gokulraj body

சாதி ஒழிப்பில் அக்கறை கொண்டுள்ள அன்புக்குரிய தோழர்களே!

நம்மில் பலரும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கருத்தியலை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள். ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞரை, சாதியாதிக்க வெறிபிடித்த காடையர்கள் படுகொலை செய்திருப்பது, மனிதப்பண்பற்ற கொடூரம் மட்டுமல்ல, மக்களாட்சி அரசு இருப்பதாகச் சொல்லப்படும் நாட்டின் அவலமும்கூட!

சாதியாதிக்க நிலவுடைமையைப் பாதுகாக்கும் பார்ப்பனிய ஊடகங்களால், மக்கள் கருத்துகள் மறைக்கப்பட்டு வந்தநிலை மாறி, சமூக ஊடகங்களில் இது போன்ற சாதித்திமிர்ப் படுகொலைகளைக் கண்டித்தும் தண்டிக்க வலியுறுத்தியும் ஏராளமானவர்கள் கருத்துகளை வெளிப்படுத்திவருகின்றனர். இதில், சிலர் வெளிப்படுத்தும் கருத்து, திசைவிலகலாக இருக்கிறது. அவர்கள், பொறியாளர் கோகுல்ராஜின் படுகொலைக்குக் காரணமான சாதியாதிக்க சக்திகளைத் தாக்குவதை விட்டுவிட்டு, தமிழ்த்தேசியத்தின் மீது தாக்குவதையே எதிர்வினையாகக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம், ஏதோ அனைத்து தமிழ்த் தேசியவாதிகளும் சாதியாதிக்க வெறியர்களுக்குத் துணைநிற்பது போன்ற தோற்றத்தைக் கட்டமைக்க அவர்கள் முயல்கின்றனர். இந்தப் போக்கானது, சாதியொழிப்பு அரசியலுக்கு பாதகமானதாகும்!

எப்படி.. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள், தங்கள் பெயரில் “திராவிட” என்ற அடையாளத்தைத் தாங்கியிருப்பதை வைத்து பெரியாரியம் என்பதை மதிப்பிட முடியாதோ, அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தும் ஒருசில அமைப்புகளை வைத்து அம்பேத்கர் கொள்கைகளை மதிப்பிட முடியாதோ, சி.பி.ஐ. சி.பி.எம். போன்ற கட்சிகளை மட்டுமே வைத்து கம்யூனிசத்தை மதிப்பிடமுடியாதோ, அதைப் போலவே, ஒரு சில அமைப்புகளின் கொள்கைகள்(!?), செயல்பாடுகளையும் மட்டும் கருத்தில்கொண்டு, அதுதான் தமிழ்த்தேசியம் என்று கூறமுடியாது. தமிழ், தமிழர் என்று ஒருவர் சொல்லிக்கொண்டு இருப்பதாலேயே, அது தமிழ்த்தேசியக் கொள்கை ஆகிவிடமுடியாது. தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பிற இனங்களின் மீது இனக்காழ்ப்பை, இனவெறியைக் கொண்டிருக்கக்கூடிய மக்கள் விரோதமான - சுயலாபத்துக்கான - ஏன், வர்ணசாதிய பார்ப்பனியத்தால் சதித்தனமாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள் உட்பட பல்வேறு சக்திகள் இங்கு உண்டு. இவையெல்லாம் தமிழ்த்தேசியமா என்றால் ‘இல்லை’ என்பதுதான், அடுக்குமுறை சாதிய அமைப்பை அழித்தொழிக்கச் செயல்படும் எவரும் கண்டடையக்கூடிய பதிலாக இருக்கும்.

ஆனாலும், இவை அனைத்துமே, தமிழ்த்தேசியம் என்ற பெயரைக் கொண்டுதானே, செயல்படுகின்றன. இவை இல்லை என்றால், இங்கு சாதியொழிப்பைத் திட்டமாகக் கொண்ட தேசிய சக்திகள்.. எந்த அமைப்புகள்? ’தமிழ்த்தேசிய முகமூடி’ சக்திகளின் சாதிய -மக்கள்விரோதத் தன்மையை எப்படி இனங்காண்பது, எதிர்கொள்வது?

அனைத்து ’தேசியமுகமூடி’ சக்திகளும் வலதுசாரி அரசியல் கொள்கை கொண்டவையே. இந்திய - பார்ப்பனிய ஆளும்வர்க்கத்துக்கு துணையானவையே. அவற்றுக்கு மாறாக, புரட்சிகர, சனநாயகத் தன்மையோடு இந்த மண்ணில் தமிழ்த்தேசிய அரசியல் சக்திகள் செயல்பட்டுவருகின்றன. எடுத்துக்காட்டாக, தனியான சாதி ஒழிப்புத் திட்டத்தை கொண்டுள்ள - புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகரத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் தோழமை அமைப்பான- ’ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி’யைக் குறிப்பிடமுடியும். சாதி ஒழிப்புக்காக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இந்தியப் பொதுவுடைமை இயக்கம் மற்றும் மார்க்சிய-லெனினிய இயக்கத்தின் வழிவந்த ஒரு புரட்சிகர அமைப்பாகும். ’சமநீதி- சமூக சமத்துவம் - தேசியம் - சோசலிசம்’ என்ற முழக்கத்தோடு, தமிழ்த் தேசிய வழியில் மக்கள் சனநாயக அரசைப் படைப்பதுதான், சாதியொழிப்புக்கான தீர்வு என்ற அடிப்படையில், சாதியொழிப்புக் களத்தில் இயங்கிவருகிறது. பொதுவாக தமிழர் எனக் குறிப்பிடுவதன் மூலம் வர்க்கத்தை மறுப்பது/ மறைப்பதாக அல்லாமல், சுரண்டும் ஆளும் வர்க்கத்தையும் சாதியாதிக்க சக்திகளையும், (ஒடுக்கப்படும் - சுரண்டப்படும்) மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும்படியாக, ’உழைக்கும்(வர்க்கத்) தமிழர்களாய் ஒன்றுபடுவோம்’ எனத் தெளிவான அரசியலை முன்வைக்கிறது.

