Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

“என்னங்க சார் இப்படி நடந்துவிட்டது, ஏன் இந்த மக்கள் இப்படி இருக்கின்றார்கள். 16 ஆண்டுகள் அந்த மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்த அந்தம்மாவை மணிப்பூர் மக்கள் அவமானப்படுத்தி விட்டார்கள். இந்த மக்களுக்கு குற்றவாளிகளையும், ஊழல்வாதிகளையும் பார்த்தால் தான் பிடிக்கின்றது. போராளிகளை அவர்கள் போராளிகளாக மட்டுமே பார்க்கின்றார்கள். இப்படியே போனால் இந்த மக்கள் நாசமாய் போவதைத் தவிர வேறு வழியே கிடையாது” என்று பல ஜனநாயகக் காவலர்கள் புலம்புகின்றார்கள்.  ஆம் அது உண்மைதான், மக்கள் மிகத் தெளிவாகவே எப்போதும் வாக்களிக்கின்றார்கள். மக்கள் என்ற பொதுச்சொல்லில் அனைவரையும் நாம் கொண்டு வருவதால் ஏற்படும் புரிதலின்மை தான் ஜனநாயகக் காவலர்களை இப்போது புலம்ப வைத்திருக்கின்றது. இந்திய சமூகத்தைப் பொருத்தவரை மக்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி, மதம், நம்பிக்கை சார்ந்து செயல்படுபவர்கள். தங்கள் சிந்தனையை அது சார்ந்தே வடிவமைத்துக் கொள்பவர்கள். தேர்தலில் ஓட்டுவங்கியை நிர்ணயிப்பதில் இவை போன்ற நம்பிக்கைகளே முக்கிய பங்குவகிப்பவை. தன்னுடைய சாதிக்காரன் வெற்றிபெற்றால் தங்களுக்கு ஏதாவது நல்லது செய்வான் என்ற நம்பிக்கையே தேர்தல் சமயத்தில் அவர்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்கின்றது.

irom sharmilaஇந்துகளின் மனதில் ஆண்டாண்டுகாலமாக புரையோடிப்போய் இருக்கும் இந்தச் சாதி, மத சிந்தனைகளைக் கடந்து இன்னும் தேர்தல் அரசியல் ஒரு படி கூட முன்னேறவில்லை. அரசியல் கட்சிகளும் தங்களுக்கு விரும்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்  ஒரு தொகுதியில் எந்தச் சாதிக்காரன் அதிகமாக இருக்கின்றானோ அவனையே நிற்க வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். அப்படி இல்லாமல் சாதி மாற்றியோ, இல்லை மதம் மாற்றியோ நிற்க வைக்கும் பட்சத்தில் அந்த வேட்பாளர் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்படுகின்றது. இது தான் அடிப்படையானது. தேர்தல் அரசியல் இன்னும் சாதியின் பிடியில் இருந்தோ, இல்லை மதத்தின் பிடியில் இருந்தோ விடுபடவில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  இது போன்ற ஒரு கேவலமான சூழ்நிலை இந்தியாவில் நிலவுவதால் தான் பிஜேபியால் உத்திரப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக வெற்றிபெற முடிகின்றது. மக்கள் மதவாதத்தையும், சாதியவாதத்தையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் வரலாற்றில் எப்போதுமே இருந்து வருகின்றார்கள்.  இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் போதுதான்  நம்மால் இரோம் சர்மிளாவின் படுதோல்வியைப் புரிந்து கொள்ள முடியும்.

