Jayalalithaa global investors meet

 காலம் மாறிப்போச்சிங்க, அந்தக் காலத்தில் எல்லாம் திருடர்களை திருடர்கள் என்றுதான் சொல்வார்கள். இப்ப பாருங்க அவர்களை முதலீட்டாளர்கள் என்று சொல்கின்றார்கள். போதாத குறைக்குத் திருடர்களை வான்ட்டடாக வரவழைத்தது மட்டும் இல்லாமல் எங்க வீட்டில் திருடிக்கோ, எங்க வீட்டில் திருடிக்கோ என்று காலில் விழுந்து கெஞ்சுகின்றார்கள். இப்படிப்பட்ட மானங்கெட்ட அரசியல்வாதிகளை நீங்கள் எங்கேயாவது பார்த்திருக்கின்றீர்களா? பார்க்க வேண்டும் என்றால் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் போய் பார்க்கலாம்.

 உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015 என்ற ஒரு சோக நாடகம் அ.தி.மு.க கும்பலால் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது. அம்மா என்று கூழைக்கும்பிடு போடும் பேர்வழிகளால் அன்போடு அழைக்கப்படும் செல்வி ஜெ.ஜெயலலிதா தன்னுடைய கடைசி காலத்தில் அதாவது ஆட்சியின் கடைசி காலத்தில் இப்படி ஒரு நாடகத்தை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த நாடகத்தை நடத்துவதற்காக மக்கள் வரிப்பணம் 100 கோடி ரூபாய் அள்ளி இறைக்கப்பட்டுள்ளது.

 வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தத் திருடர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் சொகுசாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்படியே ஓசியிலேயே சென்னை நகரை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மக்களின் வரிப்பணத்தை இப்படி கண்ட கண்ட நாய்களுக்குச் செலவழிக்கலாமா என்று ஆட்சியில் இருக்கும் உள்நாட்டுத் திருடர்களுக்கும் தெரியவில்லை, மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் தங்கிக்கொண்டு ஓசியில் நக்கி நக்கி தின்கலாமா என்று அந்த வெளிநாட்டுத் திருடர்களுக்கும் தெரியவில்லை.

 இந்த மாநாட்டுக்காக சென்னை முழுக்க வைக்கப்பட்ட கட்அவுட்டர்களில் ஜெயலலிதாவின் சிரித்த உருவமே பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டுக்குள் யார் புதிதாக வந்தாலும் அவர்களுக்குப் பூச்சாண்டி காட்டாமல் விடமாட்டோம் என்று அ.தி.மு.க வின் கூழைக்கும்பிடு அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றார்கள்.

 முதலீட்டாளர்களின் சொர்க்கம் என்று வேறு பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து இருக்கின்றார்கள். இலவசமாக மின்சாரம், தண்ணீர், சாலைவசதி, வரிச்சலுகைகள் என்று அனைத்தையும் கொடுத்து, போதாத குறைக்கு மலிவான கூலிக்குத் தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் கொடுத்தால் அது உண்மையிலேயே முதலீட்டாளர்களுக்குச் சொர்க்கம் தானே!. நோக்கியா கம்பெனியாலும், பாக்ஸ்கான் கம்பெனியாலும் நடுத்தெருவுக்குத் துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் போய் கேட்டால் சொல்வார்கள் முதலீட்டாளர்களின் சொர்க்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் நரகத்தின் வேதனையை.

 இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழ்நாட்டுக்கு ஏறக்குறைய 1.5 லட்சம் கோடிகளுக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று சொல்கின்றார்கள். இது அப்பட்டமான பொய்யாகும். ஜெயலலிதா அரசு பதவியேற்ற பின்பு தமிழ்நாட்டுக்கு இந்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த மொத்த முதலீடு என்பதே வெறும் 31,706 கோடி ரூபாய் மட்டுமே. இதை நாம் சொல்லவில்லை. 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது. ”கடந்த நான்கு ஆண்டுகளில் 31,706 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு மேற்கொண்டுள்ளது” என்று சட்ட சபையில் ஒத்துக்கொண்டு இருக்கின்றார். நிலைமை இப்படி இருக்கும் போது இன்னும் ஆறுமாதமே இருக்கப்போகும் அ.தி.மு.க அரசை நம்பி எந்த இளிச்சவாயன்கள் 1.5 லட்சம் கோடிகளை கொட்டப் போகின்றார்கள்?

