பொது சிவில் சட்ட விவகாரத்தை சட்ட ஆணையத்தின் ஆய்வுக்காக மத்திய அரசு அனுப்பியுள்ளது. சட்ட ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் சதானந்த கௌடா எழுதிய கடிதத்தில் "பொதுசிவில் சட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளார்" என்ற செய்தி ஊடகங்களில் வெளிவர துவங்கியதுமே பூகம்பம் வெடிக்க ஆரம்பித்துவிட்டது. 

"பொது சிவில் சட்டம் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. இதை ஒரு சில நாட்களில் செய்து முடிக்க முடியாது. சில காலம் ஆகும்". மற்றொரு தருணத்தில் "பொது சிவில் சட்டம் தொடர்பாக நாட்டிலுள்ள சட்ட அமைப்புகளிடம் ஆலோசனை நடப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் ஒரு கருத்திணக்கம் வந்தபின் அது சட்டமாக உருவெடுக்கும்" என்றும் சதானந்த கௌடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இந்தியா சுதந்திரம் அடைந்து பொது சிவில் சட்டம் குறித்து முதல் முறையாக மோடி அரசுதான் சட்ட ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது" என்று தி எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவிக்கிறது. அனைத்து மதத்தினருக்குமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய 14 கேள்விகள் கொண்ட பட்டியலையும் சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது. பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்ட துவங்கியுள்ளதால் முஸ்லிம் அமைப்புகள் கடுமை காட்ட துவங்கியுள்ளன. 

"மத்திய அரசு ஒரு சமூகத்திற்கெதிராக தொடுக்கும் போர் இது" என்று கடுமையாக விமர்சித்துள்ளது முஸ்லிம் தனியார் சட்ட வாரியம். "மக்களை ஒரே விதமாக சித்தரிக்க முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்தல்" என்று அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் பொது செயலாளர் வாலி ரெஹ்மானி கூறுகிறார்.

இவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு "மத நம்பிக்கைகளை கொண்டு பெண்களுக்கு எதிராக பாகுபாட்டை ஏற்படுத்துவதை மக்கள் விரும்பவில்லை. இந்த பிரச்சனையானது பாலின நீதிக்கானது. பெண்களுக்கான மரியாதை மற்றும் சமூக பாகுபாட்டை முடித்து வைக்கும் முயற்சி" என்றார். இத்தனைநாள் பெண்களுக்கு எதிரான கருத்துடன் செயல்பட்டவர்கள் இன்று பெண்களுக்கு ஆதரவானவர்களாக வேடம் தரிப்பது கண்கூடாக தெரிகிறது.

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும், பாலின நீதி குறித்தும், சமூக பாகுபாடு குறித்தும் யார் இன்று கவலைப்படுகிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். உண்மையில் பாஜகவினர் பெண்களின் பாதுகாவலர்களா? பெண்களின் சமத்துவத்திற்காக போராடுபவர்களா? முஸ்லிம் பெண்களுக்கு சமத்துவம் மறுக்கப்படுகிறது என்று கூறும் இவர்கள் இந்து பெண்களுக்கு சமத்துவம் வழங்கி இருக்கிறார்களா? 

இதற்கு விடை காண வேண்டும் என்று சொன்னால் 1951 காலகட்டத்திற்குத்தான் செல்ல வேண்டும். அப்போதுதான் இந்து சமூகத்தில் பெண்களுக்கான சமத்துவம், நீதி, உரிமை வழங்குவதற்காக இந்து சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்குமுன் இது குறித்து அம்பேத்கர் அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது குறிப்பிட்டு பேசியதை பார்க்கலாம் "இச்சமூகம் ஒரு இயக்கமற்ற சமூகமாகும். கடவுள் அல்லது சுமிருதிகள்தான் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆகவே இச்சட்டங்களை மாற்றுவதில் இந்தச் சமூகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றே இச்சமூகம் நம்பி வந்தது. இதனால்தான் இந்தச் சமூகத்தில் தலைமுறை தலைமுறையாக சட்டங்கள் மாறாமல் இருந்து வந்தன. தங்களின் சமூக, பொருளாதார, சட்ட வாழ்க்கையை உருவாக்குவதில் தங்களுக்கு இச்சமூகம் என்றும் ஒத்துக்கொண்டதே இல்லை. முதல் முறையாக இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு இந்து சமூகத்தை நாம் தூண்டுகிறோம்" 

அப்படி குறிப்பிட்டது மட்டுமல்லாமல் அதன்பிறகு ஆழ்ந்து சிந்தித்து இந்து மத பெண்களுக்கு வாழ்வளிக்கும் பல கட்ட சட்ட பிரிவுகளை உருவாக்கம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் முகமாக கொண்டு வரப்பட்டதே இந்துச் சட்ட மசோதா. "ஒருதார மணம், ஜீவனாம்சம், பெண்களுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம்" போன்ற சில சீர்திருத்தங்களை உள்ளடக்கிய மசோதாவை 1951 ல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர்.

