Red Fort Delhi

மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் இடப்பெயர்ச்சி வாழ்க்கை பொது நியதியாக உள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம்பெயர்வதால், மனித இனமே மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியரின் வருகையின் துணை விளைவான தொழிற்புரட்சியினால் ஒரு ஏழை குடியானவன், ஆலைத் தொழிலாளியாகி அல்லல்பட நேர்கிறது.

மக்கள் கிராமபுறங்களிளிருந்து நகர்ப்புறங்களுக்கும், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் புலம்பெயர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பொருள் தேடல், புதிய தொழில் தொடங்கும் வேட்கை, உயர்தர வாழ்க்கை நாட்டம், , தரமான கல்வி பெறும் எண்ணம் முதலானவை முக்கிய அமைகின்றன.

வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக உள்நாட்டுக்குள் புலப்பெயர்வு அங்கீகரிக்கப்பட்ட முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. (S.Kunjamma, 2014. 93).

‘இடப்பெயர்ச்சி சமுதாய மாற்றத்திற்கு வழிகாட்டியாக அமைகின்றன’ என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள், பொருளியல் அறிஞர்கள், சமுதாய சிந்தனையாளர்கள், மனிதவள மேம்பாட்டுத்திட்டத்தினர், அரசியல் ஞானிகள், சட்ட வல்லுனர்கள், திட்டக்குழுவினர் மதிப்பிடுகின்றனர். (பா. சிங்காரவேலன், 2006. 1)

அந்த வகையில், தில்லியில் மக்கள் குடியேற்றம் குறித்து ஆராய்கின்ற பொழுது சில அடிப்படைத் தகவல்கள் கிடைக்கின்றன.

தில்லியில் ஒரு சமயத்தில் இருந்த, இப்பொழுதும் இருக்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களின் முன்னோர்கள் முகலாய சக்கரவர்த்திகளின் அழைப்பின் பேரில் இங்கு வந்தவர்கள். நாட்டின் வடமேற்குப் பக்கத்திலுள்ள பாழ் நிலங்களையும், கற்பாங்கான நிலங்களையும் விடுத்து, பொருள் தேடுவதற்காகத் தில்லி வந்து சேர்ந்தவர்கள். இவர்களுடைய முன்னோர்கள் பலுசிஸ்தான், புகாரா, துருக்கிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து தில்லிக்கு வந்தவர்கள். தில்லி ஒரு சமயம் புரோட்டா வியாபாரிகள், அல்வா வியாபாரிகள், ஜிகினா வியாபாரிகள், உறைப்புத் தின்பண்டம் விற்பவர்கள், டாங்கா வண்டிக்காரர்கள் ஆகியோருக்குப் பிரசித்தி பெற்ற இடமாக இருந்தது. இவர்களில் பெரும்பான்மையோர் இப்பொழுது இல்லை. (ராஜேந்திரலால் ஹாண்டா. 1968: 21 & 174).

 இதனடிப்படையில், தில்லி முன்பு வியாபாரிகளின் பேட்டையாக இருந்தது, இப்பொழுது அதிகார வர்க்கத்தின் கோட்டையாக மாறியுள்ளது என்று கூறலாம்.

கி.மு. 6௦௦ -ஆம் நூற்றாண்டிலிருந்து அறிவியல் வல்லுனர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லீம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்கு பஞ்சாப், சிந்து மாகாணங்களிலிருந்து பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடிபெயர்ந்தனர் என்று இந்திய வரலாறு குறிப்பிடுகிறது.

தில்லி நகரத்தைத் தலைநகர் தில்லி என்று அடைபோட்டு அழைப்பதுண்டு. ஆனால், உலக அளவிலும், இந்திய அளவிலும் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் இத்தலைநகரான தில்லி தலைமையிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. (Hindustan Times, 29 January, 2014). சர்வதேச அளவில் தில்லிக்கு மதிப்புக் கூடியிருக்கும் அதே வேளையில் தில்லியில் காற்று மாசும் அதிகரித்துள்ளது.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நகரம், காற்று மாசு நிறைந்த நகரம், சுற்றுச் சூழல் சீர்கேடான நகரம், போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம், அரசியல் அதிகாரம் மிக்க நகரம், கலவரங்கள் மிக்க நகரம், பணப்புழக்கம் அதிகம் உள்ள நகரம், வணிக நகரம், குடியேறி வாழத் தகுதியான நகரம்- தகுதியற்ற நகரம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகின்ற நகரம், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை நல்குகின்ற நகரம், சர்வதேச நகரம், சுற்றுலா நகரம் எனத் தில்லிக்குப் பல முகங்கள் உண்டு.

பார்லிமெண்ட் ஹவுஸ், ராஷ்டிரபதி பவன், நார்த் பிளாக், சவுத் பிளாக், இந்தியா கேட், ராஜ் பாத், தீன் மூர்த்தி, நார்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சாணக்கியபுரி, லோதி கார்டன் முதலான பகுதிகளை உள்ளடிக்கிய புது தில்லியைப் பார்க்கும் போது ஏதோ லண்டன் மாநகரில் இருப்பது போல் தோன்றும். அதேசமயம் பழைய தில்லியைப் பார்த்து முகம் சுழிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தோற்றத்தைக் கொண்டிருக்கும் நகரம் தில்லி.

