“………..இந்தப் பார்வைகள் அதிகாரத்தின் கருவியாக என்றுமே இருந்திராத உன்னதங்களுக்கு முகஸ்துதி பாடாத ஒரு மனிதனின் பார்வைகள். தனது பொது முயற்சிகள் அனைத்துமே ஒடுக்கப்பட்டவர்களின் ஏழைகளின் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டமாய் வாழ்ந்தவனின் பார்வைகள். அதற்காக வசைமாரிகளையும் தேசிய தலைவர்களின் நாளிதழ்களின் ஏசல்களையும் மட்டுமே பெற்றுவருபவனின் பார்வைகள். இந்த வசைபாடல்களுக்கு ஒரு காரணம்தான் அது நான் அவர்களுடன் சேர்ந்து அந்த அற்புதத்தை- தந்திரம் என்று சொல்லமாட்டேன் – கொடுங்கோலரின் தங்கத்தைக் கொண்டு ஒடுக்கப்பட்டவரின் விடுதலையை நிகழ்த்த, பணக்காரர்களின் பொருளைக் கொண்டு ஏழைகளை உயர்த்தும் அந்த நிகழ்த்துதலுக்கு வர மறுக்கின்றேன் என்பது மட்டுமே." (சாதியை அழித்தொழித்தல்: பி.ஆர். அம்பேத்கர்)

ambedkar 600இந்திய சமூகத்தில் வேரோடிப் போய் இருந்த சாதிக்கு எதிராக சாதி இந்துக்களின் மத்தியில் உரையாற்றுவதற்காக தன்னை அழைத்த ஜாத் பாத் தோடக் மண்டல் என்ற அமைப்பிற்காக அம்பேத்கர் தயார் செய்து பின்பு உரையாற்றாமல் போன ‘சாதியை அழித்தொழித்தல்’ என்ற உரையின் கடைசிப் பகுதியில் அம்பேத்கர் மனம் வெதும்பி சொன்ன வார்த்தைகள் அவை. தான் சொன்ன வார்த்தைகளுக்குக் கடைசிவரை அவர் உண்மையாகவே இருந்தார். “….…மன்னித்து விடுங்கள் நான் உங்களுடன் இருக்கமாட்டேன். நான் மாறும் முடிவை எடுத்துவிட்டேன்…..” சொன்னது போலவே தான் வாழ்வின் இறுதியில் இந்து மதத்தை துறந்து பெளத்த மதத்தைத் தழுவினார்.

அம்பேத்கர் இந்த முடிவை அறிவித்ததற்கும் அதை நிறைவேற்றியதற்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் சில சறுக்கல்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் அவர் தன்னுடைய சுயலாபத்திற்காக , தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்படுத்திக் கொண்டவை கிடையாது. தன்னை நம்பிய கோடான கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக தெரிந்தே செய்துகொண்ட சமரசங்கள். ஒரு பக்கம் பெரும்பான்மையாக உள்ள சாதி இந்துக்கள், அவர்களுக்காக வக்காலத்து வாங்க நூற்றுக்கணக்கான தேசிய தலைவர்கள், மற்றொரு பக்கம் சிறுபான்மையாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களுகென்று பரிந்து பேச அம்பேத்கர் என்ற தனி ஒரு மனிதர்!

சூழ்நிலைகளைத் தனியாக கழற்றி வைத்துவிட்டு ஒரு மனிதரை விமர்சிப்பது என்பது அருவமாக விமர்சிப்பது போன்றது. இந்த உலகில் எல்லோரும் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும் என்றோ, அதற்கு கொஞ்சம் கூட குறைய இருக்கும் அனைவரும் பிழைப்புவாதிகள், புல்லுருவிகள் என்றே விமர்சிப்பது சரியான இயக்கவியல் பார்வை ஆகாது. கல்வி மறுக்கப்பட்ட, மாடுகளை விட கேவலமாக இந்த உலகில் வாழ நிர்பந்திக்கப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒருவர் தன்னுடைய கடும் முயற்சியால் தன் சமூகத்திற்கு யாரால் கல்வி மறுக்கப்பட்டதோ, யாரால் தன் சமூகம் மனிதத் தன்மையற்று கேவலமாக நடத்தப்பட்டதோ, அதே சமூகத்தை முச்சந்தியில் நிறுத்தி அம்பலப்படுத்தும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொள்கின்றார். வாழ்வின் இறுதிவரை தனக்குக் கிடைத்த அனைத்து வழிகளிலும் அந்த தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக முடிந்ததை செய்கின்றார். அவருக்கு வேறு மாற்று ஏதுவும் அப்போது கிடையாது.

