கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“சில லட்சம் ரூபாய் கட்டினால்தான் பொறியியல் கல்லூரியில் பி.இ சேரமுடியும் என்ற நிலைமை இருந்திருந்தால் என்னுடைய கிராமத்தை விட்டு நான் வெளியே வந்திருக்க முடியாது. பி.இ படித்திருக்க முடியாது; பல உயர் பதவிக்கு வந்திருக்க முடியாது”

1996 ல் விருதுநகரில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டு கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர். அனந்தகிருஷ்ணன் பேசியது.

இன்று காசு உள்ளவர்களுக்கே கல்வி என்ற நிலை உருவாகிவிட்டது. விளைவு,

ரஜினி என்ற கேரள மாணவி சுயநிதி கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கர்நாடகாவில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் இரண்டு மாணவிகள் தற்கொலை.

கோவையில் தங்கராஜ் என்ற 9ஆம் வகுப்பு மாணவன் ரூ. 175 கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை முயற்சி.

இதுபோன்ற ஏராளமான உதாணரங்கள். கல்வி கட்டணங்கள் செலுத்த முடியாமல் தொடரும் தற்கொலைகள். ஒரு மாணவனுக்கே, மாணவிக்கோ கல்வி மறுக்கபடுவது இந்த தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு.

உயர்கல்வியின் முக்கியத்துவம்

Supreme courtநம் நாட்டில் ஆரம்பக்கல்வியில் சேரும் 100 மாணவர்களில் 6 மாணவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றனர். உயர்கல்வியில் கூட வேலைவாய்ப்புள்ள தொழிற்கல்லூரிகளில் சேருவது மிகவும் குறைவு. இதுதான் இன்றைய நிலை. ஆரம்பக் கல்வியும், பள்ளிக்கல்வியும் முக்கியமானது. ஆனால், உயர்கல்வி இல்லை என்றால் வேலையில்லை. “இந்திய நாட்டில் அறிவு-சுயசார்ப்பை பாதுகாக்க, உறுதிப்படுத்த, இறையாண்மையை வளர்த்தெடுக்க உயர்கல்விக்கு முக்கிய பங்கு உண்டு” என்கிறார் பேராசிரியர் பிரபாத் பட்நாயக். இத்தகைய சூழலில் உயர்கல்வி அளிக்கும் அடிப்படை பொறுப்பை குறிப்பாக பி.இ, எம்.பி.பி.எஸ் போன்ற தொழிற்கல்வி அளிக்கும் பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கிறது. மறுபுறம் கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி போன்ற பட்டப்படிப்புகளும், வேலை வாய்ப்புள்ள படிப்புகளும் அரசு கல்லூரிகளிலோ அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளிலோ இல்லை. அப்படி இருந்தாலும் இத்தகைய பாடங்களை சுயநிதி பிரிவாகத் தான் உள்ளது. அதிகமான கட்டணங்கள் செலுத்தி சேர வேண்டும்.

ஏன் இந்த நிலை? தோட்டியின் மகன் தோட்டியாகத்தான் இருக்க வேண்டுமா? கொத்தனார் மகன் கொத்தனாராக, துப்புரவு தொழிலாளியின் மகன் துப்புரவுத் தொழிலாளியாக, விவசாய தொழிலாளியாக இருக்க வேண்டுமா? பொறியாளராக, டாக்டராக, வழக்கறிஞராக, கணினி பொறியாளராக வரக் கூடாதா? வர முடியாது என்பது தான் இன்றுள்ள நிலைமை. இத்தகைய கருத்தை பறை சாற்றுவதுதான் 12.08.05 வெளியான உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் (பி.எ. இனாம்தார் என்ற வழக்கில்) அளித்த தீர்ப்பு. இத்தீர்ப்பு பரவலான விமர்சனத்திற்கு உள்ளானது. விமர்சனத்தை தாங்கிக் கொள்ள இயலாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெகுண்டெழுந்தார்.

“நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பு பிடிக்காவிட்டால் சொல்லுங்கள், பேசாமல் நீதிமன்றங்களை மூடிவிடுகிறோம். அதன் பிறகு அரசு தனது இஷ்டம் போல் செயல்படட்டும்” என்று ஒரு வழக்கில் விவாதம் நடந்து கெண்டிருந்தபோது நீதிபதி ஆர்.சி. லஹோத்தி கோபத்துடன் கூறினார். நீதிமன்றத்தை மதித்து நடக்குமாறும் அவர் அட்டர்னி ஜெனரலை கேட்டுக் கொண்டார்.

“இந்த அளவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோபப்பட்டிருக்கக் கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல;” நீதிபதிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசுகிற போது, “நீதிமன்றங்களின் தீர்ப்பும் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான்” என பேசியிருக்கிறார்.

பி.எ. இனாம்தார் வழக்கில் ஏழு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு “அரசு உதவி பெறாத சுயநிதி கல்லூரிகளில் இடஒதுக்கீடு அளித்திட வேண்டுமென்று உத்திரவிட அரசுக்கு அதிகாரமில்லை” என்று கூறியது. இத்தீர்ப்பின் மீது எழுந்த சர்ச்சையில்தான் தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோத்தி கோபமாக பேசியிருக்கிறார்.

“நீதிமன்றத்துடன் மோதலை யாரும் விரும்பவில்லை; அதே நேரத்தில் நீதிபதிகளும் வரம்புக்கு உட்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டும்” என அனைத்துக் கட்சியினரும் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார்கள்.

சுயநிதி கல்லூரிகளில் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளித்திட வகை செய்யும் வகையில் அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருவதுதான் ஒரே வழி என நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் கருத்து தெரிவித்தன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன்சிங் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும், அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவதுதான் தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சுயநிதி கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டினை பாதுகாக்க முடியும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

தற்போது எழுந்திருப்பது நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரமா? நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமா? என்ற பிரச்சினையல்ல; இந்தியாவில் பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கியுள்ள தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிப்பது பற்றித்தான். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் சட்டத்திலேயே சரத்து சேர்க்கப்பட்டு அமலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் சுயநிதி கல்லூரிகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு இனி இல்லை என்றாகி விட்டது. இதுதான் முக்கிய பிரச்சினை. இதை சட்டப் பிரச்சினையாக, உச்சநீதிமன்றம் பார்க்கிறது. இது சட்டப்பிரச்சினையில்லை, சமூகப் பிரச்சினை. சமூக நீதி சம்பந்தப்பட்ட பிரச்சினை! இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.

விவாதத்திற்குள்ளான தீர்ப்பு:

12.8.2005 அன்று ஏழுநீதிபதிகள் இனாம்தார் வழக்கில் அளித்த தீர்ப்பின் சாரம்.

1. அரசுக்கு இத்தனை சதம், நிர்வாகத்துக்கு இத்தனை சதம் என அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளின் சீட்டுகளை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை.
2. சுயநிதி தொழிற் கல்லூரிகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று சுயநிதி கல்லூரிகளை அரசு நிர்பந்திக்க முடியாது.
3. சுயநிதி கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் இஷ்டம் போல் கல்விக்கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம்.
4. விரும்பினால் மாணவர் சேர்க்கையையும் சுயநிதி கல்லூரி நிர்வாகங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

12.08.2005 அன்று அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மேற்கண்ட அம்சங்கள் முக்கியமானவை. இவைகளை முழுமையாக புரிந்து கொள்ள கடந்த காலத்தில் உச்சநீதிமன்றம் அறித்த மற்ற தீர்ப்புக்களையும் பரிசீலிக்க வேண்டும்.