தில்லி என்பது பெருநகரம், தலைநகரம், சர்வதேச நகரம் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும், அது தனக்குள் பல கிராமங்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்பது உண்மை. தில்லிவாழ் ஒட்டுமொத்த மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு இக்கிராமங்களும், அண்டை மாநிலங்களிலுள்ள கிராமங்களும் இங்கு வாழும் மக்களும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றன.

புராதான நகரங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட நகரங்கள், இப்பகுதியில் ஏற்கனவே இருந்த கிராமங்கள், புறநகரப் பகுதிகள் என எல்லாம் கலந்த நிலப்பகுதிதான் தில்லி. இந்திய மாநிலத்தவர் மட்டுமல்லாது அண்டை நாட்டார், அயல்நாட்டார் எனப் பலதரப்பட்ட மக்கள் வாழும் இடம்தான் தில்லி. தில்லியில் வசதி படைத்தவர்கள், நடுத்தர மக்கள், மேட்டுக்குடியினர், தலித்துகள், ஏழைகள், குடிசை வாசிகள், தெருவோரக் குழந்தைகள், வீடில்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள்மற்றும்மூன்றாம் பாலினத்தவர் என அனைத்துத் தரப்பினரும் வாழ்கின்றனர்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிலிருந்தே, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பல்வேறு கரணங்களுக்காக மக்கள் டில்லியில் குடியேறத் தொடங்கியிருக்கின்றனர். தில்லியில் தலைநகரம் வடிவமைக்கப்பட்டு மத்திய தலைமைச் செயலகம் (Central Secretariat) கட்டப்பட்டுச் செயல்படத் தொடங்கிய காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பாகச் சென்னை மற்றும் வங்காளப் பெருமாகாணங்களிலிருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு அலுவலகங்களில் பணியமர்த்தப்பட்டனர். தலைமைச் செயலகப் பணிக்காக (Secretarial work) வந்த இவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலம் கற்ற மேட்டுக்குடியினர்களே!. பிரிட்டிஷ் அரசாங்கத்தை நடத்துவதற்குத் தேவையான மனித ஆற்றல்(Manpower) இவர்களால் இட்டு நிரப்பப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான் கல்வி அறிவு பெற்ற உயர் சாதிக்காரர்களின் தில்லி நோக்கிய நகர்வு அதிகரித்தது என்று வரலாற்று மற்றும் சமூகவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

பின்னர் நாட்டின் வெவ்வேறு மாகாணங்களிலிருந்தும் பல்வேறு காரணங்களுக்காகப் பலதரப்பட்ட மக்கள் தில்லியில் குடியேறியுள்ளனர். இந்தியாவிலுள்ள மற்ற பெருநகரங்களைக்காட்டிலும் தலைநகர் தில்லியில் குடியேறுவதைத்தான் மிகுதியான மக்கள் விரும்புவதாக மனிதக் குடியமர்விற்கான தேசிய நிறுவனம் கணக்கிட்டுள்ளது. குடியேற்றவாசிகளை அதிகம் ஏற்றுக்கொள்கிற நகரமாகவும் தில்லி திகழ்கிறது. (S.Kunjamma, 2014. 97-98).

உத்திரப்பிரதேசம் மற்றும் பிகாரிலிருந்துதான் மிகுதியான மக்கள் தில்லிக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். (Delhi HumanDevelopment Report- 2013).

இந்த அடிப்படையில், தில்லியில் தமிழர்களின் புலப்பெயர்வு குறித்தும் சில அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டியது இங்கு அவசியமாகிறது. தில்லியில் தமிழர்கள் புலம்பெயர்ந்ததற்கான வரலாறு மற்றும் காரணங்களை ஆராயும்போது சில உண்மைகள் வெளிப்படுகின்றன.

தில்லிகி ராஜ் அயினா தல்லிகி பிட்ட என்று தெலுங்கிலும் , தில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்று தமிழிலும் பழமொழி உண்டு. இவையிரண்டும் தில்லிதான் உயர்ந்தது, அதிகாரமிக்கது, பெருமைக்குரியது என்பதை உணர்த்துகின்றன. வடநாடு என்றால் தில்லி என்று தமிழர்கள் மத்தியில் ஒரு மனப்பதிவு இருக்கிறது. நாட்டின் மேல்ப்பகுதியில் உள்ள உயர்ந்ததும், அதிகாரமிக்கதும், பெருமைக்குரியதுமான தில்லியைச் சுற்றிப் பார்க்கவும் சூழ்நிலை சாதகமாக அமைந்தால் குடியேறி வாழவும் எல்லோருக்கும் ஆசை ஏற்படுவது இயற்கைதான்.

