‘சுதந்திரமாக இருக்கும் தருணங்களை விடவும், சிறையில் அடைபட்டிருக்கும்போதுதான் வாழ்க்கை என்பது பெரிதும் நேசத்திற்கும், மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உள்ளாகிறது.’- பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, குற்றமும் தண்டனையும் நாவலில். . !

இராஜீவ்காந்தி படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்டு சற்றேறக் குறைய 23 ஆண்டுகளைத் தமது வழ்நாளின் பெரும் பகுதியை தனிமைச் சிறையாகவும் பிறகு தூக்கு அறிவிக்கப்பட்டும் அது எப்போது என்றைக்கு என்று தெரியாமல் எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் மொய்க்கும் எண்ணங்கள் ஊடே தூக்கில் தொங்கிய வாதையைப் பெற்று தனிமைச் சிறையில் தவித்திருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை உச்சநீதி மன்றம் ஆயுளாகக் குறைத்ததோடு மூவரின் விடுதலையை மாநில அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்புரைத்ததை அடுத்து, மூவர் உட்பட ஏற்கனவே ஆயுள் குறைப்பு பெற்றிருக்கும் நளினி, ரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோரை தமிழக அரசு விடுதலை செய்வதாக அறிவித்தது.

perarivalan-murugan-santhan

மேலும் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த காரணத்தால் மத்திய அரசின் கருத்தினை அறிய 3 நாட்கள் அவகாசம் தருவதாகவும் அதற்குள் அவர்கள் பதில் அளிக்காவிட்டால் 7 பேரையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள 432வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரச உடனடியாக அவர்களை விடுதலை செய்துவிடும் என்றும் தெரிவித்ததோடு, நீதிமன்றத் தீர்ப்பு வந்து உடனேயே அது குறித்து அமைச்சரவையைக் கூட்டி விவாதித்த முதல்வர் ஜெயலலிதா, பின்னர் அவையில் விதி110 -ன் கீழ் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கிடையே, தமிழக அரசின் இந்த முடிவு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் இராஜீவ் கொலையாளிகளை அவசர கதியில் விடுவிக்க முயல்வதாகக் கூறி மத்திய அரசு, சதாசிவம் அமர்விடம் அவர்களை விடுவிக்க இடைக்காலத் தடை பெற்றது. மேலும், மூவர் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலையை எதிர்த்து, மறு சீராய்வு மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காங். அரசு. தேர்தல் நேர தேச விசுவாசத்தைக் காட்ட முயன்ற காங்கிரசிற்கு பலத்த அடியாக சதாசிவம் அமர்வானது, வீரப்பன் கூட்டாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைப்பை எதிர்த்து தாக்கல் செய்த மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பில் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட எல்லா வழக்கிற்கும் பொருந்தும் வகையில் தள்ளுபடி செய்து மத்திய அரசை அதிரவைத்துள்ளது. ஒரு பக்கம் மத்திய மாநில சட்ட விளையாட்டாகவும், மற்றொரு பக்கம் அது அதிமுக, காங்கிரஸ் போட்டி அரசியல் விளையாட்டாகவும் மாறிக்கொண்டுள்ள நிலையில் தமக்கான விடுதலை எப்போது என்பதில் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக இருக்கிறது 7 பேரின் தற்போதைய நிலைமை. எது எவ்வாறு இருப்பினும் தமிழக அரசைப் பொருத்தவரை, பலத்த அரசியல் காரணங்கள் இருப்பினும், இனியும் இந்த விடயத்தில் தாமதம் கூடாது என்ற தமிழகத்தின் கருத்தையே ஏழு பேரின் விடுதலையை அறிவித்த அவசர அவசியம் காட்டுவதாகச் சொல்லலாம்.

தூக்கு விதிக்கப்பட்டு கருணை மனுவிற்காக ஏறக்குறை 12 ஆண்டுகள் காத்திருந்த மூவரும் மிக மகிழ்ச்சியாகத் தமது சிறை வாழ்வை கழித்துக் கொண்டிருப்பதாக சகிக்க முடியாத வன்மமும் ஆவேசமும் அசட்டுத்தனமுமாக ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் தனது தலைமை வழக்கறிஞரைக் கொண்டு வாதிடச் செய்தது உள்நோக்கமுடையதாகும். ஆனால் நீதியரசர் சதாசிவம் அமர்வானது இத்தனை ஆண்டுகாலம் தூக்கை எதிர்பார்த்துக் காத்திருப்பவர் மனநிலையை பற்றி விவரிக்கத் தேவையில்லை என்று கூறியே அவர்களது தண்டனையைத் தூக்கிலிருந்து ஆயுளாகக் குறைத்தது.

