புரட்சிகர அரசியல் போராட்டம் என்பது புரட்சிகர நடைமுறையைக் கொண்டதாகவே உள்ளது. இப்புரட்சிகர நடைமுறையில் தேவைப்பட்டால் ஆயுதங்களும் (அது எதுவாகவும் இருக்கக் கூடும்) கையாளப்படும். ஆனால் தோழர் கார்முகிலின் 'அரசியல் போராட்டத்தின் நீட்சிதான் ஆயுதப் போராட்டம்' என்னும் நிலைப்பாடு என்பது ஆயுதம் தாங்கிய நடவடிக்கையில்லாமல் வெறும் கோட்பாடுகளை மட்டும் பேசிக் கொண்டே காலத்தை கடத்தும் சட்டவாதமேயாகும்.

S.O.C-யிலிருந்து தோழர் கார்முகில் வெளியேறியதற்கான முரண்பாடுகளில் முக்கியமானது என்னவென்றால், அரசியல் - ஆயுதப் போராட்டங்களை ஒரே நேரத்தில் அக்கம் பக்கமாக நடத்துவதென்ற நிலைப்பாட்டின் மீதான முரண்பாடேயாகும். இதை விமர்சித்த தோழர் கார்முகில் "கட்சியில் ஒரேயொரு ஆயுதம் தாங்கிய நபர் கூட இல்லாமல் அரசியல் போராட்டத்திற்கு இணையாக ஆயுதப் போராட்டம் நடக்கும் என S.O.C கூறுவது கற்பனையும், இடது சந்தர்ப்பவாதமும் ஆகும்" என்றார்.

indian army in Kashmirஅதற்கு மாறாக புரட்சிகர நிலைப்பாடென அவர் முன்வைத்தது கட்சியில் ஆயுதம் தாங்கிய நபர்களை உருவாக்குவோம் என்பதல்ல; எவ்வித ஆயுத நடவடிக்கையும் தேவையில்லை, நாடு தழுவிய அல்லது பிரதேசந் தழுவிய அரசியல் எழுச்சிகளை உருவாக்குவது என்பதேயாகும்.

திட்டம், மூலவுத்தி, செயலுத்தி என்றால் என்ன? என்கிற நூலில் அவர் கூறுவதாவது-"அரசியல் வளர்ச்சியின் குறிப்பிட்ட கட்டத்தில் நாடு தழுவிய அல்லது பிரதேசந் தழுவிய அரசியல் எழுச்சிகள் நடத்தப்படும் போது அது வெற்றிகரமாக அமைய அரசியல் போராட்டக் கமிட்டிகளும், போராட்டங்களுக்குத் துணையாக ஆயுதம் தாங்கிய தற்காப்புக் குழுக்களும் கட்டப்படும்..." பக்-45.

சரி, நாடு அல்லது பிரதேசம் நிறைந்த அரசியல் எழுச்சிக்கு என்ன செய்வது? அதை அதே நூலின் 42-ஆம் பக்கத்தில் அவர் கூறுவதாவது- "பிற்போக்கு ஆளும்வர்க்கங்கள் பல்வேறுபட்ட எதிர்புரட்சிகர, பிற்போக்குவாத கருத்துக்களை, சித்தாந்தங்களை, நிறுவனங்களைப் பரப்பி பெரும்பாலான மக்களைத் தம் பின் அணிதிரட்டிக் கொண்டுள்ளன. சாதிகள், மதங்கள், பாராளுமன்றவாத முதலாளிய அரசியல் கட்சிகள், திரிபுவாத கட்சிகள் மற்றும் பல சமூக கலாச்சார நிறுவனங்கள் ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான அரசியல் படையை உருவாக்கி நிறுத்தி வருகின்றன."

