'ஜனநாயகம்' அமலில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் ஒரு நிகழ்வுதான் தேர்தல் திருவிழாவாகும். அந்தவகையில் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் 16வது மக்களவைக்கான தேர்தல், பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் அமெரிக்க பாணியில், பிரதமர் வேட்பாளரை அறிவித்து மிகவும் படோடபமாக பாரதிய ஜனதா கட்சி களமிறங்கியுள்ளது. வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தம் ஆகிய முதலாளித்துவ ஆபாசங்களை பரப்புரை யுக்திகளாகக் கையாண்டு, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் தனது ஆக்டோபஸ் கரங்களுக்குள் உள்ளிழுக்க பாரதிய ஜனதா கட்சி முயன்று வருகிறது.

Reserve Bank of India 350இளம்வேந்தர் ராகுல் தலைமையிலேயோ அல்லது பச்சைத் தமிழர் சிதம்பரம் தலைமையிலேயோ அதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் அரசு அமைத்தாலும், இந்த டெம்ப்ளேட் வாக்குறுதிகளுக்கு - வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தம் – எதிராக செயல்படும் என நாம் பொருள் கொள்ளத் தேவையில்லை. இந்த 'அரசியல் பிராகிருதிகள்' உடனடியாக அமல்படுத்தப்படும் என்பதில் வாக்காளர்கள் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த 'ஆபாசங்களை' அரங்கேற்றும் என்பதற்கான அறிகுறியாக, தேர்தல் ஆணைய அனுமதியோடு ரிசர்வ் வங்கி அண்மையில் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது இதுதான்: தனியார் நிறுவனங்கள் புதிதாக வங்கி தொடங்க, இதுவரை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுமதி வழங்கிவந்த நடைமுறையை மாற்றி, இனி எப்போது கேட்டாலும் அனுமதி வழங்கும் புதிய நடைமுறையை அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசு 'வங்கி சீர்திருத்தச் சட்டம் 2012'ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து சென்ற ஆண்டு, புதிய வங்கி தொடங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இந்த ஆண்டு புதிய வங்கிகளைத் தொடங்க ஆயத்தமானபோது மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டது. நிதிச்சேவைகளை வழங்கி வந்த டாடா, ரிலையன்ஸ், ஆதித்யா பிர்லா, பஜாஜ் உள்ளிட்ட 27 கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிதாக வங்கிச்சேவை(?) வழங்க அனுமதி கேட்டு ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தன. தேர்தல்ஆணையம் சமிக்ஞை கொடுத்த உடன், இரண்டு நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.

மத்திய அரசின் இந்த அவசர நடவடிக்கைக்கு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு மாறாக அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இது ட்ரெயிலர்தான்... மெயின்பிக்சர் இனிமேல்தான் இருக்கு என்ற தொனியில் பேசினார் ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம்ராஜன். அனுமதி நிராகரிக்கப்பட்ட 25 நிறுவனங்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கார்ப்பரேட் சகாக்களை அவர் ஆசுவாசப்படுத்தினார். பொதுத்துறை வங்கிச்சேவைகளை மேம்படுத்த விரும்பாத மத்திய அரசு, தனியார் வங்கிகள் தொடங்க ஆர்வம் காட்டுவதேன்?

இந்தியாவில் பரந்த அளவில் வங்கிச்சேவையை விரிவுபடுத்த மத்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது. சாதாரணமாக தற்போது நடைமுறையில் உள்ளது போலல்லாமல், மக்களின் தேவைக்கேற்ப விதவிதமான வங்கிகள் இனி இந்தியாவில் செயல்பட ரிசர்வ் வங்கி வழிவகை செய்திருக்கிறது.

வாகனக்கடன், வீட்டுக்கடன், கல்விக்கடன், கடன் அட்டைக்கடன், தனிநபர் கடன் என நீங்கள் எதை வாங்க வேண்டும் என விரும்பினாலும், இதற்கென தனித்தனியான வங்கிகள் உங்களின் வாசற்படிக்கு வந்து கடன் வழங்கத் தயாராகி விட்டன.

