farmer 273விவசாயம் என்பதை கார்ப்பரேட்கள் அழித்து விடுவார்கள், ஆட்சியாளர்கள் சிதைத்து விடுவார்கள் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. விவசாயம் உலகம் அழியும் காலம் வரை நிலைத்திருக்கும்.

எதிலாவது லாபம் பார்க்க வேண்டும் என்பதே கார்ப்பரேட்களின் தாரக மந்திரம். 700 கோடி மனிதர்களும் தினமும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை தயாரிக்கும் விவசாயம் என்பதை ஒருங்கிணைத்து பெரும் அளவில் செய்யும் போது ஏற்படும் இலாபம் என்பது தகவல் தொழில்நுட்பம் , கனிம வளக் கொள்ளை ஆகியவற்றில் கிடைக்கும் இலாபங்களை விட பல மடங்கு அதிகம். (விவசாயம் என்பதில் அனைத்து வகை உணவுப் பொருட்களும் அடங்கும்)

உலகம் முழுவதும் இந்த விவசாயங்களில் 85% சாதாரண விவசாயக் கூலிகளிடமும், நில உடைமையாளர்களான விவசாயிகளிடமும்தான் உள்ளன. இவைகளை அவர்களிடமிருந்து பெரும் கார்ப்பரேட்களிடம் கொண்டுபோய் கொடுக்கும் வேலையை உலக வர்த்தக மையமும், அதன் உறுப்புநாடுகளும் செய்கின்றன.

அதனை செயல்படுத்தும் விதத்தில்தான் சிறுக சிறுக பல்வேறு வகை அழிப்புத் திட்டங்கள் மூலம் விவசாயிகளை விவசாயத்தை விட்டே துர‌த்தும் வேலையை கார்ப்பரேட்களும், அதற்கு ஊழியம் செய்யும் அரசும் செய்கின்றன.

இப்போது நடக்கும் பெரும் சதிச் செயல் என்னவென்றால் விவசாயத்தை அழிப்பதல்ல, விவசாயிகளை அழிப்பது! உலகம் முழவதும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் அனைத்து வகையான விவசாயிகளையும் அவர்களுக்கான மானியங்கள், கடன்கள், அரசின் இன்னபிற உதவிகளை நிறுத்துவதன் மூலம் மேற்கொண்டு அந்தத் தொழிலை செய்யவிடாமல் தடுக்கின்றன.

இதற்காக பெரும் கூட்டமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை மட்டும் நடந்தால் உலக வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிப்பாக இவை மாறும். ஆம் பல கோடிக்கணக்காண விவசாயிகள் விவசாயத்திலிருந்து விரட்டி அடிக்கப்படுவர். நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை கார்ப்பரேட்கள் முடிவு செய்வார்கள். அவை என்ன விலை சொன்னாலும் நாம் வாங்கியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். இதற்காக ஊருக்கே உணவளித்த விவசாயி அன்றாட சோத்துக்காக கூலியாக அல்ல‌ல்படும் நிலைக்குத் தள்ளபடுவான். உலகம் முழுவதும் இதுதான் கதி.

இதைத் தடுக்க ஒரே வழி விவசாயத்தை விவசாயிகளிடமருந்து பிடுங்க நினைக்கும் கார்ப்பரேட்களை விரட்டியும், அதற்குத் துணைபோகும் உலக வர்த்தக மைய உடன்படிக்கையிலிருந்து நம் நாடு வெளியேறும் வகையில் போராட்ட‌ங்களை மக்கள் கட்டமைக்க வேண்டும்.

- திராவிடன் தமிழ்

Pin It