தமிழர்கள் புலப்பெயர்வு: இந்தியாவுக்கு வெளியே

தமிழர்கள் தமிழகத்திலிருந்துஇந்தியாவுக்கு வெளியே பிற இடங்களுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்ததற்கான நீண்ட வரலாறு உள்ளது.

கிறிஸ்து பிறப்பதற்கு பன்நூற்றாண்டுண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரீசு, உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். தென்னகத்துக்கும் சுமேரியாவிற்கும் இடையே கி.மு. நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பே வணிகம் நடைபெற்றிருக்கிறது. தமிழர்கள் மத்தியதரைக்கடல் நாடுகளோடு வணிகம் நடத்தியிருக்கின்றனர். மேலை நாட்டோடு நடத்திய வணிகம் குன்றிய பிறகு தமிழர் கீழை நாடுகளுடன் வணிகத் தொடர்பை வளர்த்து வந்தனர். தென்னிந்தியாவுக்கும் வடநாட்டுக்கும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய அளவில் வணிகம் நடைபெற்றிருக்கிறது.(அ.தட்சிணாமூர்த்தி, 1994. 95-101).

சங்க காலம் முதல் வணிகத்தை மையமிட்டு வெளிநாட்டுத் தொடர்பு ஏற்பட்டது. சோழர் காலத்துக்குப் பின் ஆங்கிலேயர் காலம் வரை சாதிக் கொடுமைகள், சமுதாயத் துன்புறுத்தல்கள், வறுமை, பட்டினி, பஞ்சம், கட்டாயத் தண்டங்கள், வட்டிக் கடைக்காரர்களின் கொடுமை, நில அளவையும், வரித் திட்டங்களும் உருவாக்கிய குழப்பங்கள், நீதி மன்ற வழக்குகள் முதலானவை மக்கள் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதற்கான முக்கிய காரணிகளாக அமைந்தன. (பா. சிங்காரவேலன், 2006. 15)

 பழங்காலத் தமிழர்கள் கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா தேசம்), அருமணவன் (Ramanna), தக்கோலம் (Takkola), கிடாரம் (கடாரம் ), சாவகம் (கிழக்கிந்தியத்தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வாணிகஞ் செய்திருக்கின்றனர். தமிழ் வாணிகர் கி.மு. இரண்டாம் நுற்றாண்டில் இலங்கைக்குச் சென்று அங்கெ அனுராதபுரத்தில் தங்கி வாணிபம் செய்திருக்கின்றனர் என்பது, சமீப காலத்தில் அந்நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டினால் அறியப்படுகிறது. (மயிலை சீனி. வேங்கடசாமி, 1995: 56 )

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இந்தியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் வடக்கு இலங்கைக்கு வணிகர்களாகவும், சரக்குக் கப்பல் பணியாளர்களாகவும், குதிரை ஏற்றுமதியாளர்களாகவும் புலம்பெயர்ந்துள்ளனர். பிந்தைய நூற்றாண்டுகளில் தமிழர்கள் குழுக்களாக தெற்கு ஆசிய, தென்கிழக்கு ஆசிய, மேற்கு ஆசிய, மற்றும் சீன நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். தமிழர்கள் தங்களது சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்கும், வணிக மையங்களை நிறுவுவதற்குமே முதலில் அயல்நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். (AnandInbanathan, 1997. 4).

கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்று தெற்குத் தாய்லாந்தில் கிடைத்திருக்கிறது. தாய்லாந்து நாட்டு முடிசூட்டு விழாவில் தமிழ்த் திருப்பாவையும், திருவெம்பாவையும் ஓதப்படுகிறது. இவையிரண்டும் மிகப்பழங்காலந்தொட்டே தமிழர்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றிருந்தனர் என்பதைக் காட்டுகிறது. வட சீனாவிலுள்ள தமிழ்க் கல்வெட்டும், ஜப்பான் மொழியிலுள்ள 3௦௦-க்கும் மேற்பட்ட சொற்கள் தமிழ்ச் சொற்களோடு ஒத்திருப்பதும் தமிழர் சீன மற்றும் ஜப்பான் நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பைக் காட்டுகிறது. மொரிஷியஸ் நாட்டில் தமிழர்களின் முன்னோர்கள் 250 ஆண்டுகளுக்கு முன்பே அங்குக் குடியேறி, தங்களது உழைப்பால் அந்நாட்டினைக் கரும்பு விளையும் பூமியாக்கியுள்ளனர். மொரிஷியஸ் மட்டுமல்ல ரீயூனியன், தென்னாப்பிரிக்கா, சீஷெல்ஷ், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிஜி, இந்தோனேசியா, போன்ற இன்னும் எத்தனையோ நாடுகளில் குடியேறியுள்ளனர். (பா. சிங்காரவேலன், 2006. 14)

