கோவை மாநகரின் புதிய குடி நீர் திட்டம் - சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள் 

கோவை குடிநீர் தனியார்மயமாக்கப் படுகிறதா என்கின்ற கேள்விக்கு கோவை மாநகர ஆணையர் திரு விஜய் கார்த்திகேயன் அவர்கள் 25.06.2018 அன்று சிம்ப்ளிசிட்டி(Simplicity) வலைத்தள நிருபருக்கு கொடுத்துள்ள பேட்டி பாராட்டுக்குரியது. (http://youth.be/UF4G0ib47pc). காரணம் பிரெஞ்சு நாட்டு பன்னாட்டு நிறுவனமான சூயெஸ் (SUEZ) கம்பெனியின் வலைதளத்திலிருந்து மட்டுமே நமக்கு கிடைத்த செய்திகளை உறுதிப்படுத்தும் முகமாக ஆணையர் விஜய் கார்த்திகேயன் அவர்கள் கோவையின் குடிநீர் திட்டம் பற்றிய பல செய்திகளை பொது அரங்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் 02.07.2018 அன்று தமிழ் இந்துவில் கோவை மாநகராட்சி சார்பாக ஆணையர் விஜய் கார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு மேலும் சில விவரங்களை தெளிவுபடுத்துகிறது.

மாநகர மன்றம் செயல்படாத நிலையில் மாநகராட்சியின் சிறப்பு அலுவலர் என்ற முறையில் தாம் எடுத்த முடிவுகளை குறைந்தது மாநகராட்சியின் வலைதளத்திலாவது பகிர்ந்திருக்க வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மை இல்லாத காரணத்தினால் தான் மாநகராட்சியின் குடிநீர்த் திட்டம் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் மக்கள் மனதில் எழுவதற்கு காரணமாகியுள்ளன. மாநகராட்சி ஆணையரின் விளக்கம் மேலும் சில கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துக் கொள்ளலாம்:

 • குடிநீர் விநியோகம் ஏன் தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும்? அதுவும் ஓர் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்? என்ற கேள்விக்கு அவருடைய பதில் நேரடியாக இல்லை. நகரத்தின் தேவையை கணக்கில் கொண்டு, குறிப்பாக அடுத்து 30 ஆண்டுகளை கணக்கில் கொண்டு குடிநீர் தேவையை திட்டமிட வேண்டியது அவசியம் என்றும்; ஆகவே இதற்கு ஒரு உலக டெண்டருக்கு அழைப்பு விட வேண்டிய தேவை இருந்தது என்றும் கூறுகிறார். இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட நான்கு கம்பெனிகள் இந்த டெண்டரில் பங்கேற்றன என்றும் கூறுகின்றார். நமக்கு எழும் மிக அடிப்படையான கேள்வி என்னவென்றால் கடந்த 90 ஆண்டுகளாக கோவை நகரத்தின் குடிநீர் தேவையை திட்டமிட்டு செயல்படுத்திய தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கோ உள்ளாட்சி நிர்வாகத்திற்கோ அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடுவதற்கான தகுதியும் திறனும் இல்லை என்று இவர் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாமா?
 • water privatizationதோராயமாக 400 மில்லியன் யூரோ செலவில் (அதாவது 3200 கோடி ரூபாய் செலவில்) திட்டமிடப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் 1, 50, 000 பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் என்று கூறப்படுகிறது. அப்படியானால் மாநகரத்தில் மீதமுள்ள ஏறக்குறைய 1, 20, 000 பயனாளிகளுக்கான குடிநீர் சேவையை யார் வழங்குவார்கள்?
 • இந்த ஒப்பந்தத்தில் விடுபட்ட 1, 20, 000 குடி நீர் இணைப்பிற்கான தேவையை மாநகராட்சியே பூர்த்தி செய்யும் என்றால் சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் 1, 50, 000 இணைப்பிற்கான சேவையையும் மாநகராட்சியே ஏன் மேற்கொள்ள இயலாது?
 • நகரத்தின் ஒரு பகுதியினருக்கு “24 மணி நேர” குடிநீர் சேவையும் மற்றொரு பகுதியினருக்கு பகுதிநேர குடிநீர் மட்டும் வழங்குவது என்பது சமூக அநீதி, புறக்கணிப்பு ஆகாதா?
 • நகரத்தின் எந்தெந்தப் பகுதி மக்களுக்கு 24 மணி நேர தண்ணீர் கிடைக்கப் போவதில்லை என்பதை நகர மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் இல்லையா? எதிர்கால 30 ஆண்டுகால திட்டத்தில் மாநகரத்தின் இந்த ‘புறக்கணிக்கப்பட்ட’ மக்கள் வரமாட்டார்களா? இதில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா?
 • “மேக் இன் இந்தியா” என்று மத்திய அரசு முழங்கிக்கொண்டிருக்கும் பின்னணியில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான குடிநீரை தனியார் மயமாக்குவது கொள்கை முரணாக இல்லையா?
 • தண்ணீர் விநியோகம், அது ஒப்பந்த அடிப்படையில் இருந்தாலும், தனியார் கம்பெனிக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? விநியோகத்திற்கான தண்ணீரை மாநகராட்சி சூயஸ் நிறுவனத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆணையர் தம் பேட்டியில் கூறியிருக்கிறார். அப்படி, உறுதிப்படுத்தப்பட்ட தண்ணீரை விநியோகிப்பதுதான் சூயஸ் நிறுவனத்தினுடனான ஒப்பந்தம் என்றால் இதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமோ, மாநகராட்சியோ செய்வதற்கு திறனற்றதா?
 • இதற்கு தேவையான கட்டுமானங்களை கட்டமைக்க மாநகராட்சியே செலவு செய்யும் என்று அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி அவர்கள் மற்றொரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கான தொகையை மாநகராட்சி எங்கிருந்து திரட்ட இருக்கிறது?
 • இந்த ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கானது; அதில் முதல் ஆண்டு ஆய்விற்கான காலம்; என்றும், அடுத்த நான்கு ஆண்டுகள் விநியோகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான காலம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வு முடிந்த பிறகு தான் CIP - Cost Investment Plan என்னும் மொத்த செலவிற்கான திட்டத்தை வரையறுக்க முடியும் என்று ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியானால் சூயெஸ் நிறுவனம் அறிவித்துள்ள நானூறு மில்லியன் யூரோ என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?
 • புதிய குடிநீர் திட்டத்திற்கான பயனாளிகளின் கட்டணத்தை மாநகராட்சி தீர்மானிக்கும் என்று ஆணையர் மேற்படி பேட்டியில் உறுதிப்படுத்துகிறார். பொதுப் பயன்பாட்டில் (Common good) இருக்கின்ற அல்லது இருக்க வேண்டிய அடிப்படை உரிமையான தூய குடிநீருக்கு கட்டணம் செலுத்தி பெற வேண்டியது என்பதே அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியிருக்கின்ற அடிப்படை உரிமையான வாழ்வதற்கான உரிமையை மறுப்பதாகாதா? (Right to Life - Art 21)
 • அதிலும் இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்திடம் இத்திட்டத்தை கொடுப்பதால் தண்ணீருக்கான கட்டணத்தை மாநகராட்சி கட்டுப்படுத்த முடியுமா?