1. உண்ணிகிருஷ்ணன் வழக்கு - 1993
2. டி.எம்.ஏ. பாய் வழக்கு - 2002
3. இஸ்லாமிய அகாதமி வழக்கு - 2003
4. பி.ஏ. இனாம்தார் வழக்கு – 2005

இந்த நான்கு வழக்குகளில் முக்கியமான அம்சங்களை பரிசீலித்தால், இன்றைய உலகமயச் சூழலில் உச்சநீதிமன்றமும் கரைந்து விட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும். கல்வி, சுகாதாரம் போன்ற மக்களுடைய வாழ்வாதாரமான பிரச்சினைகளில் அரசு மெல்ல, மெல்ல நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருவதுதான் உலகமய, தாராளமய கொள்கையின் ஒரு பகுதி. சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு, ஆண்டு குறைந்து வருகிறது. வசதி உள்ளவர்கள் வைத்தியம் செய்துக் கொள்ளட்டும், காசு உள்ளவர்கள் உயர் கல்வி படிக்கட்டும் என கல்வி, சுகாதாரம் போன்ற அம்சங்களில் அரசு தன் பொறுப்பை தட்டிக் கழித்து வருவதற்கு ஏற்ப உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது உண்ணிகிருஷ்ணன் வழக்கில் துவங்கி, அடுத்தடுத்து அளிக்கப்பட்ட தீர்ப்புகள், கொஞ்சம், கொஞ்சமாக ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்கு வழிவகுத்துள்ளது. தீர்ப்புகளை ஒவ்வொன்றாக பரிசீலிப்போம்.

உன்னி கிருஷ்ணன் வழக்கு

“14 உயது வரைக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது மட்டுமே அடிப்படை உரிமை. ஆரம்ப கல்வி அளிக்க வேண்டுமென ஒருவர் அரசு மீது வழக்கு போட முடியும். ஆனால், உயர் கல்வி அப்படியல்ல; பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி அடிப்படை உரிமை அல்ல; அரசு உயர்கல்விக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாததால், தனியார் தலையீடு தேவைப்படுகிறது. இது தவிர்க்க இயலாதது.” இதை நீதிமன்றம் தடை செய்ய முடியாது.

“தனியார் சுயநிதி கல்லூரிகள் அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்கலாம். ஆனால், அது அரசு தீர்மானிக்கும் கட்டணத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. கல்வியை வியாபரத்தைப் போல் நடத்தக்கூடாது. இது பொது நலனுக்கும், இந்திய மரபுகளுக்கும் விரோதமானது. எனவே கட்டாய நன்கொடை வசூலிப்பது சட்ட விரோதமானது. இவ்வாறான சுயநிதி கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முறையையும் கல்விக் கட்டணத்தையும் அரசு தீர்மானிக்க வேண்டும்.”

வியாபாரம் நடத்துவதுபோல், தொழிற்சாலை துவங்குவது போல், ஒரு தனிநபர் சுயநிதி கல்லூரிகளை துவங்கி நடத்தலாம் என உண்ணிகிருஷ்ணன் வழக்கின் தீர்ப்பு வழங்கியது பாதகமானதே. இருப்பினும் உயர் கல்வியை வியாபார நோக்கோடு நடத்தக்கூடாது மாணவர் சேர்க்கைமுறையையும் கல்விக் கட்டணத்தையும் அரசு தீர்மானிக்கலாம் என்று கூறியது சாதகமான அம்சம். இதன் அடிப்படையில்தான் மாநில அரசுகள் இலவச சீட்டு, கட்டண சீட்டு என இரண்டு வகையான கல்விக் கட்டண முறையையும் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை முறையையும் உருவாக்கி அமலாக்கி வந்தது.

