அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் தலைமையில் ஒரு மாற்று சனநாயக போராட்ட முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். சவத்துப் போன பாராளுமன்ற அரசியல் முறைக்கு உயிருட்டும் முகமாக, தமது உயிராதாரக் குரலை கீழிருந்து மேலொலிக்கச் செய்ய ஒரு மாற்றுக் களமாக தேர்தல் அரசியலை தெரிவு செய்து கொண்டுள்ளார்கள். பாராளுமன்ற அரசியல் வடிவத்தின் வழி அணு உலை உள்ளிட்ட பல வாழ்வாதார சிக்கல்களுக்கு தீர்வு காணப்படலாம் அல்லது குறைந்த பட்சம் சிக்கல்களை பரவலாகக் கொண்டு சேர்க்க இயலுமென்று அவர்கள் எண்ணக்கூடுமென்று தெரிகிறது.

udayakumar 560

இதுவரையிலான கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் என்பது முதன் முதலில் அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் வழியேதான் தில்லிக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இருந்தது. ஆனால் சந்தர்ப்பவாத அரசியலும், கொள்கைத் தெளிவற்ற அல்லது பிடிப்பற்ற அரசியல் இயக்கங்களாலும் அணுஉலை எதிர்ப்பு என்பது ஏதோ தனிநபர் அரசியலாகவும், உள் மற்றும் அயல் நாட்டு தேசவிரோத சக்திகளின் தூண்டுதல்களாலும் நடத்தப்பட்டு வருவதாகக் கருதி மக்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அடக்குமுறைகளை ஏவியும், துணை நின்றும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வந்தனர். தாம் தேர்தெடுத்து அனுப்பிவைத்த உறுப்பினர்கள் பகுதி சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட தமது கட்சி அல்லது சொந்த நலன் சார்ந்து இயங்கியதைக் கண்ட அணு உலைக்கு எதிரான மக்கள் ஒருகட்டத்தில் பாராளுமன்ற அரசியலை வெறுக்கத் தொடங்கினர் என்பதைத் தான் போராட்டம் கடந்துவந்த நாட்கள் சொல்வதாக இருக்கிறது.

தேச விரோதிகளாகவும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பவர்களாகவும், இருண்டு கிடக்கும் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறைக்கு இவர்களது போராட்டமும் பிடிவாத குணமுமே காரணம் என்றும் நாளுக்கு நாள் செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. அமெரிக்கப் பின்னணியும், கத்தோலிக்க மதப் பிரச்சாரமும் இவர்களை வழி நடத்துவதாக தேசியக் கட்சிகளும் சில மதவாதக் கட்சிகளும் குற்றம் சாட்டின. மேலும் இடிந்தகரை மக்களின் உருக்குலையாத போராட்டத்தின் சிடுக்குகளுக்குள் புகுந்து மீனவ -நாடார் சாதி மோதல்கள் உசுப்பிவிடப்பட்டன. இத்தனைக்கும் மேலாக துணை படையினரைக் கொண்டு போராட்டம் செய்த மக்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு போன்றவை நடத்தப்பட்டன. அதன் விளைவாக நான்கு மண்ணின் மைந்தர்கள் தமது சொந்த மண்ணில் குருதி சிந்தினர். இடிந்தகரை உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி மக்கள் மீது பல கொடூர சட்டங்கள் பாய்ந்தன; பலரும் கைது செய்யப்பட்டனர். தேச விரோத வழக்குகள், வெடிகுண்டு வீசி கலவரங்களில் ஈடுபடுவதாக, மீனவர்களுக்குள் வன்முறையைத் தூண்டுவதாக அயல்நாட்டு தொண்டு நிறுவனங்கள் வழியாக பணம் பெறுவதாக இறுதியில் இடிந்தகரை மக்களை மாவோயிசவாதிகளுடன் தொடர்புபடுத்தி அவர்களை ஆயுதம் தாங்கி போராட்டத்திற்கு அரசும் அதன் துணை அமைப்புகளும் தள்ளிவிட தீவிரமாக முயன்றன. அவற்றை எல்லாம் முறியடிக்கும் ஒற்றை ஆயுதமாக வாக்குச் சீட்டு அரசியல் இருக்குமா என்பதே இடிந்தகரை மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