தோழர் கார்முகிலுக்கு அரசின் சீருடை அணிந்த படைகளைத் தவிர ஆளும்வர்க்கத்தின் பிற படையமைப்புகள் குறித்து தெரியவில்லை. இதன் பொருள் அவருக்கு இந்த சமூக அமைப்பைக் குறித்து தெளிவில்லை என்பதேயாகும். அதனால்தான் மக்கள் அனைவரும் பிற்போக்கு கருத்துக்களால் மட்டுமே ஆளும்வர்க்கத்தின் கீழ் அமைப்பாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார். தலித்துகளும், இசுலாமியர்களும், பழங்குடியினங்களும் ஆளும்வர்க்கத்தின் கருத்துக்களால் மட்டும் அமைப்பாக்கப்படவில்லை. தலித்துகள் சாதியாதிக்க வன்முறையாலும், இசுலாமியர்கள் இந்துத்துவப் பயங்கரத்தாலும், பழங்குடியினங்கள் முதலாளித்துவப் பயங்கரவாதிகளாலும் அடிமைப் (இதை அமைப்பாக்குதல் என்று சொல்ல முடியாது) படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

இதை உணராமல் அவர் மேலும் சொல்கிறார்- "பாட்டாளிவர்க்க இயக்கம் இத்தகைய பிற்போக்கான, எதிர்ப்புரட்சிகர கருத்துகளிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் மக்களை விடுவிக்காமல், புரட்சிகர முற்போக்கான கருத்துகளில், அமைப்புக்களில் மக்களை அணிதிரட்டாமல் எதிரியை அழித்தொழிக்கும், அவர்களுடைய அரசியல் அதிகாரத்தைத் தூக்கி எறியும் யுத்தத்தைத் தொடுப்பதென்பது சாத்தியமேயில்லை."

தோழர் கார்முக்கிலுக்கு ஆயுத நடவடிக்கை என்பது யுத்தம் செய்வதோடு தொடர்புடையதாக மட்டுமே தெரிகிறது. தோழர் கார்முகில் கூறுவது போல், யுத்தம் செய்வதற்கு பரந்துபட்ட மக்களை அணிதிரட்டியிருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் பரந்துபட்ட மக்களை புரட்சிகர அரசியலின் கீழ் அணிதிரட்டும் போது இங்கு உயிர்ப் பலியாகிற மோதல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

தலித் மக்களை அமைப்பாக்குவதென்றால் சாதியாதிக்கப் பயங்கரவாதிகளையும், அவர்களின் தாக்குதல்களையும் எதிகொள்ள வேண்டியிருக்கிறது. கூடவே அரசின் கைக்கூலி தலித் அமைப்புகளின் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இசுலாமியர்களை அமைப்பாக்குவதென்றால் இந்துத்துவப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கூடவே அரசின் சதி மற்றும் தாக்குதல்களையும் எதிகொள்ள வேண்டியிருக்கிறது. பழங்குடியினங்களை (மேற்குத் தொடர்ச்சி மலை, காடுகளின் மக்கள்தான்) அமைப்பாக்குவதென்றால் அரசு மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் பயங்கரவாதத்தை எதிகொள்ள வேண்டியிருக்கிறது.

தொழிலாளர், விவசாயி, மகளிர், மாணவர், மீனவர் என சமூகப் பிரிவினர்களை அமைப்பாக்கும் பணிகளின் போது ஆளும்வர்க்க கைகூலிகளின் சீர்குலைவுகளும், அரசு மற்றும் கைக்கூலிகளின் நேரடி, மறைமுகத் தாக்குதல்களும் தவிர்க்க முடியாததாகும். எனவே மக்களை புரட்சிகர அரசியலின் கீழ் அமைப்பாக்கும் புரட்சிகர நடைமுறை என்பது தேவைக்கேற்ப ஆயுதம் தாங்கும் நடவடிக்கையோடு இணைந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது.

 ஆனால் தோழர் கார்முகில் கூறுவது என்னவென்றால்-"எனவே கட்சித்திட்டத்தில் குறிக்கப்பட்டிருக்கும் இலக்கை நோக்கி கட்சியின் சரியான அரசியல் மூலவுத்தி மற்றும் செயலுத்தி கோட்பாடுகளின் அடிப்படையிலான செயல்பாடுகள் மூலம் பரந்துபட்ட மக்களை அரசியல்படுத்தவும், புரட்சியை நோக்கி அமைப்பாகத் திரட்டவும் பாட்டாளி வர்க்கம் முக்கியமான கவனம் செலுத்த வேண்டும். அரசியல் பிரச்சாரங்களையும், அமைப்புகளையும், போராட்டங்களையும் நாடெங்கும் கட்டமைக்க தீவிரமான கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். புரட்சியின் முக்கியமான பகுதியை, பெரும்பகுதியை இவ்வகையில் அரசியல் போராட்டத்தின் மூலம் நிறைவேற்றுவது அவசியமாகும். அரசியல் போராட்டம் தீவிரமாக முன்னேறும் பகுதிகளில் அப்போராட்டம் மேலும் முன்னேறிச் செல்ல ஆயுதமேந்திய தற்காப்புக் குழுக்கள் தேவைப்படும் .."

