கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய, பிரிட்டானிய முதலாளி வர்க்கத்தின் சேவையில்

பிரதமர் நரேந்திர மோடி நவம்பரில் பிரிட்டனுக்கு மேற்கொண்ட பயணத்தை எதிர்பார்த்தவாறே பிரிட்டனின் அரசு  ஆரவாரத்தோடு கொண்டாடியது. இரு நாடுகளுக்கு இடையில் இருந்துவரும் உறுதியான நட்புறவைப் பற்றியும், இதைத் தான் மேலும் வலுப்படுத்த நினைப்பது குறித்தும் பிரிட்டனுடைய பிரதமர் பேசினார்.

பிரிட்டனின் பிரதமருடன் மோடியின் பேச்சுவார்த்தை, கூட்டாக ஊடகங்களுக்கு பேட்டி, பாராளுமன்றத்தின் மத்திய அரங்கத்தில் பிரிட்டனுடைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உரை, இலண்டன் கில்ட் ஹாலில் பிரிட்டனுடைய முதலாளிகளுடன் பேச்சு வார்த்தை மற்றும் இந்திய வம்சாவளியினருடன் வெம்ளி அரங்கில் பங்கேற்றுப் பேசியது ஆகியன அந்த இரு நாட்களில் மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாகும்.

Modi UK visit 600இந்த நிகழ்வுகளுக்கு மிகுதியான விளம்பரம் கொடுத்த இந்தியத் தொலைக் காட்சி ஊடகங்கள், இந்திய சமூகத்தினரின் ஒரு பிரிவினர் பிரிட்டன் பிரதமரின் குடியிருப்புக்கு வெளியே, வகுப்புவாத பாசிச பயங்கரத்தைத் திட்டமிட்டு நடத்துவதன் மூலம் இந்திய மக்களுடைய ஒற்றுமையை தொடர்ந்து உடைத்து வரும் இந்திய அரசின் ஒரு பிரதிநிதிதான் மோடி என்பதை அங்கு கூடியிருந்த அனைவருக்கும் நினைவுபடுத்துவதற்காக ஆர்பாட்டத்தை நடத்தியது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியன் வொர்கர்ஸ் அசோசியேசன் (பிரிட்டன்) வெளியிட்ட அறிக்கை, பிரிட்டனுக்கும் அதனுடைய முன்னாள் காலனிக்கு இடையிலுள்ள இந்தக் கூட்டணியின் உண்மையான தன்மை குறித்து தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த பெரும் நட்புறவு என்பது இந்த இரு நாட்டு மக்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததாக இருக்கிறது. அந்த நட்புறவு ஒரு ஏகாதிபத்தியக் கூட்டணி என்பது இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான உடன்பாடுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது, பிரிட்டன் மற்றும் இந்திய நிறுவனங்கள் மொத்தமாக 9 பில்லியன் பிரிட்டன் பவுண்டுக்கு மேல் மதிப்புள்ள புதிய கூட்டு முயற்சிகளை அறிவித்துள்ளன. இரு பக்கங்களும் ஒரு அணு ஒப்பந்தத்தை விவாதித்து முடிவெடுத்துள்ளனர்.

அது பொது மற்றும் இராணுவ தொழில் நுட்பத்திலும், அணு ஆராய்ச்சித் திட்டங்களிலும் இரு நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும். பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனத்திடமிருந்து 450 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 20 ஹாக் பயிற்சி விமானங்களை வாங்குவது பற்றி ஒரு உடன்பாடு கையெழுத்தாகுமென இந்திய அரசாங்கம் எதிர்பார்த்தது.