தென்னிந்தியாவில் வாழ்ந்த பௌத்தர்கள் இலங்கையில் வாழ்ந்த பௌத்தர்களோடு எப்பொழுதும் தொடர்பு கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஈழத்துப் பூதனார் என்னும் பெயர் கொண்ட ஈழத்துத் தமிழ்ப் புலவர் தமிழ்ச் சங்கத்துள் ஒருவராகத் திகழ்ந்துள்ளார்.சிங்கன் என்ற தமிழ் அரசன் தொலை கிழக்கு நாடுகளில் ஆட்சி செய்ததாக சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிடுகின்றார். தாய்லாந்தில் உள்ள பிராமணர்கள் தாங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பாங்காக்கிற்கு வந்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். (தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், 1974: 63-72)

பதினெட்டாம் நுற்றாண்டில் நீக்ரோ அடிமைகள் கப்பலேற்றப்பட்டு , அமெரிக்காவிற்குச் சென்றதைப்போல , தமிழ் மக்களும் கூலி வேலைக்காக குறிப்பாக தோட்டங்களில் பணியாற்ற இலங்கை, மலாயா ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். ( மிக்கேல்ஸ்டேன்சன், 2013: III)

வணிகர்கள் என அறியப்படும் செட்டிநாட்டுத் தமிழர்கள் பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து தங்கள் வணிகத்தை நிலைநாட்டியுள்ளனர். 19-ஆம் நுற்றாண்டின் முற்பாதியில் பெருவாரியான தமிழர்கள் மேற்கு இந்தியத் தீவுகள், பிஜி, மலாயா, தென் ஆபிரிக்கா, மொரிஷியஸ் மற்றும் இலங்கைக்குச் சென்று மரம் நடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.(AnandInbanathan, 1997: 4-5)

எனவே, நெடுனாட்கட்கு முன்பே தமிழர்கள் மேற்கு நாடுகளோடும், கிழக்கு நாடுகளோடும், தொடர்பு கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது.

வடநாட்டில் தமிழர்கள்

தமிழர்கள் இந்தியாவுக்குள்ளும் பல்வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்திருக்கின்றனர். தமிழகத்தின் பல இனங்களைச் சேர்ந்த தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக புனே, டெல்லி, பாம்பே முதலான பெருநகரங்களுக்கும், வடநாட்டுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர்.

தென்னிந்தியாவுக்கும் வடநாட்டுக்கும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய அளவில் வணிகம் நடைபெற்றிருக்கிறது. (அ.தட்சிணாமூர்த்தி, 1994: 100 ).

பழங்காலத் தமிழர் தரை வழியாகவும் கடல்வழியாகவும் பாரத நாடு முழுவதும் சென்று வாணிகம் செய்தார்கள். உஞ்சை (உச்சயினி ), கலிங்கப்பட்டினம், காசி (வாரணாசி ), பாடலி (பாடலிபுரம் ), முதலான இடங்களிலும் வாணிகம் செய்திருக்கிறார்கள்.(மயிலை சீனி. வேங்கடசாமி, 1995: 56 )

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நெறியாளரான ஸ்ரீ குமரகுருபரர் வடநாடு வரை வந்து, தமது கல்வி அறிவினாலும், தவப்பண்பினாலும் தில்லி பாதுஷாவும், ஔரங்கசீப்பின் மூத்த சகோதரருமான தாரா ஷீகோ (DaraShikoh) என்பவரிடம் இந்துஸ்தானியில் பேசி அவரது உள்ளத்தைக் கவர்ந்துள்ளார். தமிழர்கள் வடநாட்டோடு கொண்ட முதல் தொடர்பு, புலப்பெயர்வு குமரகுருபரரிலிருந்து தொடங்குகிறது எனலாம்.

தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து, வேலை தேடி ஒரு கூட்டமும், விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் நலிவு காரணமாகப் பிழைப்பு தேடி ஒரு கூட்டமும், பொருளாதார நெருக்கடி காரணமாகத் தலித்துகள் குடும்பம் குடும்பமாகவும் டில்லியில் குடியேறியிருக்கின்றனர். தமிழ் நாட்டில் அறுபதுகளில், நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களும் பிராமணர்களின் புலப்பெயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

தமிழகத்தில் மழை பொய்த்துப் பஞ்சமும், வறட்சியும் ஏற்பட்ட காலங்களில், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூட்டம் கூட்டமாகத் தில்லிக்குக் குடிபெயர்ந்துள்ளனர். நெருக்கடிநிலை என்னும் எமர்ஜென்சி ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து தனி ரயில் மூலம் பெருவாரியான தமிழர்கள் தில்லிக்குப் புலம்பெயர்ந்ததாகச் செய்திகள் உண்டு. சொந்த ஊரிலிருந்து தில்லிக்கு ஐந்து நாட்கள் கரி வண்டியில் பிரயாணித்துப் புலம்பெயர்ந்த அனுபவத்தை சேலம் பகுதியைச் சேர்ந்தவரும் மூத்த தில்லிவாசியுமான திரு. ஆர். ரெங்கசாமி (ஹரிநகர் ) பகிர்ந்துகொள்கிறார். தில்லிவாழ் தமிழர்களில் பலர் ரயிலில் இலவசமாகப் பயணித்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில் நோக்கும்போது, நாற்பதுகளுக்கும் அறுபதுகளுக்கும் இடையில்தான் தமிழர்கள் அதிகமாகத் தில்லியில் குடியேறியிருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது.

