சுற்றுச்சூழலுக்கும் மக்கள் நலத்துக்கும் பல வகையிலும் கேடுகளை உண்டாக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்திய நூறாவது நாள் போராட்டத்தின்போது காவல்துறை காட்டு மிராண்டித்தனமாகச் சுட்டதில் கடந்த மே 22இல் 13 பேர் மாண்டனர். அதுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த தமிழ்நாட்டு அரசு, துப்பாக்கிச் சூட்டால் எழுந்த கொந்தளிப்பான சூழலைத் தணிப்பதற்காக 28.5.2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையைப் பிறப்பித்தது. ஆலையைப் பூட்டியது.

sterlite 600 copyகடந்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை அய்ந்து தடவைகள் மூடப்பட்டது. ஆனால் பன்னாட்டு நிறுவன மான வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர் லைட் ஆலை இந்திய அரசியல்வாதிகளிடமும், அதிகார வர்க்கத்திடமும் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி மீண்டும் திறக்க வழிசெய்து கொண்டது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தமிழ்நாட்டு அரசின் அரசாணை மட்டும் போதாது; தமிழக அமைச்சரவை கூடி இதை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும். சட்டவல்லுநர்களும் வலியுறுத்தினர். பின்னர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, “28.5.18 நாளிட்ட தமிழக அரசின் ஆணை வலுவற்றதாக உள்ளது” என்று சுட்டிக்காட்டினர். அதன்பிறகும், தமிழ்நாட்டு அரசு, அமைச்சரவையின் கொள்கை முடிவாக அறிவிக்க வில்லை. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படு வதற்குத் தமிழ்நாட்டு அரசு மறைமுகமாக ஆதரவளித்து வருகிறதோ என்றே அய்யப்பட வேண்டியுள்ளது.

தொழிற்சாலைகளின் நச்சுக்கழிவுகள் சுற்றுச்சூழ லுக்கும் மக்களுக்கும் ஊறு விளைவிக்காமல் இருப்ப தற்கான நிபந்தனைகள், விதிகள் அரசால் வகுக்கப்பட் டுள்ளன. இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படு கின்றனவா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகளும் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தக் காப்பு விதிகளைத் தொழிற்சாலைகள் பின்பற்றுவதில்லை; அதிகாரிகளும் ஆய்வு செய்து முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை. ஏனெனில் ஆட்சியாளர்கள் எந்தக் கட்சியினராக இருந்த போதிலும் முதலாளிகள் அள்ளித்தரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தொழிற்சாலைகளின் விதிமீறல் களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். இத்தன்மை யில் தான் மகாராட்டிரத்திலிருந்தும் குசராத்தலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அமைப் பதற்கு 1996இல் முதலமைச்சர் செயலலிதா அனுமதி அளித்தார். அதன்பின் கலைஞர் கருணாநிதி முதல மைச்சராக இருந்த போதுதான் ஆலையின் விரிவாக் கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் விதிகளால் பெருமுதலாளிய நிறுவனங் களுக்குள்ள தடைகளைத் தளர்த்தும் வகையில் 2010 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் நடுவண் அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இச் சட்டத்தின்படி, சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகள் இனி உயர்நீதிமன்றங்களிலோ, உச்சநீதிமன்றத்திலோ விசாரிப்பதற்கு மாறாக, பசுமைத் தீர்ப்பாயங்களில் விசாரிக்கப்படும். இத்தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக நீதித் துறை உறுப்பினர்களும் தொழில்நுட்ப உறுப்பினர் களும் இருப்பார்கள். சென்னையில் அமைக்கப்பட்ட பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்து, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால், அது செயலிழந்து கிடக்கிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணையை எதிர்த்து தில்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமையகத்தில் மேல் முறையீடு செய்தது.

தில்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையின் முறையீட்டை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் மூவர் கொண்ட குழுவை அமைப்பதாக அறிவித்தது. தமிழ் நாட்டில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே. சந்துரு, கே.பி. சிவசுப்பிரமணியன் ஆகியோர்களின் பெயர்களைப் பரிந்துரைத்தது. ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் தனக்கு எதிராகத் தீர்ப் பளிப்பார்கள் என்று கூறி எதிர்த்தது. அப் போது, தமிழ்நாட்டின் நீதிபதிகள் சிறுமை படுத்தப்படுவதைத் தமிழ்நாட்டு அரசு கண்டிக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதியையே நியமிக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் விண்ணப்பிக்க வில்லை.

மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் கொண்ட விசார ணைக் குழுவைப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. ஸ்டெர்லைட் ஆலை பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தபோது, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவர் பேராசிரியர் பாத்திமா, வணிகர் சங்க நிர்வாகி இராசா, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி அர்ச்சுன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரினர். இவர்களைத் தலையீட்டாளர்கள் என்று பசுமைத் தீர்ப்பாயம் சேர்த்துக் கொண்டது. இவர்கள், தமிழக அரசின் ஆணை என்பது அரசின் கொள்கை முடிவு ஆகும்; அதனால் இதைப்பற்றி விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை; உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டனர். முதலில் இச்சிக்கல் குறித்து முடிவு செய்த பிறகுதான் ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டை ஆய்வுக்கு எடுக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் பசுமைத் தீர்ப்பாயம் இக்கருத்தைப் பொருட்படுத்தவில்லை.

நீதிபதி தருண் அகர்வால் பணியில் இருந்த போது காசியாபாத் சேமநலநிதி முறைகேடு தொடர்பான சிக்கலில் ஆதாயம் அடைந்தார் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்; எனவே அவர் விசாரணைக்குழுவின் தலைவராக இருக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவர் பேராசிரியர் பாத்திமா பசுமைத் தீர்ப்பாயத்தில் தடை எழுப்பினார். அந்நிலையில்கூட, தருண் அகர்வாலை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசு கோரிக்கை வைக்கவில்லை.

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு கடந்த நவம்பர் மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்தது; மக்களிடம் கருத்து கேட்டது. 26.11.18 அன்று தன் அறிக்கையைத் தேசியப் பசுமைத் தீர்ப் பாயத்திடம் அளித்தது. அந்த அறிக்கையில், தமிழ்நாட்டு அரசின் ஆணை நியாயமற்றது என்றும், 27 நிபந்த னைகளின் பேரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயற்பட அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக் கும் ஏற்பட்டுள்ள மாசுகள், கேடுகள் பற்றி மட்டுமே ஆராய வேண்டிய இக்குழு, தமிழக அரசின் ஆணை நியாயமற்றது என்று கூறியிருப்பது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தன் அதிகார வரம்பை மீறிய செயலாகும்.

பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் இரகுவேந்திர ரத்தோர், எஸ்.பி. வாஸ்டி, கே. இராமகிருட்டிணன், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 28 முதல் திசம்பர் 10 வரை விசாரணை நடந்தது. இதன்மீதான தீர்ப்பு 15.12.18 அன்று வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அதே நாளில் ஆதர்ஷ்குமார் கோயல் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். இந்த கோயல்தான் பணியில் இருந்த போது பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் தீர்ப்பு அளித்தவராவார். இத்தீர்ப்பை ஆதிக்கச் சாதியினர் கொண்டாடினர். ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுபவர் என்பதால் முதலாளிகளின் நலன்களைக் காப்பதற்காக மோடி அரசு இவரை நியமித்தது. இந்த அடிப்படையில்தான் பசுமைத் தீர்ப் பாயத்தின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

ramnath 450நீதிபதி தருண் அகர்வால் பரிந்துரையைத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் கேடுகள் பற்றிய குற்றச்சாட்டு குறித்து எதுவும் கூறாமல் பூசி மெழுகப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பில், ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை வலுவற்றது; நியாயமற்றது என்பதால் இரத்து செய்யப்படுகிறது; ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிதாக ஆணை பிறப்பிக்க வேண்டும்; சுற்றுச்சூழலைப் பாது காக்க மூவர் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; விதிகளை மீறி 3-5 இலட்சம் டன் தாமிரக் கழிவுகளைப் பட்டா நிலத்தில் கொட்டியதற்காக ரூ.2.5 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. தூத்துக்குடி மக்களுக் கான நலத் திட்டங்களை ரூ.100 கோடி செலவில் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டில் கூட உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதன் பிறகும் தொடர்ந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றியது. பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

28.5.2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு பூட்டியது முதல் நடைபெற்ற நிகழ்வுகள் ஆலையை விரைவில் திறப்பதற்கான சூழ்ச்சித் திட்டங்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இதைத் தான் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உறுதி செய்கிறது.

மே 22 அன்று காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேர் தலையிலும் மார்பிலும் குண்டு பாய்ந்திருக்கிறது என்கிற தடய வியல் அறிக்கையின் விவரம் 22.12.2018 அன்று வெளிவந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த அளவுக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகக் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது என்பது படிப்போர் மனங்களைப் பதறவைக்கிறது.

எனவே, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் இந்த ஆட்சியாளர் களை நம்பாமல் மக்கள் திரள்  போராட்டங்கள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை விரட்டியடிப்போம்.

Pin It