இந்தியாவின் 16வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் மார்ச் தொடங்கி மே மாதம் வரை 9 கட்டங்களாக நடந்து முடிந்திருக்கிறது. மோடி அலையை முன்வைத்து பாரதிய ஜனதாவும், சாதனைகளை முன்வைத்து காங்கிரசும், சர்ந்தர்ப்பவாதங்களை முன்வைத்து மாநிலக்கட்சிகளும் இந்த தேர்தலை எதிர்கொண்டன. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்போம் என்கிறது காங்கிரஸ். 300க்கு அதிகமான இடங்களை பிடித்து தனிபெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவோம் என்கிறது பா.ஜ.க. இரண்டு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதால் மாநிலகட்சிகள் பலத்த வேட்டைக்காக கூட்டணி ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

               modi-rahul-350 தேர்தலுக்கு முன்பாகவே உறுதிமிக்க கூட்டணி அமைக்க காங்கிரசும், பா.ஜ.கவும் பெரிய வலைகளை விரித்தன. 1996 முதல் தொடர்ச்சியாக அமைந்த மத்திய அரசுகள் அனைத்தும் கூட்டணி அரசுகள். 2006ல் 13 கட்சிகளுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தது. இம்முறை 7 கட்சிகள் மட்டுமே. தமிழகத்தில் ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, ஆந்திராவில் தெலுங்குதேசம், மகாராட்டிராவில் சிவசேனா, பஞ்சாபில் அகாலிதளம், பீகாரில் ஜன் லோக் தள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க கடந்த 2009 தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத கட்சிகள். 2009ல் தெலுங்குதேசம் 2 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது. ஜன் லோக்தள் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுக்கு எதிராக நவநிர்மான் சேனா களத்தில் இருப்பதால் 2009 தேர்தலை போன்றே இம்முறையும் சிவசேனா பல இடங்களை இழக்க நேரிடும்.

                மும்பை மாநகரில் மட்டும் 6 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 2009ல் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர்களை எதிர்த்து பங்காளி பிள்ளையான ராஜ்தாக்ரேயின் நவநிர்மான் சேனாவின் வேட்பாளர்கள் போட்டியிட்டு வாக்குகளை பிரிக்க, 6 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அடுத்ததாக, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 14 தொகுதிகள் மட்டும் உள்ளன. இதனால் பா.ஜ.கவுக்கு இம்முறை பலமான கட்சிகளின் கூட்டு கிட்டவில்லை. எனவே பா.ஜ.க கூட்டணியை வலுப்படுத்த ஊடகத்துறையும், உளவுத்துறையும் சேர்ந்துள்ளன.

                தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க, ஆந்திராவில்; ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்; ஒடிசாவில் - பிஜு ஜனதாதளம்; பீகாரில் - ராஷ்டீரிய ஜனதாளம்-, ஐக்கிய ஜனதா தளம்; மேற்கு வங்கத்தில் - திரினாமுல் காங்கிரஸ்; கர்நாடகத்தில் - மதச்சார்பற்ற ஜனதாதளம்; மகாராஷ்ட்ராவில் - சிவசேனா, நவநிர்மான்சேனா, தேசியவாத காங்கிரஸ்; பஞ்சாப் - அகாலிதளம்; உத்திரப்பிரதேசம் - பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்டீரிய லோக்தள், காஷ்மிரில் - தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன இந்திய மாநிலங்களில் செல்வாக்குள்ள கட்சிகள். இக்கட்சிகளில் - பாரதிய ஜனதா கூட்டணியில் சிவசேனாவும், அகலிதளமும் மட்டும் ஓரளவு இடம் பிடிக்கும் கட்சிகள்.

                காங்கிரஸ் கூட்டணியில், தேசியவாத காங்கிரஸ் (மகாராஷ்ட்ரா), ராஷ்டீரிய ஜனதாதள் (பீகார்), ராஷ்டீரிய லோக்தள் (உ.பி), தேசிய மாநாட்டு கட்சி (காஷ்மீர்) இடம் பெற்றுள்ளன.

இதில் 2009 மக்களவை தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு - 9 இடங்கள், தேசிய மாநாட்டு கட்சிக்கு - 3 இடங்கள், ராஷ்டீரிய லோக்தள் கட்சிக்கு - 5 இடங்களே இருந்தன. 18 இடங்கள் வைத்திருந்த தி.மு.கவும், 19 இடங்கள் வைத்திருந்த திரினாமுல் காங்கிரசும் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இல்லை. ஈழத்தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை காரணமாக, 6 மாதங்களுக்கு முன்பே தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியது.