இதன் வழிமுறையில் பலரும் மாறுபடலாம். அவரவர், தாங்கள் ஏற்றுக்கொண்ட வழிமுறையில்தான் சாதியை ஒழிக்க முடியும் என்று வாதிடலாம். இதற்கு பல்வேறு அமைப்புகள், கொள்கைகள், நோக்கங்களைக் கொண்ட அனைத்து தோழர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அதை விடுத்து தற்போது நடக்கும் சில விவாதங்கள், தனிநபர் தாக்குதலாகவோ, பொத்தாம்பொதுவாக கொள்கையற்ற வழிமுறைகளில் செய்யப்படும் விவாதங்களாகவோ அமைந்துவிடுகின்றன.

தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பெரியாரையும், அம்பேத்கரையும் இழிவுபடுத்தும் எத்தகைய முயற்சிகளும் கண்டிக்கப்பட வேண்டியதே! இத்தகைய சாதியாதிக்க சக்திகளை, பார்ப்பனியத்துக்குக் கைக்கூலி சேவகம் செய்பவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதுதான் சரியாக இருக்கமுடியும். ஆனால் அதற்குப் பதிலாக, தமிழ்த்தேசியம் என்ற அரசியலே, சாதியைப் பாதுகாப்பதாகக் கூறுவது சரியான கூற்றல்ல.

இவ்வாறு கூறுகின்ற ஒரு சிலரின் கருத்துப்படி வைத்துக் கொண்டாலும் தமிழ், தமிழர், என்ற அடையாளத்தை விடுத்து இந்தியர் என்று கூறிவிடுவதாலோ அல்லது திராவிடர் என்று கூறிவிடுவதாலோ சாதி ஒழிந்து விடுமா? அல்லது சாதியை ஒழித்துவிட முடியுமா?

திராவிட இயக்கம், பெரியார் வழிவந்தவர் என்று கூறிவந்த கருணாநிதி ஆட்சியில்தான், ஒரு கருப்பு ஜூலையில் ’மாஞ்சோலைப் படுகொலை’ நடத்தப்பட்டது என்பதை மறந்துவிட முடியுமா? அம்பேத்கரின் இந்திய குடியரசு கட்சி பெயரை வைத்துக்கொண்டு, ஜெயாவுக்கு செ.கு.தமிழரசன் காவடி தூக்குவது சரியானது என்று கூறிவிட முடியுமா?

நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள மார்க்சிய-லெனினிய தத்துவ அடிப்படையில், தமிழ்த்தேசியம் அதன் இறையாண்மை எனும் அரசியல்வழியை உயர்த்திப் பிடிக்கிறோம். வர்ண சாதியப் பார்ப்பனியத்தை அடித்தளமாகக் கொண்டுதான் இந்து- இந்தி- இந்தியா என்பது கட்டப்பட்டுள்ளது என்று சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, பொருளாதாரத் தளத்தில் சாதியத்தைப் பாதுகாப்பது இன்று நிலவுகின்ற சாதிய நிலவுடைமை உற்பத்தி உறவுகள்தான். சாதியை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பனியத்தை, சாதிய நிலவுடைமை உற்பத்தியை ஒழிக்க வேண்டும். இதில் மாறுபடுகிறவர்கள் தங்கள் வழிமுறைகளை, ஆய்வுகளை முன்வைக்க வேண்டும். அதை விடுத்து அவதூறுகளை அரசியலாக்குவது சரியான வழிமுறையாகாது!

பொறியாளர் கோகுல்ராஜ் படுகொலையில்கூட சாதியாதிக்க சக்திகளைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட்டு, தோழமைச் சக்திகளை மோதவிட்டு குளிர்காய வைக்கும் முயற்சி நடக்கிறது. பொறியாளர் கோகுல்ராஜ் படுகொலைக்கான வேர்கள், இந்த சமூகத்தில் எவ்வாறு உள்ளன என்பது குறித்தோ, சமூக சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்கள் குறித்தோ, சாதிய அமைப்புகள் ஏன் வளர்கின்றன? சாதிகள் நவீன வடிவத்தை எவ்வாறு தாங்கிநிற்கின்றன என்பது குறித்தோ, இவற்றை எதிர்கொண்டு தீர்வுகளை முன்வைக்கும் முயற்சிகள் குறித்தோ சமூக, அரசியல் பொருளாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது கிடையாது.

மாறாக சாதியத்தை ஒழிப்பதற்கு கம்யூனிஸ்ட்டுகள், தமிழ்த் தேசியவாதிகள், திராவிட இயக்கத்தினர்தான் எதிராக உள்ளனர் என்ற கருத்தானது, பார்ப்பனிய சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது. சாதியொழிப்புக்கு எதிரான அந்த பெரும் சதித்திட்டத்துக்கு, சாதியொழிப்புக் கொள்கையாளர்கள் பலியாகிவிடக்கூடாது.

எதிரிக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டமும், சாதியொழிப்புக்கான ஆக்கபூர்வமான வழிமுறை குறித்த தோழமையான கருத்துப் போராட்டமுமே இன்றைய தேவை.

- இளமுகில்

Pin It