எனவே, முதலில் அரசாங்க வேலை நிமித்தமாகவும், பின்னர் பிழைப்புக்காகவும் தமிழர்கள் டில்லிக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அதாவது, படித்த நடுத்தர வர்க்கத்தினர் முதலிலும், படிப்பறிவில்லாத பாமரர்கள் பின்னரும் புலம்பெயர்ந்துள்ளனர் எனலாம். முதலில் வந்தவர்கள்வேலை நிமித்தமாக விருப்பத்தின் பேரிலும் பின்னர் வந்தவர்கள் பிழைப்புக்கு வேறு வழியின்றிக் கட்டாயத்தின் பேரிலும் தில்லியில் குடியேறி வசிக்கின்றனர்.

19-ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீனக் கல்விமுறை அது பெற்றுத்தந்த அரசாங்க உத்தியோகம் இவற்றைப் பெறுவதில் முந்திக்கொண்ட பிராமணர்கள் டெல்லி வந்த தமிழர்களில் முன்னோடிகள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அக்கிரகாரங்களைக் காலிசெய்துவிட்டு டெல்லி, பம்பாய், கல்கத்தா என இவர்கள் குடிபெயர்ந்தார்கள். ஒருகாலத்தில் இவர்கள் மத்திய அரசின் தலமைச் செயலகத்தில் பெரிய பெரிய பதவிகளில் இருந்தார்கள். இரண்டாம் உலகப்போரை அடுத்த காலகட்டத்தில், அதாவது நாற்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம், மற்றும் கைத்தறித் தொழிலின் நசிவு காரணமாக , அத்தொழிலின் மையமாக விளங்கிய சேலம், சின்னாளபட்டி முதலிய ஊர்களிலிருந்து பிழைப்புத்தேடி டெல்லிக்கு வந்தவர்கள் இரண்டாவது வகையினர். இவர்கள் படிப்பறிவற்றவர்கள். சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் பின்தங்கியவர்கள். டெல்லியில் குடிசைகளில், கிராமங்களின் ஒதுக்குப்புறமாக உள்ள மீழ்குடியேற்றப் பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களில், ஆண்கள் கூலி வேலைக்குப் போகின்றனர்; பெண்கள் பற்றுப் பாத்திரம் தேய்க்கப் போகிறார்கள். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிராமணர் அல்லாத பிற சாதித் தமிழர்கள் மத்திய தேர்வாணைக் குழு நடத்திய பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று கணிசமான அளவில் டெல்லி வந்தனர். இவர்கள் மூன்றாவது வகையினர்.(அ. மாரியப்பன், 2014: VII-VIII)

யமுனை நதிக்கரையை அடுத்துள்ள தில்லி புறநகர்ப் பகுதியான திரிவேணிபுரியில் 1975-இல் அதிகமான மீழ்குடியேற்றக் காலனிகள் (Resettlement Colonies) உருவாக்கப்பட்டன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் வட மாநிலங்கலிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்- இந்தி பேசும் தில்லிவாசிகளில் ஏழைகள். இக்காலனியில் தமிழர்கள் மிகக் குறைவாகவே வசிக்கின்றனர். தமிழர் பகுதி ஒரு குட்டித் தீவாகக் காணப்படுகிறது. (AnandInbanathan, 1988.114-115).

எனவே படித்த மேல்தட்டு மக்கள் தில்லியில் குடியேறிய சூழல் வேறு, ஏழைகள் புலம்பெயர்ந்த உண்மை வரலாறு வேறு.

தில்லிக் கல்விக் கழக மேனிலைப்பள்ளியில் பணிபுரிந்துவரும் ஆசிரியை மோ. யுவராணி தமது கட்டுரை ஒன்றில் (தில்லிக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள்-216-217) பிழைப்புக்காகத் தில்லிக்குப் புலம்பெயர்ந்த பாமரத் தமிழர்களைப் பற்றியும், அவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள் மற்றும் இன்றைய வாழ்வியல் முறைகளையும் பதிவு செய்துள்ளார்.

தில்லியிலுள்ள தக்ஷிண்புரி பகுதியில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் பிழைப்பதற்கு வழியின்றிப் பஞ்சம், பட்டினி காரணமாகப் பிழைப்பு தேடி சேலத்திலிருந்து தில்லிக்கு வந்தவர்கள் எனக் கூறுகிறார்.

“தாய்ப்பால் இன்றித் தவித்த போது

       புட்டிப்பால் தந்த புனிதத்தாய் தில்லி”

என்று நன்றிப் பெருக்கோடு அப்பகுதி மக்கள் கூறுவதாகக் குறிப்பிடுகின்றார்.

