நாம் உயிர்வாழ பூமியைப் பாதுகாப்போம்! பூமியைப் பாதுகாக்க மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்!!

நாட்டின் முன்னேற்றம் என்றால் அது தொழிற்துறை முன்னேற்றம். இதை சாதிக்க வேண்டுமானால் அதற்கு எரிபொருள் தேவை. இன்று அந்த எரிபொருளை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.

Methene logoஎனவே நமக்குத் தேவையான எரிபொருளை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு பூமிக்கு அடியில் உள்ள எண்ணெய் எரிவாயு வளங்களை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் புதுச்சேரியிலிருந்து, கச்சத்தீவு வரையில் எண்ணெய், எரிவாயு வளத்தை கண்டுபிடித்துள்ளனர். பூமியை சல்லடையாய் துளைத்து தஞ்சையில் இதை வெளியே எடுக்க முயன்றபோது தமிழகத்தின் நெற்களஞ்சியமான “ நஞ்சை கொஞ்சும் தஞ்சையை நஞ்சாக்காதே ” என்ற மக்களின் முழக்கம் ஆட்சியாளர்களின் காதுகளை கிழித்தது.

மக்கள் போராட்டங்களை கண்டுப்பதறிய மாநில அரசு காவிரிப்படுகைகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்கான அனுமதியை ரத்துசெய்வதாக அறிவித்தது. இதனால் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டுவிட்டதாக நாம் கருதினோம். ஆனால் தஞ்சையை அடுத்து நாகை திருவாரூர் , சிவகங்கை மாவட்டங்களிலும் ONGC - என்ற இந்திய அரசு நிறுவனத்தின் மூலம் தனது வாலை நுழைத்துப்பார்த்தது. தஞ்சையை போன்றே மக்கள் போராட்டங்கள் அங்கும் வெடித்ததால், இந்த இடங்களில் இருந்தும் தனது வாலை சுருட்டிக்கொண்டது.

இப்போது நமது கடலூர், அரியலூர் மாவட்டங்களில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், திருமுட்டம், புவனகிரி, ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களில் நமக்கு சொரணை இருக்கிறதா என்று சீண்டிப்பார்க்கிறது. மீத்தேன் எடுப்பதற்கான திட்டத்தையும் அறிவித்துள்ளது.

இதை நாட்டை முன்னேற்றும் திட்டம் என்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் மக்களோ வேண்டாம் என்று மல்லு கட்டுகிறார்கள்!

மீத்தேன் என்று இன்று சொல்லப்படும் எரிவாயுவை நமது முன்னோர்கள் “கொல்லிவாய்ப் பிசாசு” என்றார்கள். நீர் நிரம்பிய பகுதிகளிலும், சதுப்பு நிலங்களிலும் பூமியின் உள்ளே இருந்து வெளியே வரும் மீத்தேன் எரிவாயு காற்றுப்பட்டதும் எரிய ஆரம்பித்துவிடும்.

இந்த கொல்லிவாய்ப் பிசாசு பூமிக்கு அடியில் மூன்று கிலோ மீட்டரிலிருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் கடினமான பாறைகளுக்கு நடுவில்சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் உள்ளது.

இந்த எரிவாயுவை முப்பது அடி அகலம், 5 கிலோமீட்டர் ஆழம் வரை கிணறு தோண்டி, அதன் அடியில் நாலா பக்கங்களிலும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்கவாட்டில் குடைவார்கள். பின்னர் ஒரு கிணற்றுக்கு 1 1/2 கோடி லிட்டர் தண்ணீரோடு மணல் மற்றும் பல்வேறு வகையான சிறு கற்கள், 600 வகையான ரசாயனங்களை கலந்து கிணற்றுக்குள் பீய்ச்சி அடிப்பார்கள்.

இந்தக்கலவை பூமிக்கு அடியில் உள்ள கடினமானப்பாறைகளை பிளந்து, அரித்து அவைகளுக்கிடையில் சிக்கி உள்ள எரிவாயுவை வெளியே வரச்செய்து, மேலே கொண்டு வந்து நீரையும், எரிவாயுவையும் தனித் தனியே பிரித்துப்தெடுப்பார்கள். கழிவு நீரை நிலத்தில் கொட்டி ஆவியாக்குவார்கள்.

