இப்பொழுதெல்லாம் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை பா.ஜ.க வினருக்குப் 'புனித பத்திரம்' போல் காட்சி அளிக்கிறது. ஆனால் 1998-2004ஆம் ஆண்டுவரை பா.ஜ.கவினர் ஆட்சிக்காலத்தில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டிய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கைகள் வெறும் குப்பை காகிதங்களாகவே அவர்களுக்குக் காட்சியளித்திருந்தன என்பதைக் கீழ்காணும் உண்மைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

vajpayee modi 600

1998-2004 பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் ஹவாலா ஊழல்போல பல ஊழல்கள் நடந்தேறின. ஸ்பெக்ட்ரம் ஊழல், பாதுகாப்புத்துறை ஊழல், தெஹல்கா ஊழல், சென்டார் ஹோட்டல் ஊழல், பங்கு மாற்று ஊழல் என்று பல ஊழல்கள் நடந்தேறியுள்ளன. அவை பற்றிய தொகுப்பு:

1999 ஏப்ரல்: 43,523 கோடி ரூபாய் மதிப்புள்ள கைபேசி துறை ஊழல். அன்றைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். 'இது அரசுக்கு இழப்பு (லஞ்சம்) என்று மட்டும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் மதிப்பு எவ்வளவு என்று கணக்கிட்டு கூறவில்லை. தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு, இந்த இழப்பின் மதிப்பை 43,523 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டுள்ளது. அமைச்சர் மிலிண்ட் டோரா இதைப் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்' என தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

1) கைபேசி லைசென்ஸ் பெற்ற ஆபரேட்டர்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையான 43,523 கோடி ரூபாயை அரசு வசூலிக்காததால் ஏற்பட்ட இழப்பு (லஞ்சம்).

2) அரசின் நலனைத் தவிர்த்துவிட்டு, ஆபரேட்டர்களின் (உரிமம் பெற்றவர்கள்) நலனுக்காகப் பிரதமரே நேரடியாகத் தலையிட்டு, கைபேசி கொள்கையை மாற்றி அமைத்தார்.

3) வழக்கிலிருந்த ஏல முறைக் கொள்கை ரத்துசெய்யப்பட்டு, அதற்குப் பதிலாக வருவாய்ப் பங்கீட்டு முறை புகுத்தப்பட்டது. இதனால்தான் இத்துறையில் இப்பொழுதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

4) அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் ஜக்மோகன், இந்தக் கொள்கை மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, இத்துறையிலிருந்து அவர் உடனடியாக மாற்றப்பட்டார். பிறகு இந்தத் துறை பிரதமரின் நேரடிக் கண்காணிப்பிற்கு வந்தது. முதலில் இம்மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத அட்டர்னி ஜெனரல் சோலி செராப்ஜி, பிறகு சம்மதிக்க வைக்கப்பட்டார்.

5) அன்றைய பிரதமர் வாஜ்பாயின் நேரடிப் பார்வையில் நடந்த ஊழல் இது. 1999ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி கலைக்கப்பட்டபின், காபந்து சர்க்கார் ஆட்சியில் மிகத் துணிச்சலுடன் நடத்தப்பட்ட ஊழல் இது. இந்த ஊழலை முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், தில்லி உயர்நீதிமன்றம், தேர்தல் கமிஷன் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். அதையெல்லாம் மீறி நடந்த ஊழல்!

6) அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு நெருக்கமானவர்கள், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்கள், பிரதமர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் பயன்பெற்றனர் எனக் கூறப்படுகிறது.

(நன்றி: ஊழலோ ஊழல் - தி.சிகாமணி, தி இந்து 08.07.2011, டைம்ஸ் ஆப் இந்தியா 14.09.2011.)

2002 பிப்ரவரி: பல கோடி மதிப்புள்ள கைபேசி துறை ஊழல் (2ஜி ஸ்பெக்ட்ரம்). அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் பிரமோத் மகாஜன் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு மற்றும் விசாரணையின் மூலம் பல உண்மைகள் வெளிவரலாம் என தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

1) உரிம ஒப்பந்தங்களை மீறி, விதிகளை வளைத்து அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அதிகமான சலுகை அளித்தவர் பிரமோத் மகாஜன். முக்கியமாக ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், Limited Mobility வட்டத்திலிருந்து Full Mobility வட்டத்திற்கு மாற்றப்பட்டது. இது விதிமுறைகளுக்கு எதிரான செயலாகும்.