உலக அனுபவங்கள் கூறுவது என்ன? 

1997ம் ஆண்டு உலக வங்கி “தண்ணீர் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் பொலிவியாவுக்கு நிதியுதவி அளித்தது. பொலிவியாவின் எல் ஆல்தோ, லா பாஸ் ஆகிய பெரிய நகரங்களிலும் தண்ணீர் விநியோகம் சூயஸ் என்ற பிரன்ச் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் தண்ணீர் கட்டணத்தை 30% உயர்த்திய இந்த கம்பனி, வீடுகளுக்கான குடி நீர் இணைப்பு கட்டணத்தை 440 டாலராக உயர்த்தியது. இது ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச ஊதியத்தை காட்டிலும் 6 மடங்கு அதிகம். கிணறுகள், குளங்கள் ஏரிகளிலிருந்து மக்கள் தண்ணீர் வேலி அமைத்து தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மக்கள் பல்வேறு பகுதிகளில் நடத்திய போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. 2003 சனவரி மாதத்தில் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சனவரி 13 அன்று அதிபர் மெஸா, எல் ஆல்தோவின் தண்ணீர் விநியோகம், கழிவு நீர் அமைப்பு ஆகியவற்றை அரசே செயல்படுத்தும் என்று அறிவித்தார்.

பொலீவியா நாட்டில் கொச்சபம்பா என்னும் நகரில் குடிநீர் விநியோகம் 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான பேக்டல் (Bechtel) நிறுவனத்திற்கு 40 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்த தொடங்கிய சில மாதங்களிலேயே பொது மக்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து இந்த நிறுவனத்தை அந்நாட்டை விட்டே வெளியேற்றினர். காரணம்:

 • தண்ணீருக்கான கட்டணம் நூறு முதல் இரு நூறு சதம் உயர்த்தப்பட்டது.
 • குறைந்தபட்ச ஊதியமாக நூறு டாலருக்கும் குறைவான வருமானத்தை கொண்ட நாட்டில் நிறைய குடும்பங்கள் குடிநீர் கட்டணமாக 20 டாலருக்கு மேல் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 • பொலீவிய அரசு இந்த ஒப்பந்தத்தை நிரந்தரம் ஆக்கும் வகையில் ‘சட்டம் 2029’ என்னும் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி கொச்சபம்பா நகரின், மழை நீர் உட்பட, அனைத்து நீராதாரங்களின் கட்டுப்பாட்டு உரிமை பேக்டல் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.
 • இதற்கு எதிராக சனவரி மாதம் 2000ஆம் ஆண்டு நான்கு நாட்கள் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இராணுவம் வரவழைக்கப்பட்டது; போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது; நகரம் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது; அரசு அடக்குமுறையை மீறி மக்களின் போராட்டம் தொடர்ந்தது; போராட்டத்தில் ஒருவர் உயிர் இழந்தார்; இருவர் கண்பார்வை இழந்தனர்; 175 பேர் பலத்த காயமுற்றனர். இறுதியில் கட்டண உயர்வினை திரும்ப பெறுவதாக அரசு அறிவித்தது. ஆனால் குடி நீருக்கான ஒப்பந்தம் தொடரும் வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் எச்சரித்தினர். இறுதியாக ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது.

