மோடி ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் அதன் பிறகு இந்தியா எல்லாவற்றிலும் நம்பர் 1 நாடாக மாறிவிடும் என்றும், இந்திய மக்களை பிடித்த நூற்றாண்டு தரித்தரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றும் கிளர்ச்சி நிலையில் மோடிக்கு ஓட்டு போட்ட தேசபக்தர்கள் எல்லாம் ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒன்றும் நடக்கவில்லையே என வெறித்து பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் மோடி சாதித்துக் காட்டி இருக்கின்றார். பத்துப் பரதேசிகள் ஒன்றாக சேர்ந்தாலே ஊரை அடித்து உலையில் போட கணக்கு போடுவார்கள், நூற்றுக்கணக்கான பரதேசிகள் ஒன்றாக சேர்ந்தால் என்ன நடக்குமோ, அதுதான் நடந்திருக்கின்றது. காலம் காலமாக மக்களை ஏமாற்றியே வயிறு வளர்த்த கூட்டத்திடம் ஆட்சியை ஒப்படைத்தால் அது போன்ற உழைப்புறிஞ்சிகள் முதலில் தங்களையும், தங்களைத் தாங்கிப் பிடிக்கும் பரதேசி மடத்தையும் அல்லவா செழிக்க வைப்பார்கள். காரணம் இவர்கள் எல்லாம் காவி உடை தரித்து இத்தனை காலம் என்ன மாதிரியான சமூக சேவைகளை செய்து கொண்டிருந்தார்கள்? கோயிலில் உண்ட கட்டி வாங்கித் தின்பது, சிலை திருடுவது, அம்மணமாக கும்பமேளாவில் கொட்டம் அடிப்பது, ஜோசியம் பார்ப்பது, பில்லி சூனியம் வைப்பது, கஞ்சா அடிப்பது, கள்ள நோட்டு அடிப்பது, பாலியல் பலாத்காரம் செய்வது, மாமாவேலை பார்ப்பது, பிட்டு படத்தில் நடிப்பது, ஹவாலா மோசடியில் ஈடுபடுவது இதைத்தானே செய்து கொண்டிருந்தார்கள். இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இத்தனை ஆண்டுகளாக மதத்தின் பெயரால் செய்து கொண்டிருந்த அயோக்கியத்தனங்களை தற்போது சட்டத்தின் துணையுடனும், அதிகாரத்தின் துணையுடனும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

modi head downஐந்து ஆண்டுகளில் காவி பயங்கரவாதிகள் எதில் எல்லாம் முதலிடம் பெற்றிருக்கின்றார்கள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1) அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு விவரங்களை, ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms- ADR) ஆய்வு செய்து இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைத் தவிர மொத்தம் ஆறு தேசியக் கட்சிகள் 2017-2018 ஆம் ஆண்டு பெற்ற மொத்த வருவாய் 1,198.76 கோடி ரூபாயாகும். இதில், 1,027.34 கோடி ரூபாயை –பாஜ.க மட்டுமே பெற்றுள்ளது. மற்றமுள்ள தேசியக் கட்சிகளான பகுஜன் சமாஜ் 51.69 கோடியும், தேசியவாத காங்கிரஸ் 8.15 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 104.85 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் 5.17 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.55 கோடியும் பெற்றுள்ளன. தேர்தல் நிதியை முறைகேடாகப் பெறுவதற்கென்றே பாஜகவால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் அந்தக் கட்சியே அதிகபட்சமாக 210 கோடியைப் பெற்றுள்ளதாக ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது.

2) சென்ற ஆண்டு ஏ.டி.ஆர் இந்தியாவில் மிகப்பெரிய ஐந்து கட்சிகள் வாங்கிய நிதி குறித்து ஆய்வு முடிவுவை வெளியிட்டது. அதில், பாஜக 2987 பெருநிறுவனங்களிடம் இருந்து 705.81 கோடி நிதி பெற்றுள்ளதாகத் தெரிவித்தது. காங்கிரஸ் சுமார் 167 கார்ப்பரேட்டுகளிடம் இருந்து 198.16 கோடியும். சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் 50 பெருநிறுவனங்களிடம் இருந்து 50.73 கோடியும், மார்க்ஸிஸ்ட் கட்சி 1.89 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 நிறுவனங்களிடம் இருந்து 18 லட்சம் ரூபாயும் பெற்றதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்த 5 கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியில் சுமார் 73.77% நிதி பாஜக மட்டுமே பெற்றுள்ளது தெரிய வந்தது. ஏன் கார்ப்ரேட்டுகள் தொடர்ந்து பாஜகவுக்கு பெருமளவு நிதி அளிக்கின்றார்கள் என்பதற்கு பெரிய விளக்கம் எல்லாம் தேவையில்லை, குறிப்பிட்ட ஒரு நாய்க்கு மட்டும் எதற்காக எலும்புத் துண்டுகள் அதிகம் போடப்படுகின்றன எனத் தெரிந்தவர்களுக்கு.