உலகின் மாபெரும் சந்தையாக உள்ள இந்தியாவில்,  உற்பத்திப் பொருட்கள் தேங்கி, முதலாளிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தாமல் மக்களிடம் திணிக்கும் பணியை, இனி இந்த வங்கிகள் செவ்வனே நிறைவேற்றும்.

இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்களே வங்கிக் கணக்கு வைத்துள்ள நிலையில் இதெல்லாம் சாத்தியமா என நீங்கள் கேட்டால், முதலாளிகளுக்கு சேவகம் புரியும் அதிகார வர்க்கத்தின் தன்மைகளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

புதிய தனியார் வங்கி தொடங்குவதற்கான நெறிமுறைகளை எளிமைப்படுத்திய கையோடு, வங்கிப் பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடையும் அறிவிப்பு ஒன்றையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. வங்கிச் சேவையைத் தொடர வங்கிகள் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச வைப்புத் தொகையைப் பராமரிக்க இனி அவசியமில்லை என்பதுதான் அந்த அறிவிப்பு. தனியார் வங்கிகள் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச வைப்புத்தொகை அளவு, பொதுத்துறை வங்கிகள் நிர்ணயித்துள்ள தொகையைவிட பன்மடங்கு அதிகமாகும். இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, வங்கிகளின் பக்கம் பொதுமக்களை இழுக்க பாதை அமைத்துக் கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.

சில காலங்களுக்கு முன்பு செல்ஃபோன் பயன்பாட்டை அதிகரிக்க ADAG நிறுவனம் ரூபாய் 500/க்கு செல்ஃபோன் விற்பனை செய்ததை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. இப்போது நம்முடைய சட்டைப் பையில் ஐந்து ரூபாய்கூட இருக்கக் கூடாது என நினைக்கின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள். செல்ஃபோன் நுகர்வுக்கு அடிமையாக்கிய பின், ஐந்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் வாய்ப்பையும் வழங்கி, மக்களை மயக்க நிலையிலேயே வைத்திருப்பதில் குறியாக இருக்கின்றன தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். அரசிடமிருந்து அலைக்கற்றையை சொற்ப விலைக்கு வாங்கி, கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன இந்த பகாசுர நிறுவனங்கள்.

இந்த அம்பானி செல்ஃபோன் உதாரணம் மூலம் உங்களுக்கு ஒரு சித்திரம் உதயமாகியிருக்கும்... சாலை ஓரங்களில், பெரிய குடையை விரித்து வைத்துக்கொண்டு, வங்கிக்கணக்கு உடனடியாக தொடங்கித் தரும் காட்சிகள் அங்கிங்கெனாதபடி இனி எங்கும் வியாபித்திருக்கும்...

இதைத்தான் நாம் 'அமெரிக்கா பாணியிலான வல்லரசு இந்தியா' என அழைக்கிறோம். நிதிமூலதனத்தின் இறுதி விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாக, அதன் நுகத்தடியில் எப்படி அரசியல் கட்சிகள் பூட்டப்படுகின்றன என்பதை தேர்தல் காலங்களில் அறிய முடிகிறது.

அமெரிக்காவில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்காக கார்ப்பரேட் வங்கி நிறுவனங்கள் வாரியிறைக்கின்றன. மக்களிடம் இரண்டு கட்சிகளும் செல்வாக்கு செலுத்துவதற்கான பணிகளை தனியார் வங்கிகள் தங்களது கடமைகளாக ஏற்று நிறைவேற்றுகின்றன. இதற்கு பிரதிபலனாக கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான நிதிக்கொள்கைகளை உருவாக்கி, அமெரிக்க அரசு தனது நன்றி விசுவாசத்தைக் காட்டிவருகிறது.

கார்ப்பரேட்டுகளால், கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் கார்ப்பரேட் அரசு என அமெரிக்க அரசாங்கத்தை, அந்நாட்டின் குடிமக்களில் 10ல் 7 பேர் புரிந்து வைத்துள்ளனர்.