எந்தத் தடையும் இல்லாமல் அரசியல் போராட்டம் தீவிரமாக முன்னேறும் என்றும், அது நாடு தழுவிய, பிரதேசந் தழுவிய அளவிலான அரசியல் எழுச்சியை உருவாக்கும் என்றும் தோழர் கார்முகில் கூறுகிறார். இந்தப் பணிதான் புரட்சிக்கான காலத்தின் பெரும்பகுதியை (அரசியல் போராட்டத்தின் நீட்சி...) எடுத்துக்கொள்ளும் என்கிறார். அதற்கு கட்சியின் திட்டம் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். (இதைத்தான் அவர் இன்றுவரை, கட்சியின் அரசியல் கோட்பாடுகளைப் பற்றி கொள்ளுங்கள்; அதனை நடைமுறைப்படுத்துங்கள் என்று கூறி வருகிறார்.)

 தோழர் கார்முகில் S.O.C-யில் ஆயுதம் தாங்கிய நபர்களே இல்லையென்றது ஆயுதம் தாங்கிய நபர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலல்ல. ஆயுதம் தாங்கிய நடவடிக்கைக்கான அவசியமே இல்லை என்பதை வலியுறுத்தவேயாகும். அரசியல் போராட்டம் தீவிரமாக முன்னேறும் போதுதான் ஆயுதமே அவசியம் என்கிறார். மாறாக அரசியல் பிரச்சாரம், அமைப்பாக்குதல், அரசியல் எழுச்சி என்பதை மட்டுமே பேசுகிறார். இவையனைத்துக்கும் கட்சியின் ஆவணங்களை மட்டுமே பற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்.

எந்தத் தடையுமில்லாமல் அரசியல் எழுச்சியை உருவாக்கக் கூறும் தோழர் கார்முகில் இந்த அரசுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். புரட்சிகர அரசியலையும், அமைப்பாக்கும் நடவடிக்கைகளையும் அனுமதிக்கிற சனநாயக அரசு என்று பாராட்டுரை வாசிக்கிறார்.

ஆனால் இந்திய அரசு என்பது புரட்சிகர இயக்கங்களையும், புரட்சிகர மக்களையும் நசுக்கி அழிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அரசாகும். வெள்ளையரின் அடக்குமுறை எந்திரமாகத் தொடங்கித் தொடரும் இந்த அரசு மிகக் கொடுமையானதாகும். 1947-இல் அதிகாரம் கைக்கு வந்த உடனேயே தெலுங்கானா போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த அரசு இது. தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்கள், பஞ்சாப், கஷ்மீர் என அனைத்து மக்களின் போராட்டங்களையும் படுகொலைகள் மூலம் நசுக்கி அழித்தது. நாடெங்கும் நக்சல்பாரி இயக்கத் தோழர்களையும், ஆதரவாளர்களையும் கொன்று குவித்த அரசு இது.

இந்தப் படிப்பினைகளை புரட்சிகர இயக்கங்கள் தொகுத்துக் கொண்டதோ, இல்லையோ, ஆனால் அரசு தொகுத்துக் கொண்டது. மக்கள் தங்களுக்கான இயக்கங்களைக் கட்டி அவை அரசுக்கு அச்சுறுத்தலாக மாறுவதை விட மக்கள் இயக்கங்கள் எனப் போலிகளை உருவாக்கி விட்டு தப்பித்துக் கொள்வதில் தேர்ச்சிப் பெற்ற அரசு இது.