டி.எம்.ஏ. பாய் வழக்கு

இலவச சீட்டு, கட்டணச் சீட்டு என இரண்டு வகை கல்விக் கட்டண முறையினால், ஏழைகளுக்கு நன்மை இல்லையெனவும், சட்டத்திற்கு விரோதமானது எனவும் கூறி, இம்முறையை டி.எம்.ஏ. பாய் வழக்கில் நீதிபதிகள் ரத்து செய்து விட்டார்கள். இரண்டு வகையான கட்டண முறைகள் ஏழைகளுக்கு நன்மையில்லை என்றால், அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஒரு கட்டண முறையை ஆலோசனையாக நீதிபதிகள் முன்வைத்திருக்கலாம். மாறாக, இலவச சீட்டு என்ற முறையையே ரத்து செய்து விட்டார்கள். (இலவச சீட்டு என்பது முற்றிலும் இலவசமல்ல; கட்டணச் சீட்டை விட சிறிது குறைந்த கட்டணம்தான்) குழந்தையை குளிப்பாட்டி, அழுக்குத் தண்ணீரை மட்டும் கொட்டுவதற்கு பதிலாக, குழந்தையையும் சேர்த்துக் கொட்டிய கதையைப் போலத்தான் டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பு இருந்தது. மேலும் இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் (வாஜ்பாய் ஆட்சியின் போது) ஏழைகளுக்கு இலவச சீட்டு தொடர வேண்டும் என்று வாதிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“சக்திவாய்ந்த உலகமய, தனியார்மய கொள்கையின் தாக்கத்திற்கு மேல்தட்டு, படித்த அறிவுஜீவிகளும் இறையாகியுள்ளார்கள்” என்பதை சமீபத்தில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பார்க்கலாம் என டி.எம்.ஏ. பாய் வாக்குத் தீர்ப்பைப் பற்றி பகிரங்கமாகவே நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் விமர்சித்தார்.

பாதகமான தீர்ப்பாக இருந்தாலும், கல்விக் கட்டணத்தையும், மாணவர் சேர்க்கை முறையையும் தீர்மானித்திட மாநில அரசுகள் குழுக்கள் அமைக்கலாம் என டி.எம்.ஏ. பாய் வழக்கு கூறியது சாதகமான அம்சம். டி.எம்.ஏ. பாய் வழக்கில் 11 நீதிபதிகள் பென்ச் அளித்த தீர்ப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாரா 68 (I, II). அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளிலும் சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்தது.

“68(1) அரசு உதவி பெறும் தொழிற் கல்லூரிகளுக்கும் அரசு உதவி பெறாத தொழிற் கல்லூரிகளுக்கும் (சுயநிதி) மாணவர் சேர்க்கையில் ஒரே விதிமுறைகளை கடைப்பிடிப்பது முறையற்ற செயலாகும். அரசு உதவி பெறாத தொழிற் கல்லூரி நிர்வாகங்களுக்கு மாணவர் சேர்க்கையில் அவர்கள் விரும்பும் முறையை கடைப்பிடிக்க உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தகுதி அடிப்படையில், மாணவர் சேர்க்கை என்ற கொள்கையை விட்டு விடக் கூடாது. அரசு உதவி பெறாத கல்வி நிலையத்திற்கு அங்கீகாரம் அளித்திடும் போது, தகுதி அடிப்படையில் மாணவர்களை சேர்க்கும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என அரசோ (அ) அங்கீகாரம் அளித்திடும் பல்கலைக் கழகமோ கோரலாம். அதே நேரத்தில், விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு போதுமான அதிகாரம் அளித்திட வேண்டும்.

(II) “உதாணரமாக சுயநிதி கல்லூரி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட சதமானம் சீட்டுக்களை நிர்வாக கோட்டாவாக தீர்மானித்து, (அரசு (அ) பல்கலைக் கழகம் (அ) கல்லூரி நடத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் இருந்து) மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். மீதமுள்ள சீட்டுக்களை அரசுக்கு அளித்து அரசு அதில் இருந்து சமுதாயத்தில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யலாம்.” நிர்வாகத்திற்கு எத்தனை சதம் சீட்டுக்கள், அரசுக்கு எத்தனை சதம் சீட்டுக்கள் என்பதை ஸ்தல அளவிலான தேவையை கணக்கில் கொண்டு அரசு முடிவு செய்யலாம். அவ்வாறு முடிவு செய்கிறபோது, சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்லூரி மற்றும் அரசு உதவி பெறாத சிறுபான்மை அல்லாத தொழிற் கல்லூரிகளுக்கு எத்தனை சதமானம் என்பதை அரசு முடிவு செய்யலாம். அரசு உதவி பெறாத தொழிற் கல்வி அல்லாத கல்லூரிகளிலும் இதே முறையை கடைப்பிடிக்கலாம்.

