எந்த நாடு சுதந்திரமாக இருக்கிறதோ அது எனது தாய்நாடு - என்றார் அமெரிக்காவின் இரண்டாம் அதிபர் ஜெபர்சன். சுதந்திரத்தின் மீது அமெரிக்காவுக்கு எத்தனை பற்றுறுதி என்றுதான் அப்போது அந்தச் சொற்றொடர் புரிந்துக் கொள்ளப்பட்டது. ஆனால், சுதந்திரம் பற்றிய அதன் பிரகடனம் பயங்கரமானது என்று பின்னர் விளங்கத் தொடங்கியது. ஆம்; எந்த நாட்டுக்குள்ளும் அமெரிக்கா சுதந்திரமாக நுழைய விரும்புகிறது. ஒவ்வொரு நாட்டையும் அது தன்வயப்படுத்திக் கொள்ள விரும்புகிறது. எந்த நாட்டையும் ஆக்கிரமித்துக் கொள்ளவும், அடிமைப்படுத்தவும் தனக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பது போல் அது எல்லா நாடுகளையும் அச்சுறுத்துகிறது.
அமெரிக்கர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள் என்று பெருமையடித்துக் கொள்ளாத அதிபரே இல்லை. ஒவ்வொரு நாட்டின்மீதும் தனக்குள்ள ‘சுதந்திரத்தை’ நிலை நாட்டுவதற்காக கயமையின் எந்த எல்லைக்கும் அப்பால் அது சென்று விடும். ஒவ்வொரு நாட்டிலும் தனது ‘விசுவாசி’களை அரசியலில் நுழைத்து, அந்த நாட்டின் தலைவர்களையும் சுதந்திரத்தையும் தீர்த்துக் கட்டுவதில் தனது ‘திறமை’ அனைத்தையும் வெளிப்படுத்தத் தவறுவதில்லை. சவுதியில், வியத்நாமில், ரொடீஷியாவில், சிலியில்,... என்று தொடங்கி...சோவியத் யூனியனிலும் தனது ‘விசுவாசிகளை’ அது உருவாக்கியது. கோர்பச்சேவைப் புகழ்ந்தது; நோபல் பரிசு வழங்கியது; கோர்பச்சேவைக் கொண்டே கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்தது. சோவியத் யூனியன் தகர்ந்தது. எண்ணெய்வளம் மிகுந்த ஈராக் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியது, இன்றைய அதிபர் ‘புஷ்’ஷின் தகப்பன் ‘புஷ்’ அதிபராக இருந்தபோது.
அரபு நாடுகளுக்கிடையேயுள்ள பகைமையைப் பயன்படுத்தி, குவைத்தின் ‘சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக’ என்கிற அறிவிப்புடன் ஈராக்மீது போர் தொடுத்தது அமெரிக்கா. அப்போது ‘அமெரிக்க சோஷலிஸ்ட்’டான சந்திரசேகர் இந்தியப் பிரதமராக இருந்தார். அவர் ஈராக்மீது குண்டுமாரி பொழிந்த அமெரிக்கப் போர் விமானங்கள் இந்தியாவில் ‘பெட்ரோல்’ நிரப்பிக் கொள்ள அனுமதித்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ்காந்தி, ‘அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இங்கே பெட்ரோல் நிரப்ப அனுமதிப்பது, இந்தியா அரபு நாடுகளுக்கு எதிராகத் திரும்பிவிட்டதாக ஓர் கருத்தை உருவாக்கி விடும். ‘அணிசேரா’ நாடுகளின் தோழனான இந்தியா அமெரிக்காவின் போரை ஆதரிக்கிறதா?’ என்று நாடாளுமன்றத்தில் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் போர் நடவடிக்கையை ராஜீவ் காந்தி எதிர்க்கிறாரே... என்று பத்திரிகையாளர்கள் ‘புஷ்’ஷிடம் கேட்டபோது, “அதை நாங்கள் (அமெரிக்கா) கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்” என்று பதிலளித்தார். அந்த நிமிடமே ராஜீவ் காந்தி மீது அமெரிக்கக் ‘கழுகு’ப் பார்வை விழத் தொடங்கியது. நேரு குடும்பம் என்றாலே அமெரிக்காவுக்கு எப்போதுமே ஓர் ஒவ்வாமை உண்டு. நேரு இந்தியாவை சோஷலிசப் பாதைக்குத் திருப்புகிறார். சோவியத் யூனியனுடன் தோழமை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே மாபெரும் தலைவராகக் கருதப்படுகிறார். ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருக்கிறார் என்னும் காரணங்களால் நேரு எதிர்ப்பை நெஞ்சுக்குள் பதுக்கியே வைத்திருந்தது அமெரிக்கா.