2) மகாஜன் இதை செய்திராவிட்டால், கைபேசி தொலைத் தொடர்பு வட்டத்திற்குள்ளேயே ரிலையன்ஸ் நிறுவனம் வந்திருக்க முடியாது.

3) பிரமோத் மகாஜன் மருமகனுக்கு ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு கோடி ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் கிடைத்துள்ளன.

4) பெரும் நிறுவனங்களுக்காக விதிளை வளைத்து சலுகைசெய்து கொடுத்தால், நல்ல ஆதாயம் கிடைத்திடும் என்பதை மகாஜன் மூலம்தான் தயாநிதிமாறனும் ராசாவும் தெரிந்திருக்க வேண்டும். ஆக, முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாஜன்!.

(நன்றி : பிசினஸ் எக்னாமிக் 12-25 நவம்பர் 2010)

2003 மார்ச்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தப்பட்ட கைபேசி துறை ஊழல், அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் அருண்ஷோரி இதில் சம்பந்தப்பட்டுள்ளார். தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை முழு விவரங்கள் வெளிவரவில்லை. தற்போழுது அமைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு மூலம் உண்மைகள் வெளிவரலாம்.

1) உரிம ஒப்பந்தங்களை மீறி, விதிகளை மாற்றி, ஒருங்கிணைந்த உரிமை சேவை எனும் புதிய விதியைப் புகுத்தி, அதன்மூலம் நிறுவனத்திற்குச் சலுகை அறித்துள்ளார் அருண்ஷோரி.

2) டாடா நிறுவனம் Limited Mobility வட்டத்திலிருந்து Full Mobility வட்டத்திற்குள் புகுவதற்கு இது உதவியது.

3) அருண்ஷோரி உதவாவிட்டால், டாடா நிறுவனம் மொபைல் தொலைபேசி வட்டத்திற்குள் புகுந்திருக்க முடியாது.

4) டிராயின் ஏல முறையைப் பின்பற்றிட வேண்டும் என்ற பரிந்துரையைப் புறந்தள்ளிவிட்ட அருண்ஷோரி, ஒருங்கிணைந்த உரிமை சேவை விதிக்கு மாறினார். மத்திய அமைச்சரவையும் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

5) இதனால் அரசுக்குப் பல கோடிகள் இழப்பு (லஞ்சம்) ஏற்பட்டுள்ளது.

(நன்றி : நீதிபதி சிவராஜ் பட்டீல் அறிக்கை)

2002 மார்ச்: 250 கோடி ரூபாய் மதிப்புள்ள மும்பை ஜூஹீ சென்டார் ஹோட்டல் ஊழல். அன்றைய பங்கு மாற்றுத்துறை அமைச்சர் அருண்ஷோரி இதில் சம்பந்தப்பட்டுள்ளார். 246 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட ஹோட்டலின் மதிப்பு 101 கோடி ரூபாயாகக் குறைந்தது ஏன்? ஏலம் கேட்ட மொத்தம் 20 பேர்களுடன் 16 பேர் ஏன் பின்வாங்கினார்கள்? ஏலம் எடுத்தவரின் நிதிநிலைமை பற்றி நன்கு ஆராயப்படவில்லை. ஏல தொகையைத் தாமதமாகக் கட்டியதற்குரிய வட்டி வசூலிக்கப்படவில்லை. அமைச்சரே ஏலம் எடுத்தவருக்கு ஏல தொகையைச் செலுத்திட நிதி வசதி ஏற்பாடு செய்து கொடுத்தது தவறாகும் என தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

1) மும்மை ஜூஹீ சென்டார் எனும் அரசு ஹோட்டலை 150 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திட்ட அஜித் கோர்கரால் என்பவரால் குறித்த காலக்கெடுவிற்குள் பணத்தைச் செலுத்த முடியவில்லை.

2) அஜித் கேர்கரால் காலக்கெடுவை நீட்டித் தருகிறார் அமைச்சர் அருண்ஷோரி.