பேக்டல் நிறுவனம் இதோடு நிற்கவில்லை. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் கிடைக்கவேண்டிய இலாபத்தில் ஏற்படவுள்ள நஷ்டத்திற்கு பொலீவிய அரசிடம் 250 லட்சம் டாலர் பணத்தை இழப்பீடாக கோரியது!

இது எதைக் காட்டுகிறது என்றால் ஒரு நாட்டின் இறையாண்மையைவிட, பொருளாதாரச் சுதந்திரத்தைவிட, உலகமயமாக்கச் சூழலில் உலக வர்த்தக நிறுவனங்களின் பாதுகாப்புதான் உலக அரங்கில் முன்னுரிமைப் பெறுகிறது என்பதுதான்.

ireland protest against water privatization

பேக்டல் நிறுவனத்தின் அனுபவத்தை வைத்து சூயஸ் நிறுவத்தோடு உள்ள ஒப்பந்தத்தை விமர்சிக்க முடியாது என்று கோவை மாநகராட்சி ஆணையர் வாதிடலாம். சரி, சூயஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ள குடிநீர் விநியோகம் பற்றிய அனுபவம் என்ன என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

 • சூயெஸ் (SUEZ)மற்றும் விவெண்டி (Vivendi Environnement) என்று முன்பு அழைக்கப்பட்ட வியோலி என்விராண்மெண்ட் (Veolia Environnnement) என்னும் இரு நிறுவனங்கள்தான் பிரான்ஸின் தண்ணீர் வினியோகத்தை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய நிறுவனங்கள்.
 • சூயெஸ் நிறுவனம் தண்ணீர் வணிகத்தில் 1822ஆம் ஆண்டு முதல் உள்ளது. உலகம் முழுக்க 15 கோடி வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறது.
 • அதேபோல் வியோலி நிறுவனம் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நிறுவனம். நூறு நாடுகளில் 11 கோடி வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் மற்றும் வடிகால் தேவைகளை நிறைவு செய்கிறது. உலகில் 7000 நகரங்களுக்கு குடி நீர் விநியோகம் செய்து வருகிறது.
 • இவ்விரு நிறுவனங்களும் குடிநீர் வணிகத்திற்காக ஒப்பந்தமிடும் மாநகராட்சிகளேயே விலைக்கு வாங்கும் பொருளாதார வலிமைக் கொண்டவை!
 • ஆனால் இம்மாபெரும் நிறுவனங்களின் பங்களிப்போடு தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் பாரீஸ் உட்பட பல நகரங்களில் இன்று இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு மீண்டும் மாநகராட்சிகளே பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதுதான் மிக முக்கிய காரணமாகும்.
 • மேலும் இந்த தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை தக்க வைத்துக்கொள்ள அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சம் அம்பலமாகியது. பாரீசின் நகரத் தந்தையாக(Mayor) இருந்தவரான ஜாக்விஸ் சிராக் பிரான்ஸ் நாட்டின் அதிபராக வெற்றி பெற்ற பிறகும் பாரீஸின் நகரத் தந்தையாகவும் சில மாதங்கள் தொடர்ந்ததற்கு தண்ணீர் கம்பனிகளிடமிருந்து கிடைத்த கையூட்டுதான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.
 • உலக நாடுகளில் தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய வருவாயிலிருந்து 3 முதல் 5 விழுக்காடு வரை அரசியல்வாதிகளுக்கு கையூட்டாகவும் சில அரசியல் பிரமுகர்களை தங்கள் நிறுவங்களில் உயர் பதவிகளில் பணிபுரிவதாக பொய்யாக பதிவு செய்து அவர்களுக்கு ‘சம்பளமாக’ கொடுத்த சம்பவங்கள் பல அம்பலமாகியுள்ளன!
 • லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் நுழைந்த சூயஸ் நிறுவனம் நாட்டை விட்டு வெளியே ற வேண்டுமென அந்நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசுக்கு மனு அளித்தனர். 65 சதவிகித மக்கள் பரிந்துரைத்தபடி அரசியலைமைப்பு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இயற்கை வளங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து எல்லா இயற்கை வளங்களும் அரசுடைமையாகவே இருக்க வேண்டும் என்ற மக்கள் போராட்டங்கள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் வெடித்தெழுந்தன. தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் தனியார்மய்மாக்கப்பட்ட பிறகு உயர்த்தப்பட்ட தண்ணீர் கட்டணத்தை மக்கள் செலுத்த முடியாமல் போனதால் 2003 மற்றும் 2004ஆம் ஆண்டு ஒரு கோடி மக்களின் குடிநீர் இணைப்பை அரசு துண்டித்தது.
 • GDF Suez என்னும் நிறுவனம் தெற்கு ஜெர்மனியில் போடப்பட்ட மேகால் பைப்லைன் (MEGAL Pipeline) ஒப்பந்தத்தில் போட்டி நிறுவனங்களுடன் ‘Collusion’ என்னும் கூட்டுக்களவு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதால் சூயெஸ் நிறுவனத்திற்கு 2009ம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஆணையம் 553 மில்லியன் யூரொவிற்கான (4424 கோடி ரூபாய்) தண்டம் விதித்தது.
 • சூயஸ் கால்வாயை கட்டி நிர்மாணித்த மாபெரும் நிறுவனம் என்று பெருமையோடு கூறும் மாநகராட்சி ஆணையருக்கு சூயஸ் நிறுவனத்தின் இந்த கசப்பான வரலாறும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.