3) கார்ப்ரேட்டுகளிடம் இருந்து பிச்சை எடுப்பதில் மட்டுமே பாஜக முதலிடம் பிடித்திருப்பதாக நாம் நினைத்து, கடந்து சென்றுவிடக் கூடாது. அப்படி எடுக்கும் பிச்சையைப் பற்றி மக்களை சிந்திக்க விடாமல் சமுதாயத்தில் வெறுப்பை ஏற்படுத்தும்படியான கீழ்த்தரமான கருத்துக்களைப் பேசி கலவரத்தைத் தூண்டி விடுவதிலும் பிஜேபிதான் முதலிடம். நாடு முழுவதும் 15 எம்பிக்கள் மற்றும் 43 எம்.எல்.ஏக்கள் உட்பட 85 பேர் மீது இது போன்ற வழக்குகள் உள்ளன. அதில் 27 பேர் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

4) மேலும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு 1,580 எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அதில் 48 எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றசாட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. அதில் 35 பேர் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதன் மூலம் நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக குற்ற வழக்குகளை எதிர்கொண்டவர்கள் அதிகம் இருக்கும் கட்சி என்ற பெருமையையும் பிஜேபி பெற்றுள்ளது.

5) இது மட்டுமல்ல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளம்பரம் கொடுப்பதிலும் பிஜேபியே முதலிடம் பிடித்திருக்கின்றது. BARC (Broadcast Audience Research Council) வெளியிட்டுள்ள பட்டியலின் படி நவம்பர் 10-16 தேதிகளுக்குள் சேனல்களில் வெளியான விளம்பரங்கள் பட்டியலில் பாஜகவே முதலிடம் பிடித்துள்ளது. அந்தக் கட்சி 22,099 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாகத் தான் கார்ப்ரேட் நிறுவனங்களான நெட்பிலிக்ஸ், டிரைவாகோ, சந்தூர் சாண்டல் சோப், டெட்டால் சோப் , அமேசான் பிரேம் வீடியோ, ஆயூர் பேஸ் கிரீம்,கோல்கேட் கமர்சியல் போன்றவற்றின் விளம்பரங்களே உள்ளன. இந்தப் பட்டியலில் பாஜகவைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சிகளின் பெயர்களும் இல்லை என்பது பிஜேபிக்கு கிடைத்த மற்றொரு புகழாகும்.

இது போன்று இன்னும் பிஜேபியின் சாதனைகளை எல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். மக்களின் நலனில் சிறிதாவது அக்கறை இருக்க வேண்டும் என்றால், வாழ்க்கையில் உழைத்துச் சாப்பிடுவதும், சாமானிய உழைக்கும் மக்களோடு மக்களாக இருந்து அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் தேவைகளையும் ,உணர்வுகளையும் புரிந்துகொண்டு பணியாற்றுவதும் முன்தேவையாகும். ஆனால் இதை எல்லாம் அருவருப்பாகப் பார்க்கும் சனாதன, சாதிய, மதவாதக் கும்பலிடம் ஆட்சியைக் கொடுத்ததற்கான விலையைத்தான் இன்று மக்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் மனங்களில் மனிதத்தைவிட பாசிசமே மேலோங்கி இருக்கின்றது. தனக்கு உண்ண உணவும், உடுத்த ஆடையும் கொடுத்த தன்னுடைய சக மனிதனை சூத்திரன் (பார்ப்பானின் வைப்பாட்டி மகன்) என்றும், பஞ்சமன் என்றும் கொச்சைப்படுத்தி கல்லாய் இருக்கும் கடவுளைக் கூட அவன் தொடக்கூடாது என விரட்டியடிக்கும் கீழ்த்தரமான மனநிலைதான், மழை வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்ட போதும், தமிழகம் கஜா புயலால் பேரழிவை சந்தித்த போதும் பாதிக்கப்பட்டவர்களின் நலனைப் பற்றி மயிரளவுக்குக் கூட கவலைப்படாமல் இரக்கமற்று நடந்துகொள்வதிலும் செயல்படுகின்றது. அதனால்தான் சிலைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைக்கும் பாசிச முட்டாள்களால் தன்னுடைய சகமனிதனின் உயிரைப் பற்றி கவலைப்பட முடியவில்லை.

ஊழல், அதிகார முறைகேடு, கார்ப்பரேட் அடிவருடித்தனம், பாலியல் வல்லுறவு போன்றவற்றில் தங்களை முதலிடத்தில் தக்க வைத்துக் கொண்ட பாசிச கும்பல் இந்தியாவை வறுமையிலும், பசியிலும், விவசாயிகள் தற்கொலையிலும், வேலைவாய்ப்பின்மையிலும், மத வன்முறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது. ஆனால் அவர்கள் இன்னும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள், மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ந்துகொண்டு இருக்கின்றது என்று. அவர்கள் சரியாகத்தான் சொல்கின்றார்கள், நாம் தான் தவறாகப் புரிந்துகொண்டோம். அவர்களின் மொழியில் இதற்குப் பெயர்தான் ‘வளர்ச்சி’.

- செ.கார்கி

Pin It