amit shah 372

தமிழ்நாட்டில் மதவாத அரசியலால் வேரூன்ற துடித்த பாஜக அடுத்தகட்டமாக சாதி அரசியலை கையில் எடுத்துள்ளனர்.

காமராசர் பிறந்த நாள் என்று விளக்கு பூஜை நடத்தி, நாடார் சமுதாய மக்கள் மத்தியில் சென்றவர்கள் அடுத்து, தேவேந்திர குல வேளாளர் மாநாட்டை நடத்தி முடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பின்னணியாகக் கொண்ட சில நூறு பேர்கள். அதுவும் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு மூலம் இடம் பிடித்தவர்கள். இடஒதுக்கீடே வேண்டாம் என்று, ஒன்று கூடி மதுரையில் மாநாடு (06-08-2015) நடத்தியுள்ளனர். அதில் கவனிக்கத்த விசயம் கிராமத்து மக்கள் எவரும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

மனுதர்மம் சொன்ன விசயங்களை மேடையில் பேசியுள்ளனர். சாதி ஏற்றத்தாழ்வுகள் தொடர வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளனர். அதனால்தான் பொது ஊடகங்கள் மதுரை செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் விழாக்கள் நடந்தாலும், அதில் அம்பேத்கர், பெரியார், இம்மானுவேல் சேகரனார், தேக்கம்பட்டி பாலசுந்தரராசு ஆகியோரின் படங்கள் நிச்சயம் இருக்கும்.

ஆனால், இதில் எவரது படத்தையும் மதுரை விழாவில் பயன்படுத்தக் கூடாது என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தடை போட்டுள்ளன.

குறிப்பாக இம்மானுவேல் சேகரன் படத்தையும், பெயரையும் எந்த இடத்திலும் பயன்படுத்தி விடக்கூடாது என்று உறுதியாக இருந்துள்ளனர்.

இது அந்த மக்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஏனென்றால் இம்மானுவேல் சேகரனார் படத்தை பயன்படுத்தாத அரசியல் கட்சிகள் ஓட்டுக்கேட்டு ஊருக்குள் வரக்கூடாது என்று பல பள்ளர் கிராமங்களில் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்து, மதுரை மாநாட்டின்(?) முக்கிய நோக்கமே ஏழு உட்பிரிவுகளை ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கப் போகிறேன் என்பதுதான்.

சாதிகளின் பெயரை மாற்றி அரசாணை பிறப்பிக்கும் அதிகாரம் மாநில அரசின் கைகளில் உள்ளது. மத்திய அரசு பரிந்துரை வேண்டுமானால் செய்யலாம். மாநில அரசுக்குத்தான் செயல்படுத்தும் அதிகாரம் உள்ளது.

அப்படியென்றால் எதை சொல்லி ஏமாற்றலாம் என்று பாஜக களத்தில் இறங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது. அதிகாரப் போதையை, ஆதிக்க சிந்தனையை விதைத்து தங்களின் ஏவல் மனிதர்களாக பள்ளர்களை மாற்ற திட்டமிடுகிறது பாஜக.

மாட்டுக்கறி சாப்பிடுபவன் எல்லாம் தாழ்ந்தவன் என்று சொல்லி, அமித்ஷா, குருமூர்த்தி, எச்.ராஜா போன்றவர்கள் தங்களது மதவெறியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

உடனே பறையர்களும், அருந்ததியர்களும் பன்றிக் கறி சாப்பிடும் பள்ளர்கள் எப்படி உயர்ந்தவர்கள் ஆக முடியும் என்று கேட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டனர். ஆக, பட்டியல் சாதியினருக்கு இடையே மல்லுக்கட்டை தொடங்கி வைத்து விட்டனர்.

குஜராத் கலவரத்தில் எப்படி பட்டியல் சாதியினரை பயன்படுத்தி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரத்தை அரங்கேற்றம் செய்தார்களோ, அதே போல தமிழகத்திலும் தங்களது திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள்.

பாஜகவின் நோக்கம் ஒவ்வொரு சாதிகளையும் சந்தித்து சாதிச் சண்டைகளை உருவாக்குவது. அதன் மூலம் தமிழகத்தில் ஊடுருவல் செய்வது. அது தமிழ் மண்ணில் நடக்காது. எத்தனை குருமூர்த்திகள் வந்தாலும், எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

- கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

Pin It