அவர் கம்யூனிஸ்ட்களை மிகவும் நேசித்தார். நேசித்ததால் தான் 1928-ல் எஸ். ஏ. டாங்கோ தலைமை வகித்த காம்கார் சங்கத்தின் முதலாவது வேலை நிறுத்தத்திற்குத் தனது முழு ஒத்துழைப்பை வழங்கினார். மாநாட்டின் கோரிக்கையில் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகவும், அனைத்து தொழிலாளர்களுக்கிடையே சமமான பதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் கோரிக்கையை எஸ்.ஏ. டாங்கோ புறக்கணித்தார். தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் மீது மகாராஷ்ர பார்ப்பனரான எஸ்.ஏ. டாங்கோவிற்கு இருந்த மரியாதை அவ்வளவுதான். அவரைப் பொருத்தவரை தொழிற்சாலையில் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் மீது கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரிந்ததில்லை.

அத்தோடு தனது பார்ப்பன விசுவாசத்தை நிறுத்திக் கொள்ளாத எஸ்.ஏ.டாங்கோ ‘மார்க்சியமும் பண்டைய இந்தியக் கலாச்சாரமும்: ஆதிப் பொதுவுடைமை முதல் அடிமைமுறை வரையான இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் பண்டைய இந்துப் பண்பாடு என்பது ஓர் ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் என்றும் அதில் பிராமண்தான் ஆரியர்களின் கூட்டுக்குழு என்றும், யாகம் தான் அதன் உற்பத்தி சாதனம் என்றும், இதுவே பொதுவான உற்பத்திச் சாதனங்களைக் கொண்ட ஆதி கூட்டுக்குழு எனவும் எழுதினார் (அருந்ததி ராயின் அறிமுகத்துடன் வெளியாகி இருக்கும் அம்பேத்கரின் சாதியை அழித்தொழித்தல் என்ற புத்தகத்தில் இருந்து).

அன்றில் இருந்து இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை இதில் இருந்து பெரிய அளவில் மாறுபட்டதாகத் தெரியவில்லை. “அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தால் கைப்பற்றப்பட வேண்டும். நான் கேட்கும் முதல் கேள்வி இதுதான்: இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் இத்தகைய புரட்சியைக் கொண்டுவர ஒன்றிணையுமா?. இந்தியாவின் பாட்டாளி வர்க்கம், அது ஏழையாக இருந்தாலும், ஏழை பணக்காரன் என்பதைத் தவிர வேறு எந்த ஏற்றத்தாழ்வையும் அங்கீகரிப்பதில்லை எனச் சொல்ல முடியுமா? இந்தியாவின் ஏழைகள் சாதி மதம் உயர்வு தாழ்வு எனும் எந்த பாகுபாட்டையும் கடைப்பிடிப்பதில்லை என்று சொல்ல முடியுமா?” அம்பேத்கரின் இந்தக் கேள்விக்கான பதிலை இன்றுவரையிலும் இந்திய கம்யூனிஸ்ட்கள் கொடுத்ததாகத் தெரியவில்லை.

மேலும் அம்பேத்கர் சொல்கின்றார் “உழைக்கும் வர்க்கத்தை ஒரு பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்துமாறு உற்சாகப்படுத்த கார்ல் மார்க்ஸ் இப்படிச் சொன்னார்: ‘உங்களிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, உங்கள் அடிமை விலங்குகளைத் தவிர’. ஆனால் வெவ்வேறு சாதிகளுக்கிடையில் சிலருக்கு அதிகமும், சிலருக்கு கொஞ்சமும் என சமூக உரிமைகளும் மத உரிமைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள இந்தக் கலாப்பூர்வ வழிமுறையால், கார்ல் மார்க்ஸின் இந்தக் கோஷம் இந்துக்களை சாதி அமைப்பிற்கு எதிராகப் போராட அழைப்பதற்குப் பயனற்றதாகிறது. சாதிகள் ஒரு தரவரிசைப்படுத்தப்பட்ட மேல்கீழான இறையாண்மைகளை உருவாக்குகின்றன, ஒன்றின் மேல் ஒன்று பொறாமைப்படும் இறையாண்மைகள். அவர்களுக்குத் தெரியும் ஓட்டுமொத்த கலைப்பு நிகழ்ந்தால் அவர்களில் சில அதிகாரத்திலும், அந்தஸ்திலும் மற்றவர்களைவிட அதிகமாக இழக்க நேரிடும் என்று. எனவே ( இராணுவச் சொல்லாடலில் சொல்வதென்றால்) சாதி அமைப்பைத் தாக்குவதற்கு ஒரு இந்து அணிதிரட்டலை நீங்கள் உருவாக்க முடியாது”.(சாதியை அழித்தொழித்தல்)