ஆனால் அந்த உடன்படிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நிதி, பாதுகாப்பு, சுற்றுப் புறச் சூழல் மாற்றம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதி செய்தனர். பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயப்படுத்தும் இந்திய அரசின் அண்மைக்கால அறிவிப்பு மேலும் பிரிட்டனுடைய பல நிறுவனங்கள் காப்பீடு, நிதி, மருத்துவம், எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுடைய பொதுவான முன்னுரிமையானது அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குவதாகுமென பிரிட்டனுடைய பிரதமர் கூறிக் கொண்டார். ஆனால் பிரிட்டன் மற்றும் இந்திய உழைக்கும் மக்களுடைய அனுபவமானது, முதலாளித்துவ முதலீடுகள் மக்களுடைய நலனுக்காக செய்யப்படுவதில்லையென தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியாவில் வோடா போன் அல்லது பிரிட்டனில் டாடா மோடார்ஸ் அல்லது டாடா ஸ்டீல் ஆகட்டும் இப்படிப்பட்ட முதலீடுகள் நிதி மூலதனத்திற்கு அதிக இலாபத்தைக் கொண்டு வருமா என்றும், புதிய சந்தைகளுக்கு வழி விடுமா என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. பிரிட்டனுக்கு மோடி பயணிப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் டாடா ஸ்டீல் யுகே-வின் லிங்கன்ஷயர் ஆலையிலிருந்து 900 தொழிலாளர்கள் தூக்கியெறியப்பட்டனர்.

"இந்தியாவின் ஒரு முதன்மை நிறுவனமான டாடா, பிரிட்டனின் ஒரு முதன்மை நிறுவனத்தை நடத்தி, உங்கள் நாட்டின் பெரிய தனியார் துறையில் மிகப் பெரிய எண்ணிக்கையில் வேலை அளிப்பவராக இருக்கிறது" என பிரதமர் மோடி குறிப்பிட்டார். அது, அந்த நகரத்தில் வேலை வாய்ப்பிற்கு பெரும்பாலும் இந்த ஆலையையே நம்பி இருக்கும் சமூகத்திற்கு ஏற்பட்ட மோசமான காயத்தில் உப்பைத் தேய்த்து விட்டது போல இருந்தது.

பிரிட்டனுடைய பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஆற்றிய உரையில் பிரதமர் மோடி அவருக்கு மிகவும் பிடித்த பொய்யான - "அனைவருடனும் கூடி, அனைவரின் வளர்ச்சிக்காகவும் என்பதே நாட்டிற்கான தம்முடைய கண்ணோட்டம் எனவும், அதில் ஒவ்வொரு குடிமகனும் இணைந்து பங்கேற்று வளர்ச்சி பெறுவர்" என்றும் குறிப்பிட்டார்.

அவருடைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து ஓராண்டிற்கும் மேல் ஆகிறது. இந்திய மக்கள் வளர்ச்சி அடையாதது மட்டுமின்றி, அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தாலும், உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பற்ற நிலை மோசமடைந்து வருவதையும் சந்தித்து வருகின்றனர். இரு பிரதமர்களும் புகழ்ந்து பேசும் அனைவருடைய நலனையும் உயர்த்துவதாகக் கூறும் கண்ணோட்டமானது, உண்மையில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை விலையாகக் கொடுத்து ஒரு சிறுபான்மையானவர்களை மேலும் கொழுக்கச் செய்வதாகும்.

பிரிட்டன் பாராளுமன்றத்தின் மத்திய அரங்கத்தில் பிரதமர் மோடி "இந்த கட்டிடத்தோடு இந்தியாவின் மிகுதியான நவீன வரலாறு இணைக்கப்பட்டுள்ளது. நம்முடைய உறவில் மிக அதிகமான வரலாறு பின்னிப் பிணைந்துள்ளது.... பலவற்றிலும், ஒருவர் ஆங்கிலேயரா அல்லது இந்தியரா என்று இனியும் கூறுவது கடினமாகும்" என்று கூறிய போது, இந்தியா அதனுடைய காலனிய பாரம்பரியத்திலிருந்து பிரிந்து வரவில்லை என்ற உண்மையை நியாயத்தோடு அவர் பிரதிபலித்தார்.