அதற்காக மணிப்பூர் மக்கள் இரோம் சர்மிளாவை விரும்பவில்லை என்பது பொருளல்ல. இன்னமும் அவர்கள் இரோம் சர்மிளாவை விரும்பத்தான் செய்கின்றார்கள். அவர்களுக்குப் போராடுவதற்கு எப்போதுமே ஒரு நபர் வரலாற்றில் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இது மணிப்பூரின் நிலைமை மட்டும் அல்ல. உலகம் பூராவும் இதுதான் நிலைமை. மணிப்பூர் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு சக்தியாக இரோம் சர்மிளா தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்  மணிப்பூரில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற முழக்கத்தை மட்டுமே 16 ஆண்டுகளாக முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடைபிடித்து வந்தார். அது முடியாமல் போன பட்சத்தில் தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் ‘மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி’ என்ற கட்சியை ஆரம்பித்துத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் மணிப்பூர் மக்கள் இரோம்சர்மிளாவின் இந்த அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை.  வெறும் 90 ஓட்டுகளை மட்டுமே போட்டு அவரைப் பெருத்த அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். ‘போராளிகள் எப்போதும் போராளிகளாக இருக்கவேண்டும், தங்களால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நேரத்தை ஒதுக்கி போராட முடியாது. எனவே  யாராவது அப்படி போராடி தங்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்’ என்றுதான் மக்கள் எப்போதும் விரும்புகின்றார்கள். அதற்காக தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு, போராட்டக் களத்தில் குதிப்பவர்களுக்கு அவர்கள் ஆதரவு தருவார்கள், அவர்களுக்கு சிலைகூட வைப்பார்கள். ஆனால் தேர்தலில் நின்று ஓட்டு கேட்டால் இப்படித்தான் அசிங்கப்படுத்தி அனுப்பிவைப்பார்கள் என்பதைத்தான் தெளிவாகக் காட்டியிருக்கின்றார்கள். 

 மக்கள் மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். போராளிகளை சமூகத்தில் எங்கு வைக்க வேண்டும், தங்களுக்கான காரியங்களைச் சாதித்துக் கொள்ள அரசியல் கட்சி வேட்பாளர்களை எங்கு வைக்க வேண்டும் என்று. எனவே இதைப் புரிந்துகொள்வதில் இருந்துதான் மக்களிடம் நாம் எந்த மாதிரியான அரசியலை முன் எடுக்க வேண்டும் என்ற அரசியல் புரிதலுக்கு வரமுடியும். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து மட்டுமே இரோம் சர்மிளா அவர்கள் தம்முடைய அரசியலை அமைத்துக் கொண்டார். அதைத் தாண்டி மணிப்பூர் மக்களின் மனங்களில் என்ன இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள அவர் எப்போதுமே முயற்சிக்கவில்லை. தன்னுடைய 16 ஆண்டுகாலப் போராட்டம் மக்களின் மனங்களில் தனக்கான ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்றிருக்கும் என்று அவரே தப்புக்கணக்கு போட்டுவிட்டார்.  அந்தத் தப்புக்கணக்குதான் இன்று அவர் பெருத்த அவமானத்தைச் சந்திக்கும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றிருக்கின்றது.

  தேர்தல் பாதையில் இருக்கும் அமைப்புகளைப் பற்றி பிரச்சினை இல்லை. அவர்கள் ஏற்கெனவே மக்களிடம் இருக்கும் சாதி, மதம், பொருளாதாரப் பிரச்சினை போன்றவற்றைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறும் கலையை நன்றாகப் பயின்று இருக்கின்றன. ஆனால் தேர்தல் பாதையில் இருந்து விலகி மக்களிடம் தொடர்ச்சியாக தங்களுடைய அரசியலைக் கொண்டு சேர்த்து, அதற்குக் கிடைக்கும் ஆதரவைப் பொருத்து நாளை கட்சி ஆரம்பித்து ஆட்சி அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என நினைக்கும் அமைப்புகள், இரோம் சர்மிளா தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் போராடுவதற்காக மட்டுமே இரோம் சர்மிளா போன்றவர்களைக் கொண்டாடுகின்றார்கள். அதைத் தாண்டி அவர்கள் இரோம் சர்மிளாவிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆண்டாண்டுகாலமாக இந்திய இராணுவத்தால் மணிப்பூர் மக்கள் அனுபவித்துவரும் சொல்லொண்ணா கொடுமையின் எதிர்ப்பு வடிவம் தான் இரோம் சர்மிளா, அவர் கடைசி வரையிலும் தனது உண்ணாநிலைப் போராட்டத்தைக் கடைபிடித்து இறந்தாலும் மணிப்பூர் மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது எப்படி என்றால் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆட்சி போன்றவற்றிற்கு எதிராக அனைத்து மக்களிடமும் ஒரு கோபம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அனைவருமே அதை எதிர்த்து ஒரு அமைப்பாக போராட முன்வரமாட்டார்கள், யாராவது அதே பிரச்சினைக்காக போராடிக் கொண்டிருப்பதை பார்த்தால் மனதார ஒரு நம்பிக்கை கொள்வார்கள். ஆனால் அதில் எப்போதுமே கலந்துகொள்ள மாட்டார்கள். தனக்காக போராட, அந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்க போராளிகள் தேவை என ஒவ்வொருவரின் மனதும் விரும்புகின்றது. அந்த அபிலாசைகளை இரோம் சர்மிளா போன்றவர்கள் பூர்த்தி செய்கின்றார்கள்.

