பால காண்டம் தெரியும், அயோத்திகாண்டம் தெரியும், குமரிக் காண்டம் தெரியும் ஏன் இலமூரியா காண்டம் கூடத்தெரியும்… அது என்ன கும்பமேளா காண்டம் என்று கேட்கிறீர்களா? அது ஸ்பெஷல் காண்டம். அது நம்மைப் போன்ற சாதாரண மனித ஆத்மாக்கள் பயன்படுத்துவது அல்ல, முற்றும் துறந்த அதாவது பப்பி சேமாக மாறிய மகா ஆத்மாக்கள் பயன்படுத்துவது. அவர்கள் பப்பி சேமாக மாறி ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடும் போது எய்ட்ஸ் போன்ற மனித பிறவிகளுக்கே வரும் அபச்சார நோய்கள் தாக்காமல் பாதுகாப்பது.

sadhus 600

 பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா ஜீலை 14 தேதி நாசிக் நகரத்தில் தொடங்கி செப்டம்பர் 25ம் தேதி வரை 58 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி மகாராஷ்டிரா அரசின் பாலியல் தொற்றுநோய் தடுப்புத்துறை சுமார் 8 லட்சம் காண்டங்களை நாசிக் மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பொங்கல் வழங்குவார்கள், சுண்டல் வழங்குவார்கள், எதற்காக காண்டம் வழங்குகிறார்கள் என்று தீவிரமாக மூளையை கசக்கிய போதுதான் அந்த கருமம் பிடித்த செய்தி நமக்குத் தெரிந்தது. போன 2003 ஆம் ஆண்டு நடந்த அலகாபாத் கும்பமேளாவிற்குப் பிறகு உத்திரபிரதேசத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் நோய் தொடர்பான நோயாளிகள் அரசு மற்றும் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல நாசிக் நகரத்தையும் நாசமாக்கிவிடுவார்கள் என்ற பயத்தில்தான் முன்னெச்சரிக்கையாக காண்டம் விநியோகிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் குளிக்க வரும் இந்த அம்மணக்கட்டை அகோரிகளைப் பற்றி நம்மைவிட மகாரஷ்டிராவை ஆளும் பி.ஜே.பி அரசுக்கு நன்றாகத் தெரியும் “பாம்பின் கால் பாம்பறியும் என்பாற்களே’ அதுபோல. இந்த அம்மண அகோரி சாமியார்கள் குளிப்பதற்காக மட்டும் கும்பமேளாவிற்கு வருவதில்லை; கும்மாளம் அடிப்பதற்கும் தான் வருகின்றார்கள்.

 எப்படி சங்கரமடத்திற்குள் நுழைந்த அபலைப் பெண்களை ஜெயேந்திரன் தன்னுடடைய ஆன்மீகக் குறியை காட்டி அச்சுறுத்தினானோ அதேபோல கும்பமேளாவிற்கு மூட நம்பிக்கைகளை சுமந்து வரும் அபலைப்பெண்களை இந்த அம்மண அகோரிகள் அச்சுறுத்துகின்றனர்.   

  அதனால் தான் இந்த ஆண்டு கும்பமேளா நடப்பதற்கு முன்பே அங்கு வரும் பொதுமக்களுக்கும், அம்மண அகோரிகளுக்கும் காண்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. உலகம் போற்றும் இந்துப் பண்பாட்டை காண வேண்டும் என்று யாராவது நினைத்தால் நேராக இந்த கும்பமேளா நடக்கும் இடங்களுக்குச் செல்லுங்கள். அங்கே உடல் முழுவதும் திருநீரு பூசியபடி கழுத்திலே ஒரு மாலையை மட்டும் அணிந்துகொண்டு கஞ்சாவை புகைத்தபடி அம்மணக்கட்டையாக வரும் அகோரிகள் என்று அழைக்கப்படும் நாகா சாதுக்களை பார்க்கலாம். இவர்களை எல்லாம் சாதாரணமாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. இவர்களில் பல பேர் பக்கா ரவுடிகள். இந்த அம்மண நாகா சாமியர்கள் மீது கொலை, கற்பழிப்பு, நில அபகரிப்பு போன்ற பல வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. பொதுவாக இந்த அம்மண அகோரி நாகா சாமியர்கள் சங்கர மடத்தின் வழிகாட்டுதல் படி செயல்படக் கூடியவர்கள். கஞ்சாவையும், சாராயத்தையும் வாங்கிக்கொடுத்தால் நம்ம ஊர் கூலிப் படையைவிட கச்சிதமாக காரியத்தை முடித்துத் தரக்கூடியவர்கள். அப்படிப்பட்ட இந்த அயோக்கியர்களைக் காண்பதற்காக பல கோடிக்கணக்கான மக்கள் கும்பமேளாவிற்குச் செல்கின்றனர்.

 கங்கை, யமுனை, மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய நதிகள் அங்கே கூடுவதாக சொல்கின்றனர். அதிலே குளித்து எழுந்தால் புண்ணியம் வருமாம். ஆனால் கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் புற்று நோய் வரும் என்று ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மைய ஆராய்சியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு கூறினார்கள். கங்கை நீரிலே குரோமியம் 6 என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 50 மடங்கு அதிகம் உள்ளதாம்.

 அதுமட்டும் அல்ல கங்கை நதியைப் போலவே யமுனை நதியின் நீரும் குடிப்பதற்கு மட்டும் அல்ல அது குளிப்பதற்கே ஏற்றதல்ல என்று சில மாதங்களுக்கு முன்பு மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்ததுள்ளது. கங்கை நதியை சுத்தப்படுத்த நமாமி கங்கா திட்டத்தின்கீழ் 20000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதே போல யமுனை நதியை சுத்தப்படுத்த இதுவரை 16000 கோடிகளை மத்திய மாநில அரசுகள் செலவு செய்துள்ளன. ஆனால் கங்கை மற்றும் யமுனை நதியின் இரு புறங்களிலும் செயல்படும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும், சுடுகாடுகளும் தொடர்ந்து இரண்டு நதிகளையும் மாசுபடுத்தி வருகின்றன. இதையெல்லாம் தடுக்கத் துப்பில்லாத அரசு கங்கையில் எச்சில் துப்பினால், குப்பைகளைக் கொட்டினால் 3 நாட்கள் சிறை, 10000 ருபாய் அபராதம் என காமெடி செய்துகொண்டு இருக்கின்றது.

 புனித கங்கையில் எச்சில் துப்பக்கூடாது, குப்பை போடக்கூடாது ஆனால் பிணங்களைப் போடலாம், இன்னும் ஒருபடி மேலேபோய் கங்கையில் புனித நீராட வருபவர்களுக்கு எய்ட்ஸை பரப்பலாம். இதுதான் உலகம் போற்றும் இந்து பண்பாடு!

பக்த கோடிகளே! பாவத்தை போக்க கும்ப மேளாவிற்கு செல்லும் உங்களுக்கு இரண்டு பரிசுகளை பகவான் வழங்கப் போகின்றார். ஒன்று புற்றுநோய் மற்றொன்று எய்ட்ஸ். இதில் எது உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!.சம்போ ஹர ஹர மகாதேவா!

- செ.கார்கி

 

Pin It