இராஜீவ் கொலைக்குப் பிறகு இரண்டு முறை பதவியிலிருந்த காங்கிரஸ் அரசு இராஜீவ் கொலைத் தொடர்பான விசாரணைகளில் அத்தனை தீவிரம் காட்டுவதாக இருக்கவில்லை. பி.வி. நரசிம்மராவ் காலத்தில் அவர், இவ்வழக்குகள் குறித்து அவ்வளவாக கவலைப்பட்டவராகவும் தெரியவில்லை. ஜெயின் கமிசன் கடிந்து கொள்ள நேர்ந்த பிறகும் கூட அவர்கள் கேட்ட முக்கிய ஆவணங்களை உள்துறையிடம் பெற்றுத் தருவதில் தேவையற்ற தாமதத்தையும் அலட்சியத்தையும் காட்டிற்று அவரது அரசு. மேலும் படுகொலைத் தொடர்பில் கைது செய்து, கால தமாதப் படுத்தியதோடு இவ்வளவு காலமும் தனிமைச் சிறையில் வைத்து துன்புறுத்துவதை மட்டுமே காங்கிரஸ் அரசு ஒரு கொள்கையாக கடைபிடித்து வந்தது எனலாம். தேவைப்பட்டால் அரசியல் சுயத்தேவைக்கென அப்சல்குருவைப் போல திடீரென்று மூவரையும் தூக்கிலேற்ற மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஒருபோதும் தயங்கி இருந்திருக்கப் போவதில்லைதான்.

இத்தாலி கடற்படை வீரர்கள் இந்திய கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றபோது அது இந்திய கடற்பரப்பில் நடக்கவில்லை என்று முதலில் இந்திய அமைச்சகம் சொன்னது. ஆனால் நாலாபுறமும் பலத்த சர்ச்சை எழுந்த பின்னரே அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தாலி வீரர்கள் நடுக்கடலில் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு அதிக பட்சம் இந்திய சட்டங்களின் படி தூக்குத்தண்டனை உட்பட கிடைக்கும் என்றார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் தற்போது அந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் காங். அரசு, இத்தாலி கடற்படையினர் மீதான வழக்கில் பின்வாங்கத் தொடங்கியுள்ளது. இது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான் ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் யாரும் அரசியல் பலம் பொருந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லர். அவர்கள் எளிய மீனவர்கள். அன்றாடம் மீன்களைப் பிடித்து கொல்வதற்கும் மீனவர்களைப் பிடித்துப் போவதற்கும் யாராவது வருத்தப்படுவார்களா என்ன. !

தமிழகத்தைப் பொருத்தவரை இராஜீவ் கொலை இன்னும் விடுபடாத புதிராகவே இருந்து வருவதாகப் பலரும் கருதுகிறார்கள். சதியில் தொடர்புடைய யாவரும் அதற்கு வெளியில் தப்பிக் கொண்டு நடமாடியபடி உள்ளனர் எனவும் அழுத்தமாக நம்புகிறார்கள், சாதாரண உள்ளூர் கொலை வழக்கில் அப்பாவிகள் மீது பழியைப் போட்டுவிட்டு வழக்கை மூடி கவிழ்த்து விடுவது போல நாட்டின் மிகப்பெரிய புலனாய்வு அமைப்பு என்று சொல்லப்படுகின்ற சி.பி.அய்.யின் சி.பு. குழு (சிறப்புப் புலனாய்வுக் குழு) நடந்து கொண்டதுதான் வியப்பைத் தருவதாக இன்றும் இருந்து வருகிறது. பல குளறுபடிகளைக் கொண்ட புலனாய்வானது பல்வேறு சந்தேகங்களை, விமர்சனங்களை அன்றைக்கே அது விசாரணையின் போது எதிர் கொள்ள வேண்டியிருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும். குறிப்பாக சிவராசனுக்கு பலவிதத்தில் உதவிகளைச் செய்ததாகச் சொல்லப்பட்ட வேதாரண்யம் சண்முகத்தின் புதிரான மரணம், அதைத் தற்கொலை என்று சி.பி.அய். குழு சொன்னது. அது போல சி.பு. குழுவின் இராஜீவ் கொலை விசாரணை தொடர்பான கோப்புகள் இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் வைத்துத் தொலைந்து போனது. அதுபோல வர்மா கமிசன் இராஜீவ் கொலைத் தொடர்பில் உள்துறையிடம் கேட்டிருந்த முக்கியமான கோப்புகள் தரப்படாத அய்யத்திற்கிடமான தாமதம். எல்லாவற்றுக்கும் மேலாக அன்றைய பாதுகாப்புச் செயலர் எம்.கே. நாராயணன் வசமிருந்த, படுகொலை நடந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒளிப்பதிவு நாடாவில் தடயங்கள் அழிக்கப்பட்டிருந்தமை, என்று காங்கிரஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகள் அவிழ்க்க விரும்பாத முடிச்சுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

