சொராஹ்புதீன், அவரது மனைவி கௌசர் பீபி மற்றும் ஒருவர் ஹைதராபாத்திலிருந்து மகாராஸ்டிராவின் சிங்கிலி என்ற ஊருக்கு சென்று கொண்டிருக்கும்போது 2005 நவ.23,ம் தேதி அதிகாலை 01.00 மணிக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து சொஹ்ராபுதீன் காலை 5 மணியளவில் ரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் செல்ல முயற்சி செய்தார் எனக் கூறி என்கவுண்டர் செய்யப்பட்டார்.
அவரது மனைவி கௌசர் பிபி அடுத்த சிறிது நாளிலேயே காவல் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டு உடல் எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டார். அடுத்த வருடமே அவர்களுடன் இருந்த துளசிராம் பிரஜாபதி சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்தார் என்று கூறி என்கவுண்டர் செய்யப்பட்டார்.
சொஹ்ராபுதின் அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை கொல்லத் திட்டமிட்டு வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி, அதனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றே காவல்துறையினரால் சொல்லப்பட்டது. (DC 13/07/07)
அதன் பிறகு சொஹ்ராபுதீன் சகோதரர் ரபாபுதீன், கௌசர் பிபி பற்றி தகவல் அறிய உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை குஜராத்தின் CID கிரிமினல் பிரிவிற்கு மாற்றி உத்தரவிட்டது. அதனால் பல்வேறு விசாரணைக்குப் பிறகு அதிர்ச்சிகரமான பல தகவல்களை உள்ளடக்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. (DC 12-03-07)
CID குற்றப்பத்திரிக்கையின் அறிக்கை
சொஹ்ராபுதீன் எண்கவுன்டர் வழக்கை விசாரிக்க தொடங்கிய CIDக்குப் பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. இந்த வழக்கில் குஜராத்தின் பெரிய பெரிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தனர்.
அந்த அறிக்கைப்படி குஜராத் ATS பிரிவின் உயர் அதிகாரிகள் பலர் ஹைதரபாத் சென்று சிறிது நாட்கள் தங்கி, ஆந்திர காவல் அதிகாரிகளுடன் இணைந்து இரண்டு போலி நம்பர் பிளெட்களை Ap-11 என்ற பெயரில் உருவாக்கி, அதனை தனியார் காரில் பொருத்தி அதன் மூலம் KA 05 AF5051 M.j டிராவல் தனியார் பேருந்தை இடைமறித்து சொராஹ்புதீன், அவரது மனைவி, மற்றும் அவர்களுடன் இருந்த ஒருவரை நவம்பர் 23, 2005 அதிகாலை 1.05 மணிக்கு இழுத்து செய்தனர். சொஹ்ராபுதீனுடைய புகைப்படத்தை வைத்து அப்பேருந்தில் பயணித்த ஆறு பெயர் மற்றும் டிரைவர் இதனை உறுதி செய்தனர்.
பின்னர் சொஹ்ராபுதீன் தனியாக ஒரு பண்ணை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு, குஜராத் துணை காவல் மேலாளார் (SI) ஒருவர் களவாடப்பட்ட இரு சக்கர வாகனத்தில் வேகமாக வருவது போல் வந்து சினிமா பாணியில் குதித்த பிறகு அதே இடத்தில் சொஹ்ராபுதினை வைத்து நான்கு காவல் அதிகாரிகளால் எட்டு முறை சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் ATS (தீவிரவாத தடுப்பு பிரிவின்) தலைமை அதிகாரியான வன்சாரா மற்றும் ராஜேஷ் பாண்டியன் ஆகியோர் இருந்தனர். சொஹ்ராபுதீன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட இருசக்கர வாகனம் திருடப்பட்டதாகக் கூறி அந்தப் பகுதியைச் சார்ந்த ஸ்லாக்சிங் ராம்சிங் யாதவ் என்பவர் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு FIR தாக்கல் செய்தார். பின்னர் பத்திரிக்கை செய்திகளில் சொஹ்ராபுதீன் என்கவுண்டர் படத்தைப் பார்த்து தனது வண்டி என அடையாளம் காட்டினார். (DC 12/03/07)
இந்த அறிக்கை மூலம் சொராஹ்புதீன் எண்கவுண்டர் மட்டுமல்ல, அவரது மனைவி, துளசிராம் என அனைவரும் காவல்துறையினரால் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் சாட்சிகளும்
