modi rajnath advani

1995 டிசம்பர் 16ம் நாள் நள்ளிரவு கராச்சியிலிருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு இந்திய வான்வெளி எல்லைக்குள் பறந்து வாரணாசி விமான நிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்பிக் கொள்கிறது. அங்கிருந்து தாய்லாந்து நாட்டின் பிலிப்பிட் நகருக்கு பறந்து செல்கிறது. பிலிப்பிட்டிலிருந்து அடுத்த நாள் காலை சென்னை வரை பறந்துவிட்டு மீண்டும் 17ம்தேதி நள்ளிரவு மேற்கு வங்கம் பறந்து செல்கிறது.

மேற்குவங்கம் புரூலியா நகருக்குமேல் மெதுவாக பறந்து, அந்த குட்டி விமானத்திலிருந்து கையெறி வெடிகுண்டுகள் நிரப்பிய பெட்டிகள், குட்டி ராக்கட் வெடிகுண்டு ஏவுகணைகள், வெடிமருந்து பெட்டிகள், ஏ.கே.47 நவீனரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், திசைகாட்டும் கருவிகள் ஆகியவை பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்டன.

பின்னர் அதே குட்டி விமானம் வந்த வேலை முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் மும்பை நகருக்கருகில், வான்வெளியில் முதன்முறையாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராடாரில் ஒரு புள்ளியாகத் தெரிந்தது. அதிர்ச்சியடைந்த விமானப்படை வீரர்கள் அந்த குட்டி விமானத்தை ஒட்டிவந்த பைலட்டுகளிடம் “சுட்டுவிடுவோம்” என் எச்சரித்து மிரட்டிய பின், அந்த விமானம் மும்பை விமான நிலையத்தின் ஒரு மூலையில் தரையிறக்கப்பட்டது.

நமது விமானப்படை வீரர்களும், விமான நிலைய காவல்படையும் தரையிறங்கிய குட்டி விமானத்தை சுற்றி வளைத்து விமானத்தை ஒட்டிய ஒரு பைலட் மற்றும் அதில் பயணம் செய்த நான்கு பேர்களை கைது செய்தனர்.

பின்பு ரகசியமாக நடைபெற்ற புலன்விசாரணையில் சில பயங்கர தகவல்கள் தெரியவந்தன. விமானத்தை ஒட்டி வந்தது ஒரு பைலட்டல்ல, இருவர். பிடிபட்ட பைலட் இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் பிளீச். லண்டன் உளவுத்துறையில் வேலை செய்து பணி ஒய்வு பெற்றவன். இன்னொரு பைலட், கிம் டேவிஸ். டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவன். மும்பையில் விமானத்தை தரையிறக்கியதும் தப்பியோடிவிட்டானாம். * பிடிபட்ட மீதி நால்வர் ருஷ்யநாட்டின் முன்னாள் லித்வேனிய குடியரசைச் சேர்ந்த லாத்வியர்கள்.

கைது செய்யப்பட்ட ஐவர் மீதும் கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் தேசதுரோக குற்றம், வெடிமருந்துச் சட்டம், இந்திய வான்வெளி எல்லைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பல சட்டப்பிரிவுகளை மீறியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி விசாரணை நடைபெற்றது.

5 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் இவர்களது ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. கொல்கத்தா, அலிப்பூர் சிறையில் அந்த ஐந்து குற்றவாளிகளும் ஆயுள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

குற்றச்செயல் நடந்த காலத்தில் ( 1995) டெல்லியில் நரசிம்மராவ் பிரதமர். மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு ஆட்சி. வெடிமருந்துகளுடன் நவீன துப்பாக்கிகளும் இந்து தீவிரவாத அமைப்பான ஆனந்த மார்கிகள், ஜோதிபாசு ஆட்சிக்கெதிராக மேற்கு வங்கத்தில் கலவரம் விளைவிப்பதற்காக கொண்டு வரப்பட்டவை என்று சிறப்பு நீதிமன்ற விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. பயங்கரமான ஆயுதங்களை விமானத்தில் கொண்டு வந்தவர்கள் - சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