படுகொலையில் தொடர்புடைய சதிகாரர்கள் குண்டுவெடிப்பின் போது இரஜீவுடனே சேர்ந்து பலியாகிவிட்டனர். இதில் கைதாகி தற்போது சிறையிலிருக்கும் ஏழு பேருமே முக்கிய கொலைக் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த வகையில் கைது செய்யப்பட்டவர்களே தவிர படுகொலையில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் அல்லர். இதில் பேரறிவாளன், குண்டு வெடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு சிறிய மின்கலன்களை வாங்கிக் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டவராவார். அண்மையில் பேரறிவாளனை அன்றைக்கு விசாரணை செய்த சி.பு. குழுவின் முன்னாள் விசாரணை அதிகாரி தியாகராஜன் என்பவர், தாம் பேரறிவாளனின் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிய வில்லை என்று கூறி அதிர வைத்தார். புலி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் முருகனும், அவரது மணைவி என்பதால் நளினியும் கைது செய்யப்பட்டனர்.

இராஜீவ் படுகொலையான சிறிபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் நளினி, கொலையாளி சுபாவுடன் கலந்து கொண்டாலும், பேரறிவாளன், முருகன் போன்றோர் படுகொலையைத் தலைமை ஏற்று செயல்படுத்தியதாகச் சொல்லப்படும் சிவராசனுடன் முன் அறிமுகம் இருந்தாலும் இச்சதிச் செயல் குறித்து யாதொருவருக்கும் தெரியாது என சிவராசன், படுகொலைக்கு முன்னதாக புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மனுக்கு அனுப்பிய கம்பியில்லாத் தந்தியை இடைமறித்து பொருள் உடைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவினரின் குற்றப்பத்திரிகை கூறுகிறது. நளினி, முருகன், பேரறிவாளன் யாவருமே படுகொலை குறித்து தமக்கு எதுவிதத்திலும் தெரியாது என்றே வலியுறுத்தி வருகின்றனர். முருகன் புலிகள் அமைப்பில் இருந்தவர் எனினும் படுகொலைத் திட்டம் பற்றி அவருக்கும் கூடத் தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இராஜீவ் கொலையில் அயல் நாட்டின் சதி பங்களிப்பு பற்றி விசாரித்து வரும் பல்நோக்கு விசாரணைக் குழுவினை விரைவுப் படுத்த விரும்பாத காங்கிரஸ் அரசு, கொலைத் தொடர்பில் மூன்றாம் நிலையில் இருப்பவர்களை கைதுசெய்து வைத்துக் கொண்டு மெய்யாகவே அதன் பின்னணியிலிருப்பவர்களை தெரிந்தே தப்பவிட்டுக் கொண்டுள்ளது. சதியில் ஈடுபட்டவர்களைத் தாம் மன்னித்துவிட்டதாக சோனியா அறிவித்ததும், நளினியை பிரியங்கா சிறையில் சென்று சந்தித்ததும் அவர்களுக்கு கருணை காட்டும் முயற்சி என்று விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது ராகுல்காந்தி ‘தமது தந்தையின் கொலையில் தொடர்புடையவர்களை தமிழக அரசு விடுவித்திருப்பது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும், நாட்டுக்காக உழைத்த ஒரு முன்னாள் பிரதமரின் படுகொலைக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் பாமர மக்களுக்கு எப்படி கிடைக்கும்’ என்று சினந்துள்ளார். அரசியல் ரீதியிலான இவ்வாறான பேச்சுக்கள் ராகுல் காந்திக்கு அனுதாபத்தைப் பெற்றுத் தரலாமே ஒழிய அவர், இவிடயத்தில் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதோடு மெய்யான குற்றவாளிகளிடமும் ஒருசேர ஏமாந்து போகிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தண்டனைக் குறைப்பும், தமிழக அரசு ஏழு பேரை விடுவிக்கும் முயற்சிகள் குறித்தும் வட இந்திய, தேசிய ஊடகங்களின் வழக்கமான எதிர்ப்பு நிலையும் தமிழக ஊடகங்களின் ஆதரவு நிலைப்பாடும் போலவே பா.ஜ.