தேர்தலுக்கு முன்பு உங்களில் ஒருத்தி, என்றும் ஒருவன் என்று பேசியவர்கள் உட்பட அரசியல் கட்சித் தலைமைகள் யாதொருவரும் அவர்களுக்குத் துணை நிற்கவில்லை மாறாக அடக்குமுறைக்கே துணை போனார்கள். தேர்தல் அரசியலில் தீண்டத் தகாதவர்களாக அரசியல் சூதாட்டத்தில் திசைக்கொரு பக்கம் இழுபட்டும் திகைத்தும் நின்ற அம்மக்கள் இறுதியில் அரசியல் அரங்கில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டனர். எதிரி என்ன ஆயுதத்தை எடுக்கிறானோ அதையே தாமும் எடுக்கும் போராட்ட தந்திரோபயத்தையே இடிந்தகரையும் இன்று கையிலெடுத்துள்ளது.

இடிந்தகரை அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக தன்னளவில் மலர்த்திக் கொண்ட அதேசமயம் அதனை அவர்களே அடி முதல் நுனி வரை இயக்கிவருகின்றனர் என்பதை அம்மக்களை நெருங்கியிருப்பவர் அறிவர். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதில் பல மனித உரிமை அமைப்புகளும், தீவிர இடது சாரித் தோழர்களும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், படைப்பாளிகளும் துணை நின்றாலும் கூட, போராட்டத்தை மேற்கொண்டு வலுவான திசையில் செலுத்த அவர்கள் வலுகுறைந்தவர்களாக இருக்கும் நிலையில் இடிந்தகரை ஒரு புள்ளியில் மையம் கொள்ள தற்சமயம் சூழல் இடம் தருவதாய் இருக்கவில்லை. அரசும் அதன் இரும்புக் கரம் கொண்டு மக்கள் போராட்டத்தை ஒடுக்கிக் கொண்டே அணு உலை இயங்கிச் செயல்பட அனுமதி அளித்தது. அரசின் துணைக் கருவிகளான நீதி வழங்கு அமைப்புகளும் அணு உலை பற்றிய தமது கருத்துக்களை தெளிவாக எடுத்துரைப்பதாய் இல்லை. இந்நிலையில், தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் அறிந்து தூக்கி செயல்பட முள்ளை முள்ளால் எடுப்பது போல பாராளுமன்ற அரசியலை, பாராளுமன்றம் வழி சந்திக்க அம்மக்கள் வாக்குச் சீட்டை ஒரு மாற்று போராட்டக் கருவியாக காவிக் கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வரிலிருந்து பிரதமர் வரை அவர்கள் அணு உலை ஆபத்து குறித்தும் தமது வாழ்வாதாரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் எடுத்துரைத்தனர். ஆனால் பெரு முதலாளிகளாலும், உலக வணிகர்களின் ஆதரவிலும் இயங்கும் அரசுகள், அணு வர்த்தக தரகிற்கே ஆதரவு தருவதாக இருந்தன. நாட்டின் தென்கோடி மக்களின் வாழ்வு என்பது அவர்களுக்கு பெரிதல்ல என்ற கசப்பான மெய்மைக்குப் பிறகும் அவர்கள் மென்முறை வழியைத் தொடர்ந்தனர். அதுவும் கூட ஒரு கட்டம் வரையிலுமே செல்லுபடியாவதாக இருந்து அவர்களது போராட்டம் மதிக்கப்படாமலே சர்வாதிகார சனநாயத்தால், அணு உலை தொடங்கப்பட்டது.

