பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மதவாதம் தலைவிரித்தாடும் என்பது உலகறிந்தது. இதனை இப்படி மேலோட்டமாகச் சொல்லாமல், நுண்ணோக்கிச் சொல்ல வேண்டும் என்றால் இசுலாமியர்களையும், பார்ப்பனரல்லாத இந்துக்களையும் பலியாக்கி பார்ப்பனியம் தலைவிரித்தாடும். இது எல்லோரும் அறிந்த உண்மை.

rupee economyபார்ப்பனியத்தின் கை எப்போதுமே சமூகத்தில் ஓங்கித்தானிருக்கிறது. ஆனால் வரலாறு காணாத அளவிற்கு இப்போது அது பன்மடங்கு அதிகாரம் பெற்று வீற்றிருக்கிறது. பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியுற்றிருக்கிறது.

இதனைச் சித்தாந்த ரீதியில் அனுகிணால் பார்ப்பனர்களின் பேதம் கற்பிக்கும் கொள்கையானது, அறம் சாராதது மட்டுமன்று, பொருள் சாராததும் ஆகும் என்பதற்குத் தெளிவான சான்றாக இந்தப் பொருளாதார வீழ்ச்சி அமைகிறது. அறமும் பொருளும் இல்லாத இடத்தில் இன்பம் எங்ஙனம் கிடைக்கப்பெறும்?

அறம், பொருள், இன்பத்தை நம்முடைய திருக்குறள்தான் தரமுடியுமே தவிர, ஆரியர்களின் (சனாதன)தர்ம, அர்த்த, காம, மோட்ச சாஸ்திரங்களின் படி நடக்கும் ஆட்சியாளர்களால் தரவே முடியாது. இந்த ஆரிய சித்தாந்தம் பார்ப்பனர்கள் அல்லாத ஆரியர்களுக்கே அநீதி விளைவிக்கக் கூடியதுதான். எனவே தீவிரவாதத்தை விட தீவிரமாக ஒழிக்கப்பட வேண்டியது பார்ப்பனர்களின் சித்தாந்தமே.

இந்த நாடு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பவர் பா.ஜ.க உருவாக்கிய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் இராஜீவ் குமார் ஆவார். ஆட்டோமொபைல் துறை, ஜவுளித் துறை, உற்பத்தித் துறை, உணவுத் துறை எனத் துறைகள் தோறும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அரசோ ப.சிதம்பரத்தைக் கைது செய்ய ஏற்பாடு செய்கிறது. சுவர் ஏறிக் குதித்துக் கைது செய்யும் சுவாரஸ்யமான காட்சிகளைக் காட்டி எத்தனை நாள்களைக் கடத்த முடியும்?

நோய்நாடி நோய்முதல் நாடிப் பார்த்தால் அது நவம்பர் 8, 2016 இரவு 8 மணிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பணமதிப்பிழப்பு என்னும் பயங்கரவாதம் இந்த நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் அதனை வீரதீரச் செயலாக இந்த நாட்டு மக்களைப் பார்ப்பனியம் நம்ப வைத்தது. அவர்கள் தேடிப் பிடித்துக் கொண்டு வந்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல், பதவியை இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து GST. தொழில்துறைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கின. இன்று அதன் விளைவுகள் எரிமலை போல் வெடித்துக் கொண்டிருக்கின்றன. பல ஆயிரம் பேருக்கு வேலைகள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. இனி பக்கோடா போட்டாலும் அதை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை.

பார்ப்பனியம் இப்போது அமைதியாக இருக்கிறது. தனக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறது என்று எல்லாவற்றையும் செய்துவிட்டு, பின்னர் மோசமான விளைவுகளைச் சந்திக்கும் போது பார்ப்பனர்கள் அமைதி காப்பதைத் தான் அம்பேத்கர் ‘conspiracy of silence’ என்று சொன்னார்.

நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில்தான், ஒரு அறிவு ஜீவி பாரம்பரியமான முறையில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பொருளாதார வல்லுநர்கள் எதிர்க்கேள்விகளைத் தாக்கல் செய்தனர். அவர்கள் அத்தனை பேரையும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தினார்கள். பட்ஜெட் ஆவணங்களை மேற்கத்திய பாணியில் சூட்கேஸில் கொண்டு வரும் வழக்கத்தை மாற்றி, பாரம்பரியப் பையில் கொண்டு வந்தால் நாடு வளர்ச்சியடைந்துவிடும் என்று மக்களை நம்ப வைத்தார்கள். தகுதியும் திறமையும் கொண்ட “உயர்ஜாதி” அமைச்சர்களைக் கொண்டு காட்டுக்குள் துணிச்சலாகச் செல்லும் பிரதமரின் ஆட்சியில் பொருளாதாரம் மட்டும் பலவீனம் அடைந்திருக்கிறது.

பாகிஸ்தானைக் காட்டியே இந்த நாட்டு மக்களின் கண்களைக் கட்டுகின்றனர். பாகிஸ்தான் என்ற நாடு மட்டும் இல்லையென்றால் பா.ஜ.கவிற்கு வாழ்க்கையே கிடையாது.

சொல்லப்போனால் பாகிஸ்தானால் இவர்கள் தான் வாழ்க்கை பெற்றிருக்கிறார்கள்.

தற்போது ஒட்டு மொத்த நாடே பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. ஆனால் ஒருவரின் சொத்து மதிப்பு மட்டும் ஒரே நாளில் ரூ.29,000 கோடி அதிகரித்தது. ஜியோ நிறுவனம் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களைத் தின்று வளர்ந்து வருகிறது. அம்பானியும் அதானியும் நாட்டைப் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் பார்ப்பனியம் தன்னுடைய பங்கைச் சரியாகப் பெற்றுக் கொள்கிறது.

நவீனப் பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் அறம் சாராதவை. அவை முதலாளித்துவம் சார்ந்தவை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் பெரிதொரு மாற்றத்தைக் கொண்டு வராதவை. ஆனால் இந்தப் பொருளாதாரமே சரிகிறதென்றால் இந்த நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை எவ்வளவுதூரம் பின்னுக்குப் போகப்போகிறது என்பது புலப்படுகிறது.

மீண்டும் சாணக்கியர்களை தலை தூக்கவிட்டால், நாம் நிலை தாழ்ந்து போவோம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

Pin It