பிரதமருடைய இந்தப் பெருமையை இந்திய மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையாக இருக்கும் இந்திய ஆளும் வகுப்பினரின் உறுப்பினர்கள் மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு, பகிர்ந்து கொள்ளும் இந்த உறவானது, காலனிய பாரம்பரியத்திற்கும், நம்முடைய ஒடுக்குமுறைக்கு ஆதாரமாக இருக்கும் ஆங்கிலேய காலனியர்களிடமிருந்து நம்முடைய ஆளும் வகுப்பினர் பெற்றுக் கொண்ட பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பிற்கும் அடிமைப்பட்டிருப்பதாகும்.

இந்தியாவிலுள்ள முதலாளித்துவ அமைப்பு, டாட்டாக்கள், பிர்லாக்கள் போன்ற பல தனிப்பட்ட ஏகபோக முதலாளித்துவக் குடும்பங்கள், ஒட்டு மொத்தமான இந்திய ஆளும் வட்டங்கள் ஆகியன இந்தியாவில் ஆங்கிலேய காலனிய ஆட்சியில் துவங்கியனவாகும். இந்தியாவிலுள்ள அரசியல் அமைப்பானது, வெஸ்ட் மினிஸ்டர் மாதிரியில் அமைந்ததாகும். இந்திய அரசின் பெரும்பாலான நிறுவனங்களும், அதனுடைய சட்டமன்றம், செயலாக்கத் துறை மற்றும் நீதித் துறை, அதனுடைய காவல் துறை, இராணுவப் படைகள் மற்றும் உளவு நிறுவனங்கள் அனைத்தும் ஆங்கிலேய காலனிய நிறுவனங்களாகும்.

நமது நாட்டிலுள்ள கல்வி முறையானது, ஆங்கிலேயர்கள் நிறுவிய அமைப்பை பெருமளவில் பின்பற்றுவதாகவும், ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்துவதாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவிலுள்ள ஆளும் வட்டாரங்களில் உள்ள பலரும், அவர்களுடைய முன்னாள் காலனிய எசமானர்களோடு தொடர்ந்து உறவு பாராட்டி வருகின்றனர்.

இந்த சுரண்டல் ஆட்சியை எதிர்க்கும் தொழிலாளி வகுப்பினரையும், மக்களையும் நசுக்குவதற்கு ஆங்கிலேய காலனிய முறையாகிய "பிரித்தாளும் சூழ்ச்சி", இன்றைய இந்திய ஆளும் வகுப்பினருக்கு மிகவும் பிடித்தமான ஆயுதமாக விளங்கி வருகிறது. இன்றுங்கூட, இந்திய ஆளும் வகுப்பினரின் முக்கிய பிரதிநிதிகள் இந்தியாவிற்கு "நாகரிகத்தை"க் கொண்டு வருவதற்கு ஆங்கிலேய காலனியாளர்களை நோக்கி நிற்கின்றனர்.

அவர்கள் நம்முடைய சொந்த பழம்பெரும் சிந்தனைகளையும் பாரம்பரியத்தையும் இழிவானதாகக் கருதுகிறார்கள். முந்தைய எல்லா அரசாங்கங்களைப் போலவே பிரதமர் மோடியும், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கமும் காலனிய பாரம்பரியத்தைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்துப் பாதுகாத்து வருகிறார்கள். இது நம்முடைய மக்கள் மீது பெரும் சுமையாகவும், அவர்களுடைய விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் ஒரு பெரிய தடைக் கல்லாகவும் இருந்து வருகிறது.

முடிவாக, பிரதமர் மோடி அமெரிக்கா, செர்மனி, பிரான்சு போன்ற பல்வேறு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களைப் போலவே, பிரிட்டன் பயணமும் இந்திய மற்றும் அயல்நாட்டு முதலாளிகளுடைய நலன்களை மேலும் உறுதிப்படுத்தவும், இந்தியப் பொருளாதாரத்தை இராணுவமயமாக்கவும், இந்திய முதலாளி வர்க்கத்தின் ஏகாதிபத்தியப் பேராசைகளை முன்னே கொண்டு செல்லவும் நோக்கம் கொண்டதாகும்.