அடுத்ததொரு பிரிவு தொழிற்சங்கங்களைக் கட்டுவதே - தம்மைச் செயலாளர்கள், தலைவர்கள் என்று முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்; சொந்தப் பதவிகளுக்காகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்தான். சொந்தப் பதவிகளுக்காகத் தங்களுக்கென்று தனித்தனி சங்கங்கள் வைத்துக் கொண்டு, போட்டி அரசியல் நடத்துபவர்கள் அவர்கள். இத்தகைய விந்தையான, வெட்கப்படத்தக்க நிகழ்வுகள் இந்தியாவில் புகழ் பெற்றுள்ளன. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைவிட, கடுமையான போராட்டம் -போட்டிச் சங்கங்களிடையே நடைபெறுவது விந்தையிலும் விந்தை!
இத்தனையும் எதற்காக? தமது தலைமைப் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக! இதில் கம்யூனிஸ்டுகள் இன்னொரு வகை. அவர்கள் அர்த்தமுள்ளவர்கள்தான். ஆனால், தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள். அவர்களைவிட தொழிலாளி வர்க்கத்திற்குப் பேரழிவைக் கொண்டு வந்தவர்கள் வேறு எவரும் இல்லை. இன்று தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது; முதலாளிகளின் கை மேலோங்கியிருக்கிறது; பொது மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் நெருங்கிய நட்பும் இல்லை. இவற்றுக்கெல்லாம் காரணம், இந்தக் கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். தாங்கள் ஒரு காலத்தில் வென்றெடுத்த அதிகாரத்தை, இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இவர்களுடைய வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான். அதிருப்திதான் புரட்சியைத் தூண்டும் என்றும், புரட்சியின் மூலம் பாட்டாளிகளின் ஆட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள் நம்புகிறார்கள். இதற்காகவே இந்த அதிருப்தி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, பிளவு -சிதறல் இவற்றையே ஓர் அமைப்பு அலையாக தொடர்ந்து விளைவித்து வருகிறார்கள். இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலை நிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்? இது, சிதறுதலைத் திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு முயற்சிதானே? வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே போதாது. அரசியல், சமூக உரிமைகளுக்கான நியாயம், தேவை, முக்கியத்துவம் ஆகியவை பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும்.
ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட், வேலை நிறுத்தம் செய்வதையே ஒரு வேலை என்று அலைய மாட்டான். புரட்சிகர சிண்டிகலிஸ்டுகளின் காலங்களில் அப்படித்தான் நடந்தது. வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக எப்போதுமே தீர்மானித்துக் கொண்டதில்லை. எல்லா வழிகளுமே அடைக்கப்பட்ட பிறகுதான் இறுதிப் புகலிடமாக வேலை நிறுத்தம் கையாளப்பட வேண்டும் என்பதே மார்க்சியம். இந்த உண்மைகளை கம்யூனிஸ்டுகள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். தொழிலாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கத் தங்களுக்கு கிடைத்த வேலை நிறுத்தங்களை, ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் திணித்தார்கள்.
இதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ, அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும் தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது. இன்றைய தினம் அவர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். முதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொருளற்ற செயல்கள் அப்படித்தானே முடிய வேண்டும்? இன்றைய கம்யூனிஸ்டு எப்படி இருக்கிறான்? சுற்றுவட்டாரத்தில் மாபெரும் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை எறிந்த ஒருவன், தன் சொந்த வீட்டையும்கூட காப்பாற்ற இயலாத நிலையில் இருக்கிறான்.
விளைவு, இன்று தொழிலாளிகள் குறை தீர்க்கும் சங்கங்களே இல்லை. பம்பாய் நூற்பாலைத் தொழிலாளர் மத்தியில் நிலவும் அவலங்களைப் பற்றி நான் பேசப் போவதில்லை. அவற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது. ஜி.அய்.பி. ரயில்வே தொழிலாளர் நிலையை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய தொழிற்சங்கம் 1920 இல் தொடங்கப்பட்டது. அதன் பெயர் ஜி.அய்.பி. ரயில்வே ஸ்டாப் யூனியன். 1922-24 கட்டத்தில் அது முடங்கிப் போனது. 1925 இல் அது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1927இல் ஒரு போட்டிச் சங்கம் உருவானது. அதன் பெயர் ஜி.அய்.பி. மேன்ஸ் ரயில்வே யூனியன், 1931 இல் இரண்டும் இணைந்தன.
ரயில்வே ஒர்க்கர்ஸ் யூனியன் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது. 1932 இல் மீண்டும் பிளவு. புதிய சங்கத்திற்கு ரயில்வே லேபர் யூனியன் என்று பெயர். 1935இல் பழைய ஜி.அய்.பி. ஸ்டாப் யூனியன் புத்துயிர் பெற்று செயல்படத் தொடங்கியது. இன்று மோதல்கள். இத்தனைக்கும் எல்லாமே ரயில்வே தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக நிறுவப்பட்டவைதாம். இந்த முரண்பாடு -மோதல்களுக்கு காரணம், கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத குழுக்களுக்கிடையிலான போட்டி. இப்பகைமை மத்திய அமைப்பிலும் பிளவைக் கொண்டு வந்தது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:182)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
முதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடும் கம்யூனிச தொழிற்சங்கங்கள் - V
- விவரங்கள்
- அம்பேத்கர்
- பிரிவு: அம்பேத்கர்