3) அமைச்சரே கேர்கராலுக்காக வங்கிகளிடம் பேசி நிதி வசதி ஏற்படுத்தி தந்திருக்கிறார். 150 கோடி ரூபாயை அரசுக்குக் கொடுத்திருக்கிறார். கேர்கரால்.

4) கில நாள்களுக்குப் பிறகு இதே ஹோட்டலை 400 கோடி ரூபாய்க்கு கோர்கரால் விற்கிறார். வங்கிக் கடனாக 150 கோடி ரூபாயை அடைத்துவிட்டு, 250 கோடி ரூபாய் லாபம் பெறுகிறார். வெறும் கையாலேயே முழம்போட்ட சமர்த்தர் கேர்கரால், 250 கோடி ரூபாய் லாபமடைகிறார்! இதற்கு உடந்தை அமைச்சர் அருண்ஷோரி.

5) கோர்கரால் ஹோட்டலை விற்றுவிடுவார் என்று எனக்கு முன்னமே தெரியும் என்கிறார் அருண்ஷோரி.

6) இதையெல்லாம் சுட்டிக்காட்டும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையும் சாடுகிறார் அருண்ஷோரி.

7) இதேபோன்று மும்மை ஏர்போர்ட் சென்டவுட் என்ற அரசு ஹோட்டல் விற்பனையிலும் தகிடு தத்தங்கள் பல நடைபெற்றன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு (லஞ்சம் ஏற்பட்டுள்ளது.

(நன்றி: அவுட்லுக், 23.05.2005, இண்டியன் எக்ஸ்பிரஸ் 07.05.2006)

8) 1999-2003: பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்கு ஏல விற்பனையில் (Disinvestment scam) ஊழல் (இழப்பு). அன்றைய பங்கு மாற்றுத்துறை அமைச்சர் அருண்ஷோரி இதில் சம்பந்தப்பட்டுள்ளார். 'ஏலத்திற்கு விடப்பட்ட அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் ஏலதொகை மிகமிக் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏர்னஸ்ட் தொகையின் மதிப்புகூட மிகமிக குறைவாகவே உள்ளது என தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

1) 'பால்கோ' உட்பட பல பொதுத்துறை நிறுவனங்களின் ஏல மதிப்பீடு மிகவும் குறைவாகவே குறிப்பிடப்படுகின்றன.

2) அமைச்சகம் பின்பற்றிய வழிமுறைகள் அரசுக்கு லாபகரமாக அமையவில்லை; மிகுந்த நஷ்டத்தையை ஏற்படுத்தியுள்ளன என தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

3) ஏலம் எடுப்போரின் எண்ணிக்கையை மிகவும் குறைவாகவே இருந்திடுமாறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

4) போட்டி அதிகம் இல்லாததால், மிகமிகக் குறைவான தொகைளுக்கே அரசு நிறுவனங்கள் விற்கப்பட்டு, அரசு பெருத்த நஷ்டமடைந்துள்ளது.

5) இதைப்பற்றி விசாரித்திட வேண்டும் என இடதுசாரி கட்சிகளும், தலைமைக் கணக்குத் தணிக்கையும் வலியுறுத்தின. ஆனால், வாஜ்பாய் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

(நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ், 26.08.2006)

தேசிய‌ ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலம் (1999-2003):

மத்திய பாதுகாப்புத்துறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழல். அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் சம்பந்தப்பட்டுள்ளார். 'அனைத்துக் கொள்முதல்களிலும் பாதுகாப்பு அமைச்சகம் மிகவும் மெத்தனமாகவே நடந்து வருகிறது. முன்கூட்டியே உபகரணங்களைக் கொள்முதல் செய்வதில்லை. நடவடிக்கைகள் முற்றிலும் முடிந்தபின், உபகரணங்கள் வந்து சேருகின்றன' என தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

1999--2003 காலங்களில் பாதுகாப்புத் துறையில் பல ஊழல்கள் நடந்துள்ளன. பெர்னான்டஸ் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவற்றில் சில....

1) அலுமினிய சவப்பெட்டிக் கொள்முதலில் ஊழல்.

2) சுகாய் ஜெட் விமான பேர ஊழல் 20,000 கோடி ரூபாய்.

3) டி-90 டாங்குகள் பேர ஊழல் 800 மில்லியன் டாலர்.

4) பாரக் ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் பேர ஊழல் - 400 மில்லியன் டாலர்.