இந்திய அரசானது ஈழ விடுதலைக்கு தங்களின் கைப்பாவை இயக்கங்களை உருவாக்க முயற்சித்ததென உதட்டுக்கும், மூளைக்கும் உறவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். பிந்தரன்வாலே மூலம் பஞ்சாப் போராட்டத்தையும் அப்படித்தான் சீரழிக்க முயன்றது என்பதை நினைவில் கொள்வதேயில்லை.

இவை எல்லாவற்றையும் காட்டிலும் புரட்சிக்கு மிக நெருக்கமான மக்கள் பிரிவினரைக் கண்டறிந்து அவர்களிடையே அரசு ஆதரவு அமைப்புகளைக் கட்டுவதில் கைதேர்ந்த அரசு இது. இந்த அரசின் பின்புலத்தில்தான் வாய்ச்சவடால் தலித் இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் பல ஈழ ஆதரவு இயக்கங்கள் அரசு ஆதரவு குழுக்களேயாகும்.

ஆக இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் புரட்சிகர இயக்கங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து நசுக்கியதோடு அரசின் கைப்பாவைகளாக போலி இயக்கங்களையும் பரவலாக வளர்த்து விட்டு மக்களை காயடித்துள்ளது. போலிகளின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதும், புரட்சிகர சக்திகளின் மேல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதும் இயல்பாகியுள்ளது.

இவ்வாறு அரசின் நடவடிக்கையானது புரட்சிகர இயக்கங்களை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தியுள்ளது. இந்த நிலைமை பலவீனமாக இருக்கிற புரட்சிகர சக்திகளை நசுக்கவும், வேட்டையாடவும் எளிதாகிறது. இப்படி பலவீனமான நிலையிலும் செயலூக்கத்துடன் இருப்பவர்களை கண்டறியவும், காட்டிக் கொடுக்கவும் அரசின் உளவுத்துறையோடு தேர்தல் அரசியல் கட்சிகளின் கீழ்மட்டத் தலைமைகளும் இணைந்தே செயல்படுகின்றன. இந்த வலைப்பின்னலின் மூலம்தான் நேர்மையான தொழிற்சங்கத் தலைவர்களும், தகவல் உரிமைப் போராளிகளும் கூட கொல்லப்படுகிறார்கள்.

எனவே இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் சனநாயகமற்ற கொடுங்கோல் அரசுகளேயாகும்.

அடுத்து வெற்று உபதேசங்களால் மக்களை அமைப்பாக்கிவிட முடியும் என்னும் தோழர் கார்முகிலின் வாதம் என்பது மக்களால் புறக்கணித்து தள்ளப்படுகிற காகிதப் புரட்சியேயாகும்.

புரட்சிகர அமைப்பின் கீழ் மக்கள் அமைப்பாக வேண்டுமென்றால் மக்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பும், பலனும் அதனால் இருக்க வேண்டும். சாதி ஆதிக்கவாதிகளிடமிருந்து, மாத பயங்கரவாதிகளிடமிருந்து, சுரண்டல் ஒடுக்குமுறையாளரிடமிருந்து எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்க முடியாதவர்கள் பின்னால் அமைப்பாக மக்கள் முட்டாள் அல்ல.

தவிர உடனடித் தேவைகளுக்கு பேரம் பேசுவது மட்டுமே என்ற நோக்கிலும் மக்கள் புரட்சிகர அமைப்பின் கீழ் மக்கள் அமைப்பாக வேண்டிய அவசியமில்லை. காரணம், அரசின் ஆதரவு பெற்ற அமைப்புகளே அதை திறம்பட செய்வதால் இவ்வகை அமைப்புகளே மக்களுக்குப் போதுமானதாகி விடுகிறது.

ஆகவே மக்களைத் திரட்டுவதற்கான மந்திரக்கோல் என்று த.நா.மா.லெ.க-வினர் பெருமையடித்துக் கொள்ளும் 'அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம் ' எனும் அரசியல் நிலைப்பாடென்பது மக்களுக்கு துளியும் பயன்படாத வாய்ச்சவாடாலே ஆகும். கூடவே மக்களுக்குத் தேவையாக இருக்கிற புரட்சிகர நடவடிக்கையை கைகழுவிய சட்டவாதமேயாகும். இந்த சட்டவாதத்திற்கு புரட்சிகர முலாம் பூசிய பெருமை தோழர் கார்முகிலையே சாரும். அவரது இந்த கோட்பாட்டு சவடால்களுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பல இயக்கங்கள் அரசியல் போராட்டம் என்ற போர்வைக்குள் சுகமாக குறட்டை விடுகின்றன.