கவின் தமிழக நிலைப்பாடும் மத்திய தலைமையின் நிலைப்பாடும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் முன்னாள் பாரதப் பிரதமரின் கொலையில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் முடிவு கவலையளிப்பதாக வருந்த, பொன்னாருக்கோ அவர்களது விடுதலை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. அதே போல ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான கெஜ்ரிவால் தமிழக அரசின் நடவடிக்கைளை கண்டித்திருக்கிறார்! ஆனால் தமிழகத்தில் உள்ள ஆம் ஆத்மியின் தமிழக் கிளையும், 7 பேரின் விடுதலைக்காக இனிப்பு வழங்கிக் கொண்டாடிய இடிந்தகரை மக்களும் கெஜ்ரிவாலின் இந்த கருத்தில் திகைத்துப்போயுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக வீறுகொண்டு எழுந்து, இராஜீவ் காந்தியோடு சேர்த்து குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்களைத் திடீர் நினைவாகத் தேடி கண்டுபிடித்துக் கொண்டு வந்து வழக்கம் போல ‘நீதி’ கேட்கும் உண்ணா நிலைப் போராட்டத்தை நடத்தி தமது கட்சி விசுவசத்தை ‘காட்டிக் கொண்டனர். தி.மு.க தலைவர் மாற்றுக் கட்சித் தலைவர்கள் முன்பு என்ன சொன்னார்கள் என்பதை நினைவுப்படுத்துவதில் வல்லவர். ஆனால் விடுவிக்கப்பட உள்ள கைதிகள் விடயத்தில் தான் முன்பு பேசியவை, நடந்து கொண்டவை எல்லாம் மறந்துபோய்விட தமிழக அரசின் அவசர முடிவை விமர்சிப்பதாக மாற்றிக் கொண்டார். மேலும் இலங்கையின் மீது அய்.நா.வில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறி பிரதமரை சந்தித்த தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள், தூக்குத் தண்டனை கைதிகள் பிரச்சனை குறித்து எதுவும் பேசாமல் திரும்பியுள்ளனர். தண்டனையில் வாடும் கைதிகளை வைத்துக் கொண்டு இவர்கள் எல்லாம் அடிக்கும் கூத்து, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு அந்த தூக்குக் கயிறே மேல் என்று எண்ண வைத்துவிடும் அளவிற்கு நிகழ்வுகளின் போக்குகள் அரங்கேறுவதாக இருக்கின்றன.

மூவர் தூக்கிற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மாலானி சொல்வது போல அவர்கள் இதுவரையிலுமாக 4 ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவித்துள்ளனர். எனவே சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் இனியும் சிறையிலிருப்பது அநீதியானது என்பதை ஒட்டுப்பொறுக்கு கட்சிகள் வசதியாக மறந்துவிடுகின்றன. தமிழகம் ஒட்டு மொத்தமாகக் கோரும் எதுவும் அது இந்தித் திணிப்பாக அல்லது இலங்கை இனச் சிக்கல் குறித்தாகவும், மீனவர் துப்பாக்கிச் சூடு போன்றவையாக கூடங்குளம் அணு எதிர்ப்பு நிலையாக எதுவாக இருந்தாலும் அது பிரிவினை நோக்கிலானது என்ற பார்வை வட இந்திய மாநிலங்களுக்கும், தில்லிக்கும் ஏன் தேசிய கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்குமே உண்டு. எனவே இராஜீவ் கொலை குற்றச்சாட்டிற்கு உள்ளாகி தண்டனைப் பெற்றிருக்கும் தமிழர்கள் மீது இனரீதியிலாக தமிழகம் மன்னிக்க நினைக்கிறது என்பதே அவர்களது குற்றச்சாட்டாக இருக்கக்கூடும். தமிழக தேசியக் கட்சிகள் வேறுசில உள்ளூர் ஆதரவு கட்சிகளைப் பார்த்தும் இவர்களுக்கு இந்த எண்ணம் நீடிப்பதுதான் வினோதமானது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் வழக்கறிஞருமான விஜயதாரணி அண்மையில் ஒரு காட்சி வானொலியின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போது, உச்சநீதிமன்ற நீதியரசர் பி.சதாசிவம் ஒரு தமிழர் என்பதாலேயே இராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை குறைப்பு செய்துள்ளார் என்று சேற்றைவாரி வீசினார். ஆனால் அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்த தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தமிழர்கள் தாம் என்பதை நினைவு கூறுவதை அவர் விரும்பவில்லை. பிரதமரோ சோனியா குடும்பம் வருந்துவதால் தானும் வருத்தம் தெரிவிக்கிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மென்று முழுங்குகிறார். தமிழக காங்கிரஸார் உச்சநீதி மன்ற நீதியரசர் சதாசிவத்தின் உருவ பொம்மையை எரித்தும் பழித்தும் வருகின்றனர். காங்கிரஸாரைப் பொருத்தவரை இராஜீவ் விசுவாசம் என்பது மூவரையும் அல்லது இயன்றால் மற்ற நால்வரையுமே கூட தூக்கிலேற்றுவதும் அப்படியே நீதியையும் மனிதநேயத்தையும் குழி தோண்டிப் புதைப்பதில்தான் உள்ளது என்பதே அவர்களது நடவடிக்கைகள் காட்டுவதாக இருக்கிறது.