 ஓசியிலேயே விமானப்பயணம், ஒசியிலேயே சொகுசாக தங்குமிடம், ஒசியிலேயே நாக்குக்கு ருசியாக விதவிதமான சாப்பாடுகள், ஒசியிலேயே ஊர்சுற்றி பார்ப்பதற்கு ஏற்பாடு, இது எல்லாம் கொடுப்பதாலேயே அவர்கள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு இங்கு வந்திருக்கின்றார்கள். ஏற்கெனவே 4 லட்சம் கோடிகள் கடனில் ஓடிக்கொண்டிருக்கும் தமிழக திவால் அரசு இந்த மாநாட்டில் இன்னும் நூறுகோடி ரூபாய் சேர்த்துக் கடனாளி ஆகப்போகின்றது. பின்பு இந்தக் கடனையும் சேர்த்துக் கட்டுவதற்குத் தமிழ்நாட்டுக் குடிமகன்களுக்கு இன்னும் அதிகமாக டார்கெட் வைக்கப் போகின்றார்கள்.

 நமக்கு என்ன சந்தேகம் என்றால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்கின்றார்கள். பிறகு அங்கு வங்கிகளுக்கு என்ன வேலை என்பதுதான். 25 பொதுத்துறை மற்று தனியார் வங்கிகள் அரங்கங்களை அமைத்திருப்பதாக சொல்கின்றார்கள். இவர்களுக்கு அங்கு என்ன வேலை என்று விசாரித்தால் பெரு, சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன்கள் வழங்குவதற்கு வந்திருக்கின்றார்களாம். வங்கிகள் கடன்கொடுத்தால் பின் வருபவர்கள் என்ன கொண்டுவருவார்கள் என்று தெரியவில்லை.

 ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகள் வாராக்கடன்களால் நஷ்டத்தில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இப்போது தன்பங்கிற்கு ஜெயலலிதாவும் அதை திவாலாக்கப் பார்க்கின்றார். ஜெயலலிதாவுக்குப் பொதுத்துறையைச் சார்ந்த நிறுவனங்களை திவாலாக்குவதென்றால் அப்படி ஒரு சந்தோசம். ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார வாரியம் 1.6 லட்சம் கோடி கடனும், தமிழ்நாடு போக்குவரத்துகழகம் 2084 கோடி கடனும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டுமாம். இப்போது அ.தி.மு.க திருடர்களின் பார்வை நேராக வங்கிக்கே திரும்பி இருக்கின்றது. மாநாட்டிற்கு வருபவர்களிடம் “கையெழுத்த மட்டும் போடுங்க சார் மத்ததை எல்லாம் எங்க அம்மா பார்த்துக்குவாங்க” என்று சொல்லி ஒரு தீட்டு தீட்டப் போகின்றார்கள். ஏற்கெவே ஜெயலலிதா மோடியின் நண்பர் என்பதால் 1.5 இலட்சம் கோடி என்ன 30 லட்சம் கோடிகள் முதலீடு வந்துள்ளதாகக் கூட நம்மை நம்பவைக்க முயற்சி செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

 ஆட்சி செய்த இந்த நான்கரையாண்டுகளில் ஒரு ஆணியைக் கூட புடுங்காத அ.தி.மு.க அரசு இப்போது மொத்தமாக புடுங்கப் போகின்றோம் என்று சொல்லி அனைவரையும் ஏமாற்றப் பார்க்கின்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆண்கள் குடிநோயாளிகளாக மாறிவிட்டார்கள். இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அப்போதும் மனசு அடங்காமால் இன்னும் ஏதாவது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாவும் அவரது அடிமைகளும் இரவும் பகலுமாக யோசித்துக்கொண்டு இருக்கின்றார்கள். சரியாக பேரம் படிந்தால் இரவோடு இரவாக தமிழ்நாட்டையே விற்றுவிட்டு ஓடிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்!

- செ.கார்கி

Pin It