சேலம் பகுதிகளிலிருந்து தில்லிக்குப் புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் புலப்பெயர்விற்குப் பொருளாதார நெருக்கடியே முக்கிய காரணம் என்கின்றனர். தமிழ்நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த வறட்சி, பஞ்சம், பட்டினி ஆகியவைகளும் தமிழர்களின் புலப்பெயர்விற்குக் காரணிகளாக அமைந்தன. விசைத்தறி அறிமுகத்தால், கைத்தறி நெசவுத் தொழில் நசிந்ததும் தமிழர்களின் தில்லிப் புலப்பெயர்விற்கு ஒரு காரணம். எனினும், சாதிய ஒடுக்குமுறை காரணமாகத் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்குப் புலம்பெயரவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. (AnandInbanathan, 1988.117).

1940 களின் இறுதியிலும்1950 களின் தொடக்கத்திலும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் பஞ்சம் காரணமாக அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த கிராமங்களை விட்டுத் தில்லிக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.

பதினெட்டாம் நுற்றாண்டில் நிலவிய பஞ்சங்களும், பட்டினிச் சாவுகளும், பணப்பயிர் உற்பத்தியும், கடும் வேளாண் வரிகளும், சாதிக்கொடுமைகளும், சமுதாயத் துன்புறுத்தல்களும் தமிழர்கள் இலங்கை, மலேயா ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தமைக்கான முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. (மிக்கேல்ஸ்டேன்சன், 2013: III) என்ற கருத்தும் இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது.

 எனவே, கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் பல்வேறு சூழல்கள் மற்றும் காரணங்களுக்காகத் தில்லிக்குப் புலம்பெயர்ந்திருக்கின்றனர் என்று அறிய முடிகிறது.

அவ்வாறு குடியேறிய தமிழர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது, டில்லியில் சுமார் பதிமூன்று லட்சம் தமிழர்கள் வாழ்வதாக 2013 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பதிவு செய்கின்றது.

தில்லியிலுள்ள கரோல் பாக் , பகாட் கஞ்ச், சக்குர்பூர், ஆஸ்ரம், ஜல் விகார், கால்காஜி, கோவிந்த்புரி, கல்யாண்புரி, திர்லோக்பூரி, இந்தர்புரி, தக்ஷிண்புரி, திரிவேணிபுரி, மயூர்விகார், பப்பன்கிலா, தமிழர் என்க்லேவ், ஜனக்புரி, முனீர்க்கா, ஆர்.கே.புரம் முதலிய பகுதிகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்து வருகின்றனர்.

புதிய துணை நகரங்களான (Sub-cities) காஜியாபாத், நொய்டா, குர்கான், ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளிலும் தமிழர்கள் வாழத்தலைப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினர் தில்லி மாநில அரசு மற்றும் மத்திய அரசு அலுவகங்களில் தங்களின் கல்வித் தகுதிகளுக்கேற்ப, IAS, IPS போன்ற உயர்பதவிகளும் , நடுத்தர மற்றும் நான்காம்தர வேலைகளும் செய்துவருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த முதல் தலைமுறையினர் தற்போது கௌரவமான பணிகளில் சேர்ந்துள்ளனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், கணினி நிபுணர்களாகவும் திகழ்கின்றனர். தமிழர்கள் தமிழக சிறப்புக் காவல்ப் படைமூலமாகத் தில்லிக்குப் புலம்பெயர்ந்து தில்லி திஹார் சிறை வளாகத்தில் தங்கிக் காவல் சேவை செய்து வருகின்றனர்.

கல்வி அறிவு பெறாத பாமர மக்களில் பெண்கள் வீட்டு வேலைகளும் (சமையல் செய்வது, பத்துப்பாத்திரம் தேய்ப்பது, துணிதுவைப்பது) , ஆண்கள் கூலி வேலைகளும் (வீட்டுக்காவல் பணி, தோட்ட வேலைகள், கார் துடைத்தல், கணக்கர் பணி, சமையல் செய்தல்) செய்துவருகின்றனர். இவர்கள் தில்லி புறநகர்ப் பகுதிகளில் உள்ள ரயில்ப் பாதைகளின் ஓரங்களில் குடிசைகள் அமைத்தும் ஜுக்கிகள் எனப்படும் சேரிகளிலும் வாழ்கின்றனர். ஓரளவு கல்வி அறிவு பெற்ற தமிழர்கள் சொந்தமாகச் சிறுதொழில்கள் நடத்தியும், சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்தும் வருகின்றனர். இன்னும் சிலர் தொழில் முனைவோர்களாகவும், ஹோட்டல்களில் தொழிலாளிகளாகவும், சிறுதொழில் அதிபர்களாகவும் உள்ளனர்.

கரோல்பாக் மற்றும் INA-விலுள்ள தமிழ்நாடு ஸ்டோர் , முனீர்க்காவிலுள்ள ரமாஸ்டோர் மற்றும் திருப்பதி ஸ்டோர், குர்கானிலுள்ள சவுத் இந்தியன் ஸ்டோர் மற்றும் பாலாஜி ஸ்டோர், பொசங்கிபூரிலுள்ள தமிழ்க் கடைகள் தில்லிவாழ்த் தமிழர்களுக்கு மளிகைச் சாமான்களை வழங்கிவருகின்றன.