                கூட்டணியை விட்டு விலகியதும் சி.பி.ஐ ஸ்டாலின் வீட்டுக்கு சோதனையிட வந்ததால் ஸ்டாலினின் கோபம் மற்றும் பிடிவாதம் காரணமாக காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி ஏற்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 26 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட தி.மு.கவின் கனிமொழி, மாநிலங்களவை போக மேலும் 8 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்பட்டபோது காங்கிரஸ் 5 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

                இதன் காரணமாக, தி.மு.க. கூட்டனி உடன்பாட்டுக்கு வரும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்து ஏமாந்தது. தி.மு.க நம்பிக்கை துரோகம் செய்ததாக காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியது. தேர்தலுக்கு பிறகு குற்றங்களை மறந்து, போனால் போகட்டும் என்று காங்கிரஸை ஆதரிப்பதாக திருவல்லிகேணி பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.

                42 இடங்கள் உள்ள மேற்கு வங்காளத்தில் 40 இடங்களை கைப்பற்றினால் பிரதமர் வாய்ப்பை பெறலாம் என்று மம்தாவும் கூட்டணியை விட்டு விலகி நிற்கிறார். 2009&ல் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த முலாயம் சிங் மற்றும் மாயாவதியும் இம்முறை தனித்து போட்டியிடுகிறார்கள். உத்திரபிரதேசத்தில் 80 இடங்கள் உள்ளன. சுமார் 35 முதல் 45 இடங்களை கைப்பற்றினால் நானே பிரதமர் என்று மாயாவதியும், முலாயம் சிங்கும் நம்பிக்கை வைத்துள்ளனர். 2009 தேர்தலில் மாயாவதி 80க்கு 20 இடங்களும் முலாயம்சிங் 23 இடங்களும் மட்டுமே பெற்றிருந்தனர். 2009ல் காங்கிரசுக்கு - 20 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 10 இடங்களும் கிடைத்தன. அஜித்சிங்கின் ராஷ்டீரிய லோக்தல் - 5 இடங்களை பிடித்தது.

                பாரதியஜனதா, 2014 தேர்தலில் 50க்கும் கூடுதலான இடங்களை உத்திர பிரதேசத்தில் கைப்பற்றுவோம் என உறுதியாக நம்புகின்றது. 10 இடங்களில் இருந்து 50 இடங்களை தாண்டுவது எளிய காரியம் இல்லை. மொத்தமுள்ள 80 இடங்களில் மாயாவதி 19 இடங்களிலும், முலாயம் 13 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், ஆம்ஆத்மி 11 இடங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். பாரதியஜனதா ஒரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. மேலுள்ள நான்கு கட்சிகளும் முஸ்லிம் வாக்குகளை ஆளுக்கு கொஞ்சம் பிரித்து கொண்டால் சொற்ப வித்தியாசத்தில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெல்லும் என்று அக்கட்சி தலைவர்கள் நம்புகின்றனர். உ.பி.யில் முஸ்லிம் இளைஞர்களிடம் ஆம்ஆத்மிக்கு செல்வாக்கு இருப்பதால், அதிக இடங்களில் பாரதியஜனதா வெல்லும் ஆபத்து இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாகர்கோவில் நகராட்சியையும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள உடுமலைபேட்டை நகராட்சியையும் பாரதியஜனதா கைப்பற்றியது. இரண்டு தொகுதிகளிலும் நான்கு, நான்கு வேட்பாளர்கள் வாக்குகளை பிரித்தால் அது சாத்தியமானது.

                உத்திரப்பிரதேசத்தில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 45 சதவிதம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். மேற்கு மாநிலம் முழுவதும் பரவலாக 25 சதவிதம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். தலித்துகள் அனைத்து தொகுதிகளிலும் சராசரியாக 20 சதவீதம் உள்ளனர். முசபர் நகர் கலவரத்துக்கு பிறகு ஆளும் சமாஜ்வாடி கட்சிமீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் காரணமாக அவர்கள் வாக்குகள் நாலாபுறமும் சிதறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அங்குள்ள முஸ்லிம் தலைவர்கள் இதனை மறுத்துள்ளனர். குறிப்பாக எந்த கட்சியையும் ஆதரிக்காமல், எந்த தொகுதியில் பாரதியஜனதா வேட்பாளரை தேற்கடிக்க எந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளதோ அந்த கட்சிக்கு வாக்களிப்போம் என்றுள்ளனர். (பார்க்க அவுட்லுக், ஏப்ரல்) 2009ல் இப்படித்தான் முடிவெடுத்தோம். அதனால் பா.ஜ.க 10 இடங்களை தாண்ட முடியவில்லை என்கின்றனர். எனவே உ.பி.யில் மட்டும் 50 இடங்களை பெறும் பா.ஜக கணிப்பு தவறவும் வாய்ப்புள்ளது. தில்லியில் புகாரி இமாம்&ஐ சந்தித்த சோனியா காந்தி முஸ்லிம் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்று சமிக்கையுடன் கேட்டது குறிப்பிடத்தக்கது.