இஸ்லாமிய அகாதமி வழக்கு

டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பை எதிர்த்து தொடுத்த வழக்குதான் (2003) இஸ்லாமிய அகாடமி வழக்கு; டி.எம்.ஏ. பாய் வழக்கை பரிசீலித்து குறிப்பாக பாரா 68யையும் பரிசீலித்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பென்ச் தீர்ப்பு அளித்தது. இதனடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை முறைக்கு ஒரு குழுவும் கல்விக் கட்டணத்தை தீர்மானிக்க ஒரு குழுவும், மாநில அரசுகள் அமைத்து மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.

இதனடிப்படையில்தான் தமிழகத்தில் நீதிபதி சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவும், நீதிபதி ராமன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதைப்போலவே மற்ற மாநிலங்களிலும் இரண்டு குழுக்கள் அமைத்து மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. மேற்கண்ட குழு தீர்மானித்த கல்வி கட்டணத்திற்கும் அதிகமான கட்டணத்தை வசூலித்தால் அக்கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கலாம் என இஸ்லாமிய அகாடமி தீர்ப்பு கூறியது. இஸ்லாமிய அகாடமி தீர்ப்பை அனைத்து சுயநிதி கல்லூரி நிர்வாகங்களும் எதிர்த்து வந்தன.

இனாம்தார் வழக்கு தீர்ப்பு (12.8.05)

இஸ்லாமிய அகாடமி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தொடுக்கப்பட்ட வழக்குதான் பி.ஏ. இனாம்தார் என்ற வழக்கு. இவ்வழக்கில் 7 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பென்ச் 12.8.05 அன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இதுவரையில் நடைமுறையில் இருந்த அரசு கோட்டா, நிர்வாக கோட்டா என்ற முறையையும், இடஒதுக்கீடு என்ற முறையையும், அரசே கல்விக் கட்டணத்தை தீர்மானிக்கும் முறையையும் ரத்து செய்து விட்டது. இஸ்லாமிய வழக்கு தீர்ப்பில் சொல்லப்பட்ட இரண்டுக் குழுக்கள் தேவையில்லை என இனாம்தார் வழக்கு தீர்ப்பு கூறுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சுயநிதி தொழிற் கல்லூரி நிர்வாகங்கள் தங்களை இவ்வழக்கில் இணைத்துக் கொண்டு இஸ்லாமிய வழக்கு தீர்ப்பை எதிர்த்தன. பெரும்பான்மையான மாநில அரசுகள் இஸ்லாமிய வழக்கு தீர்ப்பு சரியானது என வாதிட்டன.

பி.ஏ. இனாம்தார் வழக்கில் 7 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தங்களுக்குள்ள வரம்பு பற்றி சொல்லும்போது. “டி.எம். பாய் வழக்கில் 11 நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள். எனவே, அந்த தீர்ப்பை திருத்துவதற்கு 7 நீதிபதிகள் கொண்ட பென்ச்க்கு அதிகாரம் கிடையாது. 11 நீதிபதிகளை விட கூடுதலான எண்ணிக்கையையில் நீதிபதிகளைக் கொண்ட பென்ஞ்தான் டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பை திருத்த முடியும். எனவே இனாம்தார் வழக்கில் எங்களது கடமை டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பு பற்றி இஸ்லாமிய வழக்கில் 5 நீதிபதிகள் அளித்த விளக்கம் சரிதானா என தீர்ப்பளிப்பதுதான்” என கூறியிருக்கிறார்கள்.

டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பின் பாரா 68க்கு இனாம்தார் வழக்கு தீர்ப்பு சொல்லும் விளக்கம் வருமாறு:

“பாரா 68இல் முதல் பிரிவில் நீதிபதிகள் கூறியிருப்பது சட்டத்திற்கு ஒப்பானது. அது சட்டம். இரண்டாவது பகுதியில் நீதிபதிகள் சொல்வது சட்டமல்ல வெறும் ஆலோசனை மட்டுமே. அரசு ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவி செய்யலாம் என்று சொல்வது போகிற போக்கில் நீதிபதிகள் சொல்வது உதாரணத்திற்கேயன்றி தீர்ப்பல்ல என இனாம்தார் வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இந்த விளக்கம் சுயநிதி கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமான விளக்கம். இத்தகைய விளக்கத்தை தீர்ப்பாக அளித்து தனியார் சுயநிதி கல்லூரிகள் தங்கள் விருப்பம் போல் கல்வி கட்டணத்தை தீர்மானித்திடவும், விருப்பம்போல் மாணவர் சேர்க்கையை தீர்மானிக்கவும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்வியை முழுக்க முழுக்க வியாபாரமாக நடத்திட உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டி விட்டது. கல்வி ஒரு கடைச்சரக்கு

“அரசியல் சட்ட விதி 16(4) வகுக்கப்பட்டதன் நோக்கம் அரசாங்கத்திற்குள் மேலும் பல தலித் மக்களை தோட்டிகளாகவும், தெருக் கூட்டுபவராகவும் நுழைப்பதல்ல. நிர்வாக அதிகாரத்தை பொதுச் சொத்தாக்கிடும் விதத்தில் அதிகாரிகளாகவும், அலுவல தலைவர்களாகவும் அவர்களை நுழைத்திட வேண்டும். அறிவுறுத்தும் முயற்சிகள் மூலமல்ல, அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தின் மூலம் தான், ஜாதி முறையின் சாபக்கேடான சமுதாய அடுக்குப் பிரிவினையை ஒழிக்கவும் செங்குத்தான இயக்கத்தன்மையை ஈட்டவும் முடியும்”.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது அரசியல் சட்டம் பிரிவு 15-ன்படி சட்டத்திற்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை திருத்தி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க கொண்டுவரப்பட்ட திருத்தம் தான் சட்டப் பிரிவு 15(4). இதன்படி கல்விரீதியில், சமூகரீதியில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது சட்டப்பூர்வமானது. இத்திருத்தம் தான் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட முதல் திருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்க வழிவகுக்கும் அரசியல் சட்ட சரத்து 15(4) மற்றும் 16(4) ஆகியவற்றை பரிசீலிக்காமலேயே உச்சநீதிமன்றம் சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது என தீர்ப்பளித்துவிட்டது. இத்தீர்ப்பின் மூலம் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை உச்சநீதிமன்றம் பறித்துவிட்டது.

கல்வி வியாபாரமாகிறது:

கல்வி நிலையங்களும் ஒரு தொழில்தான் என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் நலன் மற்றும் பல அம்சங்களில் இது தேவையானதுதான். ஆனால், சுயநிதிக்கல்லூரிகள் தங்கள் இஷ்டம்போல் கல்விக் கட்டணத்தை தீர்மானித்துக்கொள்வது ஒரு வியாபரமாகிறது. கல்வியை வியாபாரமாக்கிட அனுமதிக்கலாமா? பஞ்சாலை, சர்க்கரை ஆலை, வணிக வளாகம் துவங்குவது போல் சுயநிதி கல்லூரி துவங்கி கல்வியை வியாபாரமாக்கிவிட்டார்கள். இதற்குத்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்திட அரசுக்கு அதிகாரமும் இல்லை என கூறும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிநாட்டு இந்தியருக்கு மட்டும் 15 சதம் சீட்டுக்களை ‘ஒதுக்கீடு’ செய்ய சொல்கிறது. “சுதந்திரப்போராட்ட காலத்தில் உருவான மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்திட நாடு விடுதலைக்குப் பின் உருவான மத்திய அரசு கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்திட்டங்களை அமலாக்குவது அரசின் பொறுப்பு, கடமை என தீர்மானித்தது. ஆனால், இன்றைய அரசின் கொள்கை கடமையை தட்டிக்கழிப்பதுதான். அரசின் நடவடிக்கையை ஆதரித்து நீதிமன்றங்கள் எதிர்ப்புரட்சிக்கு துணை போகின்றன” என பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கடுமையாக சாடி இருக்கிறார்.