 சுயநலத்திலும், பிழைப்புவாதத்திலும் ஊறிப்போன மனித மனங்கள்  அடுத்தவர்களின் தியாகத்தில் தனக்கானதைப் பெற்றுக் கொள்ள நினைக்கின்றது. கை, கால் முடமான, உழைப்பதற்கு எந்த வகையிலும் திராணியற்ற ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாயை பிச்சையாகக் கொடுக்க மனம்வராத ராம்ராஜ் வேட்டி, சட்டை போட்ட மனிதர்களை நாம் தினம் தினம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். அவர்களிடம் போய் பேசிப் பாருங்கள் ‘நான் எதற்குப் பிச்சைக்காரனுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இது நான் உழைத்து சம்பாதித்தது’ என்பான். தன்னிடம் இருக்கும் பணத்தில் ஒரு ரூபாய்க்கு இவ்வளவு  கணக்குப் பார்க்கும் அதே மனிதன் தான், தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு தனக்கான பிரச்சினைகளைத் தீர்க்க அடுத்தவன் போராட வேண்டும் என்றும் எண்ணுவான். “எவனுக்கும் அக்கறையில்லை, அவன் அவன் வேலையைத்தான் எல்லோரும் பார்க்கின்றார்கள், அப்புறம் எப்படி நாடு உருப்படும்” என்று சொல்லும் அந்த ஜென்மங்கள், சரி வா போராடலாம் என்றால் புழுவைப் போல நெளிவார்கள். மக்களின் இந்தக் குணங்களை யார் சரியாக உள்வாங்கிக் கொள்கின்றார்களோ இல்லையோ மக்களுக்காகப் போராடும் போராளிகள் நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இரோம் சர்மிளா அதை உள்வாங்கவில்லை என்பதுதான் அவரின் படுதோல்விக்குக் காரணம். அவருக்கு மட்டும் இல்லை தேர்தல் பாதையைப் புறக்கணித்து மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளும் நாளை தேர்தல் பாதையில் நின்றால் இதே நிலைதான் ஏற்படும். இதை ஏற்றுக்கொண்டுதான் போராட்ட களத்திற்கு போராளிகள் வர வேண்டும்.

மக்கள் சுயநலவாதிகள், பிழைப்புவாதிகள், முட்டாள்கள், ஆண்டாண்டு காலமாக ஊறிப்போன சாதி, மதம் போன்றவற்றிற்குப் பழக்கப்பட்டவர்கள். எனவே நமது நோக்கம் மக்களை மூடத்தனத்தில் இருந்து விடுவிப்பதாயும், அவர்களை நேர்மையான மனிதர்களாய் பக்குவப்படுத்துவதாயும் இருக்க வேண்டும். நாம் தியாகம் தான் செய்கின்றோம் என்பதை நூறுசதவீதம் ஒப்புக்கொண்டு அதைச் செய்ய வேண்டும். இல்லை என்றால் அரசியலில் இருந்து விலகுகின்றேன் என்று இரோம் சர்மிளா எடுத்த முடிவுக்குத்தான் இறுதியில் வர வேண்டி இருக்கும். இந்தியா போன்ற சனாதன தர்மத்தில் மூழ்கிப் போயுள்ள ஒரு நாட்டில், ‘மக்களிடம் இருந்து இவ்வளவுதான் போராளிகள் எதிர்பார்க்க முடியும்’ என்ற வரம்பு உள்ளது. அந்த வரம்பை இரோம் சர்மிளா இப்போது தெரிந்துகொண்டிருப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். எனவே ஜனநாயகக் காவலர்கள் வருத்தப்படும் அளவிற்கு ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. மக்களை மிகத் தவறாக எடைபோட்டதால் இரோம் சர்மிளா சந்தித்த இந்த அவமானம் அவருக்கு மட்டும்தான் புதிது... வரலாற்றிற்கு இது மிகப் பழையது.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