முன்னாள் DIG குஜராத்தைச் சார்ந்த வன்சாரா மற்றும் ராஜபாண்டியன், ராஜஸ்தானைச் சார்ந்த M.N. தினேஷ் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த காவலதிகாரி நரேந்திர அமீன் போன்றோர்கள் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகள். இவர்கள் எல்லோரும் IPS தரத்தில் இருந்த உயரதிகாரிகள். (The Hindu 13.10.10). IG பி.சி பாண்டேவிற்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதால் வழக்கு விசாரணையை காலம் தாழ்த்தியும் சாட்சியங்களை அழிக்கும் செயலையும் செய்து வருகிறார் என விசாரணை அதிகாரி ராய் குற்றம் சாட்டுகிறார். (TOI 12-08-11)
முதன்மைக் குற்றவாளியாக இருந்த வன்சாராவின் பெயர் கூறி 2007ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மோடி தொடங்கினார். இவ்வளவு நெருக்கத்தைக் கொண்டிருந்த மோடி, வன்சாரா கைதுக்குப் பிறகு அவருக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறினார். (Tehelka 05-09-13)
இந்த வழக்கின் முக்கிய குற்றகாளியான அமீத் ஷாவிற்கு பிணை வழங்கப்பட்ட பிறகும் குஜராத்திற்குள் நுழைவதற்கு குறிப்பிட்ட காலம் வரை தடை பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. (DC 11/11/10)
முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் காவல்துறை உயரதிகாரி நரேந்திர அமீன் குற்றங்களை ஒப்புக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார். (The hindu 11-08-10)
குஜராத்தின் காந்திநகர் SP ஆக இருந்த சிங்கால் சொராஹ்புதீன் மற்றும் அவரது மனைவி சட்டவிரோத காவலில் இருந்தபோது தான் கண்டதாக சாட்சி அளித்திருந்தார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான இவர் தொடர்ச்சியான மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார் என நீதிமன்றத்தில் அதிகாரி ராய் கூறியிருந்தார். (TOI 11-05-10)
இந்த போலி என்கவுண்டர் கொலையில் குஜராத் மட்டுமல்ல ஆந்திராவைச் சார்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. (DC 11/04/11)
இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான வன்சாரா பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படும்போது அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் “எல்லாவற்றிற்கும் காரணமானவர்களான தாங்களும், உங்கள் கூட்டாளிகளான அமீத் ஷாவும் பதவியில் இருக்கும்போது நாங்கள் மட்டும் சிறையில் இருக்க வேண்டுமா?” என்று எழுதியிருந்தார். இந்த கடிதத்தைக் கொண்டு எதிர்கட்சிகள் மோடியின் ராஜினாமவை வலியுறுத்தினார்கள். ஆனால் இதுவும் பிறகு மழுங்கடிக்கப்பட்டது. (Tehelka 5/09/13)
விசாரணை அதிகாரிகள், சாட்சிகள் மீதான அச்சுறுத்தல்கள்
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ரஜ்னிஷ் ராய் IG ஆக இருந்த பி.சி.பாண்டேவிற்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்று கூறினார். இதன் காரணமாகவே இவர் மூலம் ராயின் பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டது. (TOI 12/08/11)
சொராஹ்புதீன் சகோதரர் ரபாபுதீன் மும்பை நீதிமன்றத்தில் தோன்றி, திடீரென தான் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதை தனது வழக்கறிஞர்களுக்கு கூட சொல்லாமல் செய்தார். ஊடகங்களிடம் விளக்கும்போது தான் மன அமைதியற்று இருப்பதாகவும் அதனாலேயே திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார். (The Hindu 07/04/16)
வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, குஜராத் நீதிமன்றம் அமீத் ஷாவிற்கு பிணை வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடி, இந்த வழக்கை குஜராத் கீழ்நீதிமன்றங்களில் நடந்தால் நீதமாக நடக்காது; அதனால் குஜராத்திற்கு வெளியிலேயே வைக்க வேண்டும் எனக் கேட்டது. (தினமலர் 11/30/11) குஜராத் நீதிமன்றங்களே அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக நீதிக்கு எதிராக செயல்படுவதை சிபிஐ வெளியே கொண்டு வந்தது.