இந்தக் காட்சிகளை தற்போது இந்தியாவில் பட்டவர்த்தனமாகக் காணமுடிகிறது. காலம்காலமாக முதலாளிகளுக்கு சாமரம் வீசிவந்த காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது இந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் பின்புலம் கொண்ட பாரதிய ஜனதாக் கட்சி. ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணிகளைத் தொடங்கிய பாரதிய ஜனதாக் கட்சியால் தேர்தல் அறிக்கையை உரிய காலத்தில் வெளியிட முடியவில்லை. ஆனால் பிரம்மாண்டமான அளவில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. மக்களிடம் அந்தக் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்க ஒரு மாய உலகமே இயங்கி வருகிறது. 'வட்டச் செயலாளர்' வண்டு முருகன் பாணியில் பேசிவரும் கார்ப்பரேட்டுகளின் கடவுளான நமோ, சொகுசு விமானத்தில் வலம்வந்து இந்தியாவின் எந்த மூலையில் உள்ள பக்தர்களுக்கும் காட்சி தருகிறார்.

தனியார் வங்கிகளுக்கு சாதகமாக மத்தியில் உருவாகும் அரசு செயல்படும் அதே வேளையில், தனியார் வங்கிகளின் பெருக்கத்தால் இறுதியில் என்ன விளைவு ஏற்படும்? வங்கிகள் வழங்கிய கடன்களை பொதுமக்கள் திரும்ப செலுத்தமுடியாமல் திணறியபோது, கடன் கொடுத்த வங்கிகள் திவாலாகும் நிலை அமெரிக்காவில் ஏற்பட்டது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட இந்தச் சிக்கலின்போது, அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கி வங்கிகளைக் காப்பாற்றியது. சுமார்  700  பில்லியன் டாலர்களைக் கொடுத்து, திவாலாகும் நிலையிலிருந்த வங்கிகளை கைதூக்கி விட்டது அமெரிக்க அரசு. எல்லாமே மக்கள் வரிப்பணம்தான்...

இந்த நிலை இந்தியாவில் ஏற்பட எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என சொல்ல முடியாது. ஆனால் விளைவு கடுமையாக இருக்கும் என்பதை மட்டும் ஊகிக்க முடிகிறது. தனியார் வங்கிகள் திவாலாகும் நிலை இந்தியாவில் ஏற்பட்டால், மக்களின் வரிப்பணத்தால் முதலாளிகள் காப்பாற்றப்படுவார்கள். ஏற்கனவே மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதிகளை அரசு வெட்டிவரும் நிலையில், மேலும் மேலும் சமூகநலத் திட்டங்கள் கைவிடப்படும் மோசமான சூழல் உருவாகும்.

தனியார் வங்கிகள் தொடங்க குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது, எனில் இந்த வங்கிகள் திவாலாகும் நிலையை அடைந்தால், மக்களின் வரிப்பணம் எவ்வளவு தனியார் முதலாளிகளின் பாக்கெட்டுக்குள் போகும் என்பதைல் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

வங்கி தொடங்க முனைப்பு காட்டும் நிறுவனங்களின் பட்டியலில் உள்ள சில முன்னணி நிறுவனங்கள், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அபின் வியாபாரம் செய்து தங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொண்டதாக எழுத்தாளர் சுனிதிகுமார் கோஷ், இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் என்ற தனது நூலில் நினைவு கூர்வார். அந்த நிறுவனங்கள் இந்த நூற்றாண்டில் வங்கிச்சேவை மூலம் கொள்ளை அடிக்கத் தயாராகிவிட்டன.

ஜெர்மனியின் பொருளாதார அறிஞர் Bertolt Brecht இதனைத்தான் இப்படி வர்ணித்தார்: ஒரு வங்கியில் கொள்ளையடிப்பதைவிட, ஒரு வங்கியை அமைத்து கொள்ளையடிப்பது எளிமையான செயல். (It is easier to rob by setting up a bank than by holding up a bank clerk)

- இயக்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It