                பீகாரில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. 2009ல் 20 இடங்களை பெற்றிருந்த ஐக்கிய ஜனதாதளம் (நிதிஷ்குமார்) தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. 14 இடங்களை பெற்றிருந்த ஒடிசாவின் பிஜு ஜனதா தளமும் (பிஜுபட்நாயக்) தேசிய ஜனநாயக கூட்டடணியில் இருந்தது. 9 இடங்களை பெற்ற அதிமுக ஜெயலலிதாவும், 19 இடங்களை வைத்திருக்கும் இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும், 3 இடங்களை வைத்திருந்த மதச்சார்பற்ற ஜனதாதளமும் (கர்நாடக) யாரையும் ஆதரிக்காமல் வெளியே இருந்தனர். 2002ல் குஜராத்தில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் காரணமாக நிதிஷ்குமார், நவீன் பட்நாயக் ஆகியோர் பா.ஜ.க.வுடன் கசப்புணர்வில் இருந்தனர். பீகாரில் 18 சதவிதமாக இருக்கும் முஸ்லிம்களின் வாக்குகளை இழந்தால் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் படுதோல்வி சந்திக்கும் என்பதால் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த காரணத்தால் நிதிஷ்குமார் தே.ஜ.கூட்டணியை விட்டு வெளியேறினார். அதே காரணத்துக்காக நவீன் பட்நாயக்கும் (பிஜு ஜனதாதளம்) வெளியேறினார். தமிழகத்தில் அ.தி.மு.கவும், முஸ்லிம்களின் விளிம்பு வாக்குகளை (விணீக்ஷீரீவீஸீணீறீ க்ஷிஷீtமீ) இழக்க விரும்பாமல் பா.ஜ.க கூட்டணியை தவிர்த்தது. மேலும், 40 இடங்களை கைப்பற்றினால் தனக்கும் பிரதமர் பதவிக்கான வாய்ப்பு உண்டு என்று ஜெயலலிதா நம்புகிறார். கம்யூனிஸ்ட்டுகளை கழட்டி விட்டால், ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தருவதாக மம்தா பானர்ஜி தொலைபேசியில் நேரடியாக தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது. இருவரும் அதை மறுக்கவுமில்லை. தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகளை அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விரட்டியதன் மூலம் அக்கட்சி குறைந்தது 10 இடங்களையேனும் பெரும் வாய்ப்பை மம்தா சாதூர்யமாக தட்டிப் பறித்தார் என்றும் கூறலாம்.

                அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளை கருணாநிதி எதிர்பார்த்தார். தமிழக தலைவர்களுக்கு விருப்பம் இருந்துள்ள போதும், தேசிய தலைவர்கள் ஏற்கவில்லையாம். குறிப்பாக, தி.மு.க காரர்களால் மதுரையில் கம்யூனிஸ்ட் (சிறிமி) கட்சியின் மாநகராட்சி உறுப்பினர் லீலாவதி கொலை செய்யப்பட்டார். அதனால் திமுகவுடன் ஏற்பட்ட கசப்புணர்வு கம்யூனிஸ்ட்டுகளுக்கு தீரவில்லை. லீலாவதி கொலையில் தண்டனை பெற்றவர்களை திமுக அரசு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் விடுதலை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற சிறிய கட்சிகளை தி.மு.க, அதிமுக தொடர்ந்து அலட்சியம் செய்து வந்திருப்பதால் அவர்கள் பா.ஜ.க வசம் சென்று விட்டனர். இந்த மூன்றாவது அணி கனிசமான வாக்குகளை பெரும் இடங்களில் தி.மு.க அல்லது அ.தி.மு.க வேட்பாளர்கள் தோற்க நேரிடும். தொடக்கத்தில் பா.ஜ.க தலைமையிலான அணி, 15க்கும் கூடுதலாக இடங்களை பிடிக்கும் என்று புதிய தலைமுறை, தினத்தந்தி தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்புகளை தினித்தன. ஆனால் தேர்தலுக்கு முந்திய வாரம், பா.ஜ.க கூட்டணிக்கு 5 இடங்கள் தாம் கிடைக்கும் என்று பம்மின. அதாவது முதலில் சொன்ன கருத்துக் தினிப்பு வெற்றிக்கு வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிக்க வகையாக மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி. ஆனால் தமிழகத்தில் சராசரியாக 72.86 சதவீத வாக்குகளே பதிவாகின. மோடி அலை வீசுவதாக சொல்லப்பட்ட போதும் வாக்குபதிவு சராசரி விகிதமாகவே இருக்கிறது. அதிகபட்சமாக 90% சதவீதத்தையும் குறைந்த பட்சமாக 80 சதவிதத்தையும் சராசரியாக 85% சதவிதத்தையும் தாண்டினால் தான் மோடி அலைக்கு மரியாதை. வன்னியர்களும் தலித்துகளும் மோதிக் கொள்ளும் வடமேற்கு தொகுதிகளில் தான் 75% தாண்டி வாக்குபதிவாகி உள்ளது.