வழக்கின் தீர்ப்பு 2018 டிச.21 வருகின்ற வேலையில் டிச.17ம் தேதியே வழக்கின் முன்னாள் விசாரணை அதிகாரியான ராய் அவர்களை பணி இடைநீக்கம் செய்து அரசாங்கம் உத்தரவிட்டது.(Scroll 20/12/18)
நீதிமன்றத்தின் பங்களிப்புகள்
சொராஹ்புதீன் எண்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் போலி எண்கவுண்டர் என்பதை உறுதி செய்து சொராஹ்புதீன் குடும்பத்திற்கு 10 லட்சம் தரும்படி உத்தரவிட்டது. (DC 12/08/09)
ஜனவரி, 2010ம் ஆண்டு மாநில அரசின் விசாரணையில் நம்பிக்கையிழந்த நீதிமன்றம் ரபாபுதீன் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
ஜூலை 23,2010 சிபிஐ நீதிமன்றத்தில் குஜராத் உள்துறை அமைச்சர் அமீத் சா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர், குஜராத்தின் பெரிய IPS உயர் அதிகாரிகள் உட்பட 38 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
ஜூலை 25,2010 அமீத் ஷா கைது செய்யப்பட்டார். பிறகு அக்.8, 2010ல் அமீத் ஷாவிற்கு பிணை கோரிய வழக்கில் பிணை தர முடியாது என மறுத்து விட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். அக்29, 2010 அமித் ஷா விற்கு ஒரு லட்சம் அபராதத்துடன் பிணை வழங்கியது.
2012 செப்.27 அன்று இந்த வழக்கை குஜராத்திலிருந்து மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுத்ததாக அமித் ஷா விடுதலை, அதிகாரிகள் விடுதலை என இறுதியாக 23 பேரைத் தவிர அனைவரும் சாட்சிகள் போதவில்லை என்று இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவித்தது. (Indian Express 21/12/18)
12 வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, காவல்தூறையின் முக்கிய உயர் அதிகாரிகள் உடபட 38 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, சாட்சி போதாமை காரணமாக முக்கிய பெரிய மனிதர்கள் எல்லாம் விடுவிக்கப்பட்டு இறுதியாக காவல் மேலாளர், இணை மேலாளர் போன்ற 22 காவல் அதிகாரிகள் மற்றும் பண்ணை வீட்டின் உரிமையாளர் உட்பட 23 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். டிச 21, 2018 அன்று வழக்கின் தீர்ப்பை அளித்த நீதிமன்றம், குறிப்பிடப்பட்டுள்ள 210 சாட்சிகளில் முக்கிய சாட்சிகளான 92 சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதால் குற்றம் நிரூபிக்க முடியாமல் 22 பேரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. (Scroll.in 07/12/18, 21/12/18)
நீதிபதி லோயா கொலை?!
2012ம் ஆண்டு உச்சநீதிமன்றம் விசாரணையை குஜராத் நீதிமன்றத்திலிருந்து மாகாராஷ்டிராவுக்கு மாற்றி வைத்து, இந்த வழக்கு விசாரணை நேர்மையானதாகவும் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை இவ்வழக்கின் விசாரணையை ஒரே நீதிபதியின் கீழ் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறும் விதமாகவே தொடக்கத்தில் விசாரணையின் தொடக்கத்திலேயே சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த JT.உத்பத் பணி மாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்தில் லோயா அமர்த்தப்பட்டார்.
உத்பத் 2014 ஜூன், 06 அன்று அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராகாததைக் கண்டித்தார். அடுத்த விசாரணை தேதியை ஜூன் 26ம் தேதி தள்ளி வைத்து, அமித் ஷா கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் ஜூன் 25ம் தேதியே பணி மாற்றம் செய்யப்பட்டார். அடுத்ததாக நியமிக்கப்பட்ட லோயாவும் விசாரணை செய்து வந்த நிலையில் 31 அக்டோபர் 2014ல் விசாரணையின் போது அமித் ஷாவிற்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து கண்டிப்பாக டிச.15, 2014 அன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் டிசம்பர் 1ம் தேதி லோயா இறந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.
நீதிபதி லோயா மரணத்தில் மர்மங்கள்
நீதிபதி லோயா, 2014. டிச,1 அன்று தன்னுடன் பணியாற்றும் ஒரு நீதிபதியின் மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக இரு நீதிபதிகளின் துணையுடன் சென்ற போது நாக்பூரில் மாரடைப்பால் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாயின.
நீதிபதி லோயா அவர்களின் மரணம் இயற்கையானது என சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையும், அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளிலும் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் எழுகிறது.
லோயாவின் சகோதரிகளில் ஒருவரான அனுராதா பியானி லோயாவின் மரணத்தைப் பற்றி சொல்லும்போது, எனக்கு 1 டிச.2014 அன்று காலை, பார்டே என்ற நீதிபதி ஒருவர் எனக்கு போன் செய்து லோயா இறந்து விட்ட செய்தியைக் கூறினார். லோயாவின் உடல் லத்தூர் என்ற பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.
