மீண்டும் நுழைகிறது நுழைவுத் தேர்வு
தமிழக சட்டமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. ஏற்கனவே - தமிழக அரசு, இது தொடர்பாக பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் - சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி சட்டமாக்கினார். இடஒதுக்கீடு எனும் சமூகநீதிக் கொள்கையைத் தொடர்ந்து உயர் நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றங்களும் பறித்து வருகின்றன. இந்த நீதிமன்றங் களில் பார்ப்பனர்களும், உயர்சாதிக் காரர்களுமே நீதிபதிகளாக இருப்பதால் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
இப்போது உயர்நீதி மன்றம் தீர்ப்பு கூறுவது என்ன?
• மாநில அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் பட்டது. சி.பி.எஸ்.ஈ. என்று கூறப்படும் மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளுக்கு நுழைவுத் தேர்வு தனியாக நடக்கும் என்று தமிழக அரசு கூறியது. காரணம் - சி.பி.எஸ்.ஈ. எனும் மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ் நடத்தும் பள்ளிகளுக்கு தமிழக அரசு ஆணை பிறப்பிக்க முடியாது. ஆனால் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஒரு மாநிலத்தில் இருவேறு தேர்வு முறை அமுலில் இருப்பது அனைவருக்கும் ‘சம உரிமை’ என்ற அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று கூறியுள்ளது. இதனால் வெகு சிலர் படிக்கும் சி.பி.எஸ்.ஈ. மாணவர் களுக்காக பெரும்பான்மை மாணவர்கள் படிக்கும் மாநில அரசுப் பள்ளிகளில், நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என் கிறது, நீதிமன்றம். இது சமத்துவமான நீதியா?
• மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுப் படுத்தும், அகில இந்திய மருத்துவ கவுன்சில், பொறியியல் கல்லூரி களைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில், ஆகிய அமைப்புகள் பொறியியல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை கட்டாயப் படுத்தியிருப்பதால், மாநில அரசு, இதில் சட்டம் இயற்ற உரிமையில்லை என்கிறது உயர்நீதிமன்றம். இதன் மூலம் மாநிலங்களிலுள்ள மருத்துவ, பொறியியல் கல்லூரி களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தொழில் கல்வி, மருத்துவக் கல்வி தொடர்பாக சட்டங்களை உருவாக்கும் உரிமை மத்திய அரசுக்குப் போய்விட்டது. என்ன காரணம்?
• மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் இருந்த கல்வி - 1976 ஆம் ஆண்டு, அவசர நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப் பட்டுவிட்டது தான் காரணம். பொதுப் பட்டியலின் கீழ் உள்ள கல்வித் துறை மாநில அரசு, மத்திய அரசுகள் இரண்டுக்கும் உரிமை படைத்ததாகிவிட்டது. என்றாலும், ஒரே பிரச்சினையில் மாநில, மத்திய அரசுகள் வெவ்வேறு சட்டங்களை இயற்றினால், மத்திய அரசு சட்டம் மட்டுமே செல்லுபடியாகும்.
மத்தியில் கூட்டணி அமைச்சரவையில் - மாநில சுயாட்சி பேசும் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும்கூட கடந்த 30 ஆண்டுகளாக கல்வி உரிமையை மாநில உரிமைக்குக்குக் கொண்டு வரும் முயற்சிகளில், இந்தக் கட்சிகள் ஆர்வம் காட்டவே இல்லை என்பது வேதனையான உண்மை. எனவேதான் இப்போது உயர்நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பிலும் “தொழில் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் முழு உரிமையும் - மத்திய அரசு ஆக்கிரமிப்பில் இருக்கிறது. மாநில அரசுக்கு இதில் உரிமையே இல்லை” என்று கூறிவிட்டது.
• மாநில சட்டமன்றத்தில் - மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தால்கூட, வேறு எந்த மாநிலத்திலிருந்தோ வந்து உட்காரும் நீதிபதிகள், சமூகநீதியில் நம்பிக்கை இல்லாத பார்ப்பன சக்திகள், மக்கள் மன்றத்தின் தீர்மானங்களை தோற்கடித்து விடுகின்றன.
• கிராமப்புற மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது - இதே நீதிமன்றங்கள் தான்.
• 5 ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கும் தமிழ் வழிக் கல்வி கலைஞர் ஆட்சியின் ஆணையை ரத்து செய்தது - நீதிமன்றங்கள் தான்.
• தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டை - மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்ற முடியாமல் வழக்கு விசாரணையை முடக்கி வைத்திருப்பது - நீதிமன்றங்கள் தான்.
• தனியார் பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடஒதுக்கீடுகளையும் ரத்து செய்தது - நீதிமன்றங்கள் தான். (பிறகு நாடாளுமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.)
• எனவேதான் - நீதித்துறையிலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைக்கிறோம்.