5) போலந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட மீட்பு வண்டிகள் பேர ஊழல் - 202 மில்லியன் டாலர்.

6) இலகுவான பைனாகுலர்ஸ் பேர ஊழல்.

7) கண்ணிவெடிகள் அப்புறப்படுத்தும் கருவிகள் பேர ஊழல் - இதை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையே சாடியிருக்கிறது.

8) தென்னாப்பிரிக்கா டெனல் நிறுவனத்திலிருந்து யுத்த தளவாடங்கள் வாங்கியதில் ஊழல்.

இதுபோன்று மேலும் பல ஊழல்கள் தேசிய ஜனநாயக கூட்டணி காலத்தில் நடந்தேறின. சிலவற்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிலவற்றில் புலனாய்வு நடைபெற்றுவருகிறது.

"பெர்னான்டஸ்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அப்படியே இருந்தன. கண் துடைப்பிற்காகவது விசாரணைக் கமிஷன் வரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். எதுவுமே நடைபெறவில்லை. அவரது கரைபடிந்த கரங்கள் கழுவப்படவேயில்லை. கடைசிவரை மந்திரியாகவே பவனி வந்தார்" என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் 'சோலை', 'குமுதம் ரிப்போர்ட்டர்' 22.06.2005 இதழில் குறிப்பிட்டிருக்கிறார்.

(நன்றி : இந்தியா டுடே, 09.05.2005, 23.10.2006)

2001 மார்ச்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள தெஹல்கா ஊழல். முன்னாள் பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமணன், முன்னாள் சமதா கட்சி தலைவர் ஜெயா ஜெட்லி, முன்னாள் பா.ஜ.க மத்திய அமைச்சர் துலிப்சிங் ஜூதேவ் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

'தெஹல்கா இணையதளத்தின் நிருபர்கள் தங்களை ஆயுத தரகர்களாகக் காட்டிக்கொண்டு கொடுத்த பணத்தை பங்காரு லட்சுமணன், ஜெயா ஜெட்லி போன்றோர் பெற்றுக் கொள்வதைப் படம்பிடித்து மக்களுக்கு காட்டியுள்ளனர். இதேபோல் துலிப் சிங் ஜூதேவும் மற்றொரு சமயத்தில் மாட்டிக் கொண்டார். பங்காரு லட்சுமணன் மீதுள்ள வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

1) முன்னாள் பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமணன் தெஹல்கா நிருபர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, "பாதுகாப்புத்துறையில் உங்களுக்கு ஏதேனும் காரியம் நடக்க வேண்டுமென்றால், பிரிஜே மிஸ்ராவையும், மின்சாரத்துறையில் ஏதேனும் நடக்க வேண்டுமென்றால் ரஞ்சன் பட்டாச்சார்யாவையும் (வாஜ்பாயின் மருமகன்) அணுகுங்கள். கூடியமட்டும் பணத்தை டாலராகவே தந்தால் வசதியாக இருக்கும்" என்று அறிவுரை கூறியுள்ளார். இதை நாட்டுமக்கள் அனைவரும் தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தனர்.

2) ஜெயா ஜெட்லி தம் பங்குக்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆவண செய்வதாக உறுதியளிக்கிறார். தொலைக் காட்சியில் இதையும் மக்கள் பார்த்து ரசித்தனர்.

3) 2003ஆம் ஆண்டு சத்திஸ்கர் சட்டசபை தேர்தலின்போது, தெஹல்கா நிருபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட துலிப் சிங் ஜூதேவ் "மகாத்மா காந்திகூட சமூக சேவைக்காகப் பணம் பெற்றிருக்கிறார்" என்று அழுத்திக் கூறினார். இதனால் பத்திரிகையாளர்கள் பி.ஜே.பியை "Bangaru Judev Party" என்று கேலி செய்தனர்.

2004ஆம் ஆண்டு 'துக்ளக்' பத்திரிகை ஆண்டு விழாவில் சோ, "லஞ்சம் வாங்குவது எப்படி என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லையே! கேமராவுக்கு முன்னாள் நின்றுகொண்டு வாங்கிக் கொள்கிறார்களே?" என்று மிகவும் அங்கலாய்த்துக் கொண்டார்.

- ஜி.அத்தேஷ்

Pin It