டெல்லியில் உள்ள குரு கோபிந்த் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் செமஸ்டர் சட்டப் படிப்பில் இப்படி ஒரு கேள்வி,

'அஹ்மத், ஒரு முஸ்லிம்; இந்துக்களான ரோஹித், துசார், மனவ் மற்றும் ராகுல் இருக்கும்போதே சந்தையில் மாட்டைக் கொல்கின்றான். இப்போது அஹ்மத் செய்தது குற்றமா?.' ( ஆதாரம் - IANS, 11.12.18)

இதற்கான விதை பாஜக ஆட்சியமைக்கும்போதே தொடங்கிவிட்டது. இந்தியாவில் பாடத் திட்டங்களை வடிவமைக்கும் குழு தொடங்கி, எல்லாவற்றையும் இந்துத்துவாவின் பக்கம் நிறுத்தியிருக்கிறது பாஜக.

saffronising education2013ல் ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, பாடப் புத்தகங்களை திருத்தம் செய்யும் குழுவை மாற்றியமைத்தார்கள். இதனைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் கூறும்போது, 'சென்ற முறை அமைத்த குழுவில் சில சங் உறுப்பினர்கள் மட்டும் தான் யதார்த்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இம்முறை தேர்ந்தெடுக்கப்படும் குழு உறுப்பினர்கள் அனைவருமே சங் அமைப்பைச் சார்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.',

ராஜஸ்தானில் 2016'க்கு முன் மூன்றாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள ஒரு கதை. அஜ்மீர் நகரத்தின் சிறப்பை இரு மாணவர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள். ' குருமீத் கூட்டமான ரயிலில் ஏறி அஜ்மீர் வருகிறான். அவனது நண்பன் ரஜாக் அவனை அழைத்துக் கொண்டு மொய்னுதீன் சிஸ்தி தர்காவிற்குச் செல்கிறான். தர்காவில் வருடா வருடம் நடக்கும் உர்ஸ் விழாவைப் பற்றி குர்மீதிற்கு சொல்கிறான். அடுத்ததாக தாராகர் கோட்டைக்கு செல்கிறார்கள். அங்கே ராஜபுத்திர அரசர் பிரத்விராஜ் சௌகான் நினைவுச் சின்னத்தைப் பார்க்கிறார்கள். அனா சாகார் ஏரிக்கு வரும்போது சோர்வாகி எங்கும் செல்லாமல் திரும்புகிறார்கள்.'

புதிய பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்புப் பாடத்தில் வரும் அதே கதையில் 'அதிலும் குருமீத் நெரிசல் மிகுந்த ரயிலில் வந்து அஜ்மீர் நகரில் இறங்குகிறான். இருவரும் அந்த தர்காவிற்குச் செல்கிறார்கள். ஆனால் உர்ஸ் விழாவைப் பற்றி பெரிதாக எதுவும் இல்லை. தர்காவிற்கு அடுத்ததாக தராகர் கோட்டைக்குச் செல்கிறார்கள். அங்கு, இந்த பாரத நாட்டை ஊடுருவ முயன்ற முஹம்மது கோரி என்ற முஸ்லிம் மன்னனைத் தோற்கடித்த ராஜபுத்திர அரசன் பிரத்விராஜ் சௌகானின் நினைவுச் சின்னத்தை சுற்றிப் பார்க்கிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, இந்து மத யாத்திரை தளமான புஷ்கர் நகருக்குச் செல்கிறார்கள். அங்கே ரஜாக், குருமீத்திற்கு பிரபலமான பிரம்மா கோவிலையும், மகாபாராத வீரர்களான பாண்டவர்களால் கட்டப்பட்ட ஐந்து நீர்த்தேக்கங்களையும் சுற்றிக் காண்பித்தான் என்று முடிகிறது.