அம்பேத்கர் மிகச் சரியாகவே இந்திய சமூகத்தை மதிப்பிட்டார். மேல் கீழ் படிநிலையில் சாதிகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூக அமைப்பில் பாட்டாளிவர்க்க ஒற்றுமையைச் சாதிகளைக் கடந்து நிறைவேற்ற முடியும் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று தன்னுடைய ஆய்வின் முடிவில் கண்டறிந்தார். அப்போது அதை உதாசீனப்படுத்திய பெரும்பாலான கம்யூனிஸ்டுகள் அம்பேத்கர் இறந்து பல ஆண்டுகள் கழித்தே அதை ஒத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். இன்னும் கூட முழுமையாக ஒப்புக்கொண்டார்களா என்பது மிகப்பெரிய கேள்விதான். தமிழ்நாட்டு அளவில் எடுத்துக்கொண்டால் கூட சாதி ஒழிப்பு என்ற மையமான பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதை ஒழிப்பதற்காக அவர்கள் எடுத்த இயக்கங்கள் ,போராட்டங்கள் என்பதெல்லாம் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை. அவர்களின் போராட்டங்கள் அனைத்தும் தீண்டாமையை மையப்படுத்தி இருந்ததே தவிர சாதி ஒழிப்பை மையப்படுத்தி இருந்தது கிடையாது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்றுதான் அவர்கள் பெயர் வைத்தார்களே தவிர சாதி ஒழிப்பு முன்னணி என்று அல்ல. ஒருவேளை வைத்திருந்தால் கட்சியில் விரல்விட்டு எண்ணத்தக்க நபர்களை தவிர பெரும்பாலான நபர்கள் ஓட்டம் பிடித்து இருப்பார்கள்.

புரட்சியை நாங்கள் தான் கொண்டுவரப் போகின்றோம் எனக் கிளம்பிய சில தீவிர இடதுசாரிப் பிரிவுகளில் மருந்தளவுக்குக் கூட சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள் நடைபெறவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. அவைகள் அனைத்திற்கும் தனித்தனியாக அமைப்புகளை வைத்திருக்கின்றன. ஆனால் மையமான பிரச்சினையான சாதியை ஒழிப்பதற்கு அதனிடம் எந்த முன்னணிகளும் கிடையாது. முதலாளித்துவத்தை ஒழிப்பதற்காக நூறு மாநாடுகள் நடைபெறும்; ஆனால் சாதியை ஒழிப்பது பற்றிய ஒரு மாநாட்டைக்கூட அவை நடத்தியது கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கைப்பற்றிக்கொண்ட பார்ப்பனர்களும், அவர்களை அண்டிப்பிழைக்கும் சாதி இந்துக்களும் உள்ள வரை இந்த நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை. ‘சாதிகளை கடந்த பாட்டாளிவர்க்க ஒற்றுமை’ என்ற ஒரே வரியில் அவர்கள் சாதிகளைக் கடந்து போய்விடலாம் என நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நடைமுறை செயல்பாடுகளில் சாதி ஒழிப்பை புறக்கணித்துவிட்டு எல்லாம் புரட்சி வந்தால் சரியாகிவிடும் என பிதற்றிக்கொண்டு திரிந்தால் புரட்சி வரும் காலத்தில் இங்கு ஒரு தலித் கூட உயிருடன் இருக்க மாட்டார்கள். ஒருவேளை அதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ எனத் தெரியவில்லை.

ஒருவன் கம்யூனிஸ்ட்டாக இருப்பது பெரிய விஷயமல்ல. கம்யூனிஸ்டாக மாறிய பின் தன்னை முழுவதுமாக சாதி நீக்கம் செய்து கொண்டானா என்பதுதான் பெரிய விஷயம். அப்படி தன்னை முழுவதுமாக சாதி நீக்கம் செய்துகொண்ட கம்யூனிஸ்ட்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றும் கூட சுய சாதிப் பற்றோடு தேவர் சிலைக்கு மாலைபோடும் கம்யூனிஸ்ட்களையும், ஜல்லிக்கட்டுக்கு வக்காலத்து வாங்கும் கம்யூனிஸ்ட்டுகளையும் பார்க்க முடிகின்றது. ‘காலந்தோறும் பிராமணியம்’ மாறிக்கொண்டே இருக்கின்றது.

