பாசிச அரசு, சர்வாதிகார அரசு, அயோக்கியத்தனமான அரசு, வெட்கங்கெட்ட அரசு என எந்த வார்த்தையில் அழைத்தாலும் அந்த வார்த்தைக்குள் பொருந்தாமால் இன்னும் காத்திரமான ஒரு சொல்லுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முற்படுகின்றது மோடி அரசு. எந்தக் கூச்சமும் இல்லாமல், இன்று நடுத்தெருவில் வந்து அம்மணமாய் தனது பார்ப்பன பயங்கரவாதக் கூத்தை அரங்கேற்றி இருக்கின்றது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் அகந்தையில், ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் சுயாட்சி உரிமையையும் பறித்து, அந்த மாநில மக்களின் உணவுத்தட்டில் கொண்டுவந்து தன்னுடைய பார்ப்பன அசிங்கத்தைக் கொட்டியிருக்கின்றது. மாட்டு மூத்திரத்தைக் குடித்து மாட்டுச்சாணத்தைத் தின்னும் பிற்போக்கு முட்டாள் கும்பல் ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணவுக்குள் ஊடுறுவி, தனது அழுகி நாற்றமடிக்கும் சனாதன தர்மத்தை நிலைநாட்டி இருக்கின்றது. ஏற்கெனவே தான் ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் , உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சிக்குத் தடைவித்த பயங்கரவாதக் கும்பல் இன்று நாடு முழுவதும் அதைச் சூழ்ச்சிகரமான முறையில் தடை செய்ய முயன்றிருக்கின்றது.

modi with cowஇந்து வெறியர்களை மகிழ்விக்க ரம்ஜான் மாதம் தொடங்கும் முன்னதாகவே இந்த அறிவிப்பை செய்திருக்கின்றது பார்ப்பன பயங்கரவாத மோடி அரசு. இதன் மூலம் அவர்கள் மாட்டிறைச்சியையும், ஒட்டகத்தின் இறைச்சியையும் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கி, குரூரமாக உள்ளுக்குள் அகமகிழ்ந்து கிடக்கின்றது. மாடு தானே புனிதம், அப்புறம் ஏன் ஒட்டகத்தின் இறைச்சிக்கும் சேர்த்துத் தடைவிதித்தார்கள் என்றால், மனு உணவுக்காக ஒட்டகத்தைக் கொல்வதை அன்றே தடைவிதித்து இருக்கின்றான் என்பதால்தான். ஆனால் இந்த முட்டாள் பார்ப்பனக் கும்பலுக்குத் தெரியாத ஒன்று ஒட்டகத்திற்குத் தடைவிதித்த மனு கூட பசுவைக் கொல்வதற்குத் தடைவிதிக்கவில்லை என்பதுதான். காரணம் பசுமாட்டின் ருசி அப்படி.

நாட்டில் வாழும் சாமானிய எளிய மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாடால் உடல் வலுவிழந்து எப்படி நாசமாய்ப் போனாலும் அதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் , தன்னைப் பதவியில் அமரவைத்த பார்ப்பனக் கும்பலுக்கு நன்றி விசுவாசமாக இந்தக் கொலைபாதகச் செயலை மோடி செய்திருக்கின்றார். நாட்டில் தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் மட்டும் அல்லாமல் பெரும்பான்மையான பிற்பட்ட சாதி மக்களும் கூட தங்களுடைய அசைவத் தேவையை மாட்டிறைச்சியை வைத்தே பூர்த்தி செய்துகொள்கின்றார்கள். ஒரு கிலோ ஆட்டிறைச்சியின் விலை 400 முதல் 500 வரை விற்கப்படுகின்றது. ஆனால் மாட்டிறைச்சி 200 முதல் 250 வரை விற்கப்படுகின்றது. இந்தியாவில் 80 கோடி மக்களின் சராசரி வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவு என்ற அப்பட்டமான உண்மையை பார்க்கும் போது மோடி அரசின் இந்த அறிவிப்பு இந்திய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய பார்ப்பன பயங்கரவாதத் தாக்குதல் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஒரு பக்கம் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் இன்னொரு பக்கம் இது ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளையும் படுகுழியில் தள்ளிவிடும் செயலாகும். ஏற்கெனவே இந்தியா முழுவதும் கடன் சுமை தாங்க முடியாமல் 3 லட்சம் விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்கள். மோடியின் இந்தப் பார்ப்பன பயங்கரவாத அறிவிப்பால் அவர்கள் மேலும் தற்கொலையை நோக்கித் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எதற்கும் பயன்படாத, பால் கொடுக்காத கிழட்டு மாடுகளையும், காளை மாடுகளையும் வைத்துக்கொண்டு விவசாயிகள் காலம் முழுவதும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு மோடி அரசு அவர்களைத் தள்ளியிருக்கின்றது. குறைந்த பட்ச பொருளாதார அறிவுள்ள எந்த மனிதனும் இது போன்ற ஈனத்தனமான செயல்களைச் செய்ய மாட்டான். டெல்லியில் போராடிய விவசாயிகளை அம்மணமாக்கி அழகுபார்த்த மோடி அரசு இப்போது அவர்களை நிரந்தரமாகவே அம்மணமாகத் துணிந்திருக்கின்றது.