இந்த புதிய பாடத்திட்டத்தின் நோக்கம், படிக்கும் மாணவர்கள் முழுக்க இந்துக் கலாச்சாரங்களை மட்டுமே படிப்பவர்களாகவும், இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் இந்துத்துவாவிற்குப் பணிந்து வாழ்பவர்களாகவுமே வாழ்ந்திட வேண்டும். அப்படி இல்லாதவர்கள் இந்தியாவைக் கொள்ளையடித்த முஸ்லிம் மன்னர்களின் வாரிசுகள் என் எல்லோராலும் பார்க்கப்பட வேண்டும்.

இந்த புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மாற்றப்பட்ட அம்சங்களில் சில,

கணவன் இறந்தால் மனைவி தீயில் இறங்கி உயிரை விடும் சதி போன்ற நடவடிக்கைகள் அரசு நிகழ்த்தும் ஒழுங்கு விதிமுறைகள் போலானது என்று கூறப்பட்டிருக்கிறது.

பாடப் புத்தகங்களின் ஒவ்வொரு பகுதியும் தேசியவாதத்தைப் பேசுவதாகவும், கேள்வி கேட்காத மரியாதையை இராணுவ வீரர்களுக்கு வழங்குவதைப் பற்றியும் பேசுகிறது.

6ம் வகுப்புப் பாடத்தில் உள்ள ஒரு கதை, தடை செய்யப்பட்ட சதிப் பழக்கம் சரியானது என்ற போர்வையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கதையில், 'சிறிய பகுதியை ஆட்சி செய்த அரசன் சுராவத், டெல்லியில் இருந்து படையெடுத்து வரும் பாதுஷாவை எதிர்க்கப் போகும் போது ராணி அவரைத் தடுத்து, சதியின் பெருமையைப் பற்றி சொல்கிறார். அதனால் தன் தலையை அறுத்து அந்த ரத்தத்தின் மூலம் கோவிலை சுத்தம் செய்கிறார் ராணி. பிறகு அரசன் ராணியின் முடியை மாலையாக கழுத்தில் சுற்றி ராணியின் தலையைப் பதக்கமாக அணிந்து கொண்டு போருக்குப் போகிறார்.' இப்படியான கதைகளை கொடுப்பதின் மூலம் தங்களது சனாதான தர்மத்தை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு தலைமுறையை உருவாக்க மாணவர்களைப் பழக்க நினைக்கிறார்கள்.

4ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஆண்கள் அனைவரும் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களாகவும், பெண்கள் குடங்களில் தண்ணீர் நிரப்புவர்களாகவும், சமைப்பவர்களாகவும் சித்திரங்களின் மூலம் காட்டப்பட்டிருக்கிறது.

முதலாம் வகுப்புப் பாடத்திலேயே, மொழியின் எழுத்துக்களை சொல்லித் தர வேண்டிய இடங்களில் இந்து மத அடையாளங்களைக் கொண்ட வார்த்தைகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில், பசு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தைக் கூறும் போது, ஞானம், வலிமை, உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் வளமை என்பதைக் குறிக்கிறதாகவும், அதனால் குழந்தைகள் அவைகளுக்கு சேவை செய்யவும், பாதுகாக்கவும் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில், பசு பாதுகாப்பில் கிராம முன்னேற்றம் எனும் தலைப்பில் பாடமே இடம்பெற்றுள்ளது. அந்தப் புத்தகத்திலேயே, முதல் துணைப் பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் சோம்நாத் கோவிலை திரும்பக் கட்டமைத்ததில் உள்ள மிகப்பெரும் பங்களிப்பைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.

அதைப் போல் 3, 4, 5 ஆம் வகுப்பு சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தில் நமது நாட்டின் பெருமை என்று 15 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருக்கிறது. இதில் ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை.