-1 #1 Manikandan 2017-03-16 14:12
மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் அமைப்புகள் எத்தனை பேர் உண்மையில் மக்களுக்காக போராடி இருக்கிறார்கள். மணிப்பூர் உதாரணத்தை எடுத்து கொண்டால் ராணுவம் சட்டத்திற்கு எதிராக போராடினார் அதனால் இரோம் சர்மிளா போராளி என்று சொல்கிறீர்கள், அதுவும் யார் சொன்னது பத்திரிகைகள், ஆனால் மாவோ பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது இதே இரோம் சர்மிளா (அல்லது பத்திரிகைகள்) என்ன செய்தன ?

இங்கே (இலங்கை) தமிழருக்காக பேசுகிறோம் என்று சொன்ன அமைப்புகள் உண்மையில் தமிழக மக்களுக்காக என்ன செய்தார்கள்... இந்திய விரோத பேச்சுக்களை பேசி மக்களிடம் வெறுப்பை தூண்ட தானே பார்த்தார்கள் தவிர வேறு என்ன நன்மை அவர்களால் மக்களுக்கு ஏற்பட்டது, இப்படிபட்ட அமைப்புகளை தமிழக மக்கள் ஆதரிக்கவில்லை என்றவுடன் அவர்களை கண்டபடி திட்ட வேண்டியது..

மணிப்பூரில் கூட சீனாவோடு சேர்ந்து கொண்டு கம்யூனிஸ்ட் அமைப்புகள் இந்திய விரோத பிரிவினையை தானே தூண்டி கொண்டு இருந்தார்கள், அவர்களால் சாதாரண மக்களுக்கு என்ன நன்மை ? பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களையும் ராணுவ வீரர்களையும் கொலை செய்வதா போராட்டம் ? அப்பாவி மக்களை கொலை செய்பவர்களா போராளிகள் ? இதுல போராளிகளை ஆதரிக்கவில்லை என்று இவர்களுக்கு கோபம் வேறு...

எல்லா தப்புகளை செய்துவிட்டு அதில் மானே தேனே என்பது மாதிரி மக்களுக்காக போராட்டம் என்று சொல்லிவிட்டால் அனைத்து தவறுகளும் சரி என்று ஆகிவிடாது. பயங்கரவாதிகளை மக்கள் என்றுமே ஏற்பது இல்லை...
Report to administrator
+2 #2 D ILAMURUGAN 2017-03-16 17:26
What do you want to say Mr Manikandan?I
That Irom is a terrorist?If so why should she fast for 16yrs? She could have taken to arms earlier.there is some truth in what Garky says. The society has gone so rotten that it needs to be educated first about even basic things.And that Manipur is one of the states with huge drug addiction and HIV incidence. The Role the institutions like Church has to be borne in mind
Report to administrator
0 #3 vetrichelvan 2017-03-16 19:35
ஐரோம் ஷர்மிளா குறித்த தங்கள் பார்வை சிறப்பானது ! வாழ்த்துகள் ! மக்களுக்காக போராடும் யாரும் மக்களைக் குற்றம் சொல்வதில்லை ! மக்களின் அறியாமை, பண பலம் கொண்ட அரசியல் வாதிகளுக்கு ஐரோம் ஷர்மிளாவின் தோல்வி மகிழ்ச்சி அளிக்கும் ! ஆனால் இதில் ஷர்மிளா வருத்தப்படவோ .... அரசியலில் இருந்து விலாகவோ ஒன்றும் நடந்துவிடவில்லை யே ? மக்களை ஒட்டுப்பாதையிலே யே நிறுத்திவிட முடியும் என முடிவு செய்ததுதான் தவறு !
மக்களை போராட்டத்திற்கு தயாரிக்காமலேயே .... தான் ஒருவரே இத்தனைக் காலம் போராடிய முறையே தவறு ! தனது மக்களுக்காக தியாகம் செய்து போராடியது உண்மை என்றால் ... 90 வாக்கை பெற்றது கூட ஒரு தியாகமாக ஏன் பார்க்கக் கூடாது ? மக்கள் தன்னை அங்கீகரிக்கவில் லை என ஏன் பார்க்கவேண்டும் ? இப்படி தேர்தலில் நிற்க பால பாடமாக 15 ஆண்டுக்கு காலமாக இப்படி போராடினாரோ ? என மக்கள் நினைக்கக் கூடாதா?
இவர் தேர்தல் பாதையில் வந்துவிட்டால் மக்கள் இவரை ஆதரித்தே ஆகவேண்டும் என எப்படி எதிர்பார்க்கமுட ியும் ? இவரது பரப்புரை எந்த அளவு இருந்தது? இவரது பொருளாதார பலம் எந்த அளவு இருந்தது? செய்தி ஊடகங்கள் இவரை மக்களிடம் எந்த அளவு எடுத்து சென்றன? என்றெல்லால் பாராமல் வெறும் 90 வாக்கை மட்டும் பார்ப்பது ..... குமாரசாமி கணக்காகிவிடாதா?
மக்கள் உலக வரலாற்றையே மாற்றி உள்ளார்கள் ! மாற்றுவார்கள் ! மக்களை முதலில் நம்பவேண்டும் ! மக்கள் என்றால் நாம் தான் ! நமக்கான தத்துவம் எது? நமக்காக போராடும் அமைப்பு எது? நமக்கான அரசியல் எது என நம்மிடம் இன்னும் வந்து சேராத பொது மக்களுக்காக போராடும் தலைவர்கள் தோற்பது போல ..... பொய் வேடமிட்டு வருவது போல தோன்றலாம் ! அது தற்காலிகமானதே ! வரலாறு திரும்பும் !
Report to administrator
-1 #4 Manikandan 2017-03-16 22:30
D ILAMURUGAN கார்க்கி போன்றவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவாக பார்க்க முடியாது, இந்தியா, மோடி, ஹிந்து மதம், RSS இவர்களை எல்லாம் வெறுக்க வேண்டும் என்ற compelsive mindset உள்ளவர்கள். மோடி நேராக நடந்து போனால் ஏன் மோடி வளைந்து நெளிந்து நடந்து போகவில்லை என்று திட்டுவார்கள், மோடி வளைந்து நெளிந்து நடந்து போனால் ஏன் மோடி நேராக நடந்து போகவில்லை என்று திட்டுவார்.