லோயாவின் தந்தைக்கு ஐஷ்வர் பஹெத்தி என்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் போன் செய்து லோயா இறந்து விட்ட செய்தியையும் உடலைக் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டையும் செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் லோயாவின் குடும்பத்தினர் யாருக்கும் அவர் யார் அவருக்கு எப்படி லோயாவின் மரணம் தெரிந்தது என்று இன்று வரை தெரியவில்லை.
லோயாவின் இன்னொரு சகோதரியான சரிதா மந்தானேவிற்கு காலை டிச.1 அன்று 5.00 மணிக்கு நீதிபதி பார்டே போன் செய்து, லோயா இறந்துவிட்ட தகவலை சொல்லியிருக்கிறார். பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது அண்ணன் மகனையும் அழைத்து விட்டு கிளம்பும் போது அங்கே வந்த ஐஷ்வர் பஹெத்தி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக கூறினார். ஆனால், இன்று வரை அவர் எப்படி நாங்கள் இருக்கும் மருத்துவமனைக்கு வந்தார். நாங்கள் அங்கே இருப்பது எப்படி அவருக்கு தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை.
லோயாவின் சொந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்த பிறகு இரவு 11.30 மணிக்கு லோயாவின் உடல் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆம்புலன்சில் டிரைவர் தவிர யாரும் உடன் இல்லை. லோயாவை இந்த திருமணத்திற்கு வற்புறுத்தி கூட்டிச் சென்ற நீதிபதிகள் ஏன் ஆம்புலன்சில் இல்லை. இறப்புச் செய்தியை சொன்ன நீதிபதி பார்டே-வாவது வந்திருக்க வேண்டும், அவரும் இல்லை. லோயா ஓரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி, அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமல் டிரைவருடன் மட்டும் அனுப்பியது ஏன்?
லோயாவின் சகோதரிகள், “லோயாவின் சட்டைகளில் ரத்தக்கறை இருந்தது, அவருடைய கழுத்துப் பகுதிகளில் தொடங்கி இடது தோள் பகுதியில் இருந்து முழங்கை வரை ரத்தக்கறை இருந்தது, அவருடைய பெல்ட் எதிர்ப்புறமாக திருப்பப்பட்டு இருந்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில், லோயாவின் துணி வறண்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு மருத்துவராக பியானி, பிரேதப் பரிசோதனை செய்யும் போது ரத்தம் வராது என்பது தெரியும். பிறகு எப்படி ரத்தக்கறை வந்தது! என மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வழக்கு தொடரலாம் என ஆலோசிக்கும் போது பிரச்சனையை தீவிரப்படுத்த வேண்டாம் எனக் கூறி எல்லோரும் தடுத்து விட்டார்கள்” எனக் கூறுகிறார்கள்.
லோயாவின் போன் எங்களுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் மூலம் இல்லாமல் அந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஐஷ்வர் மூலம் கிடைத்தது. ஆனால் அந்த போனில் எல்லா தகவல்களும் அழிக்கப்பட்டு இருந்தது.
லோயா மரணத்தில் எழுப்பப்டும் கேள்விகள்?
லோயாவின் சகோதரி பியானி நிறைய சந்தேகங்களை கேள்விகளாக எழுப்புகிறார். அவை,
லோயா ரவி பவன் எனும் விருந்தினர் மாளிகையில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தார். அது எல்லா பெரிய மனிதர்களும் வந்து செல்லும் இடம். எப்போதுமே பாதுகாப்பு, வண்டி என எல்லா வசதியும் இருக்கும். ஆனால், லோயாவிற்கு நெஞ்சு வலி வரும்போது ஆட்டோ பிடித்து அழைத்துச் செல்லப்பட்டது ஏன்? இந்த இடத்திலிருந்து காலை நேரங்களிலேயே ஆட்டோ கிடைப்பது கஷ்டம். ஏனென்றால் ஆட்டோ நிறுத்தம் 2 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நிலையில் எப்படி நள்ளிரவில் ஆட்டோ பிடித்து அழைத்துச் சென்றார்கள் எனப் புரியவில்லை.
லோயாவை மருத்துவமனையில் அனுமதிக்கும் போதே ஏன் போன் செய்யவில்லை? லோயா இறப்பதற்கு முன்னர் கூட ஏன் போன் செய்யவில்லை?
பிரேதப் பரிசோதனை செய்வதற்கான அனுமதி கூட வாங்காமல் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? லோயாவிற்கு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதெல்லாம் யாருமே விளக்கவில்லை.
லோயாவை அனுமதித்த தாண்டே மருத்துவமனையில் என்ன மருத்துவ சிகிச்சைகள் பார்க்கப்பட்டது என்று எந்த மருத்துவ அறிக்கையையும் குடும்பத்தினரிடம் தராதது ஏன்?