உயர்கல்வி அளிப்பது அரசின் பொறுப்பு. இதற்கு தேவையான நிதி இல்லை என கூறுவதை ஏற்கவியலாது. நிதி திரட்டிட முடியும். உலகில் பல நாடுகளை விட இந்தியாவில் முதலாளிகள் மீது போடப்படும் வரி மிக குறைவே. பல முதலாளித்துவ நாடுகளில் உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6 சதம் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இங்கு 2 சதத்திற்கும் குறைவாகவே கல்விக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

இடஒதுக்கீடு இல்லை, கல்வி கட்டணத்தை இஷ்டம் போல் தீர்மானித்துக் கொள்ளலாம். கட்டணச்சீட்டு, இலவசச்சீட்டு என்றோ நிர்வாகக் கோட்டா, அரசு கோட்டா என்ற முறை இல்லை. மொத்தத்தில் அனைத்து சீட்டுக்களையும் நிர்வாகம் இஷ்டம் போல் சேர்த்துக் கொள்ளலாம். இதுதான் 12.8.05 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு. சுயநிதி கல்லூரி நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று உற்சாகமடைந்துள்ளனர். வரும் கல்வியாண்டில் இருந்து வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும் என குதித்து கும்மாளமிடுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திட, சமூகநீதி வழங்கிட வலுவான குரலெழுப்புவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இப்பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு 69 சதம் இட ஒதுக்கீடு தமிழகம் கோரி வருகிறது. அதிகமான சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரும் தமிழகத்தில்தான் நாட்டிலேயே அதிகமான சுயநிதி தொழில் கல்லூரிகள் உள்ளன. சுமார் 250 தொழிற்கல்லூரிகளில் பெரும்பான்மையானவற்றுக்கு சொந்தக்காரர்கள் முன்னாள், இன்னாள் அரசியல்வாதிகள். குறிப்பாக திராவிட கட்சிகளையும், காங்கிரஸ் கட்சியையும் சார்ந்தவர்கள். இக்கட்சியைச் சார்ந்தவர்களே பெரும்பான்மையான சுயநிதி கல்லூரிகளை நடத்தி கொண்டே, இடஒதுக்கீடு கோருவதும் வேடிக்கையே.

சுயநிதி தொழிற்கல்லூரிகள் பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள், பாதகமான தீர்ப்புகள் வெளியானபோது ஆட்சிப் பொறுப்பில் இருந்தது வாஜ்பாய். டி.எம்.ஏ. பாய் வழக்கு மற்றும் இஸ்லாமிய அகாடமி தீர்ப்புகள் வந்த காலத்திலேயே தீர்ப்பை திருத்திட அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கலாம். இத்தகைய நடவடிக்கையை வாஜ்பாய் அரசு எடுக்கவில்லை, எடுக்கவும் விரும்பவில்லை.

