tha.pandiyan2ஒடுக்கப்பட்ட மக்கள்,
ஏதுமில்லாத ஏழைகள்
இனப் படுகொலைக்கு
உள்ளாவோர் இவர்களுக்கான
கண்ணீர், கண்களிலிருந்து
வருபவை அல்ல
மாறாக அவை
சிந்தனையிலிருந்து உதிரவேண்டும்
என்றார் ஜெர்மன் நாடக
ஆசிரியர் “ப்ரெஹிட்”

தோழர் தா.பாண்டியன் அவர்களின் எழுத்துக்களைப் படித்தவர்கள், உரைகளைக் கேட்டவர்கள், எளிய மக்களின் மீதான அவரின் கண்ணீர், சிந்தைகளிலிருந்து உதிர்பவை என அறிய முடியும்.

தோழர் தா.பா.வின் பொதுவாழ்வு சிறப்பு மலருக்கு என்ன தலைப்பில், என்ன எழுதலாம் என நினைத்தபோது, “சிந்தையிலிருந்து உதிரும் கண்ணீர்” எனும் தலைப்பு மனதில் பட்டது.

தோழர் தா.பாண்டியன் அவர்கள் வயதில், அறிவில், தொண்டில், படித்த அனுபவத்தில் என்னைப் போன்றவர்களைவிட உயர்ந்தவர். எங்கள் தலைவர், அவரைப் பற்றி நான் என்ன எழுதுவது, அதிலும் தலைவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என பலரும் அவரைப் பற்றி எழுதுவார்களே அவர்களைவிட நாம் என்ன எழுத முடியும் என சிந்தித்தபோது, பலருக்குக் கிடைக்காத, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது.காரணம் நாங்கள் கட்சியின் மாநில மைய ஊழியர்கள், மாநிலச் செயலாளர் தா.பா. அவர்களின் தலைமையின் கீழ் நாங்கள் கட்சிப் பணியாற்றுகிறோம்.

எனவே அவரின் ஓயாத உழைப்பு, அணுகுமுறை, அன்பு, கோபம், பேச்சு, எழுத்து என அவரின் இயல்புகளை அருகிலிருந்து அறியும் வாய்ப்பு கிட்டுகிறது.

எனவே இவற்றுள் சிலவற்றைப் பதிவு செய்தால்கூடச் சிறப்பு என எண்ணினேன்.

ஒருமுறை கட்சி அலுவலகத்தில் என்னென்ன புத்தகங்கள் எல்லாம் படிக்கலாம் என ஒரு பெயர்ப் பட்டியலை எழுதிக் கொண்டிருந்தேன். பிளாட்டோ, கார்க்கி, சாக்ரடீஸ், அரிஸ்டாடில், ரூசோ, கதே, சார்கி என ஒரு நீண்ட பட்டியலை எழுதிக் கொண்டிருந்தேன். தோழர் தா.பா. அருகில் வந்தார். “என்ன? ஜனசக்திக்குக் கட்டுரையா?” என்றார்.“இல்லை, இல்லை. இவர்களை எல்லாம் படிக்க வேண்டும் என நினைத்தேன். எனவே, எவற்றை எல்லாம் வாங்குவது என எழுதிக் கொண்டிருந்தேன்” என்றேன்.

தோழர் தா.பா. அவர்கள் அன்பு கனிந்த குரலில் "வீரபாண்டியன்... இவை யாவற்றையும் படிக்க நினைப்பதில் தவறில்லை. நல்லது. இத்தனை பேரையும் நீ தெரிந்து கொள்ள நினைத்தால் ஒருவரைப் படித்தால் போதும்” என்றார்.

நான் தயங்கியபடி நின்றேன்.

“முதலில், டாக்டர் அம்பேத்கரைப் படியுங்கள். தந்தை பெரியாரை, அயோத்திதாசரை, காந்தியை, சிங்காரவேலரை, ஜீவாவைப் படித்தறிவோம்” என்றார். அவர் குரலில் உணர்ச்சி மேலிட்டுவிட்டது.

“டாக்டர் அம்பேத்கர் ஒருவரைப் படித்தறிந்து விட்டாலே உலகத்தின் மேதைகள் பலரை கற்றறிந்ததுபோல” என்றார்."எங்கேயோ நாம் நமக்கான பேருந்தை தவறவிட்டு விட்டோம்" என்றார்.

சிங்காரவேலர், ஜீவா ஏற நினைத்த அந்த வண்டியை நாம் தவறவிட்டுவிட்டோம் என்றார். அதன் பலன் யார் யாரோ ஓட்டும் வண்டியில் நாம் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறோம். நமது பயணம் இலக்கைத் தொடவில்லையே என்றார்.ஆழ்ந்த அரசியல் பொருள் செறிவு தென்படுகிறதல்லவா?

“...நான் ஏன் அம்பேத்கரை குறித்து அப்படிக் கூறினேன் என்றால்..." என்று தா.பா. அவர்கள் தொடர்ந்தார்...

“மோசஸ் ஹெஸ் என்ற ஒரு ஐரோப்பிய அறிஞர் இருந்தார்.அவரை மார்க்ஸ் சந்தித்தார்.அதேபோல ‘பெர்த்தோல்டு ஆல்பர்க்’ என்னும் அறிஞரையும் சந்திக்க விரும்பினார்.

அந்த பெர்த்தோல்டு ஆல்பர்க் அவர்களுக்கு ‘மோசஸ் ஹெ’ ஒரு கடிதம் எழுதினார். அதில் மார்க்ஸ் என்றொரு இளைஞன் தங்களைக் காணவருகிறார். நீ அவரை சாதாரணமாக நினைத்து விடாதே. ரூசோ, வால்டர், ஹெகல், ஹின் போன்ற மேதைகளின் மொத்த உருவமாக எனக்குத் தெரிகிறார் என எழுதி இருந்தாராம்.