தில்லியிலுள்ள சரவண பவன், அடையார் ஆனந்த பவன், கரோல்பாக் அண்ணா மெஸ், மயூர் விகார் மோகன் கேட்டரிங் முதலான உணவகங்கள் தில்லித் தமிழர்களுக்குத் தமிழ் உணவுகளை வழங்குகின்றன. தமிழ் உணவுகள் கிடைக்கக் கூடிய மேலும் பல உணவகங்களும் தில்லியில் உள்ளன.

தில்லிப் பல்கலைக்கழகம் மற்றும் JNU மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் கலை மற்றும் பொங்கல் விழாக்கள் தமிழர்களின் கலை, பண்பாட்டு உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றன. தில்லியிலுள்ள தமிழ் நாடு இல்லம், தில்லித் தமிழ்ச் சங்கம், தேசியத் தலைநகர் வலயத்திலுள்ள குர்கான் தமிழ்ச் சங்கம் மற்றும் பல கலை பண்பாட்டு அமைப்புகளும் தில்லிவாழ் தமிழர்களுக்காகப் பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றன.

தில்லித் தமிழ்க் கல்விக்கழகம் (DTEA)என்னும் அமைப்பு தில்லிவாழ் தமிழர்களுக்காக ஏழு பள்ளிகள் மூலம் கல்விச் சேவை புரிந்துவருவதுடன் தில்லியில் மாலைநேரக் கல்லூரி ஒன்றையும் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தில்லியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தில்லிப் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளான திருவேங்கடவன் கல்லுரி, தயாள்சிங் கல்லூரி முதலான கல்வி நிறுவனங்களில் தமிழர்கள் இளநிலைக் கல்வி, முதுநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி கற்க வாய்ப்பு உள்ளது.

தமிழ்ப் பிராமணர்கள் அமைப்பு நடத்தும் பாலாஜி மந்திர், உத்திர சுவாமிமலை என்றழைக்கப்படும் மலைமந்திர், தேவி கருமாரியம்மன், முத்துமாரியம்மன், ஆதிபராசக்தி முதலான தமிழர் வழ்பாட்டுத் தலங்களும் டில்லியில் உள்ளன.

ஆக, தமிழர்களில், குடியரசுத் தலைவர் முதல் தோட்டக்காரர் வரை தில்லியில் குடியேறி வாழ்ந்துள்ளனர் என்றால் அது மிகையில்லை.

டில்லியில் குடியேறிச் சிறப்பாக வாழ்ந்தவர்களும் உண்டு அதேசமயம் வீழ்ந்தவர்களும் உண்டு என்று சொல்லலாம். தில்லியைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகியுள்ளனர். டில்லியில் சாதிக்க நினைத்தவர்கள் சோதனைக்கு உட்பட்டிருக்கிறார்கள்.

 ஒரு காலத்தில் டில்லியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டியவர் இன்று இந்தியா முழுக்க டிராவல்ஸ் நடத்துகிறார்.

“முதல் தடவையாக 1955-ல் சென்னையிலிருந்து ஜி.டி. எக்ஸ்பிரஸில் என் அக்கா, அத்தானுடன் புதிதாகக் கட்டியிருந்த புது தில்லி ஸ்டேஷனில் இறங்கியபோது, பதினெட்டு வயதான எனக்குப் பிரமிப்பாக இருந்தது. புதிய மனிதர்கள், மொழி, உணவுப்பழக்கவழகங்கள் எல்லாமே வேறாக இருந்தது. வந்த புதிதில் ‘எப்படி நாம் நமது அரைகுறை ஆங்கிலத்தையும், கால்குரை ஹிந்தியையும் வைத்துக்கொண்டு இங்கே குப்பை கொட்ட முடியும்?.... திரும்ப ஊருக்கே ஓடிவிடலாமா? என்று பலமுறை நினைத்ததுண்டு!”-இது நாடக, திரைப்பட நடிகர் பாரதி மணியின் பதிவு.

”பிறந்தது கிருஷ்ணகிரி. பிறகு டெல்லி. எதையோ கிழிக்கலாம் என்று விருப்ப ஓய்வு எடுத்துத் தானே கிழிந்து அலையும் ஜீவன்”என்று தில்லிவாழ் தமிழரான யதார்த்தா பென்னேஸ்வரன் தன்னைத்தானே நொந்து தமது வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

“வீடு –வேலை இந்த இரண்டைத் தவிர வேறு போக்கிடமின்றித் தில்லியில் நடைபிணமாகத் திரிகிறேன்”– இது தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவி.இராஜகோபாலின் மன வெளிப்பாடு.