உலக சம்பவங்கள், குறிப்பாக தண்ணீரை தனியார்மயமாக்கி வெற்றி கண்டதாக கூறப்படும் பிரான்ஸ் நாட்டில், சூயஸ் நிறுவனம் கொடி கட்டி பறக்கும் நாட்டில் 2008ம் ஆண்டு தனியாரிடமிருந்து தண்ணீர் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பாரீஸ் மாநகராட்சியே (Remunicipalisation) குடிநீர் விநியோகத்தை ஏற்று நடத்துகிறது. அப்படியானால் ‘குறைந்த செலவில் நிறைந்த சேவை’ என்ற முழக்கத்தோடு புகுத்தப்பட்ட தனியார் பங்களிப்பு, அது எந்த வடிவத்தில் வந்தாலும், அது தோற்றுவிட்டது என்பது மட்டுமின்றி மக்களால் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது என்பதும் வரலாறாகும். ஆப்பிரிக்காவையும் லத்தீன் அமெரிக்காவையும் சுரண்டி கொழுத்த அனுபவத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது நம்மை சுரண்ட வந்துள்ளன. அவற்றை எதிர்கொள்ள லத்தீன் அமெரிக்க மக்கள் நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

உலக வங்கியின் தண்ணீர் கொள்கை: 

உலக வங்கி தண்ணீர் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் நீராதாரங்களை வணிக மயமாக்கி தண்ணீர் பயன்பாட்டை தனியார்மயப் படுத்துவதை தொடங்கி வைத்தது. 1992 ஆம் ஆண்டு “நீராதார மேலாண்மையை மேம்படுத்துவது” “Improving Water Resources Management” என்னும் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வின் அடிப்படையான புரிதலே இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பகிரபடும் தண்ணீர் இலாபகரமானதாகவோ திறன் கொண்டதாகவோ அமையாது என்பதுதான்.

பொதுச் சேவையாக விநியோகிக்கப்படும் தண்ணீரில் 40 முதல் 50 விழுக்காடு வீணாகிறது அல்லது திருடப்படுகிறது. இதனால்தான் ஏழை எளிய மக்களுக்கு தேவையான தண்ணீரை அவர்களுக்கு அளிக்க முடியவில்லை. ஆகவே தண்ணீர் விநியோகத்தை திறமையாக கையாள தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உலக வங்கி பரிந்துரைக்கிறது. ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுகிறது!

உலக வங்கி மற்றும் உலக நிதியம் கொடுக்கும் கடன்களை வாங்கும் நாடுகள், வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கு நாட்டின் செலவினங்களை குறைக்க வேண்டும். அதற்கு நாட்டில் பொது நலன் கருதி கொடுக்கப்படும் மானியங்களையும், இலவசங்களையும் அறவே நிறுத்த வேண்டும். மேலும், பொதுச் சேவைகளை குறைத்து கட்டண சேவைகளாக மாற்ற வேண்டும் என உலக வங்கி வலியுறுத்துகிறது. காசில்லாமல் எவர் ஒருவரும் எந்த சேவையையும் பெற முடியாது என்பதை பொருளாதார கொள்கையாகவும் ஆட்சிக் கொள்கையாகவும் மாற வேண்டுமென உலக வங்கி வற்புறுத்துகிறது. ‘பிள்ளைப் பேறு’ உட்பட எல்லா சேவைகளும் விற்பனைக்கே! ஆகவே அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடன் பெறுவதற்கான நிபந்தனைகளாக முன்வைக்கப்படுகின்றன. பொதுத் துறை சேவைகளை தனியாரிடம் ஒப்படைத்து அவற்றை ‘திறம்படவும்’ ‘இலாபகரமாகவும்’ நடத்தலாம் என்று வலியுறுத்துகின்றனர். இந்த வரிசையில்தான் குடிநீர் விநியோகமும் வருகிறது.

தண்ணீர் தனியார்மயமாக்கலின் மிக முக்கியமான இந்திய அனுபவத்தை இங்கே பதிவு செய்தாக வேண்டும். சட்டீஸ்கர் அரசாங்கம் குடிநீர் வினியோகத்தை ரேடியஸ் வாட்டர் என்னும் தனியார் கம்பெனியிடம் ஒப்படைத்தது. 22 ஆண்டு ஒப்பந்தம். இதில் சிவ்நாத் என்னும் நதியின் முழு கட்டுப்பாட்டை 23. 6 கிலோ மீட்டருக்கு இந்த நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணத்தால் இந்த பகுதியில் மீனவர்களுக்கான மீன்பிடி உரிமை மறுக்கப்பட்டது. விவசாயிகளுக்கான தண்ணீர் பயன்பாடு குறைக்கப்பட்டது. மறுபுறம் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் தண்ணீர் வழங்கப்பட்டது. இதற்கு எதிரான மக்கள் போராட்டங்களும் தொடர்கின்றன.