600 வகையான இந்த ரசாயனம் கலந்த கழிவு நீர் ஆவியாகி காற்று மண்டலத்தில் கலக்கும். இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து ஆண்டு முழுவதுமே சித்திரை மாதமாகி நம்மை சுட்டெரிக்கும். நீராவியாக காற்றில் கலந்துள்ள நஞ்சான ரசாயனங்கள் மழையோடு சேர்ந்து பூமிக்கு மீண்டும் வந்துசேரும். இந்த மழை நீர் நிலத்தில் உள்ள ஆறுகள், குளம், குட்டைகள், நிலத்தடி நீர் அனைத்தையும் நஞ்சாக்கிவிடும்.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக, ஒருசில ஆண்டுகளிலேயே இந்த கொல்லி வாய்ப் பிசாசு நம்மை, நாம் வாழும் இடத்திலிருந்து நம்மை விரட்ட ஆரம்பித்துவிடும். காற்றில் கலக்கும் நஞ்சு,அதை சுவாசிக்கும் புல், பூண்டுகள் முதல் விலங்குகள், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களையும் படிப்படியாக சித்ரவதை செய்து சாகடிக்க ஆரம்பித்துவிடும்.

நஞ்சாகிப்போன நீரால் விவசாயம் பொய்த்துவிடுவது மட்டுமல்ல, புல், பூண்டு கூட முளைக்காத கட்டாந்தரையாக மாற்றிவிடும்.

இந்தக் காற்றை சுவாசிக்கும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் மூளை, கண், நுரையீரல், இருதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம்,தோல் என அனைத்து உறுப்புகளிலும் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை உருவாக்கும். உயிர் பிழைக்க வேண்டுமானால் இருக்கும் இடத்தை காலி செய்துவிட்டு ஓடுவதைத் தவிர, நமக்கு வேறு வழி இல்லை.

ஒரு கிணற்றுக்கு 1.5 கோடி லிட்டர் தண்ணீர் தேவை என்றால் பலநூற்றுக்கணக்கான கிணறுகளுக்கும் காவிரி நீரை முழுமையாக பபயன்படுத்தினாலும் போதாது. இதனால் நிலத்தடி நீரையும் முற்றாக உறிஞ்சி விடுவார்கள். எஞ்சிய நிலத்தடி நீரிலும் மீத்தேன் எரிவாயு கலந்து விடும். இந்த தண்ணீரை நாம் வெளியே எடுத்தால் அதனோடு சேர்ந்து கொல்லி வாய்பிசாசும் வெளியே வந்து நம்மை சுட்டெரிக்கும்.

1. கிணறு தோண்ட, ஒரு கிணற்றுக்கு எழுபது கனரக வாகனங்கள் வீதம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல பல ஆயிரம் கிலோ மீட்டர் சாலை அமைக்க, எரிவாயு குழாய் அமைக்க இப்படி நமது நிலங்களை நம்மை கேட்காமலேயே பிடுங்கிக்கொள்வார்கள். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லக்கூட நமக்கு உரிமை இல்லை என்கிறார் மோடி!

2. 24 மணிநேரமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களின் இடைவிடாத பெரும் இரைச்சல்.....

3. இரவை பகலாக்கும் மின்விளக்குகளின் வெளிச்சம்....

4. நஞ்சாகி சுவாசிக்கவோ, குடிக்கவோ முடியாத காற்றும், நீரும்....

5. பூமிக்கடியில் கடினப்பாறைகளை உடைப்பதால் வரப்போகும் நிலநடுக்கப் பேரழிவு...

6. புல், பூண்டு கூட முளைக்காத பூமி ..... இவைகளைத்தான் இத்திட்டத்தின் மூலம் ஆட்சியாளர்கள், நமக்கு பரிசாய் தரபோகிறார்கள்.....!

இதைத்தான் அவர்கள் நாட்டின் முன்னேற்றம் என்றும் சொல்கிறார்கள்!

பூமியே அழிந்தாலும் பரவாயில்லை! நமது முதலாளிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தேவை பணம் ! அந்தப்பணம் இருந்தால், அவர்கள் இந்த அண்ட சராசரத்தில் எங்கு வேண்டுமனாலும் வாழ்ந்து விடுவார்கள்! அதனால் தான் அவர்கள்இப்போதே சூரியன் உட்பட நவக்கிரகங்களையும் மனைபோட்டு விற்கவும், வாங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

நாம் என்ன செய்ய போகிறோம்......?!

பூமியை அழித்து சூரியனில் குடியேறத் துடிக்கும் அறிவாளிகளோடு சேரப்போகிறோமா? அல்லது பூமியை பாதுகாத்து இங்கேயே வாழத்துடிக்கும் முட்டாள்களோடு சேரப் போகிறோமா? கொல்லி வாய் பிசாசு வெளியே வருவதற்குள் இதை முடிவு செய்யுங்கள். பிசாசு வெளியே வந்து விட்டால் நாம் நினைத்தாலும் நம்மால் முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் அப்போது அந்த பிசாசால் நாம் காவு கொள்ளப்பட்டிருப்போம்!

- மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு – கடலூர் மாவட்டம். தொடர்பு எண்: 9750272873

Pin It