Modi Hitler

இந்தியாவின் ஆன்மா எனும் "வேற்றுமையில் ஒற்றுமை" யை ஏற்றுக்கொள்ளாத கும்பலின் அரசாங்கம் மிருக பலத்துடன்(Brutal majority) துரதிக்ஷ்டவசமாக ஆட்சியில் அமர்ந்துவிட்டது. காங்கிரசு மீதான பொறுக்க முடியா கோபத்தினை தணித்துக் கொள்ள ஆசை கொண்ட மக்களுக்கு, பாஜக "நாங்களும் சளைத்தவர்கள் அல்ல" என்று நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் அராஜகம் மற்றும் ஊழலின் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

தற்போதைய மத்திய அரசாங்கத்தின் பூதாகரப்படுத்தப்பட்ட போலி வாக்குறுதிகளையும், முடுக்கிவிடப்பட்டுள்ள மறைமுகத் திட்டங்கள் குறித்தும் சிறிது அலச வேண்டியுள்ளது. ஜனநாயகத்தில் துளி அளவேனும் நம்பிக்கையில்லாத ஹிட்லரின் வாரிசுகள் பிரதமர் நாற்காலியை அலங்கரிக்கின்றனர். மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் கொடூர சிந்தாந்தம் அரசை வழி நடத்துகிறது.

கூட்டுப் படுகொலை, அதிகார குவிமையம், சர்வாதிகாரம், வெறுப்புக் கொள்கை, எதெச்சதிகாரம் என எல்லா அம்சங்களையும் செயல்படுத்துவதில் ஹிட்லரையும் மிஞ்சிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் வளர்ச்சி குறித்த திட்டங்களை முன்னெடுத்தார்களோ இல்லையோ.., திணிப்பு குறித்து அவ்வளவு மெனக்கெடுகிறது பாஜக. ஆர்,எஸ்.எஸ் இன் கொள்கைத் திட்டங்களுக்கு எதிரான கருத்துக்கள் ஒடுக்கப்படுவதும், ஆதரிக்கும் கருத்துக்கள் கொண்டாடப்பட்டு கௌரவப்படுத்தப்படுவதும் நடந்தேறி வருகிறது.

இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழலாம். 13 நாட்கள், 13 மாதங்கள், 5 வருடங்கள் என பாஜக ஆட்சி செய்தபோதெல்லாம் தங்களது சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த அல்லக் கைகளை விதையாக விதைத்து, விருட்சத்தின் பயனை தற்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

மரண வியாபாரி, நரபலி நாயகன் என அன்போடு அழைக்கப்பட்ட மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் தலை தூக்குகிறதோ என்ற கேள்வி எழும் அளவிற்கு அதிகாரம் பிரதமர் அலுவலகத்தில் குவிந்து கிடக்கிறது. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவில்லாமல் ஒரு சிறு ஆவணம் கூட நகராது. அனைத்து அமைச்சகங்களும் மோடியின் நேரடிப் பார்வையில் உள்ளன. வெளிநாடுகளுக்கு பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு விமானத்தில் மோடி பறக்கும்போதெல்லாம் மத்திய அமைச்சர்களை விட அம்பானிகளும், அதானிகளுமே அங்கம் வகிக்கிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கூட இடமில்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

அதிகார குவிமையம் இப்படி உறுதியாக சம்மணமிட்டு அமர்ந்திருக்க, ஐ.பி.எல். ஊழலில் தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு கள்ளத்தனமாக பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் "இது எங்கள் காதுகளுக்கு வரவே இல்லை" என்று சவடாலாக பதில் சொல்கிறது பிரதமர் அலுவலகம். மோடியின் அதிகாரக் கரம் எல்லாத் துறைகளை நோக்கியும் நீண்டுகொண்டே வருகிறது. திணிப்பும், முடக்குவதும், அச்சுறுத்துவதும் பிரதான கொள்கையாக அரசு கொண்டிருக்கிறது.

சமஸ்கிருத வாரம், கிருஸ்துமஸ் தின சர்ச்சை, இந்ததி திணிப்பு, மாட்டிறைச்சி தடை, நில அபகரிப்பு மசோதா, மானியக் குறைப்பு, நூறு சதவீத அந்நிய நேரடி முதலீடு, பாதுகாப்பு துறையில் ஃபாரின் கம்பெனி, திட்டக்குழு கலைப்பு, மா நிலங்களுக்கான அதிகாரம் குறைப்பு, யோகா திணிப்பு, கல்வியில் காவிமயம் என தன் நீண்ட கரங்களின் மூலம் ஜனநாயகத்தன்மைக்கு சாவு மணி அடிக்க தீவிரம் காட்டப்படுகிறது.

ஆசாராம் பாபுவின் புகைப்படம் புத்தகத்தில் சேர்க்கப்படுவது, அலிகார் பல்கலை கழகத்தின் நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் இன் அடிவருடிகளை அரசின் போர்வையில் அமரச் செய்த நிகழ்வும் உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் நடந்தேறியது.