தோழர் கி.வே.பொன்னையனின் புரட்சிகர அறிவுரையும் - புதிய அணிசேர்க்கையும்

தோழர்களே! த.நா.மா.லெ.க குறித்த எனது விவாதம் முகநூலில் தோழர் லெனினின் மாணவனோடுதான் நடந்து கொண்டிருந்தது. அந்த விவாதத்தின் போதுதான் தோழர் கி.வே.பொன்னையன், "த.நா.மா.லெ.க செயல்முடங்கிக் கிடக்கிறதென குணா சொல்வது உண்மைதான். ஆனால் அதற்கு 'அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம் ' எனும் அரசியல் நிலைப்பாடுதான் காரணம் எனக் கூறுவதை நான் ஏற்கவில்லை" என்று பதிவுச் செய்தார். அத்தோடு அவர் எனக்கென்னவென பொறுப்பில்லாமல் போகவில்லை. கீற்றுவில் எனது "அரசின் பயங்கரவாதமும்-அதை மறுக்கும் புரட்சியாளர்களும் மேநாள் அறைகூவல்" வெளிவந்ததைத் தொடர்ந்து த.நா.மா.லெ.க-வின் அரசியல், அமைப்பு, வரலாறு குறித்து விவாதக் கட்டுரையை எழுதினார்.

முகநூல் விவாதத்தில் த.நா.மா.லெ.க-வின் செயல்முடக்கத்திற்கு 'அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம் ' எனும் அரசியல் நிலைப்பாட்டைக் காரணமாக்கக் கூடாதென கருத்திட்டவர், கீற்று கட்டுரையில் நான் அரசியல் நிலைப்பாடுகளைப் பேசாமல் தோழர் கார்முகில் மீது தனிமனித அவதூறு செய்வதாக மாற்றிப் பேசினார். அதற்கு விளக்கமாக

"தமிழ்நாடு மார்க்சிய-லெனினியக் கட்சியின் மீதான எனது விமர்சனமும் தோழர் கி.வே.பொன்னையனின் கரிசனமும்" என்றக் கட்டுரையை எழுதியிருந்தேன். இப்போது அவர் எழுதியுள்ள இரண்டாவது கட்டுரையில் புதிதாக ஒரு குற்றச்சாட்டைக் கூறுகிறார். தமிழ் சமூக நலனில் அக்கறைகொண்டு அவர் விவாதிப்பதாகவும் சம்பந்தமில்லாமல் இடையில் நான் புகுந்து குழப்புவதாகவும் சொல்வதைப் பாருங்கள் "தமிழ் சமூக நலனில் அக்கறைகொண்டு அதிலுள்ள சிக்கல்களை முன்வைத்து விவாதிக்க நான் விரும்புகிறேன். மாறாக திருப்பூர் குணா அல்லரசியமாக விவாதத்தை திசை திருப்புகிறார். த.நா.அ.கு - இ.பொ.க(.மா.லெ) வாக செயல்பட்ட காலத்தில் 1986களில் அமைப்புடன் எனது செயல்பாடுகளை இணைத்துக் கொண்டவன். கட்சி ஈரோடு மாவட்டத்தில் உழவர்கள் நடுவில் செயல்படத் தொடங்கியபோது சென்னிமலைப் பகுதியில் தோழர்களோடு இணைந்து பணிசெய்து அமைப்பையும் விரிவுபடுத்தினோம் எங்களையும் அரசியல், தத்துவார்த்த வழியில் வளர்த்துக் கொண்டோம். அப்படி உருவான தோழர்களில் ஒருவர்தான் முகிலன்.

இவ்வாறான எனது செயல்பாடுகளில் எனது பலம் பலவீனங்களை குழு செயல்முறையின் மூலம் கற்றுக்கொண்டேன்.இப்படி இருக்க எனது செயல்பாட்டில் உள்ள நிலையை நான் தன்னாய்வாக முன்வைத்ததை குணா புரிந்துகொள்ளாமல் எனது குறைபாட்டிற்கு தோழர் கார்முகிலின் அணுகுமுறை தான் காரணம் என்று ஏதோ உளறுகிறார். குணாவின் பொறுப்பற்ற செயல்பாட்டிற்கு இந்த ஒரு அணுகுமுறையே சான்று.