என் கேள்வி எல்லாம் அப்பாவி மக்களை தீவிரவாதிகள் கொன்ற போது இரோம் சர்மிளா போன்றவர்கள் ஏன் அவர்களுக்கு எதிராக போராடவில்லை குறைந்தபட்சம் அவர்களின் செயல்களுக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன் ? பேராசிரியர் சாய்பாபாவுக்கு உருகிய கார்க்கி போன்றவர்கள் என் மாவோ தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை அநியாயமாக கொன்ற போது அமைதியாக இருந்தார்கள் ? இந்திய ராணுவ வீரர்கள் என்பவர்கள் யார் நம் நண்பர்கள் உறவினர்கள் நம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தானே... ராணுவ வீரர்கள் தவறு செய்தால் இரோம் சர்மிளா, பத்திரிகைகள், கார்க்கி போன்ற எவ்வுளவோ பேர் கண்டனம் தெரிவிக்கிறார்க ள் ஆனால் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களையும் அப்பாவி மக்களை கொலை செய்தால் ஆட்சியாளர்களை தவிர ஒருவர் கூட தீவிரவாதிகளின் செயல்களை கண்டிப்பது இல்லை, அப்படி தீவிரவாதிகளை கண்டித்து இருந்தால் காஷ்மீரும், வட கிழக்கு மாநிலங்களை அழிக்கும் தீவிரவாதமும் இந்தளவுக்கு வளர்ந்து இருக்காது.

கார்கி போன்றவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் மாவோ தீவிரவாதிகளை ஆதரித்து கட்டுரைகளை எழுதி இருக்க மாட்டார்கள்.
Report to administrator
0 #5 முனு. சிவசங்கரன் 2017-04-08 09:30
மணிகண்டன்.. நீங்கள் கார்கி போன்றவர்களை விமர்சிக்கும் குரலே சுவற்றில் அடித்தப் பந்தாக உங்கள் மீதே திரும்புகிறது.. . மோடி எப்படி நடந்தாலும் உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ஸ்டைலாக தெரிகிறதோ... என்னமோ...?
Report to administrator

Add comment


Security code
Refresh