரசாங்கம் மற்றும் அந்த மாநில அரசாங்கம் சம அந்தஸ்தில் அமர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக மாநில அரசாங்கத்தைக் கலந்தாலோசித்து மத்திய அரசே நிர்ணயிக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மத்திய அரசுக்கு முன்னுரிமை வழங்குவதாகிறது. அத்துடன் நிற்காமல் ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கம் சம்மதித்தால் இணைப்பு உடன்படிக்கையில் இல்லாத அம்சங்கள் மீதும் மத்திய அரசாங்கத்திற்கே அதிகாரத்தை ஒப்படைக்கலாம் என்றும் ஆர்டிகிள் 370 கூறுகிறது.

பிற்காலத்தில் மாநில அரசாங்கத்திலிருந்து அந்தச் சம்மதம் தடையின்றி கிடைக்கும் வகையில் இந்திய அரசாங்கம் பார்த்துக் கொண்டது. கண்டிப்பாக மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பவர்கள் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் அதிகாரத்திற்கு வரும் வகையில் பல மோசடியான செயல்களை அங்கு இந்திய ஆளும் வர்க்கம் செய்து வந்தது. இன்று வரையிலும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ரா போடும் நபர்கள் மட்டுமே அங்கு நிரந்தரமாக ஆட்சி புரிய அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம். இன்று பிஜேபியால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள பலர் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனெவே ஆர்டிகிள் 370ல் பல மாற்றங்களை இந்திய ஆளும் வர்க்கம் செய்து அதன் சாரத்தை சிதைத்துள்ளது. 1964ல் மாநில அரசின் ஒப்புதலுடன் வரிசையாக சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பக்ஷி குலாம் முகமத் பிரதமராக இருக்கும்போதே இது துவங்கிவிட்டது. சாதிக் தலைமையில் இது முழுமையடைந்தது. இவற்றின் விளைவாக அதுவரை காஷ்மீர் மாநில அதிபரை ஜனாதிபதி என்று அழைப்பது நிறுத்தப்பட்டு கவர்னர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது . மேலும் கவர்னரை ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்வு செய்யாது என்றும், இந்திய ஜனாதிபதியே நியமிப்பார் என்றும் மாற்றப்பட்டது. அதே போல அந்த மாநிலப் பிரதமரையும் முதலமைச்சர் என்றே அழைக்க வேண்டும் என மாற்றப்பட்டது. மாநில அரசுகளைக் கலைத்து மத்திய ஆட்சியைத் திணிக்கும் ஆர்டிகிள் 356 ஜம்மு காஷ்மீருக்கும் இனிமேல் பொருந்தும் என்றும், ஜம்மு காஷ்மீரிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் அதுவரை இருந்தது போல் மாநில சட்டசபை உறுப்பினர்களால் அல்லாமல் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் மாற்றப்பட்டது. இது நாட்டின் மற்ற மாநிலங்களில் இருக்கும் அரசியலமைப்பு முறை ஆகும்.

ஆர்டிகிள் 370 என்பது பெயரளவுக்குக் கூட எந்த சிறப்புரிமையையும் காஷ்மீருக்கு வழங்கவில்லை என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும். ஏறக்குறைய 7 லட்சத்து 50 ஆயிரம் துருப்புகளை அதாவது 7 பேருக்கு ஒரு ராணுவ வீரரை நிறுத்திவிட்டு சிறப்புரிமையைப் பற்றி பேசுவது கேலிக்கூத்தானது ஆகும். இல்லாத ஒரு சிறப்புரிமையை எப்படி பறிக்க முடியும்? அந்த மக்களுக்கு குறைந்தபட்ச ஆறுதல் என்றால், அது 35 ஏ சட்டப்பிரிவு மட்டுமே. இதன் மூலம் காஷ்மீரிகள் தங்கள் மண்ணையாவது அந்நியர்களிடம் இருந்து இதுவரை காத்து வந்தார்கள். தற்போது அதற்கும் குழி பறிக்கப்பட்டிருக்கின்றது. இனி காஷ்மீரின் மண் உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காக திறந்து விடப்படும்.

காஷ்மீரின் மாநில அந்தஸ்த்தைப் பறித்ததன் மூலம் அங்கே தங்களின் கைக்கூலிகள் யாரையாவது ஆளுநராக நியமித்து (ஏற்கெனவே அப்படித்தான் நியமித்திருக்கின்றார்கள்) ஒட்டுமொத்த காஷ்மீரின் அதிகாரத்தையும் பறித்து, இந்திய ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வழி செய்யப்பட்டுள்ளது. லடாக்கை தனியாகப் பிரித்ததன் மூலம் லடாக் முஸ்லிம்களை காஷ்மீர் முஸ்லிம்களிடம் இருந்து தனியே பிரித்து காஷ்மீர் விடுதலைக்காகப் போராடும் காஷ்மீரிகளின் பலத்தை திட்டமிட்டே குறைத்திருக்கின்றது பாசிச பாஜக அரசு. இதன் மூலம் ஜம்முவில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களும், காஷ்மீரில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களும் ஒன்றாக வைக்கப்படுவதால் மிக எளிதாக பாஜக காஷ்மீரில் வெற்றி பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பாசிஸ்ட்கள் நினைப்பது போலவே வரலாறு அமைந்துவிடுவது கிடையாது. தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு உரிமையும் மக்களுக்கு மட்டுமே உள்ளது. அதிலும் காஷ்மீரிகள் இந்திய ஆளும் வர்க்கத்தை எப்படி கையாள்வது என்பதை பல தசாப்தங்களாகக் கற்றவர்கள். அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது என்பதை ஒரு வாழ்க்கை முறையாகவே வைத்திருப்பவர்கள். அதனால் பாசிச பாஜகவின் இந்த கோழைத்தனமான செயலுக்கு எதிராக காஷ்மீரிகள் சரியான எதிர்வினையை ஆற்றுவார்கள்.

- செ.கார்கி

Pin It