நேருவுக்குப் பின் இந்திரா காந்தியைப் பிரதமர் என்கிற முறையில் அழைத்து, கை குலுக்கி, சிரித்துப் பேசினாலும், இந்திராவின் முதுகுக்குப் பின்னால் “நம்பக் கூடாதவள்; சூனியக்காரக் கிழவி” என்று விமர்சனம் செய்தார் அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன். நேருவைப் போலவே இந்திராவும் தனக்குப் பயன்படமாட்டார் என்கிற கோபம். இந்திராவுக்குப் பின் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார். அனுபவமில்லாதவர்; வளைத்துப் போட்டுக் கொள்ளலாம் என்று அமெரிக்கா போட்ட கணக்கு அப்போதும் தப்பாகி விட்டது. அந்த ராஜீவ் காந்தி எதிர்க்கட்சி வரிசையில் நின்றுக் கொண்டு அமெரிக்கப் போர் விமானங்களுக்கு எப்படிப் ‘பெட்ரோல்’ வழங்கலாம் என்று கேள்வி எழுப்பினால்?... அனுமதிக்குமா அமெரிக்கா? “ராஜீவ் காந்தியின் எதிர்ப்பை நாங்கள் கவனத்தில் வைத்துக் கொள்கிறோம்” என்றார் புஷ். அவர் கூறியதன் பொருள் விரைவிலேயே தெரிந்தது. ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
“அமெரிக்கக் கழுகின் நிழல் உங்களைத் தொடர்கிறது. உஷாராக இருங்கள்” என்று யாசர் அராபத் ராஜீவை எச்சரித்ததாகவும் தகவல் உண்டு. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னே அமெரிக்கக் ‘கழுகின்’ (சி.ஐ.ஏ.) பங்கு உண்டு என்பதை இந்திய ஆதிக்க சக்திகளும், அமெரிக்க விசுவாசிகளும் மிகத் திறமையாக மறைத்து விட்டார்கள். பதவிப் போட்டியில் ராஜீவ் காந்தியுடன் பிணக்கு ஏற்பட்டு, அரசியல் துறவு கொள்வதாக அறிவித்து விட்டு தேர்தலிலேயே போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட நரசிம்மராவ் ராஜீவ் படுகொலைக்குப் பிறகு பதவிக்கு வந்தது எப்படி? அதுவரை காங்கிரஸ்காரர்களுக்கே அறிமுகம் இல்லாமல், அமெரிக்க விசுவாசியாய் அங்கே வங்கியில் பணிபுரிந்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் இந்தியாவின் நிதி அமைச்சராகப் பதவி ஏற்றது எப்படி?
நேருவின் அணிசேரா நாடுகளுக்கான சோஷலிச பாணி பொருளாதாரக் கொள்கையிலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ ‘உலக மயமாக்கல்’ ‘தனியார் மயமாக்கல்’ என்கிற பெயரில் எந்த நாடும் இந்தியாவைக் கொள்ளையடிக்கலாம் என்று மன்மோகன் சிங் அகலக் கதவு திறந்து விட்டது சும்மா தானா? என்று காங்கிரஸ் கட்சியிலுள்ள சோஷலிச ஆதரவாளர்களும், நேரு, இந்திரா, ராஜீவ் விசுவாசிகளும் எப்போதும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலக வங்கியின் தயவினால்தான் மன்மோகன் சிங் இந்திய அரசியலுக்குள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பொறுப்பிலும் அமர்த்தப்பட்டார். அதற்குப் பிரதிகடனாக மன்மோகனும் தனது அமெரிக்க விசுவாசத்தைக் காட்டவே செய்வார் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் கணிப்பு மாத்திரமல்ல.