இதற்கு ஆரம்ப நிலையிலேயே கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் இன்று பெண்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் நாடகமாடும் பாஜகவினர். அவர்களின் சித்தாந்த முன்னோர்கள். அம்பேத்கரால் கடைசி வரை அந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அம்பேத்கர் மனம்வெறுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்து சட்ட மசோதாவை எதிர்த்தவர்கள் அன்றே ஆரம்பித்து விட்டார்கள் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று. "இந்துச் சட்ட மசோதாவை எதிர்ப்பவர்கள் ஒரே நாளில் பொது சிவில் சட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டது எனக்கு வியப்பளிக்கிறது" என்று அம்பேத்கர் அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

எந்த அம்பேத்கரை, அவர் கொண்டு வந்த 'இந்து பெண்கள் சமத்துவம் பெறுவதற்கான மசோதாவை' எதிர்த்தார்களோ இன்று அந்த அம்பேத்கரின் பெயருக்கு பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள்; அம்பேத்கர் பொது சிவில் சட்டம் கொண்டு வர விரும்பினார் என்று. அரசியல் சாசன அவையில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பெரிய அளவில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பலரும் இதற்கு எதிராகவே பேசினார்கள். இறுதிவரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அந்த விவாதத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு அம்பேத்கர் இவ்வாறு பதிலளிக்கிறார் "இது குறித்து யாரும் பயப்பட வேண்டாம். பைத்தியக்காரத்தனமான அரசுதான் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும்". இந்த பதிலிலிருந்து ஒன்று தெளிவாக  தெரிகிறது. அம்பேத்கர் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக இருந்திருக்கிறார். அதை கொண்டு வர முயற்சி செய்யும் அரசை பைத்தியக்காரத்தனமான அரசு என்கிறார். ஆனால் இன்று பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு அவர் பெயரை கேடையமாக பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

"தலாக் விஷயத்தில் இஸ்லாமிய பெண்களின் உரிமையில் அக்கறை உள்ளதுபோல் வேஷம் போடும் பாஜக, இந்துப்பெண்கள் தாம்விரும்பும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதை ஏன் ஆதரிக்க முன் வருவதில்லை? ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஏன் சட்டம் இயற்றவில்லை? அன்று 'இந்து கோடு'க்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான் இன்று 'யூனிஃபார்ம் கோடு' கேட்கிறார்கள்" என்று எழுத்தாளர் ரவிக்குமார் பாஜகவின் இரட்டை வேடத்தை கேள்விக்கு உட்படுத்துகிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே பொது சிவில் சட்டம் குறித்து பாஜக பேசி வந்தாலும், தற்போதுதான் வேகமாக அதை முன்னெடுக்கிறது. அதற்கு முதற்காரணம் அது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பது. மற்றொரு முக்கிய காரணம் மோடியின் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவது. இந்த ஆட்சியின் மீது மக்களின் அதிருப்தி அதிகரித்து வருவது. இதை மடை மாற்றத்தான் தற்போது பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முனைகிறார்கள்.

"தலாக் விவகாரத்து வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. மத்திய அரசின் தோல்விகளை மறைக்க அந்த விவகாரத்தை பாஜக இப்போது பூதாகரமாக எழுப்புகிறது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மிகச்சரியாகவே குற்றம் சுமத்துகிறார்.

நாட்டில் அனுதினமும் பல்வேறு பிரச்சனைகள் பல்கிப்பெருகி வருகின்றன. விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி, நதிநீர் பிரச்சனை, சமூக பதட்டம், காசுமீர் சிக்கல், தனியார் மயமாக்கல் போன்ற இன்னும் பல பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காண முடியாமல் மோடி அரசு சிக்கி திணறி வருகிறது. மோடி தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தவைகூட நிறைவேற்ற முடியாமை. இதனால் மோடியின் மீதான நம்பகமின்மையும், ஆட்சியின் மீதான விமரிசனமும் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திருப்பும் கருவிகளில் ஒன்றாகத்தான் பொது சிவில் சட்ட விவாதத்தை பாஜக பார்க்கிறது.

பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது சமூகத்தில் வேண்டாத பதட்டத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக முஸ்லிம் சமூகம் மத்தியில் அவநம்பிக்கையை தோற்றுவிக்கும். ஏற்கனவே இரண்டாம் தர குடிமக்களாக தாங்கள் நடத்தப்படுவதாக அவர்கள் நினைக்கும் சூழல் நிலவுகிறது. "பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குலவிக் கூட்டுக்குள் கையை விடும் செயல்" என கண்டிக்கிறார் திமுக தலைவர் மு.கருணாநிதி.

பொது சிவில் சட்டத்தின் விபரீதங்களை ஆர்.எஸ்.எஸ். ன் முன்னாள் தலைவர் குருகோல்வார்கர் இவ்வாறு கூறுகிறார் "பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்று சொல்வது தவறு; இயற்கைக்கு விரோதமானது; விபரீத விளைவுகளை உண்டாக்கக் கூடியது". (மாதர் லேண்ட் 21.08.1972)

ஆனால் அவரின் வாரிசுகளே தேசிய ஒற்றுமை என்ற பெயரில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதின் மூலம் விபரீத செயல்களை அரங்கேற்ற துடிக்கிறார்கள். அதன் மூலம் அரசியல் அறுவடை செய்ய தயாராகின்றார்கள். இஸ்லாத்தினை நேரிடையாக எதிர்க்க முடியாததால் அதன் தனித்துவமான சட்டங்களுக்கு இடையூறு செய்து அதன் வலிமையை குன்ற வைக்க முயலுகிறது இந்துத்துவ பாஜக. பல்வேறு இனங்கள், மதங்கள், சாதிகள், கலாச்சாரங்கள், மொழிகள்  என பல்வேற்றுமைகளிலிருந்துதான் இந்தியா கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

பலரும் நினைப்பதுபோல் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டும் தனியார் சிவில் சட்டங்கள் அமலில் இல்லை. இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும், புத்தர்களுக்கும், ஜைனர்களுக்கும், சீக்கியர்களுக்கும் இது போன்ற பல தரப்பு மக்களுக்கும் தனியார் சட்டங்கள் அமலில் இருக்கின்றன. இதிலும்கூட பல்வேறு தரப்பினர் குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படவே செய்கிறார்கள். உண்மையில் பாஜக அரசிற்கு பாலின சமத்துவம்தான் நோக்கமென்றால் அனைத்து தரப்பிற்கும் வழங்கப்பட்டுள்ள தனியார் சிவில் சட்டங்களை நீக்கி பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சிக்குமா? கண்டிப்பாக அப்படி செய்யாது! அவர்களின்  நோக்கம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுதான். 

பொது சிவில் சட்டம் என்று சொன்னவுடன் உடனடியாக சமத்துவம் உருவாகிவிடாது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறைகாணுபவர்கள் முதலில் இந்து சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய முன் வரவேண்டும். அதே கேள்வியைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் முன் வைக்கிறார். "இன்னும்கூட இந்துப்பெண்களுக்கு நடக்கும் கொடுமை தீர்ந்தபாடில்லை. இந்து வம்சாவழி சட்டம், அதன் 2005 ம் ஆண்டு திருத்தங்களுக்குப் பிறகும்கூட பெண்கள் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. சொத்தில் உரிமை  கிடையாது. இதனை ஏன் அவர்கள் பேசுவதில்லை. தனிச் சட்டங்களை சீர்திருத்துவதில் மிகவும் தேர்தெடுக்கப்பட்டவற்றையே செய்து வந்துள்ளனர். எனவே பொது சிவில் சட்டம் என்றால் அது உடனே சமத்துவம் ஆகிவிடாது. எது பொதுவாக இருக்க வேண்டும் என்று தேர்தெடுக்கும் போதே பொதுமை என்பது சமத்துவம், சம உரிமை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகிறது. சமத்துவம்தான் நோக்கமும், இலக்குமென்றால் அனைத்து தனிச் சட்டங்களையும் திருத்த வேண்டும்".

-  வி.களத்தூர் எம்.பாரூக்

Pin It