அதுபோல தான் அம்பேத்கர். அவர் ஏதோ, தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தவர் மட்டுமல்ல, மகர் மக்களின் தலைவர் மட்டுமே என்பதுபோல ஒரு தவறான சித்திரம் தீட்டப்பட்டுள்ளது. அது தவறு. அவர் இந்திய மக்களின் தலைவர். உலகத்தின் பேரறிஞர்களில் ஒருவர். அவரை அறிந்தாலே இந்தியாவை அறியலாம்” என்றார்.

இப்படித்தான் ஒன்று குறித்து பேசிக் கொண்டிருந்தால், அதனினும் உயர்வான ஒன்றை எடுத்துக் கூறுவார். அபாரமான ஞாபக சக்தி.

தா.பா. மேலும் தொடர்ந்தார்.

“டாக்டர் அம்பேத்கர் ஜாதி இந்துக்கள் என்று பொதுவில் சொல்லி வைக்கவில்லை.

  1. ஐதீக இந்துக்கள்
  2. நவீன இந்துக்கள் என இந்துக்களை வகைப்படுத்தி,

அதில் இரண்டாவது வகையான நவீன இந்துக்களை தீண்டாமை தவறு என எண்ணுகிறார்கள். அது குறித்து வெட்கப்படுகிறார்கள். எனவே, இந்துக்களையும் கூட பகுத்தறிந்து பார்க்க கற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார்” என்றார்.

இது என்னுள் டாக்டர் அம்பேத்கர் குறித்த ஆழ்ந்த தேடலை உருவாக்கியது.

தா.பா. மேலும் தொடர்ந்தார்...

டாக்டர் அம்பேத்கர் சோஷலிஸ்ட் நண்பர்கள் என கம்யூனிஸ்டுகளை அழைத்ததை நினைவூட்டினார். அதேபோல காந்தி, கம்யூனிஸ்டுகளை தன் அன்பிற்குரிய பிள்ளைகள் என கூறியதையும் நினைவூட்டினார்.

சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்ப்பது என்பது வர்க்கப்போரின் ஒரு காரணிதான் என்பதனைக் கூட எனது சோஷலிஸ்ட் நண்பர்கள் உணர மறுக்கிறார்கள் என அம்பேத்கர் வேதனைப்பட்டார் என்றும், யாவற்றையும் நாம் தற்போதாவது எண்ணிப் பார்த்து தலித் இயக்கங்கள், பெரியார் இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் என அனைவரையும் ஒன்றுபடுத்த முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

தா.பா. மனதில் பட்டதை பளீரெனக் கூறிவிடுவார். எளிதில் உணர்ச்சிவசப்படுவார். ஆனால் அவர் சூழ்ச்சி உடையவர் அல்லர்.

அரசியல் மேதைமைக்கும், திறமைக்கும், அன்பிற்கும் எவ்வளவோ சான்றுகளைக் கூறமுடியும்.

யாவற்றையும் விட, மனிதர்களில், தோழர்களில் அவர் பாகுபாடு பார்ப்பதில்லை.கம்யூனிஸ்ட் தலைவர்களிடமிருக்கும் நற்குணங்கள்தான் அவரிடமும் இருக்கின்றன.

தலைமை அலுவலகத்திலுள்ள சரிபாதி பேர் தலித் தோழர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், உயர்சாதியினர்எவரிடமும் சாதியப் பாகுபாடுகள் இருந்ததில்லை. ஒன்றாக உணவு உண்ணுவோம். ஒருவர் உணவைப் பரிமாறிக் கொள்வோம். நட்பு பாராட்டுவோம். தோழமை பாராட்டுவோம். சாதி என்பது அகமன முறை கொண்ட மனநிலைதானே. சாதி என்பது ஓர் எண்ணம்தானே.அதனை அனுசரிப்பால், தோழமையில் - நட்பில், பழகி தோற்கடிப்போம் என்பார் தோழர் தா.பா.

1986ஆம் ஆண்டு வியாசர்பாடியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

டெல்லி என்கிற இளைஞரை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று, லாக்கப்பில் வைத்து அடித்ததால் அவர் இறந்துவிட்டார்.

அவர் உடல் குப்பைத் தொட்டியில் கிடந்தது. இதனைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. மக்களுடைய எழுச்சியை அடக்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

கஜேந்திரன் என்கிற பள்ளிக்கூட மாணவர் கொல்லப்பட்டார். முதியோர் ஒருவர் கொல்லப்பட்டார். பின்னர் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசிடம் இருந்து நிவாரணம் அளிக்க நடைபெற்ற முயற்சிகள் கண்டனப் பொதுக்கூட்டங்கள் - இவற்றில் எல்லாம் தோழர் எம்.கல்யாணசுந்தரம் அவர்களுடன் இணைந்து தோழர் தா.பா. அவர்கள் ஆற்றிய பணிகளும் உதவிகளும் குறிப்பிடத்தகுந்தவை.

ஒருமுறை வியாசர்பாடியில் போலீஸ் கட்சி முன்னணி தோழர்களைச் சுற்றி வளைத்துத் தேடியது. தோழர் தா.பா. வீட்டில் இரவு முழுவதும் இளம் தோழர்கள் பாதுகாப்பாக இருந்தனர். இந்த நினைவுகள் கட்சித் தோழர்களின் மனதில் பசுமையாக நினைவில் உள்ளன.

(தோழர் தா.பாண்டியன் 80வது ஆண்டு சிறப்புமலர்)

- மு.வீரபாண்டியன்

Pin It