கம்யூனிஸ்ட்டுகளும், நேரு விசுவாசக் காங்கிரஸ்காரர்களும் எதிர்பார்த்த மாதிரியே அமெரிக்காவின் கைகளில் இந்தியாவை ஒப்படைகக மன்மோகனும் தவறவில்லை. அமெரிக்கா எதிர்பார்க்கும் இனிய சூழல் இந்தியாவில் கனிந்தே வருகிறது. இந்த அரசியல் பின்னணியில் இப்போது நட்வர்சிங் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் பால்வோல்கர் அறிக்கை புகார் எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்பு முறைகளும் ஆக்கிரமிப்பு நாடகங்களும் உலகம் அறியாத ஒன்றல்ல. சதாம் உசேனை அப்புறப்படுத்திவிட்டு ஈராக்கைக் கைப்பற்ற வேண்டும் என்று தந்தை புஷ் ஆசைப்பட்டார். தந்தை காலத்தில் முடியாததைத் தனது காலத்தில் முடித்துக் காட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் தனயன் புஷ்.
‘கழுகு’ (சி.ஐ.ஏ.) ஒரு ‘ரகசிய அறிக்கை’ தருகிறது. உலகையே நாசமாக்கக் கூடிய கொடிய ஆயுதங்களை ஈராக் குவித்து வைத்திருக்கிறது. அது அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் சுதந்திரத்துக்கு ஆபத்தானது என்று உளவுத் துறையின் தகவலை பகிரங்கமாக அறிவித்து விட்டு ஈராக் மீது ‘கூட்டணி’ அமைத்துக் கொண்டு போரைத் தொடங்குகிறார் புஷ். ஈராக்கை முற்றிலும் நாசமாக்கிவிட்டு, சதாம் உசேனைக் கைது செய்து விட்டு, அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிடுகிறார் புஷ். புஷ் அறிவித்தது மாதிரி ஈராக்கில் எந்த ஆயுதமும் இல்லை என்பதைப் போர் அம்பலப்படுத்தியது. உடனே அப்பாவி வேடம் தரிக்கிறார்.
உலகமே எதிர்த்தாலும் ஈராக்கில் வெட்கமற்றுக் கிடக்கிறது அமெரிக்கா
உளவுத்துறை தவறான தகவலைத் தந்து விட்டது என்று கூச்ச நாச்சமில்லாமல் சொல்கிறார் புஷ். ஆனாலும் தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் ஈராக்குக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் புஷ். ஆனால் யுத்த எதிர்ப்பாளர்களும், சமாதானப் பிரியர்களும், மனிதாபிமானிகளும் உலகெங்கும் கண்டனக்குரல் எழுப்பினாலும் ஈராக்கை விட்டு வெளியேற மறுக்கிறது அமெரிக்க ராணுவம். அரபு நாடுகள் ஒவ்வொன்றையும் விழுங்கிய பிறகே, கடைசித்துளி பெட்ரோலும் உறிஞ்சப்பட்ட பிறகே, தனது ஆயுத பரிசோதனைக் கூடமாக வளைகுடா நாடுகளை மாற்றிய பிறகே அமெரிக்கக் ‘கழுகு’ சற்றே இளைப்பாறலாம்.
பொய்யான தகவல்களைத் தருவது, அதன் அடிப்படையில் போர் தொடுப்பது, தலைவர்களை ஒழிப்பது என்கிற ‘அமெரிக்க பாணி’யில்தான் நட்வர்சிங் மீதும் புகார் எழுப்பப்பட்டிருப்பதாக நட்வர் சிங்கின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். சதாம் உசேன் ஆட்சியின் போது, ஈராக் அணு ஆயுதங்களையும் குவித்து வைத்திருப்பதால் அந்த நாட்டின்மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு ஐ.நா. சபையை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தது அமெரிக்கா. மற்ற நாடுகளின் கருத்தை ஏற்றுக் கருணை கூர்ந்து, ‘ஈராக் எண்ணெய்க்கு உணவு’ எனும் திட்டத்தை அறிவித்தது ஐ.நா. சபை.
இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்தி, ஈராக்கைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும் என்று விரும்பியது புஷ் அரசு. ‘எண்ணெய்க்கு உணவுப் பொருள்’ திட்டத்தில் பல முறை கேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுப்பியது அமெரிக்கா. இந்தப் புகார்மீது விசாரணை நடத்துமாறு ஒரு குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழுவின் தலைவர் பால்வோல்கர். ‘எண்ணெய்க்கு உணவு’ திட்டத்தின் பலனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்கும், காங்கிரஸ் கட்சியும் ஆதாயம் அடைந்துள்ளதாக வோல்கர் சந்தேகம் கிளப்புகிறார்.
ஈராக் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டபோது, இந்தியாவில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி நடத்தியது. பாஜக ஆட்சி நடக்கும்போது நட்வர்சிங்கின் மகன் தொடர்புள்ள நிறுவனத்துடன் ஈராக் ஒப்பந்தம் செய்ய முடியுமா? என்று சிந்திக்கிறவர்களும் இருக்கிறார்கள். வோல்கர் அறிக்கைக்கு நட்வர்சிங்கும், காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்புக் கிளப்பியதும் வோல்கர் தடுமாறுகிறார். நட்வர்சிங் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது. அவர் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு தான் இப்படி ஒரு பெயரில் இப்படி ஒரு மனிதர் இருப்பது தெரியும் என்கிறார். நட்வர்சிங் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறும் பால்வோல்கரின் விசாரணை எந்த அளவுக்கு உண்மையானதாக இருக்கும்?
பூர்ஷ¤வா தலைவர்கள் யோக்கியர்கள் என்பதல்ல நமது வாதம். ஆனால், நட்வர்சிங் மீதான புகாரைப் பயன்படுத்தி அமெரிக்கா இந்தியாவுக்குள் நுழையக் கூடாது என்பதே நமது எச்சரிக்கை. வோல்கருக்குக் கிடைத்த ஆவணங்கள் முழுவதும் இன்று ஈராக்கில் அதிகாரம் செலுத்தும் ‘பொம்மை அரசு’ தந்ததுதான். அவை நம்பத்தகுந்தவையாக இருக்குமா? ஐ.நா. சபையே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் அமைப்பாக இருக்கிறது. அது சுயேச்சையான அமைப்பாக இருந்திருந்தால் ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரைத் தடுத்திருக்க முடியாதா?
போர் தொடுப்பதற்கு அமெரிக்கா சொன்ன காரணம் பொய் என்று அமெரிக்காவே ஒத்துக் கொண்ட பிறகு, ‘உடனே ஈராக்கை விட்டு வெளியேறு’ என்று அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை உத்தரவிட்டிருக்க வேண்டாமா? சோவியத் யூனியன் மறைவுக்குப் பிறகு அமெரிக்கா இனி தன்னைத் தடுக்கும் சக்தி எதுவும் இல்லை என்கிற மனோபாவத்துக்கு வந்துவிட்டது. இனி எந்த நாட்டையும் தன் வழிக்குக் கொண்டு வரமுடியும்; அல்லது ஒவ்வொரு நாட்டிலும் தனது ‘பொம்மை அரசை’ நிறுவி ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிற முடிவில்தான் செயல்பாடுகள் இருக்கும். அமெரிக்காவின் திட்டத்தை நிறைவேற்றவே நட்வர்சிங் மீதும், காங்கிரஸ் மீதும் அமெரிக்கரான வோல்கர் புழுதிவாரித் தூற்றுகிறார் என்று நட்வர்சிங்கின் ஆதரவாளர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்று ஒதுக்கி விட முடியாது.
உண்மையில் வோல்கரைப் பயன்படுத்தி அமெரிக்கா, தனது வஞ்சக வலையை விரிப்பது நட்வர் சிங்கைப் பிடிப்பதற்காக அல்ல. நேரு, சோஷலிசம், காங்கிரஸ்... என்கிற நெடுங்கால விரோதத்தைத் தீர்த்துக் கொள்வதே அமெரிக்காவின் நோக்கம் என்று பல காங்கிரஸ் சோஷலிஸ்ட்டுகளும் கருதுகிறார்கள். சோனியா காந்தியை இந்திய அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதுதான் அமெரிக்காவின் இலக்கு என்று அவர்கள் ஆழமான அச்சம் தெரிவிக்கிறார்கள்.