நேரடியாக மாட்டிறைச்சிக்குத் தடை என்ற சொல்லத் தைரியமில்லாத மோடி அரசு மறைமுகமாக இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை விற்கத் தடைவிதித்திருக்கின்றது. சந்தையில் விற்பனைக்காக கால்நடைகளை கொண்டு வரும் விவசாயிகள் அவற்றை இறைச்சிக்காக விற்கவில்லை என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியை அளிக்க வேண்டுமாம். இது ஒன்றே போதும் இந்திய விவசாயிகளைப் பற்றிய மோடியின் மதிப்பீட்டைத் தெரிந்துகொள்ள. மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் இணைந்துகொள்ளும் அளவிற்கு இந்திய விவசாயிகள் கல்வியறிவு பெற்றிருந்தால் அவர்கள் ஏன் மோடி போன்ற அறிவிலிகளைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள்?

ஏதோ மாட்டை கடவுளாக வணங்கும் புனிதர்கள் போன்று இன்று கபட நாடகம் ஆடும் பார்ப்பன உயர்சாதியினரின் தாத்தன்களும் அவன்களின் தாத்தன்களும் அஸ்வமேதம், ராஜசூயம் போன்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான மாடுகளை நெருப்பில் பலியிட்டு நன்றாக வயிறுமுட்டத் தின்று தீர்த்ததை மறந்துவிட்டார்களா? இல்லை இன்று தன்னை மேல் சாதியாக காட்டிக்கொள்ளவும் மாட்டுக்கறி தின்னும் கோடிக்கணக்கான தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள், கிருஸ்தவ மக்களை கீழ் மக்களாகக் காட்ட போடும் கீழ்த்தரமான வேசமா என்பதை மானமுள்ள மனிதர்களாக இருந்தால் பார்ப்பன கேடிகளும் அவர்களை நக்கிப்பிழைக்கும் ஆதிக்க சாதி அடிமைகளும் சொல்ல வேண்டும். ஒரு ஆதாரம், இரண்டு ஆதாரம் இல்லை, நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் பார்ப்பன வேதங்களிலும், பார்ப்பன உபநிடதங்களிலும், பார்ப்பன புராணங்களிலும் கொட்டிக்கிடக்கின்றன - மாட்டிறைச்சியை பார்ப்பன கும்பல் வயிறுமுட்ட தின்றுத் தீர்த்ததைப் பற்றி. ஏன் மனுவும் கூட மதுபர்கம், சிரார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது மாட்டிறைச்சி உண்ணும் படி அறிவுரை கூறுகின்றார்.

பசுவை இன்று புனிதம் என்று கொண்டாடும் பார்ப்பனர்களும், மேல்சாதி இந்துக்களும் அதைக் கொல்லக்கூடாது என நாடுமுழுவதும் பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் பெரும் கலவரங்களை செய்துவருகின்றார்கள். தமிழிசையோ "மாட்டை இறைச்சிக்காக விற்கத்தான் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கறி தின்னத் தடை இல்லை" என தனது பார்ப்பன அடிவருடி அறிவை காண்பிக்கின்றார். ஆனால் பசு புனிதமானது என சொல்லும் சாஸ்திரங்கள் அனைத்தும் பசுவின் வாயை மட்டும் அசுத்தமானது எனச் சொல்கின்றன. விஷ்ணு, யாக்ஞவல்கியர், அங்கிரஷர், பராசரர், வியாசர் போன்றவர்கள் எழுதிய சாஸ்திர நூல்களிலும் இதை வலியுறுத்துகின்றனர். இதுதான் பார்ப்பன உச்சிக்குடுமி பேர்வழிகளின் பசு புனிதம் பற்றிய அறிவு. பசுவின் வால் புனிதமானது, அதன் உடல் புனிதமனது, ஆனால் வாய் மட்டும் அசுத்தமானது.

வரலாற்றில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான ஆதாரங்களை வைத்து இந்துத்துவவாதிகளிடம் ஏன் இப்போது மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என நாம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவன் யார் நம் உணவு உரிமையில் தலையிட என்பதுதான் தற்போது பிரச்சினை. கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்கள் பார்ப்பன பயங்கரவாத மோடி அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என வெளிப்படையாக மறுத்துள்ளன. கேரளாவில் பல இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதே போல தமிழ்நாட்டிலும் பல முற்போக்கு இயக்கங்கள் களத்தில் இறங்கியுள்ளன. திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்கெனவே மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்வுக்குத் தமிழக காவல்துறையால் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி அதைச் சாப்பிட்டு இந்து பயங்கரவாதிகளுக்கும், அவர்களை அண்டிப்பிழைக்கும் தமிழக காவல்துறைக்கும் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கின்றார்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிப்படையாக மத்திய அரசின் இந்த நாசகார திட்டத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து இந்தியாவிற்கே முன்மாதியாக கேரளாவை மாற்றியிருக்கின்றார். ஆனால் தமிழக அரசு கொஞ்சம் கூட சூடு சுரணை இல்லாமல் இதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் கள்ள மெளனம் காக்கின்றது. மாறாக தமிழக அமைச்சர்கள் மோடி புகழை பாடிக்கொண்டு தாங்கள் சுயமரியாதை அற்ற பேர்வழிகள் என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் உள்ள திராவிட இயக்கங்களும், மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்களும் மோடி அரசின் இந்தக் கீழ்த்தரமான பார்ப்பன பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். எங்கோ உட்கார்ந்துகொண்டு நம்முடைய தட்டில் கைவைக்கப் பார்க்கும் பார்ப்பன மேல்சாதி அயோக்கியர்களுக்குச் சரியான பதிலடியைப் பெரியாரிய மண்ணில் இருந்து நாம் கொடுக்க வேண்டும். பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் இப்போதே தோழர்கள் மோடி அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகம் என்றாலே பிஜேபி பார்ப்பன ஆதிக்கசாதி கும்பலுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இன்னும் பொதுவெளிகளில் போராட்டத்தை தீவிரமாக நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

- செ.கார்கி

Pin It