இடிந்தகரை மக்கள் தமக்கு முன்னுள்ள மோசமான அனுபவங்கள் வழி தேர்தல் அரசியலை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காரணம், மென்முறை வழிப் போராட்டங்கள் ஈழத்தில் அய்ம்பது ஆண்டு கால வரலாற்றில் அடக்கி ஒடுக்கப்பட்டதன் பின்னர் ஆயுதம் தாங்கி போராட்டம் ஓங்கியெழுந்தாலும் அண்மைய உக்கிரப்போர் அம்மக்களின் குருதி சிந்திய போராட்டங்களை நெடிய அர்ப்பணிப்பை ஒன்றுமில்லாது செய்துவிட்டது. உலகமயமும், முதலாளியமும் மற்றுமொரு ஆயுதம் தாங்கிய போரை உலகின் எங்கினும் இனியும் அனுமதிக்கப் போவதில்லை. தனது தலையசைப்பில், தனக்கு இசைவான போராட்டங்களை மட்டுமே அனுமதித்துவிட்டு, மற்றவற்றையெல்லாம் ‘பயங்கராவதம்’ என்று சுலபமாக அறிவித்து, ஒட்டு மொத்தமாக நசுக்கிவிடும் போக்கே நிலவுகிறது. முதலாளித்துவ சனநாயகத்தின் சற்று நெகிழ்வான போக்கே தேர்தல் அரசியல் என்றாலும் அதனை குறிப்பிட்ட எல்லை வரையில் மட்டுமே விரிவுபடுத்த இயலும். மேலிருந்து கீழ் நோக்கிய அதிகாரத்தை, கீழிருந்து மேல் நோக்கி செலுத்தும் வரலாற்றுத் திருப்பத்தை இடிந்தகரை மக்கள் முயன்று கொண்டுள்ளார்கள். இது எந்த அளவிற்கு அவர்களது போராட்டத்தை முன்னகர்த்துவதாக இருக்கும் என்பதை காலத்தின் போக்கிற்கு விட்டுவிட்டாலும் தேர்தல் அரசியல் என்பதை ஊழல், சுயநலம் என்ற பொருளில், விளங்கிக் கொள்ளவதையும் கூடவே தவிர்க்க இயலவில்லை.

தேர்தல் சனநாயகத்தில் தமது பங்கு எத்தனை என்பதை பொதுசனமும் மிகத் தெளிவாக உணர்ந்து வைத்துக் கொண்டுள்ளனர். ஒரு வாக்கிற்கான மதிப்பீட்டை ஒரு பிரியாணி பொட்டலம் அல்லது நூறு உரூபாய்கள் வழி அவர்கள் அதனை உறுதி செய்து கொள்கிறார்கள். புதிய முதலீட்டுக்கான தொழிலாய் மாறிக் கொண்டுள்ள தேர்தல் சனநாயகத்தை அவர்கள் இவ்வாறுதான் அணுகுவதாக உள்ளது. கட்சி அரசியல் என்பது மக்களின் சிக்கல்களை கட்சியின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. மக்களையும் அது அணி பிரித்துவிடுகிறது. மக்கள் முழுமைக்கும் விழிப்படைந்த சனநாயகத்தில் மட்டுமே இந்த ‘அரசியல்’ எடுபடுவதாக இருக்காது. எனவேதான் இடிந்தகரை முன்னிலைப் படுத்தும் சிக்கல்களுக்கெல்லாம் இவ்வாறான முன்னுதாரணங்கள் ஒரு சவாலாக இருக்கக்கூடும்.