                தர்மபுரியில் அதிகபட்சமாக 80 சதவிதத்தை தாண்டி வாக்குகள் பதிவானது. இங்கு தலித்துகள் வாக்கு முழுவதுமாக அ.தி.மு.கவுக்கோ, தி.மு.கவுக்கு சாயுமானால் தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோற்பது உறுதியாகவிடும். மிகவும் குறைவாக தென் சென்னையில் 58% சதவித வாக்குகள் பதிவானது. இங்கு தி.மு.க.வோ அதிமுகவோ 25 சதவித வாக்குகளை பெற்றாலும் பாரதியஜனதாவின் இல கணேசன் தோற்பது உறுதி. பா.ஜ.கவின் மிகப்பெரிய ஆதரவு தொகுதியாக கருதப்படும் தென்சென்னையில் மாநில சராசரியான 72 சதவீத வாக்குகள் கூட பதிவாகவில்லை என்பதில் இருந்து தமிழகத்தில் மோடிக்கு செல்வாக்கு இல்லை என தெரிகிறது.

                இம்முறை முஸ்லிம் மற்றும் தலித் கட்சிகள் முற்றாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. தி.மு.கவின் கட்சி வாக்குகள் 22 சதவீதம் பதிவானதாக எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்களின் 80 சதவித வாக்குகளும் தலித்துகளின் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளும் தி.மு.கவுக்கு கிடைத்தால், மொத்தத்தில் சுமார் 30 முதல் 35 சதவீத வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கக்கூடும். மீதமுள்ள 37 சதவீத வாக்குகளை அதிமுக, பாஜக கூட்டணி, கம்யூனிஸ்ட்டுகள், ஆம்ஆத்மி மற்றும் சுயோட்சைகள் பிரித்து கொள்ள நேரிடும். முஸ்லிம் வாக்குகள் ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மேற்கு மற்றும் வடக்கு மேற்கு தொகுதிகளில் தி.மு.க கூட்டணியின் வெற்றி பாதிக்கக்கூடும். ஆனால் தேர்தலுக்கு முதல் நாள் இரவில் அ.தி.மு.க கொடுத்ததாக செல்லப்படும் பணம் சில இடங்களில் வேலை செய்தால் பரவலாக வாக்குகள் பிரிந்து அது பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு உதவினாலும் உதவலாம்.

                பா.ஜ.கவுக்கு செல்வாக்குள்ள குஜராத் (26 இடங்கள்) ராஜஸ்தான் (25 இடங்கள்) மத்திய பிரதேசம் (29) சத்திஸ்கர் (11) ஆகிய மாநிலங்களில் சுமார் 60 முதல் 70 இடங்களை பாரதிய ஜனதா பிடிக்கக்கூடும். இதுவரை கேரளா, ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் (கோவா தவிர) பா.ஜ.க வெற்றி பெற்றதில்லை. மோடி அலையின் காரணமாக இங்கெல்லாம் அதிக இடங்களை பா.ஜ.க கைப்பற்றும் என்று நம்புகின்றனர். கேரளம் (20) ஆந்திரம் (42), கர்நாடகம் (28), ஒரிசா (21), தமிழ்நாடு (39) உள்ளிட்ட தென் மாநிலங்களில் சராசரியாக பாதிக்குப்பாதி சுமார் 76 இடங்களை கைப்பற்றுவோம் என்று பா.ஜ.க தலைமை தெரிவிக்கிறது. உண்மையில் இது சாத்தியமில்லை. கேரளாவில் காங்கிரசும் முஸ்லிம்லீக்கும் கூட்டணி அமைத்துள்ளன. ஆளும் கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் கம்யூனிஸ்ட்டுகளுக்கே போகும். ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்துக்கே செல்வாக்கு. இம்முறை பா.ஜ.க அங்கு தனித்து விடப்பட்டிருக்கிறது.