மேலும் தோழர் கார்முகில் அவர்களோடு பத்தாண்டு காலம் உடனிருந்து செயல்பட்டவன் நான். என்னைப் பற்றி நான் சொல்வதையே திரித்து தோழர் கார்முகிலோடு இணைத்து அவதூறு செய்கிறார் குணா. தோழர் கார்முகில் இந்தியப் புரட்சிகர இயக்கத்திற்கு செய்துள்ள கோட்பாட்டு பங்களிப்பை கட்சி வெளியிட்டுள்ள ஆவணங்கள் பறை சாற்றுகின்றன.

வரும் தொடரில் அவற்றை பட்டியல் செய்து நான் முன்வைக்க உள்ளேன். அது வரை குணா பொறுமையாக இருக்க வேண்டும்."

விவாதத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களோடு முறையாக விவாதிக்காமல், இதையெல்லாம் பேச நீ யார்? நான் பேசுவதைக் கேள்! என்னும் தோழரின் போக்கை என்னவென்று சொல்ல? இந்தப் பிரச்சினைகளை எல்லாம் பேச இவனுக்கென்ன தகுதி இருக்கிறது என்னும் அவரது வர்க்க கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் அவரது புதிய வர்க்க அணிசேர்க்கையை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

இது முகநூலில் திருமுருகன் காந்தியின் பதிவின் கீழ் தோழர் கி.வே.பொன்னையன் இட்ட பதிவு –

 "என் பாவத்தைக் கழுவ என் தம்பிகள் தோழர்கள் திருவும்,மகா தமிழ் பிரபாகரனும் வாய்ப்பு தந்துள்ளதாகவே கருதுகிறேன், முள்ளி வாய்க்கால் முற்றம் தமிழனாய் பிறந்தவன், தமிழனாய் இருப்பவன் பார்க்கவேண்டிய தமிழர்களின் காசி, மெக்கா, ஜெருசலேம்.....ஆம் அழிக்கப்படும் நம் இனத்தின் போரை சில கல்வெட்டு காட்சிகளில் காட்டிவிட்டனர். அய்யா நெடுமாறன் இந்த இனத்திற்கு செய்த ஆகப்பெரும் பங்களிப்பு, அண்ணன் மா.நடராசனும் நினைவு கூறத்தக்கவர். நிற்க, நமது கடமையும், பொறுப்பும் நிறைந்து கிடக்கிறது என்பதை ஆவணப்படம் அறைந்து சொல்கிறது. அல்லரசியமாக(அரஜகமாக)காலத்தை கழித்துக் கொண்டிருந்த நான் என் அன்புத்தோழர்கள் மே17 இயக்கத்தவர்களுக்கும், என் சின்னப் புலிக்குட்டி மகா தமிழுக்கும் துணை யாக இருந்து அவர்தம் தேசியவிடுதலைப் பணிகளுக்கு இறுதி வரை உடனிருக்க முள்ளி வாய்க்கால் முற்றத்தில் சூளுரை மேற்கொண்டுள்ளேன். இடையில் குணா என்னும் கொசுக்கடியையும் சமாளிக்க வேண்டியுள்ளது. நன்றி."

 தோழர் கி.வே.பொன்னையனின் உணர்ச்சிவசப்படல் எல்லோருக்கும் தெரிந்ததுதான். வை.கோ-வை நம்பித்தான் தமிழ்நாடும், தமிழீழமும் இருக்கிறதென சொல்வார். பின்பு அதை அவரே மறந்து விடுவார். ஆனால் அவர் இப்போது தன்னை ஒப்புக்கொடுக்கும் இயக்கத்தின் பின்புலம் அறிவாரா? கம்யூனிச எதிர்ப்பையே தனது அடித்தளமாகக் கொண்ட மே17 இயக்கத்திடம் சரணடைந்த தோழர்தான் த.நா.மா.லெ.க-வை காப்பாற்றப் போகிறாராம்!

- திருப்பூர் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It