கடலில் சென்று கலக்காத நதி யமுனை என்று சொல்வார்கள். டில்லியில் வாழ்ந்தவர்களில், இந்த யமுனை நதித் தண்ணீர் குடித்துத் தாகம் மட்டுமே தீர்த்தவர்களும் உண்டு, அதில் படகுவிட்டு மகிழ்ந்தவர்களும் உண்டு. இந்த யமுனை நீரோட்டத்தின் ஏற்ற இறக்கத்தோடு ஒத்திசைந்து நீந்திக் கரைசேர்ந்தவர்களும் உண்டு. யமுனையின் ஆழம் தெரியாமல் காலைவிட்டு மூழ்கிப்போனவர்கள் பலபேர். தில்லி வாழ்க்கையும் ஒருவகையில் அப்படித்தான்.

அந்தவகையில் , ஒருபுறம் தில்லி அனைவரும் மனதார விரும்பும் நகரமாக, மக்கள் வாழத் தகுதியுடைய, பெருமைக்குரிய நகரமாகத் திகழ்கிறது. மறுபுறம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தில்லிக்குப் புலம்பெயர்ந்தவர்கள் புது இடம், மொழி, கலாச்சாரம், சீதோஷ்ணம் (கடுங்குளிர், அதிக வெப்பம்) போன்றவற்றோடு ஈடுகொடுக்கமுடியாமல் ஏற்பட்ட திணறல்கள், பாதுகாப்பின்மை, மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகிய காரணங்களால் டில்லியில் வாழ்ந்தது போதுமடா சாமீ! என்று சொல்லுமளவிற்கு பலரை விரட்டிய பெருமையும் தில்லிக்கு உண்டு!.

தமிழகத்திலிருந்து பணிநிமித்தமாகத் தில்லிக்கு வந்தவர்களில் மாற்றலாகிச் சொந்த மாநிலத்திற்குச் சென்றவர்கள் மிகச் சிலரே. ‘வடக்கே வந்தவன் தெற்கே திரும்பிப்போனதாகச் சரித்திரமே இல்லை’ என்று சொல்வார் மூத்த தில்லிவாசியும்பேராசிரியருமான அ.மாரியப்பன். டில்லியில் வாழும் வாய்ப்பைப் பயன்படுத்தி மேல்ப்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக லண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குப் பயணித்தவர் பலபேர். தில்லிக்குச் சென்றால் IAS, IPS தேர்வுகளில் வெற்றிபெறலாம் என்ற உயரிய எண்ணத்தோடு தலைநகர் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டில்லியில் தமிழர்களின் குடியேற்றம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழர்களின் தில்லி குடியேற்ற வரலாறு விரிவாக ஆராயப்படவேண்டும், பதிவு செய்யப்பட வேண்டும்.

பயன்பட்ட நூல்கள்

  1. சிங்காரவேலன், பா. 2006. இடப்பெயற்சிக் கதைகள், சென்னை: காவ்யா.
  2. தட்சிணாமூர்த்தி.அ. 1994. தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: யாழ் வெளியீடு.
  3. மாரியப்பன், அ. 2014, ச. சீனிவாசன் (தொ. ஆ.) ‘தில்லிச் சிறுகதைகள்’ நூலுக்கு எழுதிய வாழ்த்துரை, சென்னை: காவ்யா.
  4. மீனாட்சிசுதரனார், தெ.பொ. 1974. தமிழும் பிற பண்பாடும், சென்னை:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் .
  5. ராஜேந்திரலால் ஹாண்டா, (தமிழில் நாடோடி) 1968, தில்லியில் பத்து ஆண்டுகள், சென்னை: காமதேனு பப்ளிகேசன்ஸ்.
  6. வேங்கடசாமி, மயிலை சீனி. 1995. பழங்காலத் தமிழர் வாணிகம், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
  7. ஸ்டேன்சன் மிக்கேல், (தமிழில் வேட்டை எஸ். கண்ணன் ) 2013. புலம்பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா , சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்.

8. AnandInbanathan, 1988, ‘Migration and Adaptation: Lower Caste Tamils in a Delhi Resettlement Colony’ in Sociological Bulletin- Journal of the Indian Sociological Society, Vol.37, Nos.1&2, March-September, 1988.

  1. AnandInbanathan, 1997, Migration and Adaptation: Tamils in Delhi, Delhi: Kalinka Publications.
  2. IrudayaRajan, S. 2010. Governance and Labour Migration, India Migration Report, New Delhi: Rotledge.
  3. Kasturi, Leela. 1981. ‘Poverty, Migration and Women’s Status’, ICSSR Research Abstracts Quarterly, X (1&2), January-June1981.
  4. Kunjamma, S. 2014, Malayalee Diaspora in Delhi: A Case Study, in International Journal of Dravidian Linguistics, Vol.43 No.1 January 2014: PP-92-115.
  5. Delhi Human Development Report- 2013
  6. Hindustan Times, 29 January, 2014
  7. http://delhi.gov.in/wps/wom/connect/DoIT/delhi+govt+history

முனைவர் ச.சீனிவாசன், தமிழ் இணைப்பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, தில்லிப் பல்கலைக்கழகம்

Pin It