ஆந்திராவில் 2004 தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்தும் ஓரிடத்திலும் பா.ஜ.க வெல்லவில்லை. தெலுங்குதேசம் 42க்கு 6 இடங்களை மட்டும் பிடித்தது. 2009ல் பா.ஜ.க தனித்து போட்டியிட்டு ஓரிடமும் பிடிக்கவில்லை. தெருங்குதேசம் தனித்து போட்டியிட்டு 5/42 இடங்களை மட்டும் பிடித்தது. 2014ல் மீண்டும் பா.ஜ.க, தெலுங்கு தேசம் கூட்டணி அமைந்துள்ளது. இப்போது மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதால் தெலுங்கானாவுக்கும், சீமாந்திராவுக்கும் தனித்தனியே சட்டமன்ற தேர்தல்கள் நடந்து வருகின்றன. நாடாளுமன்ற தொகுதிகளில் 25 சீமாந்திராவுக்கும் 17 தெலுங்கானாவுக்கும் பிரிந்துள்ளன. தெலுங்கானா பிரிவினையை ஆதரிப்பதால் அங்கு பா.ஜ.க இடம்பிடிக்க வாய்ப்பில்லை. தெலுங்கானாவில் ராஷ்டீரிய சமாதி கட்சியுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க முயற்சித்தது. ஆனால் இரண்டு பக்கமும் தன்னுடன் மட்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) பா.ஜ.கவுக்கு நெருக்கடி கொடுத்ததால், பா.ஜ.க தெலுங்கானாவில் ராஷ்டீரிய சமிதி கட்சியை கழற்றிவிட்டுள்ளது. தெலுங்கானா பிரிக்கப்பட்டால் கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிடுவேன் என்று சொன்ன சந்திரசேகர ராவ் (ராஷ்டீரிய சமிதி) காங்கிரசை ஏமாற்றினார். பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க நினைத்தார். இறுதியில் எந்தபக்கமும் போகமுடியாமல் தனித்து விடப்பட்டுள்ளது சமிதி. இக்கட்சியை சேர்ந்த விஜயசாந்தி தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இணைந்தார். தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி வெற்றால் விஜயசாந்தி மாநில முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

                ஆந்திராவில் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய சிரஞ்சீவி, கட்சியுடன் காங்கிரசில் இணைந்துள்ளார். நாயுடு, ரெட்டி, லிங்காயத்து, ராஜு, ராவ் என்று சாதி ஆதிக்கம் இருப்பதால் தலித் இனப் பிரிவை சேர்ந்த சிரஞ்சிவி, ஆந்திராவில் உச்சநட்சத்திரமாக இருந்த போதும் அரசியலில் வெற்றி பெற அது உதவவில்லை. அவரது தம்பி பவண் கல்யாண் இப்போது பாரதியஜனதாவில் சேர்ந்திருக்கிறார். கணிசமான ரசிகர்கள் பவனுக்கு இருப்பதால் ஆந்திராவில் சில இடங்களையாவது முதன் முறையாக பிடிக்கமுடியும் என பா.ஜ.க கருதுகிறது. ஆனால் பவன் கல்யானுக்கு தெலுங்கானாவில் செல்வாக்கு இல்லை. மோடி அலைக்கு ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், பவன் கல்யாண் என்று தெற்கே சினிமா நடிகர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மகாராட்டிராவில் கணக்கு வழக்கில்லாத சொத்துகள் மற்றும் வழக்குகள் வைத்திருக்கும் சல்மான்கான், சாருக்கான் போன்றவர்கள் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருப்பதை அவரது ரசிகர்கள் சமிக்கையாக கொள்வார்களா என்று தெரியவில்லை. கேரளாவில் ஒரு நட்சத்திர ஆதரவும் கிடைக்கவில்லை. ஆக சினிமா நடிகர்களின் காலைப் பிடித்துக் கொண்டுதான் மோடி அலை முன்னேறிவர வேண்டியிருக்கிறது.