தேர்தல் அரசியலில் இறங்குவது என்று முடிவுசெய்த பிறகு அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் பேசும் போது, அணு உலைக்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுமைக்கும் கொண்டு செல்லும் முகமாகவே தேர்தல் அரசியலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளர். தேர்தல் அரசியலில் பங்கு பெறுவது என்று சுப.உதயகுமாரன் நிச்சயமாக தன்னிச்சையாக முடிவு செய்திருக்க முடியாது. பலகட்ட ஆலோசனை மற்றும் இறுதியில் மக்களின் முழு இசைவுடனே அவர் இந்த முடிவிற்கு வந்திருக்க இயலும். அணு உலை எதிர்ப்பில் இடிந்தகரை மக்களுடன் பங்கெடுத்துக் கொண்ட சில தேர்தல் கட்சிகள் கொள்கை வழியில் ஒருங்கிணைவது அவர்களுக்குள் சாத்தியப்படாததால் அக் கட்சிகளுடன் ஒரணியில் இணைந்து நிற்க இயலாது போயுள்ளது என்று அதற்கு விளக்கமளித்துள்ளார் சுப.உதயகுமாரன். தமிழ் தேசியக் கட்சிகள் தமிழர் நலனை முன்னிறுத்தும் முக்கிய சிக்கல்களில் கூட தம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளாதது தமிழருக்கு நேர்ந்துள்ள நிரந்தர அவமானமாகும். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகாலம் அல்லது 940 நாட்களைக் கடந்து அரசியல் சார்பற்று இயங்கிவந்த ஒர் இயக்கம் மாற்று போராட்ட வடிவங்களை சதா முயற்சித்துப் பார்ப்பது இயல்புதான் என்றாலும் முற்றிலும் அதற்கு அனுபவமற்ற பரப்புக்குள் செல்வதைப் பற்றிய விமர்சனங்களும் எழவே செய்திருக்கிறது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.புஷ்பராயன் அவர்கள் இடிந்தகரையின் இந்த திடீர் அரசியல் முடிவிற்கு வருத்தம் தெரிவித்து ஒதுங்கிக் கொண்டதோடு, இத்தனைக் கால இடிந்தகரை போராட்ட இயக்கத்தை தாம் ஒரு அரசியல் கட்சியாக பார்க்க விரும்பவில்லை என்று அதற்கு காரணமும் கூறினார். தொடர்ந்த பேச்சுகளின் பின்னர் அவர் தேர்தல் அரசியலுக்குத் திரும்பியுள்ளார். திரும்பித்தான் ஆகவேண்டும், ஏனெனில் தற்போதைக்கு நம்மிடம் தேர்தல் சனநாயகத்திற்கு மாற்று என்ற ஒன்று இல்லை.

அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினர், தற்சமயம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பாராளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே போட்டியிடத் தீர்மானித்து இருக்கின்றனர். திரு.உதயகுமாரன் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அணு உலைச் சிக்கல் என்ற ஒன்றை மட்டுமே முன்வைத்து அவ்விடங்களில் நின்றுவிட இயலாது. தொகுதியின் பன்முகப்பட்ட பிரச்சனைகளை, போக்குகளை எதிர்கொள்வதாகவே தேர்தல் அணுகுமுறை என்பது இருக்கும். அணு உலைக்கு அப்பாலான சிக்கல்களையும் கூட சந்திக்கவும் அவற்றை தீர்த்து வைக்கவும் வாகுறுதி வழங்க வேண்டியதிருக்கும். புதிய தலைமுறை வாக்காளர்களும், இளைஞர்கள் மற்றும் அணு உலை எதிர்ப்பாளர்களும் எங்களை ஆதரிப்பார்கள் என்று உதயகுமாரன் கூறிக் கொண்டுள்ளார். கட்சிகளாக பிரிந்துகிடக்கும் இளைய சக்திகளை தேர்தல் அரசியல் வழி திரட்ட இயலுமானால் அது குறிப்பிடத் தக்க சாதனையாகவே இருக்கும் என்பதில் அய்யமில்லை. மேலும், கட்சி அரசியல் கோலோச்சும் களம் என்பதால் குதிரை பேர அரசியலின், சாதி மதம் போன்ற வட்டார நெருக்குதல்களின் கோர முகத்தை இடிந்தகரை அரசியல் வகுப்பாளர்கள் இனி, நிரந்தரமாக சந்திக்க வேண்டிய சவாலான பணியாக இருக்கும்.

‘காவிக் கட்சியும் வேண்டாம், காங்கிரசும் வேண்டாம்!’ என்று உதயகுமார் சுலபமாக சொல்லிவிட்டாலும் தேசிய அரசியலுக்கு தோதான தமது கொள்கை நிலைப்பாட்டிற்கு பொருந்தி வரக்கூடிய கட்சி என்று அவரால் எதையும் அட்சர சுத்தமாக சுட்டிக்காட்ட இயலாதது சோகமே. இந்நிலையில்தான் இடிந்தகரை மக்கள் தற்போது தமது கொள்கைகளுக்கு சற்றே இணக்கமாக வரக்கூடிய ஆம் ஆத்மியில் இணைந்து கொண்டுள்ளனர். நூற்றுக்கு நூறு ஆம் ஆத்மியோடு பொருந்தக்கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் அமையுமா என்பது ஒரு புறமிருந்தாலும் தற்போது எளிய மக்கள் கட்சி என்று ‘தமிழ்’படுத்தப்பட்டிருப்பதோடு மட்டுமே நிறைவு கொண்டுவிட இயலாது.