லோயாவை திருமணத்திற்கு வலியுறுத்தி அழைத்து சென்ற நீதிபதிகள் இருவரும் லோயா இறந்து இரண்டு மாத காலத்திற்கு லோயா குடும்பத்தினரை சந்திக்கவே இல்லை.அதன் பிறகு அவர்கள் சொல்லும் போது, இரவு 12.30 மணிக்கு நெஞ்சு வலி வந்த து. அதனால் ஆட்டோவில் தாண்டே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அவரே தான் படியேறி வந்தார். ஆனால் வசதி குறைவின் காரணமாக மெடிட்ரினா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அவரது உயிர் பிரிந்த து என்றார்கள். ஆனால் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளித்தார்கள் என்ற எவ்வித அறிக்கையும் குடும்பத்தாரிடம் கொடுக்கவில்லை.
பிரேதப் பரிசோதனை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் நாக்பூரின் சதார் காவல் நிலைய மேலாளரின் கையெழுத்தும் லோயாவின் தந்தை உறவினர் என்று கூறி மயத்தாச்சா சுலத்பா என்ற கையெழுத்தும் இருந்தது. ஆனால் அப்படி ஒரு உறவினர் தங்களுக்கு இல்லை என்கிறார் லோயாவின் தந்தை.
பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில் லோயாவுக்கு கரோனரி தமனி குறைபாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நோய் புகைபிடித்தல், வயதானவர்களுக்கு அதிக இரத்த அழுத்தம், கொழுப்பு இருப்பவர்களுக்கு வரக்கூடியது. ஆனால் லோயாவுக்கு வயது 48. ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடுவார். உடம்பில் சிறிய பிரச்சனை என்றாலும் என்னிடம் கேட்டுக்கொண்டு அதன்படி நடப்பார். அதனால் என்னால் இதை நம்ப முடியவில்லை என்கிறார் அவரது சகோதரி மருத்துவர் பியானி.
பிரேதப் பரிசோதனை அறிக்கைப்படி, லோயாவுக்கு நெஞ்சு வலி காலை 4.00 மணிக்கு ஏற்பட்தாகவும், டிச.1 2014 அன்று காலை 06.15 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், லோயாவின் சகோதரிக்கு நீதிபதி பார்டே காலை 5.00 மணிக்கெல்லாம் அழைத்து லோயாவின் மரண செய்தியை கூறிவிட்டார். இரண்டில் எது தவறானது? இதில் எது தவறாக இருப்பினும் லோயாவின் மரணத்தில் ஏதோ அரசியல் சூழ்ச்சி இருக்கிறது.
நீதிமன்றமும் ஜனநாயகமும் பாசிச அதிகாரத்தின் முன்னால் தோற்றுவிட்டன
நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டதாவது, சாட்சிகள் ஏதும் சரியாக நிரூபிக்கப்படவில்லை. சொராஹ்புதீனை சுட்டவர்கள் யாரெனவும் நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது. அதனால் எல்லோரும் விடுவிக்கப்படுகிறார்கள். நான் இந்த விஷயத்தில் 'உதவியற்றவனாக' இருக்கிறேன். சொராஹ்புதீன் குடும்பத்திற்கு எனது வருத்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தீர்ப்பு கொடுத்த நீதிபதி கூறினார்.
கிட்டத்தட்ட 12 வருடங்களாக பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு பல சாட்சிகளை சில நேர்மையான அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்பித்து, பல அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டு, இடை நீக்கம் செய்யப்பட்டு, நீதிபதியின் உயிரும் பறிக்கப்பட்டு இறுதியில் இதுவரை நடந்த அத்தனை விசாரணையையும் வீணாக்கியிருக்கிறது நீதிமன்றம்.
சாட்சியங்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு சில வருடங்களுக்குப் பிறகு பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி நாங்கள் வற்புறுத்தப்பட்டோம் என மிரட்டலுக்கு ஆளானதை எல்லோராலும் உணர முடிந்தது.
நீதிமன்றம் சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதையோ, அவரது மனைவி கௌசர் பிபி கொடூரமாக காவல்துறையினரால் கொல்லப்பட்டதையும் நீதிமன்றம் மறுக்கவில்லை. ஆனால் இழப்பீடாக ஏற்கனவே குடும்பத்திற்கு 10 லட்சத்தையும் இழப்பீடு வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட நீதிமன்றத்தின் இச்செயல் அரசியல்வாதிகள் தங்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பணம் கொடுத்து அவர்களின் வாயை மூடுவார்கள். அதையே நீதிமன்றமும் செய்யத் தொடங்கியிருக்கிறது.
- அபூ சித்திக்