6 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகம், சாதி அமைப்பின் வரலாற்றை மூடி மறைக்கும் விதமாக ஒரு பாடத்தைக் கொண்டிருக்கிறது. அதில், 'தொடக்கத்தில் சாதி அமைப்பானது மிகச் சிறப்பானதாக இருந்தது. சாதி, அவரவர் தொழில்களைச் சார்ந்ததே தவிர பிறப்புடன் சம்பந்தப்பட்டதல்ல. சாதிகளுக்கு இடையில் குடிநீர், உணவு பகிர்ந்துகொள்ள திருமண உறவை வைத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. அதனால் தீண்டாமைக்கு இங்கு இடம் இல்லை' என்றும் கூறுகிறது.

3ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களின் தொடக்கத்திலேயே, தேசபக்தி என்ற பாடம் அல்லது பாடலைக் கொண்டதாகத் தான் அமைந்திருக்கிறது.

அதே மூன்றாம் வகுப்பு பாடத்திட்டத்தில் பத்நாவிஸ் மகளான ஷஹாஷி பாலிகா தைரியமான ஏழு வயதுப் பெண் குழந்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியதால் ஆங்கிலேயர்களால் எரித்துக் கொல்லப்பட்ட போது சிரித்துக் கொண்டே அதனை ஏற்றார் என்றிருக்கிறது. பத்னாவிஸ் ஆங்கிலேயர்களை எதிர்த்தவராக இருந்தாலும் வரலாற்றில் சொல்லப்படுவதற்கும், இந்தக் கதை சொல்வதற்குமான வேறுபாடு நிறைய உள்ளது.

7ம் வகுப்பில் உள்ள ஆங்கில பாடப்புத்தகத்தில், புதிய தொழிற்நுட்பங்கள் கொண்ட தொலைத்தொடர்பு பற்றி கூறும்போது, நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் இடம்பெற்றுள்ளது.

4ம் வகுப்பில் உள்ள சுற்றுச்சூழ அறிவியல் புத்தகத்தில், இந்திய அரசின் கங்கா திட்டமானது மிகச் சிறப்பானது, இதன் மூலம் கங்கை மீண்டும் நிரந்தரமாக சுத்தப்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

புதிப்பிக்கப்பட்ட புத்தகங்களின் அனைத்துப் பகுதிகளிலும், இந்துக்களை மட்டும் முதன்மைப்படுத்தும் கருத்துகளும், பாஜகவின் ஆட்சி சிறப்புகள் என்ற பெயரில் அரசின் திட்டங்கள் பற்றியும் ஆங்காங்கே கூறப்பட்டிருக்கிறது. (ஆதாரம் - Scroll, 14.11.18)

மோடி பொறுப்பேற்ற பிறகு 'இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபை' நிறுவனத்தின் தலைவராக சுதர்சான் ராவ் அவர்கள் நியமிக்கப்பட்டார், இவர் RSS அமைப்பினுடைய மிகப்பெரும் அனுதாபி. இவர் பொறுப்பேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த மூன்று பேரை இந்த கவுன்சிலுக்குள் பணியமர்த்தினார்.

இந்தியாவின் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் மிகப்பெரும் பங்கு இந்த கவுன்சிலுக்கு இருக்கிறது. இதில் ஆர்.எஸ்.எஸ் தலையீடு ஏற்பட்ட பின்பு, மாகாபாரதம், ராமாயணத்தை ஆய்வு செய்து புத்தகங்களில் வரலாற்றுப் பாடமாக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். ( Firstpost Jan 2015)

வரலாற்றில் எதையும் சாதித்திட முடியாத சங் பரிவார அமைப்புகள் புத்தகங்களில் வரலாற்றைத் திருத்தி தங்களை கதாநாயகனாக காட்ட முயற்சிக்கிறார்கள். இதற்காக, கல்வி நிலையங்களையும், நாட்டின் கல்வி அமைப்பையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த கீழ்த்தரமான செயலை எந்த வித ஊடகங்களும், கட்சிகளும் பெரிதுபடுத்தாமல் இந்த ஆபத்தை வளரவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.

- அபூ சித்திக்

Pin It