தண்ணீர் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவை என்பதோ அதனை வணிகப் பொருளாக மாற்றக் கூடாது என்பதோ உலக வங்கியின், உலக முதலாளிய கண்ணோட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால், மக்களின் நல வாழ்வில் அக்கறையுள்ள சனநாயக அரசாங்கங்கள் உலக வங்கியின் இந்த அணுகுமுறையை அடியோடு மறுத்திருக்க வேண்டும்.

கருநாடக மாநில அனுபவம் கூறுவது என்ன?

மத்திய அரசாங்கம் 2002ம் ஆண்டு முன்மொழிந்த தேசிய தண்ணீர் கொள்கையை (National Water Policy, 2002) அடியொற்றி, தண்ணீரை ஒரு வணிகப் பொருளாக்கி, குடிநீர் சேவையை தனியார்மயமாக்கிய முதல் மாநிலம் கருநாடகம் ஆகும். உலக வங்கி 2003ம் ஆண்டு கடன் வழங்குவதற்கு முக்கிய நிபந்தனையாக முன்மொழிந்த தண்ணீர் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்று கருநாடக அரசும் உலக வங்கியும் மேற்கொண்ட ஒத்திசைவிற்கு ஏற்ப கருநாடகத்தில் குல்பர்கா, பெல்காம், ஹுப்பள்ளி, தார்வாட் ஆகிய நகரங்களில் ஏறக்குறைய இரகசியமாக பொதுமக்களுக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி 2005-6 ஆம் ஆண்டில் தண்ணீர் விநியோகம் பிரென்ச் கம்பனியான வயோலியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 16 நகரங்களில் ஆசிய வளர்ச்சி வங்கியின்(ADB) நிதி உதவியுடன் தண்ணீர் தனியார் மயமாக்க திட்டமிடப்பட்டன. அவ்வகையில் தண்ணீர் தனியார்மயமாக்குவதற்கான இந்தியாவின் தலை நகரமாக கருநாடகம் திகழ்ந்தது என்றால் மிகையில்லை. பொதுத்துறை-தனியார் ஒப்பந்தம் (PPP - Public Private Partnership) என்னும் பெயரில் இவை மக்கள் மீது சுமத்தப்பட்டன. “ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு தண்ணீர்” என்று ஆசை வார்த்தை காட்டப்பட்டன. மைசூரில் காலம் காலமாக குடி நீர் விநியோகித்து வந்த பொதுநிறுவனமான வாணிவிலாஸ் தண்ணீர் நிறுவனத்திடமிருந்து (Vanivilas water works) விநியோகத்தை மாற்றி டாடா நிறுவனமான JUSCO விற்கு 148 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டிற்கான திட்டமாக ஒப்படைக்கப்பட்டது. (வாணி விலாஸ் தண்ணீர் நிறுவனம் என்பது 150 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் ராணியாரின் தங்கக்காசுகள் கோர்த்த தங்கச்சங்கிலியை விற்று மக்களுக்காக உருவாக்கப்பட்ட குடி நீர் திட்டம் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு வரலாற்று பதிவாகும்). ஒப்பந்தம் போட்ட காலத்திலிருந்தே எதிர்ப்பும் கிளம்பியது.

தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டவுடன் பொதுக் குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. பொது கிணறுகளும் ஆழ்குழாய் கிணறுகளும் மூடப்பட்டன. குடிசைகள் உட்பட எல்லா வீடுகளுக்கும், நீரின் பயன்பாட்டை கணக்கிடும் தண்ணீர் மானிகள் (Water Metres) பொறுத்தப்பட்டன. இந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காக செலவிடப்பட்ட தொகையை வட்டியுடன் ஈட்டுவதற்கு தண்ணீர் கட்டணம் ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டது.

24 மணி நேர குடி நீர் விநியோகம் என்று முதலில் கூறப்பட்டது. பிறகு 24 மணி நேரம் என்றால் 8 மணி நேரம் தான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது! மைசூரில் இந்த திட்டம் அறிமுகப்படுத்திய நேரத்தில் மாநகரச் சபை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மாநகரச் சபை நடைபெறாத நேரத்தில் இத்தகைய திட்டத்தை நகர மக்கள் மீது திணிக்கக் கூடாது என கொதித்தெழுந்தனர். இதன் விளைவாக நகரம் கொந்தளித்தது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு கட்டண உயர்வைத் தவிர சேவையில் எந்த முன்னேறமும் இல்லை என்பது நிரூபணமானது. குறிப்பாக ஏழை எளியமக்கள், விளிம்பு நிலை மக்கள் மீது சுமத்தப்பட்ட தண்ணீர் கட்டணத்தை மக்கள் செலுத்த முடியாமல் திணறினர். கட்டண பில்கள் பல்மடங்கு பெருகின. தார்வாடில் மட்டும் ரூபாய் 10000 முதல் 57000 வரை தண்ணீர் கட்டணம் செலுத்த வேண்டிய பில்கள் குவிந்தன. இதற்கு எதிர் வினையாக “கட்டண பில்களை கொளுத்தி தண்ணீர் உலையை வைத்து குளித்து விடுவோம்” என்று தார்வாடில் ஒருவர் கூறியது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. போராட்டத்தின் விளைவால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள் தயவு தாட்சண்யமின்றி நடந்து கொண்டன.