இராஜீவ் கொலை வழக்கை விசாரித்த தடா சிறப்பு நீதிமன்றம் அதன் தொடக்க நிலையிலேயே கொல்லப்பட்டவர் சமூகத்தில் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்ற கோணத்தில் இவ்வழக்கு அணுகப்படாது என்று கூறியிருந்தது. மேலும் இது பயங்கரவாத செயல் என்று சொல்வதற்கில்லை என்பதை உச்சநீதி மன்றம் பல முறை சுட்டிக் காட்டி வந்துள்ளது. அதற்கான காரணங்களை அது விளக்கிக் கூறும் போது, அமைதிப்படையினர் இலங்கையில் நடத்திய அட்டூழியங்களுக்கு பழிவாங்கிய செயலன்றி பலரையும் கொல்லும் நோக்கம் படுகொலை சதியில் ஈடுபட்டவர்களுக்கு இல்லை என்றது. காங்கிரஸார், இந்திராகாந்தியின் படுகொலைக்கு தில்லி சீக்கியச் சமூகத்தை அழித்தொழித்தது போல தமிழீழத்தில் அதைச் சாட்டாகக் கொண்டு ஒர் இனத்தையே அழித்தாயிற்று. இப்போது 7 பேர் விடுதலையைக் கொண்டு, தமிழகம் பிரிவினையை நோக்கிப் போவதாக இந்த தேசியவாதிகள் புலம்பக்கூடும். பேரறிவாளன். சாந்தன், முருகன் விடுதலை என்ற உத்தரவு வந்த உடனேயே பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தற்போது ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அந்தமான் தீவில் புலிகள் நடமாட்டம், அங்குள்ள ஈழ ஆதரவாளர்களை புகலிடமாகக் கொண்டு நிகோபார் தீவுகளைப் பயிற்சிக்குப் பயன்படுத்தக் கூடும் என்று கரடி, புலி விட்டு காங்கிரஸ் தனது தேசிய விளையாட்டைத் தொடங்கிவிட்டதை அவதானிக்கலாம்.

சிறைத் தண்டனை என்பது சாதாரண வாழ்வின் எல்லா கணங்களிலிருந்தும் துண்டிப்பது. வெளி வாழ்க்கையின் காற்றும், ஆகாயமும் மறுக்கப்படுவது. மனித சமூக கூட்டு நடவடிக்கைளிலிருந்து தள்ளி வைப்பது. சிறைச் சுவற்றிலிருந்து, தன்னிலிருந்தும் தனக்கான தண்டனையை மெய்யாலும், உடலாலும் கணந்தோறும் உணர்தல். தூக்கில் ஏற்றுவது ஒருவகை சடங்காக, விடுதலையாக இருக்குமே ஒழிய மெய்யான மாற்றமாக இருந்து விடுவதில்லை. தவறுகள் செய்வதனால் தான் மனிதன் என்பார் தஸ்தயேவ்ஸ்கி. தவறுகளே செய்யாத மாமனிதர்கள் யாதொருவரும் ஏழு பேரின் விடுதலையை உடனடியாக மறுப்பதாக இருக்கட்டும்!

- இரா.மோகன்ராஜன் (mohanrajan.r@gmail.com)

Pin It