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கை எல்லாத் துறைகளிலும், 1991இல் இருந்து வேகமாக அமலாக்கப்பட்டு வருகிறது. 1998இல் ஆட்சிப் பொறுப்பேற்ற வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக அரசும் முந்தைய அரசை விட மிக வேகமாக தாராளமயக் கொள்கையை அமலாக்கியது. இக்காலத்தில் தமிழகத்திலும் இதே கொள்கை தான் அமலாக்கப்பட்டது. இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை ஆதரித்தன. இக்கொள்கையை ஆதரித்து அமலாக்கிவருகின்ற கட்சிகள் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும் குரல் கொடுப்பது, வினையை விதைத்து விட்டு தினையை அறுக்க ஆசைப்படுவது போல் உள்ளது.

உலகமய, தாராளமயக் கொள்கையில், தனியார்மயம் என்பது முக்கியமான பகுதி. பொதுத்துறை தொழில்களை தனியார்மயமாக்குவதுபோல், கல்வியையும், சுகாதாரத்தையும் தனியார்மயமாக்கினார்கள். இதனுடைய விளைவைத்தான் கல்வித்துறையில் இன்று தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

நீதிமன்றங்கள் சமீப காலத்தில் உலகமய பொருளாதார கொள்கையை ஆதிகரிக்கின்ற அடிப்படையில் தீர்ப்புக்களை அளித்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனமான பாரத் அலுமினிய கம்பெனி தனியாருக்கு விற்கப்பட்டதை தடுக்க இயலாது; நீதிமன்றம் தலையிட முடியாது என்று தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகத்தான வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியபோது நீதிமன்றம் தலையிட முடியாது என்ற சொல்லவில்லை; மாறாக வேலைநிறுத்தம் அடிப்படை உரிமை இல்லை என்ற ஒரு பாதகமான கருத்தை தெரிவித்தது. இதே அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் சுயநிதி கல்லுரி நிர்வாகங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. உலகமய, தாராளமய பொருளாதார கொள்கையை முழுமையாக ஆதரிக்கும் அளவிற்கு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வருகின்றன.

இடஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை போன்ற அம்சங்களில் அரசுக்கு அதிகாரம் அளித்திடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருகிறபோது தனியார் நிகர்நிலைப் பல்கலைகழகத்திற்கும் மற்ற எந்த பல்கலைகழகத்திற்கும் விதிவிலக்கு இல்லை என்றளவுக்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இக்கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏற்றுக் கொண்ட தேசிய குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கல்வி பற்றிய பகுதியில் “ஒரு மாணவரோ அல்லது மாணவியோ ஏழை என்ற காரணத்தினால் எவருக்கும் தொழிற்கல்வியில் இடம் மறுக்கப்படாது” என்று உள்ளது. இதைத்தான் அமலாக்க வேண்டுமென்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பி.ஏ. இனாம்தார் தீர்ப்பு அமலானால், பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கியுள்ள தலித் மற்றும் பிற்படுத்தப் பட்ட பிரிவினரை முன்னேற முடியாது. சமூக நீதியை பாதுகாத்திட வேண்டுமென்றால், உச்சநீதிமன்ற தீர்ப்பு திருத்தப்பட வேண்டும். நாடாளுமன்றம் ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதன் மூலமே இதைச் செய்ய முடியும். இத்தகைய திருத்தத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. உயர்கல்வி வியாபாரமாகி வருவதை எதிர்ப்பது என்பது மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக கருதக் கூடாது. இது ஒரு சமூக பிரச்சனை. இத்தகைய கண்ணோட்டத்தோடுதான் நாடாளுமன்றமே இப்பிரச்சனை குறித்து விவாதித்தது.

அடுத்து கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாத்திட அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வர குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக இயக்கங்களின் கடமையாகும். இடஒதுக்கீடு மட்டுமல்ல தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மீது சமூகக் கட்டுப்பாடு, அரசின் கட்டுப்பாடு அவசியமானது எனவும் குரலெழுப்ப வேண்டியுள்ளது.

இது கல்வி காக்கும் முழக்கம் மட்டுமல்ல, தேசம் காக்கும் முழக்கம்.

- இது இந்திய மாணவர் சங்கத்தின் வெளியீடு