மக்கள் எதிர்ப்பின் விளைவாக மைசூர் நகரில் மீண்டும் மாநகராட்சியே குடிநீர் விநியோகத்தை ஏற்றது. அவ்வகையில் இந்தியாவில் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடமிருந்து மீட்டு மாநகராட்சியே அதனை பராமரிக்கும் மீள் மாநகரமயமாக்கம் (Re-municipalisation) ஏற்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை மைசூர் நகரம் பெற்றுள்ளது. மைசூருக்குப் பிறகு மற்ற நகரங்களில் போடப்பட்டுள்ள குடிநீர் விநியோக திட்டங்கள் பலத்த எதிர்ப்புகளிடையே தொடர்கின்றன. தொடர்வது மறு பரிசீலனையில் உள்ளன.

கருநாடகத்தின் பிற நகரங்களில் அமல் படுத்துவதற்கு முன்பு முதன் முதலில் பெங்களூரில் தண்ணீர் தனியார்மயமாக்குவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டது. இந்த திட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் பலத்த எதிர்ப்பு இருந்ததால் கருநாடக அரசு அத்திட்டத்தை கைவிட்டது. ஆனால் ஐந்து சிறு நகரங்களில் எவ்வித அறிவிப்பும் இன்றி இரகசியமாக தனியார்மய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. மேலும் 16 நகரங்களில் அமல்படுத்தும் திட்டமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பின் காரணமாக நான்கு சிறு நகரங்களைத் தவிர பிற இடங்களில் உள்ளூர் நிறுவனங்களோடு ஒப்பந்தபுள்ளி போடப்பட்டுள்ளன. பல நகரங்களில் HDPE உயர்தர குழாய்களை போடுகிறோம் என்ற பெயரில் கட்டமைப்பு ஒப்பந்தங்களை தனியாருக்கு கொடுத்துள்ளனர்.

பொதுவாக மாநகரச் சபை கூடாத வேளைகளில் அவசரத் தேவைக் கருதி எடுக்கப்பட்ட அலுவல் முடிவு (Administrative decisions) என்று கூறி தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுகள் கருநாடகத்தின் எல்லா நகரங்களிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் செயற்கையான தண்ணீர் நெருக்கடியை ஏற்படுத்தி 24 மணி நேர தண்ணீர் திட்டத்திற்கு மக்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். தாலியை விற்று தண்ணீர் கட்டணம் கட்டிய கொடுமைக்குப் பின்னால் மீட்டர் உடைப்பு போராட்டம் முதல் தண்ணீர் மீட்டர்களை மொத்தமாக எல்லா வீடுகளிலிருந்தும் பிடுங்கி பேரீச்சம் பழத்திற்கு விற்ற போராட்டங்களையும் கருநாடகம் சந்தித்திருக்கிறது!

இவை போதாது என்று ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் நிதியுதவியோடும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி உதவியோடும் வாய்ப்பு உள்ள இடங்களிலெல்லாம் வங்கி பணம் எடுப்பதற்கான ATM எந்திரங்கள் போல நிலத்தடி நீரை எடுத்து RO முறையில் சுத்தப்படுத்தி ஆங்காங்கே தண்ணீர் எந்திரக் கூடங்கள் (Water Kiosks) அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் தண்ணீரை ‘குறைந்த விலையில்’ தாராளமாக வாங்கிக்கொள்ளலாம்!.

பல்கலை மாணவர்களை வைத்து ஆய்வு என்கின்ற பெயரில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்ட இடங்களில் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கிறது; மற்ற இடங்களில் இல்லை என்ற எண்ணத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் மக்களின் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. மொத்தத்தில் காசு கொடுத்தால் தண்ணீர் கிடைக்கும் என்ற பண்பாட்டு ஒப்புதலை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளனர். மறுபுறம் ஏழை எளிய மக்களை பிறரிடம் தண்ணீருக்காக பிச்சை ஏந்தும் தண்ணீர் பிச்சைக்காரர்களாக மாற்றியிருக்கிறது (தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் கருநாடகத்தில் ஏழை எளிய மக்களையும் விளிம்பு நிலை மக்களையும் எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதை மேலும் அறிய பார்க்க: https://www.actionaidindia.org/publication/analysis-of-the-effects-of-water-privatization-on-marginalized-communities-in-karnataka/).

இந்த பின்னணியில்தான் கோவை மாநகராட்சி இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறது. இல்லை, இந்த திட்டம் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் கசிந்த பிறகுதான் மாநகராட்சியர் தாமே முன்வந்து சில செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார். கடைசியாக இந்த திட்டம் பற்றி தவறான கருத்துக்களை பரப்புகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகவும் நேரடியாகவும் கேட்ட பிறகும் அதனை பகிர்ந்து கொள்ள மறுக்கிறார். மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் என்பார்கள். சூயெஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை வெளியிட என்ன தயக்கம்?

ghana waterஇக்காரணத்தால் மைசூர் நகர மக்கள் கேட்ட கேள்வியைத் தான் கோவை நகர மக்களாகிய நாம் கேட்க விரும்புகிறோம்.

