rss rally

“தமிழகத்தில் காவிக்கொடி பறக்கும், காவி மயமாகும்” - கோவையில் தமிழிசை பேசியதை பலரும் கனவு என்கின்றனர். பின்வரும் அம்சங்களைக் கவனியுங்கள்.

1. ஆர்எஸ்எஸ்க்கு உதவியாகச் செயல்படும் பள்ளிகள்- கல்லூரிகள்.

2. ஆர்எஸ்எஸ் அமைப்பால் இயக்கப்படும் முற்போக்கு/ அறிவியல்/ இளைஞர்களை ஈர்க்கும் சமூக சேவை அரசு சாரா நிறுவனங்கள்.

3. அறிவியல் போலத் தோன்றும் ஆனால், போலி அறிவியலால் மூடத்தனத்தைப் பரப்பும் அமைப்புகள்.

4. இதற்கென்றே பேஸ்புக் உள்ளிட்ட வலைமனைகளில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப விற்பன்னர்கள், மீம்ஸ்கள், பேஜ்கள்.

5. ஆர்எஸ்எஸ் ஆள் என்ற அடையாளமில்லாமல் செயல்படும் திரைப்பட நபர்கள் முதல் அதிகாரிகள் வரை.

6. கிராமங்களில் கோவில் புனரமைப்பின் பின் உள்ள ஆர்எஸ்எஸ் செயல்பாடு (சிறு தெய்வக் கோவில்களை பெருந்தெய்வக் கோவிலாக்குவது) அதற்கான நிதி உதவி.. பல்வேறு சாதிகளுக்குள்ளும் ஊடுருவல்.

7. சாதி அமைப்புகளுக்குள் ஊடுருவல். குறிப்பாக பார்ப்பன சிந்தனை கொண்ட தலித்/ பிற்படுத்தப்பட்ட சாதிச் சங்கங்கள் அமைத்தல்.

8. ஆளும் வர்க்க கட்சிகள் உட்பட பல கட்சிகளுக்குள்ளும் ஆர்எஸ்எஸ் நபர்களின் மாறுவேட இருத்தல்.

9. காவல்துறைக்குள் அவர்களின் ஊடுருவல்.

10. மற்ற பிற இருந்தாலும், மத்திய அரசதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் தில்லுமுல்லுகள். இருக்கும் நிலையில் தனக்குச் சாதகமான நிலையைத் தமிழகத்தில் ஏற்படுத்தச் செய்யப்படும் பிஜேபி தகிடுதத்தங்கள்.

(இப்போதைக்கு இந்தப் பட்டியல் போதும்)

காவி அமைப்புகள் பிற அமைப்புகள் போல அல்ல. எங்கோ இருக்கும் மையத் தலைமையில் ஆணையில் அவை செயல்படத் துவங்கும். கட்டளைக்கு ஏற்ப செயல்பாட்டை நிறுத்தும்.

பாரதீய ஜனதா கட்சி, பிராந்தியக் கட்சிகள் போல, அரசு அதிகாரத்தைப் பிடிப்பதற்கென்று அவசரப்படுவதில்லை. முதலில், சூழலை உருவாக்க வேண்டும் என்று அதற்காக வெகு நீண்ட காலம் பணியாற்றுவார்கள்.

எனவே, தமிழகத்தைக் காவி மயமாக்குவது பற்றிய தமிழிசையின் கருத்தை, பெரியார்/ அம்பேத்கார்/ கம்யூனிசம் போன்ற வார்த்தைகளைச் சொல்லி ஒதுக்கித் தள்ளாதீர்கள்.

காவி ஆயிரம் ஆண்டு பேய். அது சமூகத்தை விழுங்க நீண்ட காலம் நிதானமாகச் செயல்படும்.. நமது தோழர்கள் போல ஒரு சிறு நிகழ்ச்சியைப் பெரு வெற்றியாகப் பீற்றிக்கொள்ள மாட்டார்கள். வெற்றிபெற்றால் அப்புறம் சில நாள்/ வாரத்தில் சொல்ல முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.. நமது இறுமாப்புதான் அவர்களின் வாய்ப்பு.

- சி.மதிவாணன்

Pin It