கர்நாடகத்தில் 2009 தேர்தலில் 28க்கு 19 இடங்களை பா.ஜ.க பிடித்திருந்தது. 2007ல் மாநில அரசுக்கு வந்து 2012க்குள் மூன்று முதலமைச்சர்களை மாற்றியது. அதுவும், ரெட்டி சகோதரர்களின் ஊழல், எடியூரப்பா வெளியேறியது போன்ற காரணங்களால் காங்கிரசிடம் ஆட்சியை கொடுத்தது. 2007 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தாலும் 28 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால் காங்கிரஸ் 4 கூடுதலாகி 32 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தும் எதிர்கட்சியானது. இப்போது, ஆளும் கட்சியாக இருப்பது காங்கிரசுக்கு கூடுதல் பலம். லிங்காயத்துகள் வாக்குகளை இழந்ததால் தான் கர்நாடகத்தில் தோற்றதாக பாஜக கருதுவதால், லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் எடியூரப்பா மீது ஊழல் வழக்குகள் உள்ள நிலையிலும், வாக்கு வங்கிக்காக அவரை மீண்டும் பா.ஜ.க சேர்த்துக் கொண்டது. அவர் தனது கட்சியுடன் மோடி முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். பா.ஜ.க ஆட்சியில் ராம்சேனா என்ற தீவிரவாத அமைப்பு காதலை ஒழிக்கிறேன் பேர்வழி என்று பூங்காக்கள் மனமகிழ் இடங்கள் என்று தேடிச் சென்று இளைஞர்களையும் இளம் பெண்களையும் அடித்து துவைத்தனர். இதனால் கர்நாடகாவில் பாரதியஜனதா இளம் தலைமுறை வாக்குகளை இழந்திருக்கிறது. ராம்சேனாவின் தலைவர் முத்தலிக் சமீபத்தில் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.கவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது பெரும் அதிர்வலையை உண்டாக்கியதால் தேர்தல் ஆதாயம் கருதி 5 மணி நேரத்தில் பா.ஜ.கவில் இருந்து முத்தாலிக் நீக்கப்பட்டார். அதிர்ச்சியடைந்த முத்தாலிக், பாபர் மஸ்ஜித்தை இடித்த அத்வானியும், 2000 பேரை கொன்ற மோடியும் பா.ஜ.கவில் இருக்கும் போது நான் இருந்தால் என்ன தப்பு என்று கேட்டார். இந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் பா.ஜ.க அதிகமாக 10 இடங்களை பிடிக்கலாம். கூட்டி கழித்து பார்த்தால்,

கேரளா                                                                             0/40

தமிழ்நாடு/பாண்டி                                                                5/40

சீமாந்திராவில்                                                         5/25

கர்நாடகாவில்                                                          10/28

ஒரிசாவில்                                                                   5/21

தெலுங்கானா                                                            0/17

என தென்மாநிலங்களில் மொத்தம் 25 இடங்களையே பா.ஜ.க. பிடிக்க முடியும்.

பாஜக செல்வாக்குள்ள குஜராத்                24/26

ராஜஸ்தான்                                                                20/25

மத்திய பிரதேசம்                                                  18/29

சதிஸ்கர்                                                                        8/11

என மொத்தம் 75 இடங்களை அதிகபட்சமாக பிடிக்க முடியும்.

தவிர,

மகாராட்டிராவில்                                                  25/48

உத்திரபிரதேசத்தில்                                           20/80

பீகாரில்                                                                           10/42

தில்லியில்                                                                  4/7

பஞ்சாபில்                                                                     4/13

அரியானாவில்                                                        1/10

உத்திரகண்டில்                                                        3/13

ஜார்கண்டில்                                                                               5/14

அஸ்ஸாமில்                                                                            2/14

மேற்கு வங்கத்தில்                                                              0/42

கோவாவில்                                                                                3/3

என அதிகபட்சமாக 77 இடங்களை பிடிக்கலாம். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 15 தொகுதிகளிலும், 7 யூனியன் பிரதேச தொகுதிகளிலும் பா.ஜ.கவுக்கு இடங்கள் இல்லை.

                ஆக மொத்தம் 29 மாநிலங்களில் உச்சபட்சமாக 177 இடங்களை பிடிக்க கூடும். இது பாரதிய ஜனதா இதுவரை எடுத்ததில் அதிக இடங்களாக இருக்கும். இது குறையவும் வாய்ப்புன்டு.

                இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்து சந்தித்த 2004 பொதுத்தேர்தலில் 138 இடங்களையும்; காங்கிரசு நாட்டை சீரழித்து விட்டது என்று சொல்லி சந்தித்த 2009 பொது தேர்தலில் முன்னதில் 20 இடங்கள் குறைந்து 118 இடங்களையும் மட்டுமே பா.ஜ.க பிடித்திருப்பது முன்னுதாரணம். இப்போதும் காங்கிரஸ் நாட்டை அழித்து விட்டது என்று கூறுவதை தவிர பா.ஜ.கவிற்கு வேறு வார்த்தைகள் இல்லை.

                பா.ஜ.க சொல்வது போல் உண்மையில் மோடி அலை என்பது இருக்குமானால் அது தனித்தே நிச்சயம் 300க்கும் மேலான இடங்களை பிடிக்க முடியும். ஆனால் இதுவரை வாக்குபதிவு நடந்த இடங்களில் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தவிர வேறெங்கும் வாக்குபதிவு 80 சதவீதம் எட்டவில்லை. மோடி அலை இல்லை என்பதற்கு இது உதாரணம்.