மோடி எனும் அரக்கனின் ஆக்டோபஸ் கரங்கள் தற்பொழுது ரிசர்வ் வங்கியின் தலையை வருடிக் கொண்டிருக்கிறது. எந்த கட்சியோ, கொள்கையோ ஆட்சியில் அமர்ந்தாலும் யாருடைய தூண்டுதலுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இயங்கும் அமைப்பே ரிசர்வ் வங்கி. இதன் சுதந்திரத் தன்மையை(Federal System) கேள்விக்குள்ளாக்கும் அறிக்கையை மத்திய நிதியமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. அதில் அரசாங்கத்தின் பணக் கொள்கையை நிர்வகிக்கும் ரிசர்வ் வங்கியின் தார்மீக உரிமையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

"இந்திய நிதித்துறை நடத்தை நெறிகள் (ஐ.எஃப்.சி)" என்ற புதிய வழிமுறைகளை மத்திய நிதியமைச்சகம் திருத்தம் செய்து வரைவு அறிக்கையாக மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பணக் கொள்கை குறித்து விவாதிக்கவும், வட்டி விகிதத்தை நிர்ணயிக்கவும் "பணக் கொள்கை குழு" என்ற ஒன்றை இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.

ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். கிருஸ்ணா தலைமையிலான "நிதித்துறை சட்ட சீர்திருத்த ஆணையம்" முன்னதாகவே நிதித்துறையில் அரசு செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் ஆவணமாக தந்தது. அதில் ரிசர்வ் வங்கியும், அரசும் தீர ஆலோசித்த பிறகே நிதிக் கொள்கை குழுவுக்கு ஏழு உறுப்பினர்களை நியமிக்க வெண்டும். ரிசர்வ் வங்கியின் தரப்பில் நான்கு உறுப்பினர்களும், அரசு தரப்பில் மூன்று உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர். எனினும் இக்குழு பரிந்துரைக்கும் ஆலோசனைகளை ஏற்காமல் நிராகரிக்கும் முழு அதிகாரம்(Veto Power) ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்தது. இக்குழுவின் பெரும்பான்மை கிருஸ்ணா ஆணையத்தின்படி ரிசர்வ் வங்கியிடம்(4/7) இருக்கும்.

தற்பொழுது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சகத்தின் அரசு வரைவு அறிக்கையில் "நிதிக் கொள்கை குழுவில் ரிசர்வ் வங்கி தரப்பில் மூன்று உறுப்பினர்களும், அரசு தரப்பில் நான்கு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள். மேலும் குழுவின் ஆலோசனைகளை முற்றிலுமாக நிராகரிக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கிடையாது" என்கிறது. இதன்படி குழுவின் பெரும்பான்மை பலம் (4/7) அரசிடமே குவிந்துவிடும். இதன் மூலம் இத்தனை காலம் பாதுகாத்து வந்த ரிசர்வ் வங்கியின் சுதந்திர தன்மை(Federal System) கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

ரிசர்வ் வங்கியானது மாறிக் கொண்டே இருக்கும் அரசுகளின் கைப்பாவையாக செயல்படுமெனில் நாட்டின் பொருளாதர வளர்ச்சி சமனிலை காணாது தடுமாற்றம் ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் பொருளாதார கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு ரிசர்வ் வங்கி செயல்பட முடியாது. ஏனெனில் வட்டி விகிதம், மானியக் குறைப்பு, கடன் தள்ளுபடி போன்ற விடயங்களில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைபாடு இருக்கிறது.

கட்சியின் கொள்கைக்குட்பட்ட அமைப்பாக ரிசர்வ் வங்கி செயல்படுமானால் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்ப்பட்டு அரசு ஸ்தம்பித்துவிடும். நரேந்திர மோடி அரசு இத்தகைய மோசமான முயற்சிகளை கையாள்வது ஜனநாயக விரோதப் போக்கு.

ஹிட்லர் சர்வாதிகாரத்தில் சர்வ நம்பிக்கை கொண்டு அதிகாரத்தை தன் கையில் குவித்ததை போன்றே மோடியும் முயற்சிக்கிறார். இந்தியாவின் சுதந்திர கட்டமைப்பை சுக்கு நூறாக்குவதில் ஃபாசிஸ்டுகள் பெருமளவு முன்னேறி வருகின்றனர். ஜனநாயகவதிகள் என்ன செய்கின்றனர்?

அரக்கனின் ஆக்டோபஸ் கரங்களில் ஜனநாயகத்தின் சாட்டையடி விழ வேண்டுமெனில் ஜனநாயகவாதிகள் உறக்கம் கலைக்க வேண்டும்.

நம்பிக்கை அகலாதிருக்கிறது... அரக்கனும் ஃபாசிஸமும் ஒரு நாள் வீழும்..!!!

- அஹ்மது யஹ்யா அய்யாக்ஷ்

Pin It