தேர்தல் பாதையில் நின்று முதலாளித்துவத்தை ஒழித்து, சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் கொண்டு வரப்போவதாய் சொல்லும் கம்யூனிஸ்ட்களும், தேர்தல் பாதையை நிராகரித்து இந்தியாவில் புரட்சியைக் கொண்டு வரப் போவதாய் சொல்லிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான உதிரி கம்யூனிஸ்ட் (இதில் ஏறக்குறைய 5 இல் தொடங்கி 5000 வரை உறுப்பினர்கள் இருக்கலாம் என மதிப்பிடுகின்றேன்) கட்சிகளும் சாதிப் பிரச்சினையில் ஒன்றுபோலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சாதிப் பிரச்சினையில் இப்போது இருக்கும் கம்யூனிஸ்ட்களைக் காட்டிலும் கார்ல் மார்க்ஸ் தெளிவானதொரு புரிதலைக் கொண்டிருந்தார் என அவரது இந்தியா பற்றிய எழுத்துக்களைப் படிக்கும் யாரும் புரிந்துகொள்ள முடியும்.1853 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ல் நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிக்கையில் வெளிவந்த அவரது கட்டுரையில் "...அந்த தேசம் ஹிந்து, முஸ்லிம் என்று பிளவுபட்டிருந்ததோடு, ஒரு குல மரபுக்கும் மற்ற குல மரபுக்கும் இடையே பிளவு இருந்தது, ஒரு சாதிக்கும், மற்ற சாதிக்கும் இடையே பிளவு இருந்தது. தன்னுடைய உறுப்பினர்கள் அனைவர்களிடையிலும் பொதுவாக ஒருவரை மற்றொருவர் வெறுப்பது, நடைமுறை அரசியலமைப்புப்படி ஒருவர் மற்றொருவரை தனியே விலக்கி வைத்திருப்பது ஆகியவைகளின் விளைவாக ஏற்பட்டிருந்த ஒருவிதமான அமைதியான சமநிலையின் அடிப்படையில் அந்த சமுதாயத்தின் அமைப்பு இருந்தது. இத்தகைய ஒரு தேசம், இத்தகைய ஒரு சமுதாயம் ஆக்கிரமிப்புக்குப் பலியாகத்தான் வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துவிடலாம் அல்லவா?” (இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ்)

ஏறக்குறைய 163 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு இந்தியாவை பற்றி கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மிகச்சரியாகவே மார்க்ஸ் இந்திய சமூகத்தைப் புரிந்து வைத்திருந்தார் என்பது ஆச்சரியமளிப்பதாய் உள்ளது. இந்திய சமூகம் அடிமைப்பட்டதற்கு இந்தச் சாதிமுறையே காரணம் என மிகச்சரியாக அடையாளம் காண்கின்றார் மார்க்ஸ். அம்பேத்கரும் அதையே தான் சொல்கின்றார். சாதியே அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படையாய் உள்ளது. அதை தவிர்த்துவிட்டு இந்திய சமூகத்தில் புரட்சி சாத்தியமில்லை என்கின்றார். இருவரும் ஏறக்குறைய ஒரே முடிவைத்தான் வந்தடைந்து இருக்கின்றார்கள். பிரச்சினை எல்லாம் அப்பேத்கரைப் பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு தங்களை மட்டுமே உயர்த்திக்கொண்ட பிழைப்புவாதிகளாலும், கம்யூனிசத்தைத் தங்கள் பிழைப்புக்கு ஏற்றாற்போல வெட்டியும் ஒட்டியும் பொருள்கொண்ட போலி கம்யூனிஸ்ட்டுகளாலும் தான் ஏற்பட்டது. குரங்கு கையில் கிடைத்த பூமாலையைப் போன்று பார்ப்பனர்களின் கைகளிலும் சாதி இந்துக்களின் கைகளிலும் மாட்டிக்கொண்ட கம்யூனிசம் இன்று அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அம்பேத்கரியவாதிகள் கம்யூனிஸ்ட்களின் மீது பழியைத் தூக்கி போடுவதும், கம்யூனிஸ்ட்கள் அம்பேத்கரியவாதிகள் மீது பழியைத் தூக்கி போடுவதும் எந்த வகையிலும் பயனைத் தரப்போவது கிடையாது. அது இரண்டு பேரையும் ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் காவி பயங்கரவாதிகளுக்கே பயன்படப்போகின்றது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் வளமான சிந்தனைகளை ஒன்றிணைத்த கலப்பு வடிவமே இன்று நமக்குத் தேவைப்படும் வலுவான தத்துவமாக உள்ளது. இதில் எதை ஒன்றைப் புறக்கணித்தும் மற்றதைக் கட்ட முடியாது. அப்படி கட்டினால் அது முழுமைபெறாமல் தான் இருக்கும்.

கம்யூனிஸத்தை வெறுக்காத அம்பேத்கரியவாதிகளும், தன்னை முழுவதுமாக சாதி நீக்கம் செய்துகொண்ட கம்யூனிஸ்ட்களும் தான் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளனர். அப்படி இல்லாமல் அம்பேத்கரியவாதிகள் போனாலோ சாதிவெறியர்களை நக்கிப் பிழைப்பவர்களாக கம்யூனிஸ்ட்கள் தங்களை மாற்றிக்கொண்டாலோ அது இந்திய பாட்டாளி வர்க்கத்திற்குச் செய்த மாபெரும் துரோகமாய்ப் போய்விடும்.

- செ.கார்கி

Pin It