அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெளியிடும் கூட்டறிக்கை

இந்தியா என்பது ஜனநாயக நாடு, இதில் கருத்துரிமை என்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையாகும். இந்த கருத்துரிமை என்பது ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து இந்திய குடி மக்களுக்கும் பொதுவானது. இந்நிலையில் மதவாதத்திற்கு எதிராகப் பேசியதால் சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் திரு. வீரபாண்டியன் அவர்களை அத்தொலைக்காட்சிப் பணியிருந்து நீக்க வேண்டுமென மதவாத சக்திகள் வலியுறுத்தியுள்ளதை மதசார்பின்மை மீது நம்பிக்கைக் கொண்டுள்ள இந்த கூட்டறிக்கையில் கையொப்பம் ஈட்டுள்ள நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது பேச்சுரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிரான செயல் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பில் முசாபர் நகரில் சிறுபான்மையினர் மீதான வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சன் தொலைக்காட்சி வீரபாண்டியன் பா.ஜ.க. மீது சில விமர்சனங்களை முன் வைத்துப் பேசியுள்ளார். இந்தப் பேச்சினைப் பதிவு செய்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.கவின் மாநில அலுவலகச் செயலாளர் திரு. கி.சர்வோத்தமன் என்பவர் சன் தொலைக்காட்சிக் குழும மேலாண் இயக்குநருக்கு சென்ற 23.12.2013 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் திரு. வீரபாண்டியன் பேச்சு இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும், அவர் சன் தொலைக்காட்சியில் நடத்தும் நிகழ்ச்சிகள் நடுநிலையோடு இருக்காது எனவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளார்.

மேலும், அவர் முன்நின்று நடத்தும் விவாத நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விஜயபாரதம்’ பத்திரிகையில் வீரபாண்டியனை கண்டித்தும், அவருக்கு மிரட்டல் விடுத்தும் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முகநூலில் கூட திரு. வீரபாண்டியன் மீது வன்முறையை ஏவி வருபவர்கள் தங்கள் வன்முறை போக்கை மறந்து விட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்பின்னர், கடந்த வாரம் சனிக்கிழமை முதல் அவர் நடத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவில்லை. இந்த அணுகுமுறை ஜனநாயகத்தின் அக்கறைக் கொண்டோராகிய எங்களுக்கு மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது.

பா.ஜ.க.வின் இந்தச் செயல், உண்மை நிலையுடன் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைக் கடந்த பதினேழு ஆண்டுகளாக நடத்தி வரும் திரு. வீரபாண்டியன் மீது தனிப்பட்ட முறையில் தொடுக்கப்பட்ட தாக்குதலாக கருதுகிறோம். திரு. வீரபாண்டியன் தனக்கென சொந்தக் கருத்து வைத்திருப்பதற்கும், அதனை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால், அவர் சன் தொலைக்காட்சியில் நடத்தும் விவாதங்களில் எங்கேயும் தன் சொந்தக் கருத்தைப் பிரதிபப்பது இல்லை என்பதோடு, மிகவும் கவனமாகவும், உண்மை நிலையோடு அவரது நிகழ்ச்சிகள் இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.

ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடுநிலையாக இருந்து கருத்துரைக்க வேண்டுமென்பது தான் அறம். அதனாலேயே அவருக்குச் சொந்த கருத்தோ அல்லது அரசியல் பார்வையோ இருக்கக் கூடாது என்பது தவறானது. இதர குடிமக்களுக்கு உள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.

பல்வேறு வகையில் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களுக்கும் இடமளித்து வரும் சன் தொலைக்காட்சி நிர்வாகம் திரு. வீரபாண்டியன் நடத்தும் அரசியல் விவாத நிகழ்ச்சித் தொடர ஆவன செய்து, கருத்துரிமை, பேச்சுரிமைக்கு தொடர்ந்து மதிப்பளித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள மதசார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடுத்து செயல்பட்டு வரும் மதவாதக்கட்சிகள் இதுபோன்று ஊடகவியலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்கள் விடுப்பதை அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் கண்டிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

திருமிகு. கீ. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

டாக்டர் இ.எம் சுதர்சன் நாச்சியப்பன் எம்.பி
மத்திய இணை அமைச்சர்

திருமிகு தா. பாண்டியன்
மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திருமிகு ஞானதேசிகன் எம்.பி
மாநில தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்

திருமிகு. பீட்டர் அல்போன்ஸ்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

திருமிகு. தொல். திருமாவளவன் எம்.பி
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

டாக்டர். எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
சட்டமன்ற கட்சித் தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

பேரா. கே.எம். காதர் முகைதீன், Ex. எம்.பி
பொதுச் செயலாளர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்

திருமிகு. விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்

திருமிகு. செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

பேராயர் பீட்டர் பெர்னாண்டோ,
மதுரை உயர்மறை மாவட்டம்

பேரா. சுப. வீரபாண்டியன்
தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

திருமிகு. தமிழ்ச் செல்வன்
மாநில செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்

கவிக்கோ. அப்துல் ரஹ்மான்
கவிஞர், எழுத்தாளர்

திருமிகு. ஹென்றி டிபேன்
செயல் இயக்குநர்,
மக்கள் கண்காணிப்பகம்

பேரா. அ. மார்க்ஸ்
மனிதஉரிமை செயற்பாட்டாளர்

கவிஞர் மனுஷ்ய புத்திரன்
பதிப்பாளர்

திருமிகு. திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்

திருமிகு. ஜே.எஸ். ரிபாயி
தலைவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்

திருமிகு. அப்துல் ரகுமான்
நாடாளுமன்ற உறுப்பினர், வேலூர்

கோவை கு. இராமகிருட்டிணன்
பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

பேராயர் எஸ்.றா. சற்குணம்
பிரதம பேராயர், ஈசிஐ
நிறுவனத் தலைவர், இந்திய சமூகநீதி இயக்கம்

பேராயர் தேவ சகாயம்
தென்னிந்திய திருச்சபை, சென்னை

திருமிகு. பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்தேச பொதுவுடமை கட்சி

திருமிகு. அ. குமரேசன்
பொறுப்பாசிரியர், தீக்கதிர்

திருமிகு. ஞாநி
எழுத்தாளர், பத்திரிக்கையாளர்

முனைவர் வி. சுரேஷ்
தேசிய பொதுச் செயலாளர்
மக்கள் சிவில் உரிமைக் கழகம்

திருமிகு கோ. சுகுமாரன்
மக்கள் உரிமை கூட்டமைப்பு

திருமிகு டி.எஸ்.எஸ். மணி,
பத்திரிக்கையாளர்

திருமிகு. செந்தில்
ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்ஸ் அமைப்பு

Pin It