மாநகரசபை செயல்படாத சூழ்நிலையில் இவ்வளவு பெரிய திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இறுதிபடுத்த வேண்டிய அவசரத் தேவை என்ன? 2007ம் ஆண்டு ஜவஹர் நகர மேம்பாடு திட்டத்தின் கீழ் பில்லூர் இரண்டாம் கட்ட குடி நீர் திட்டத்தை செயல்படுத்த தனியாருக்கு ஒப்படைப்பதற்கான திட்டம் தேவையற்றது என்பதை அன்று பல்வேறு சமூக அமைப்புகளின் கூட்டு இயக்கமாக இருந்த கோவை நகர மேம்பாட்டிற்கான கண்காணிப்புக் குழு மக்கள் மன்றத்தில் முன் வைத்தது. அதுமட்டுமின்றி அன்று திருப்பூர் நகர குடிநீர் திட்ட அனுபவங்களையும் விரிவாக தொகுத்திருந்தது. (பார்க்க: தண்ணீரும் கண்ணீரும், ஏப்ரல் 2007).

“தண்ணீரும் கண்ணீரும்” உட்பட உலகமெங்கிலும் தண்ணீருக்கான போராட்டங்களின் வரலாற்றை தொகுத்து வழங்கிய “தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே என்ற நூல் நியூஸ் சென்சுரி புக் ஹவுஸ் (NCBH) நிறுவனத்தால் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது தண்ணீர் பற்றி சிந்திக்கும் சமூக ஆர்வலர்களின் கையேடாக அமைந்துள்ளது.

அன்று பில்லூர் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கான திட்டச் செலவு 113. 74 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று 60 வார்டுகளுக்கு குடிநீர் வழங்க 3200 கோடி ரூபாய் என்பது நம்மை திகைக்க வைக்கிறது.

எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவையான தண்ணீர் பகிர்வு என்பது இலாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதை மக்களின் நல வாழ்வை பேண வேண்டிய அரசு செய்யலாகாது.

மேலும், எந்த காரணத்திற்காக இந்த சேவை தனியார்மயப்படுத்த வேண்டுமென வாதாடப்படுகிறதோ, உலக நாட்டு அனுபவங்களும் அண்டை மாநில அனுபவங்களும் அவற்றை மெய்பிக்கவில்லை.

விண்வெளி விஞ்ஞானத்தை வசப்படுத்தியிருக்கும் நமக்கு இதற்கு தேவையான தொழில் நுட்பத்தை கையாள்வது மிக மிக எளிது.

உலக வங்கிகளின், உலக நிதியத்தின் நிர்பந்தங்களுக்கும் மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கும் அடிபணிந்து மக்களின் வாழ்வாதாரங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட வேண்டாம். இத்தனை ஆண்டுகளாக தண்ணீரை பராமரித்து வந்த தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தை வலுப்படுத்துவோம். அதில் உள்ள போதாமைகளை களைவோம். படிப்படியாக எல்லோருக்குமான தூய்மையான குடிநீரை உறுதிபடுத்துவோம்.

மாநகராட்சியின், மாநில மற்றும் மத்திய அரசுகளின் அனைத்து திட்டங்களிலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கோருவது சனநாயக உரிமையாகும்.

குறிப்பு: இந்த கட்டுரையை தொகுத்து வழங்க தேவையான அடிப்படை தரவுகளை தந்து உதவிய மருத்துவர் ரமேஷ், சூழலியல் ஆர்வலர் மோகன் ராஜ், எழுத்தாளர் அமரந்தா ஆகியோருக்கு நன்றி. கருநாடக அனுபவம் தொடர்பாக தகவல்களை கொடுத்து உதவிய கருநாடகத் தோழர் சமூக ஆர்வலர் பிரபாகர் ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி.

- பொன்.சந்திரன், இணை செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ் நாடு

பின் இணைப்பு:

A global list of failed privatisation projects in water supply and sanitation by country, date started and ended, companies, reason for failure and outcome. From Water: Private, Limited: Issues in Privatisation, Corporatisation and Commercialisation of Water Sector in India, 2007, by Gaurav Dwivedi, Rehmat and Shripad Dharmadhikary.

No

Place

Country

Year started

Year ended

Company

Reasons for rejection

Result

1

Buenos Aires Province

Argentina

1999

2002

Azurix, Enron subsidary

Frequent price increases, poor service

quality, failure to honour contractual commitments, financial problems.

Termination of privatisation,

Government decision.

2

Buenos Aires City

Argentina

1994

2005

Suez Water, Aguas de Barcelonas

Company asked for huge tariff increase to compensate devaluation of currency. Price hikes were not allowed.

Privatisation was terminated,

Company exited and filed for compensation in ICSID.

3

Tucuman

Argentina

1994

1998

Vivendi Environnement

Severe tariff hikes, intense public protests.

Privatisation was terminated after it became an issue in the state elections. Company filed for compensation in ICSID, lost then re-filed the claims.

4

Cochabamba

Bolivia

1999

2000

International Water Ltd, Bechtel

Drastic increase in water tariffs, intense

public protests.

Termination of privatisation, Government decision.

5

EL Alto and La Paz

Bolivia

1997

2005

Suez Water

Private operator refused to extend potable water supply to the poor areas of the city, peaceful but huge uprising and demonstrations by the people.

Supreme Decree by the

Government cancelling the contract with the company.

6

Halifax

Canada

2002

2003

Suez

Private corporation refused to take responsibility for failing to meet environmental standards of the contract, also effective grassroots campaigning by citizens and environmentalist groups.