இந்த நாட்டின் ரா, ஜ.பி., சி.பி.ஐ, விமானப்படை உளவுப்பிரிவு, உள்துறை உளவுப்பிரிவு ஆகிய எந்த உளவுப்பிரிவும் இந்த சட்ட விரோதமான தாக்குதலை முன் கூட்டியே கண்டறிய முடியாதது – ஏன் ? நமது வான்வெளிப் பாதுகாப்பு ராடாரில் பதிவாகாமல் 48 மணி நேரம் இந்திய வான்வெளியில் பல்வேறு நகரங்ளுக்கு மேல் அந்த குட்டி விமானம் பறந்தது எப்படி? வாரணாசி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள உதவியது யார்? வெளிநாட்டு குற்றவாளிகள் மற்றும் உள்நாட்டு இந்துத்துவா தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட குற்றச்செயலை பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான நரசிம்மராவ் நாட்டு மக்களிடமும், நாடாளுமன்றத்திலும் சுமார் ஒரு மாதம் காலம் மறைத்தது – ஏன்?

நரசிம்மராவ் அரசின் மீது மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் சுமத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், பாதுகாப்புத்துறை நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் தோழர் இந்திரஜித் குப்தா தனது பதவியை 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் நாளன்று ராஜினாமா செய்தார்.

1998ல் ஜென்டில்மேன் வாஜ்பாயி தலைமையில் பாஜக மற்றும் 23 கட்சிகள் கூட்டணி (தே.ஜ.கூ) ஆட்சியைக் கைப்பற்றியது. எல்.கே அத்வானி உள்துறை அமைச்சர். 2003ல் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் இந்தியா வந்தார். ஜென்டில்மேன் வாஜ்பாய், நெ.2 எல்.கே.அத்வானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எட்டாண்டு காலம் மட்டுமே சிறைவாசம் முடித்திருந்த ஆயுள் தண்டனைக் கைதி பீட்டர் பிளீச்சை விடுதலை செய்ய வைத்து சொந்த நாட்டுக்கு அழைத்துச் சென்றார்.

ரஷ்ய பிரதமர் புட்டின் சும்மா இருப்பாரா? அவரும் வந்தார். பேச்சு வார்த்தை நடத்தினார். ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த லித்வேனியக் குடிமக்கள், குற்றவாளிகள் நால்வரையும் விடுதலை செய்ய வைத்து சொந்த நாட்டுக்கு அழைத்துச் சென்றார்.

மேற்குவங்க மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிபாசு ஆட்சியை கலவரங்கள் மூலம் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வெளிநாட்டு, உள்நாட்டு குற்றவாளிகளை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு எட்டாண்டுகளே சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்த “தேசபக்தர்களின்” அடுத்த வாரிசு, ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்தில் தேசபக்தியைப் பற்றிப் பேசுவது “சாத்தான் வேதம் ஒதுகிறது” என்ற பழமொழியைத் தான் நமக்கு நினைவு படுத்துகிறது.

தேசபக்திக்கு “அக்மார்க்” தரமுத்திரை பெற்ற இந்த தேசபக்தர்கள் தான் 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னரும் சாந்தன், முருகன், பேரளிவாளன் மற்றும் நால்வர் விடுதலையை எதிர்க்கிறார்கள். உச்சநீதிமன்ற ஐவர் பெஞ்ச்சும் 10 நாட்களாக இந்த வாதங்களை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த போலி தேசபக்தர்களின் இரட்டைவேடத்தை, வாய்ச்சொல் வீரத்தை மக்கள் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டிய கடமை நியாயபுத்தி படைத்த நம் அனைருக்கும் உண்டு*

- கே.சுப்ரமணியன், இந்திய வழக்கறிஞர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர்

Pin It