                அடுத்ததாக, முலாயம்சிங், மாயாவதி, மம்தாபானர்ஜி, நிதிஷ்குமார், சரத்பவார், நவீன் பட்நாயக், கருணாநிதி, ஜெயலலிதா, தேவகௌடா, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோர் சராசரியாக 20 இடங்களை பிடிப்பதாக வைத்துக் கொண்டாலும் 200 இடங்களை மாநில கட்சிகள் பிடிக்கவே வாய்ப்பிருக்கிறது. மோடி பிரதமராக ஆசைப்படும் அதே நேரம் தான் நாட்டில் பலருக்கும் பிரதமராகும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. மாநில கட்சிகளில் அதிகபட்சமாக 40க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் வாய்ப்பு உ.பியில் மாயவதி, முலாயம்சிங் (80க்கு) மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி (42க்கு) தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி (40க்கு) ஆகியோருக்கு மட்டுமே இருக்கிறது. 40க்கும் மேல் இடம் பிடிக்கும் இவர்களில் யாராவது பிரதமராக வர காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க கூடும். 20க்கும் குறைவாக இடங்களை பிடித்தால் அது சாத்தியமில்லை. ஆனால் 11 இடங்கள் மட்டும் வைத்துக் கொண்டு தேவகௌடா பிரதமரானார்.

                இப்போது, காங்கிரசுக்கு 206 இடங்கள் உள்ளது. தமிழகத்தில் 8 இடங்களையும் ஆந்திராவில் கடந்தமுறை பெற்றிருந்ததில் 31க்கு 20 இடங்களையும் உறுதியாக இழக்கிறது. மற்ற மாநிலங்களில் சிக்கல் இல்லை. மேடி அலை அல்லது 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்ததால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பு, நிலக்கரி, அலைகற்றை, ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க தவறலாம். காங்கிரஸ் இழந்தால் 60 முதல் 80 இடங்களையே இழக்க நேரிடும். மீண்டும் 120 முதல் 160 இடங்களை நிச்சயம் காங்கிரஸ் பிடிக்க கூடும். மாநில கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவளித்தால் சுமார் 280 முதல் 310 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கலாம். அதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.

                பாரதியஜனதா 200 இடங்களை பிடிப்பதாக இருந்தாலும் பெரும்பான்மைக்கு மீதம் 72 இடங்கள் வேண்டும். அப்போது மாநில கட்சிகள் விலை பேசப்படலாம். அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்), சந்திரசேகரராவ் (தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி) ஆகியோர் மட்டுமே மோடியை பொருட்படுத்தாமல் ஆதரவளிக்க முன்வரலாம். ஆனால் மோடி ரத்தக்கறை படிந்தவர், அவரை பிரதமராக ஏற்கமாட்டோம் என்று கூறித்தான் நிதிஷ்குமாரும், நவீன் பட்நாயக்கும் பா.ஜ.க கூட்டணியைவிட்டு வெளியேறினார்கள். மம்தாவும், முலாயமும், மாயாவதியும், கருணாநிதியும் அதேயே கூறுகிறார்கள்.

                மோடியை பிரதமராக ஏற்க விருப்பம் தெரிவித்துள்ள, ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சிவசேனா, அகாலிதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்), பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க கட்சிகள் இணைந்து அதிகபட்சம் 30 முதல் 50 இடங்களை கொடுக்கலாம். அப்போதும் மோடி பிரதமராக 10 முதல் 20 இடங்கள் கூடுதலாக தேவைப்படலாம். ஒருவேளை தமிழகத்தில் சுமார் 20 முதல் 30 இடங்களை அ.தி.மு.க எடுத்து பா.ஜ.கவுக்க ஆதரவு கொடுத்தால் மோடி பிரதமராகிவிடலாம். காவிரி நீர்பிரச்சனையில் பா.ஜ.கவும் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளதாக ஜெயலலிதா குறை கூறியுள்ளார். குஜராத்தைவிட தமிழகம்தான் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சிக்கு உதாரணம் மோடி அல்ல இந்த லேடிதான் என்றார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் இரண்டு திராவிட கட்சிகளும் சண்டையிட்டுக் கொண்டு தமிழ்நாட்டை சீரழித்துவிட்டதாக மோடி குற்றம் சாட்டினார். பிரதமர் பதவிக்கு தன்னை விட தகுதி குறைந்தவர் மோடி என்று சொல்லிவிட்டு பின்னர் தகுதி குறைவான மோடி பிரதமர் ஆக ஜெயலலிதாக ஆதரவு கொடுப்பார் என்றும் நம்பலாம். அவர் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்குகள் கிழக்கு மேற்காக அவரை நெருக்கும் போது வடக்கே அமரும் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்காமல் என்ன செய்ய முடியும்.