ஊழலுக்கு எதிராகவும் லோக்பால் மசோதாவை நடைமுறைப் படுத்தக் கோரியும் பல போராட்டங்களை நடத்தி அதன்வழியாக மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து அரசியலுக்குள்ளாகவும் நுழைந்து தில்லி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கொண்ட ஆம் ஆத்மி, மாற்றுக் கட்சியா அல்லது மற்றுமொரு கட்சியா என்று மதிப்பிட இயலாத வளர் இளம் பருவத்தில் இருக்கிறது. எனினும் அதன் கொள்கைகள், கோட்பாடுகள் யாதொன்றும் இடைநிலை வகுப்பினரை நிறைவுப் படுத்தும் நோக்கிலானதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனினும் தில்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி தொகுதி வாரியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சியை விட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பெரு முதலாளிகளின் பங்கு இவற்றை ஒழித்து விட்டு பரவலாக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை நிறுவுதல் போன்ற ஒரு சில தேசிய முக்கியத்துவமுடைய கோட்பாடுகளை மட்டுமே முன்நிறுத்தி ஆம் ஆத்மி செயல்படுவதாக உள்ளது. நாடு முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகளை எதிர்த்து தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ள ஆம் ஆத்மி, பிரதேச நலன்களைப் பற்றி அதன் நிலைப்பாடுகளை இன்னமும் தெளிவுபடுத்தியதாக இல்லை. குறிப்பாக மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை, காஷ்மீர், வடக்கு கிழக்கு தன்னுரிமைப் போராட்டங்கள், மாவோயிஸ்ட்டுகள் போராட்டம் என்பன குறித்த விரிவான பார்வை அதற்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதாகும்.

அணு உலைக்கு எதிராக கூடங்குளம் போராட்டத்தில், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், மற்றும் அதன் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் கலந்து கொள்வதும், அணு உலைக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்குகளில் பிரசாந்த் பூஷன் வாதாடுவது மட்டுமே இப்போது இடிந்தகரையோடு இணைக்கும் புள்ளியாக உள்ளது. அண்மையில் இரஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கெஜ்ரிவாலின் கண்டனம் இடிந்தகரையை சங்கடப்படுத்துவதாக இருந்தது. வட இந்தியர்களின், மாநிலங்களின் பார்வை, அல்லது தில்லியின் பார்வை வழமைபோல இன்னமும் தமிழர்களை பிரிவினைவாதிகளாகப் பார்ப்பதின் ஒரு பகுதியாகவே கெஜ்ரிவாலின் குரலும் உள்ளதோ என்ற அய்யத்தை அது எழுப்பத் தவறவில்லை. எனினும் ஈழத் தமிழர் நலனில் தனக்குள்ள அக்கறையை பிரசாந்த் பூஷன் போன்றோர் அவ்வப்போது எழுப்பி வருவது ஆறுதல் தருவதாக இருந்தாலும் ஒட்டு மொத்த தமிழர் விருப்பங்களில் ஆம் ஆத்மியின் எண்ணவோட்டங்கள் என்ன என்பதில் அதன் தமிழகக் கிளை இனி அமைதி காக்க முடியாது என்றே தோன்றுகிறது.

எளிய மக்கள் கட்சி, எளிய தமிழர் கட்சி, எளிய மலையாளிகள் கட்சி என்று பிரதேச அடையாளங்களைப் பெறுவதைப் போலவே ஆம் ஆத்மி, பிரதேச சிக்கல்களுக்கு முன்னுரிமை தந்து, முன்னின்று தீர்வைப் பெற்றுத் தருமானால் முக்கியமாக நாட்டின், ஏன், கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக இழுத்து மூடுவதில் சாதிக்குமானால் பாரளுமன்ற அல்லது இடிந்தகரையின் அரசியல் வழி, நிச்சயம் பொருள் நிறைந்ததாக இருக்கும்.

- இரா.மோகன்ராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It