சதாம் உசேனின் நிலை இந்தியத் தலைவர்களுக்கும் வரலாம்
அதை உறுதி செய்யும் விதத்தில்தான் பாஜக இயக்கம் நடத்துகிறது. இழந்த பதவியை மீட்பதற்கும், தனது அரசியல் எதிரியான காங்கிரசை ஒழிப்பதற்கும், அமெரிக்கா அருமையான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. அதைக் கச்சிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றே சங்கப் பரிவாரங்களும் அமெரிக்க ஆதரவு சக்திகளும் தீவிரமாக இருக்கின்றன. எப்போதுமே அமெரிக்க ஆசாமியாகவே செயல்படும் சுப்பிரமணியம் சாமி சோனியா காந்திக்கு எதிராக வழக்குத் தொடுக்கவும் தயாராகி விட்டார். எந்த நாட்டிலும் எப்போதும் கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பிலும், தேசபக்தியிலும் உறுதியாக இருப்பதால் கம்யூனிஸ்ட்டுகளை ஒழிப்பதிலும் அமெரிக்கா எப்போதும் முனைப்புடன் இருக்கும்.
அதன் தொடர்ச்சியாகத்தான், சோவியத் யூனியனின் உளவுத் துறையான ‘கேஜிபி’யில் இருந்த ஒருவரைப் பிடித்து ஒரு புத்தகம் எழுத வைத்தது அமெரிக்கா. அந்த ஆள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ரஷ்யா நிதி உதவி செய்தது என்று எழுதுகிறார். உடனே இங்குள்ள காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் - முன்னாள் ‘கேஜிபி’ அதிகாரியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் புகார் உண்மையாக இருக்குமானால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அன்னிய நாட்டால் நிர்ப்பந்திக்கப்பட்டது என்றாகி விடும். அதை அனுமதிக்கலாமா? என்று அமெரிக்க விசுவாசிகள் ஆர்ப்பரித்தார்கள்.
இங்கே சற்று யோசிக்க வேண்டும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்கா வருவதை அனுமதிக்க முடியாது என்று அவருடைய அமெரிக்கப் பயணத்தைத் தடுத்த போது, அமெரிக்காவின் மோடி பற்றிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங். இதற்காக பாஜக மன்மோகனைப் பாராட்டியது. தனது நாட்டின் முதல்வர் ஒருவரைப் பற்றி அன்னிய நாடு ஒன்று ‘தவறான’ கருத்தை வெளியிடுவதை இந்தியா அனுமதிக்காது என்று ‘உறுதி’ காட்டிய மன்மோகன், நட்வர்சிங் மீதும், ‘தனது’ கட்சிமீதும் பழிபோடும்போது, ‘அப்படியா, உடனே விசாரணைக்கு உத்தரவிடுகிறேன்’ என்று அறிவித்து, நட்வர்சிங்கின் ராஜினாமாவைக் கோரியது ஏன்? என்கிற காங்கிரஸ் - நட்வர்சிங் ஆதரவாளர்களின் சந்தேகம் தீவிர பரிசீலனைக்கு உரியது. மன்மோகன் சிங், மற்றுமொரு தின்தியம். மற்றுமொரு கோர்பச்சேவ் என்று இந்திய தேச பக்தர்கள், நேரு விசுவாசிகள், சோஷலிச ஆதரவாளர்களிடையே உறுதியான கருத்து உருவாகி வருகிறது. மன்மோகன் சிங் அமெரிக்க ஆதரவாளரா, இந்திய ஆதரவாளரா என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
விரைவில் காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங்கின் ராஜினாமாவைக் கோரலாம். அல்லது மன்மோகன் சிங் காங்கிரசைக் கலைப்பதற்கு வழி வகுக்கலாம். மதவாத - பிற்போக்கு சக்திகளை அமெரிக்கா ஒன்று திரட்டுகிறது. அல்லது பிற்போக்குச் சக்திகளெல்லாம் அமெரிக்க நிழலில் ஒன்று கூடுகின்றன. இந்தியாவிலுள்ள முற்போக்குச் சக்திகள் விழிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது.
-இளவேனில்