                மத்திய அரசு சி.பி.ஐ.யை கொண்டு மாநில அரசுகளை மிரட்டுகிறது என்று முலாயம் சிங் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார். காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு என்னும் போது கூடுதல் இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதிமுக காங்கிரசுக்கே வாய்ப்பளிக்காலாம்.

                அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழி, ஆ.ராசா, தயாளு அம்மாள் மீது மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் யாரும் யாரையும் ஆதரிக்கலாம். மீண்டும் காங்கிரஸ்தான் ஆட்சிக்குவர முடியும் என்று திமுக நம்புகிறது. பா.ஜ.க, காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று மாநில கட்சிகள் நம்புகின்றன. தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்றுதான் பா.ஜ.கவும் உள்ளுக்குள் நம்புகிறது. அதீத நம்பிக்கை வேண்டாம் என்று அத்வானி தனது முந்தைய அனுபவத்தைக் கொண்டு கட்சியை எச்சரித்தார். உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி, அத்வானி, ஜஸ்வந்த் சிங் மோடி அலை இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்து விட்டனர். எனினும் புதிதாக களம் இறங்கியிருக்கும் ஆம்ஆத்மி பிரிக்கும் வாக்குகள் யாருக்கு ஆதாயம் என்பதில் தான் சிக்கல். காங்கிரசுக்கும், இதர மாநிலகட்சிகளுக்கும் கிடைக்கும் இடங்களை ஆம்ஆத்மி கெடுத்தால் அதுதான் மோடி அலை. பா.ஜ.கவுக்கு விழவேண்டிய காங்கிரஸ் எதிர்ப்புவாக்குகளை மட்டும் எடுத்து பா.ஜ.கவின் வெற்றி வாய்ப்பை தடுத்துவிட்டால் ஆம்ஆத்மி காங்கிசின் பி&டீம் என்று பா.ஜ.க இன்னும் அழுத்தமாக சொல்லும். ஆம்ஆத்மிக்கு உண்மையிலேயே மக்களிடத்தில் செல்வாக்கு இருக்குமானால் இந்த தேர்தலில் அது மிகப்பெரிய அரசியல் நாசத்தையே ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால் எப்போதையும் போல கூட்டணிகளுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு அரசு ஏற்பட கூடும். அதிக பட்சம் காங்கிரசுக்கே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உண்டு.

                மோடி பேசுவது அனைவருக்கும் பிடித்திருக்கிறது. நமக்கும் பிடித்திருக்கிறது. ஆனால், அவரது கடந்தகால தவறுகளும், வரலாறும் இப்போது பேசிவருவதும் இந்தியாவில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிறது. அவர் மீது போலி என்கவுண்டர் வழக்குகள் உள்ளன. 2006 முதல் 2008வரை நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய வகுப்பு வாத அமைப்புகள் மீது வழக்குகள் உள்ளன. குஜராத் படுகொலை வழக்குகள் இன்னும் முற்றிலுமாக தீரவில்லை. கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்புவந்த வழக்குகள் மேல்முறையீட்டில் உள்ளன. மோடி பிரதமராகும் போது, இவை அனைத்தும் நீர்த்துபோகும் ஆபத்து இருக்கிறது. மேலும், சிறுபான்மை மக்கள் மீது உளவுத்துறையைக் கொண்டு பொய்வழக்குகளைப் போடமுடியும். முற்றிலும் மதவெறியாகிப்போன ஊடகங்கள் அதை ஊதிப் பெரிதாக்கமுடியும். மோடி சொல்லும் வளர்ச்சியைத்தாண்டி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஆபத்துகளை என்னித்தான் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் மோடிக்கு வாக்களிக்க மறுத்துள்ளனர். இந்த தேர்தலில் மோடி அலை இருப்பதாக அச்சுறுத்தப்பட்டதால் விழுந்த வாக்குகளில் மோடி எதிர்ப்பலையே அதிகமாக தெரிகிறது. முடிவை பொறுத்திருந்து பார்க்கலாம்.                

இதில், மக்களிடத்தில் எந்த செல்வாக்கும் பெறாமல் மொத்தம் 50 இடங்களை கூட பெறமுடியாமல் முச்சந்தியில் நிற்கும் இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும் 16வது மக்களவையை உருவாக்குவதில் வெறும் பார்வையாளராகவே இருக்க முடியும். இது ஒரு கணிப்பு அவ்வளவுதான் இதில் கூடுதல் குறைவு இருக்கலாம். அல்லது தலைகீழாக மாறியும் விடலாம்.

Pin It