Cancellation of sewage treatment contract.

7

Hamilton

Canada

1994

2003

AWS/RWE Thames

Municipal council voted to take back

operation of city water and wastewater

plants after the contract term ended.

Operations to be handled by the municipal body.

8

Toronto

Canada

2002

2004

-

Huge public protests and campaigning

against privatisation efforts.

Rejection of proposals, city council decision.

9

Da Chang, Shanghai

China

1997

2004

Thames Water

Ended concession when government cancelled guaranteed rate of return.

Private company withdrew.

10

Xian Water

China

-

2001

Veolia's subsidiary, Berlinwasser

Ended concession when government

cancelled guaranteed rate of return.

Terminated, sold to Municipality.

11

Shenyang

China

1996

1999

Sino-French Water Company

High price of bulk water, huge losses to

state owned company due to high guaranteed returns, failure of concession contract.

Contract terminated, re-sold to the State owned company.

12

Shantou

China

-

2002

Cheung Kong Infrastructure

Company exited in dispute over contract

Privatisation terminated.

13

Bogota

Columbia

1994

-

-

City refused World Bank money due to

privatisation conditionality.

Water Utility remains in Public Sector.

14

Grenoble

France

1987

2001

Suez

Bribery scandal, public protests.

Termination of privatisation, Municipal decision during election

15

Potsdam

Germany

1998

2000

Eurawasser - Suez-Lyonnaise des Eaux and Thyssen

Unjustified price increases by private

operator.

Termination of privatisation, Municipal body's decision.

16

Munich

Germany

-

1998

-

-

Rejection of proposals, Municipal decision.

17

Honduras

Honduras

-

1995

-

Intense Public Protests.

Rejection of proposals, Government decision.

18

Debrecen

Hungary

-

1995

-

 

Rejection of proposals, Municipal decision.

19

Bangalore

India

2001

-

Biwater

Very high cost of water, assured off-take

from the company.

Bulk water supply contract from Cauvery river cancelled.

20

Delhi

India

-

2006

-

Intense public protests, exposé of contractual terms favouring private companies.

Privatisation stalled.

21

Nairobi

Kenya

1999

2001

Vivendi/Tandiran Information Systsems, Sereuca Space

Severe price hikes, huge job cuts, guaranteed profits, no competitive bidding process.

Privatisation cancelled.

22

Kelantan Waters

Malaysia

1999

1999

Thames Water

Poor services provided by private company, huge debts, low number of connections, high amount of non-revenue water.

Contract terminated, State

government bought back the stake from private company.

23

Indah Water

Malaysia

1996

1997

United Utilities

Private operator exited, eventually contract failed.

Terminated, nationalised.

24

Manila West

Philippines

1997

2003

Maynilad Water Services Inc – consortium of Suez and Benpres holdings

Failure to extend water connections to poor areas, no investments, increase in tariffs, non-fulfillment of other contractual obligations.

Public utility MWSS has had to take back the water services, including liabilities created by the private companies.

25

Puerto Rico

Puerto Rico

1995

2003

Vivendi subsidiary: Autoridad de Acueductos y Alcantarillados de Puerto Rico

Problems in service delivery, non-fulfill-

ment of contractual obligations, violations of environmental laws.

Termination of privatisation,

Government decision.

26

Poznan

Poland

-

2002

-

-

Rejection of proposals, Municipal decision.

27

Lodz

Poland

1993

1995

Vivendi’s engineering subsidiary OTV

Problems in terms of costs and failures,

work was done late and uneconomically,

deadlines not kept, construction work was not finished on time.

City Council terminated

construction contract for sewerage treatment plant.

28

Nkonkobe

South Africa

1999

2002

Suez

Popular protests due to disconnection,

price hikes.

Termination of privatisation, Court ruling.

29

Malmo

Sweden

-

1995

-

-

Rejection of proposals, Municipal decision

30

Dar es Salaam

Tanzania

2003

2006

City Water, subsidiary of Biwater

Erratic water supplies, acute water shortages, failure to provide clean water to poor communities.

Contract terminated, Government decision.

31

Bangkok

Thailand

1993

1997

United Utilities

Private company found that it could not

continue with the sewerage treatment plant construction contract, Government claimed that company is not fulfilling contractual obligations.

Company abandoned contract, it continues to pursue for claims for

compensation.

32

All

Trinidad

1994

1999

-

Failure to fulfill contractual obligations.

Termination of privatisation, Government decision.

33

Atlanta

USA

1999

2003

United Water, Suez subsidiary

Higher water rates, deteriorating quality,

failure to make investments.

Termination of privatisation, Municipal decision.

34

Birmingham

USA

-

2000

-

-

Termination of privatisation, Municipal body decision.

35

New Orleans

USA

2002

-

Veolia Environmental subsidiary

Campaign by a coalition of labour, environmental groups, churches and citizen activists.

Rejection of private bids by city's Sewerage & Water Board.

36

All

Uruguay

-

2004

-

Increased water tariffs, new law by plebiscite making water a fundamental right.

Citizens voted water as a human right in a national referendum.

37

Thu Duc, Ho Chi Minh City

Vietnam

1997

2003

Suez-Degremont

Company exited in dispute over contract

terms. .

Contract terminated

.

Pin It