தேர்தலும் தமிழ்நாட்டுக் கட்சிகளும்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. கூட்டணிப் பேரங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சில அரசியல் கட்சிகள் இப்பொழுதே பேரத்தை முடித்துவிட்டன. இன்னுஞ் சில பேரங்கள் கமுக்கமாக நடைபெறுகின்றன. எந்தப் பக்கம் சாய்ந்தால் ஓரிரு தொகுதிகளாவது தேறும் என்பதில் ஊசலாட்டங்கள் இருப்பதால் முடிவிற்கு வர முடியாத பேரங்கள் அவை.

மொத்தத்தில் தமிழ்நாட்டு அரசியலைத் தேர்தல் காய்ச்சல் தொற்றிக் கொண்டது. இனி அவர்கள் கொள்கை கோட்பாடுகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். இதற்கு முன் அவர்கள் கொட்டித் தீர்த்த அத்தணை முழக்கங்களையும் கிடப்பில் போட்டு விடுவார்கள், தேர்தல் முடிந்த பின் மீண்டும் தூசிதட்டி எடுத்துக் கொள்ள ஏந்தாக. இப்பொழுது அவர்களை வாட்டும் ஒரே கவலை எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது நலம் தரும், எத்தணைத் தொகுதிகளைப் பேரம் பேசிப் பெற முடியும், எத்தணைத் தொகுதிகளில் தேற முடியும் என்பது மட்டும்தான்.

பதவித் தேடலில் அதிகார நாட்டத்தில் மக்கள் நலன் முற்றாக மறந்து போகும். மக்கள் நலம் பற்றிய உண்மையான கவலை இந்தத் தேர்தல் கட்சிகளுக்கு உண்டா என்று கேட்டு விடாதீர்கள். அவர்கள் அவ்வப்பொழுது பேசும் கொள்கை கோட்பாடுகளும் மக்கள் நலனும் நடத்தும் போராட்டங்களும் அடுத்த தேர்தலைக் குறி வைத்துத்தான். இதில் இடதுசாரிக் கட்சிகள் தொடங்கி வலதுசாரிக் கட்சிகள் முடிய எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் தமிழர் நலம் பேசும் தேர்தல் அரசியல் கட்சிகளும் இதில் அடக்கம். இன்றும் சரி அன்றும் சரி தமிழ்த் தேசியத்தை உச்சரிக்கும் இக்கட்சிகளின் இரண்டகத்தால் ஆகப் பெரிதும் இழந்தவர்கள், இழந்து கொண்டிருப்பவர்கள் தாயகத் தமிழர்களைக் காட்டிலும் ஈழத்தமிழர்களே! முள்ளிவாய்க்காலில் இலக்கக் கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் அளப்பரிய ஈகத்தால் வளர்க்கப்பட்ட ஈடிணையற்ற விடுதலைப் போராட்டம் எந்த எச்சமும் இல்லாமல் அழிக்கப்பட்டதற்கும் அன்று இவர்கள் இழைத்த இரண்டகமே காரணம். இன்று உலகம் எங்கும் இராசபட்சேயின் போர்க்குற்றங்கள் அம்பலப்பட்டு, இனப்படுகொலை உறுதி செய்யப்பட்டு வரும் நாளில் அதே இரண்டகத்தை மீண்டும் அரங்கேற்றி ஈழத்தமிழர்களுக்கு தீர்க்கவொண்ணா இன்னலை இவை இழைத்து வருகின்றன.

அனைத்திந்தியக் கட்சிகளும் தமிழர் உரிமைகளும்

பொதுவாக தாயகத் தமிழர்கள் உரிமை குறித்ததானாலும் சரி ஈழத்தமிழர்கள் உரிமை பற்றியதானாலும் சரி அனைத்திந்தியக் கட்சிகள் பாராமுகமாகவே இருந்து வருகின்றன. முள்ளிவாய்க்கால்ப் போர் உச்சகட்டத்தில் தமிழர்களின் ஓலம் உலகையே உலுக்கிய பொழுது இக்கட்சிகளின் பெரும்பாலான வடநாட்டுத் தலைவர்கள் மனித நேயமே அற்று மவுனம் காத்தார்கள். சிலர் வருத்தம் தெரிவித்தார்கள்; சிலர் கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால் எவருமே தங்கள் தொண்டர்களுடன் தெருவில் இறங்கிப் போரை நிறுத்தும்படி குரல் கொடுக்கவில்லை. எது எதற்கோ நாடாளுமன்றத்தை முடக்கியவர்கள் போர் நிறுத்தத்திற்காக ஒரு நாளும் அவ்வாறு செய்ததில்லை.

ஈழச் சிக்கலைத் தமிழ்நாட்டுத் தலைவர்கள் உரிய முறையில் வடநாட்டுக்குக் கொண்டு செல்லவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டைச் சிலர் கூறுவர். ஆனால் இதில் எந்த அறமும் இருப்பதாகத் தெரியவில்லை. தங்களுக்கு மிக அருகில் உள்ள ஒரு நாட்டில், அதுவும் நட்பு நாடென்று சொல்லப்படுகின்ற ஒரு நாடடில் நடைபெறும் பேரழிவைப் பற்றி எடுத்துச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அதுவும் அஃதென்ன திடீரென்று நிகழ்ந்த ஒரு நிகழ்வா?

அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு நடைபெற்று வரும் தமிழின ஒடுக்குமுறை பற்றி இவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா? 1983இல் நடந்த கோரப்படுகொலை பற்றி அறியாதவர்களா இவர்கள்? உலகத்தையே ஆட்டம் காணச் செய்த ஆயுதப் போராட்டத்தை அடுத்தவர்கள் எடுத்துச் சொல்லித்தான் இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? வங்காளதேச விடுதலைப் போரை அப்படித்தான் தெரிந்து கொண்டார்களா? உண்மை அதுவன்று. ஈழத்தமிழர்களைப் பற்றிக் கிஞ்சித்தும் இவர்களுக்குக் கவலை இல்லை; அக்கறை இல்லை; இதுதான் அப்பட்டமான உண்மை.

ஒருவேளை ஈழத்தமிழர்களுக்குக் குரல் கொடுத்தால் இங்குள்ள தமிழர்களும் விழித்துக் கொள்வார்களோ என்ற அச்சம் இவர்களின் பாராமுகத்திற்குக் காரணமாக இருக்கலாம். அய்ந்நூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பற்படையினரால் கொல்லப்பட்டதற்கு இதுவரை எந்தக் கண்டனமும் வடக்கிருந்து வந்ததாகத் தெரியவில்லையே! சிங்கள அரசைக் கண்டித்தோ இந்திய அரசை நடவடிக்கை எடுக்கக் கோரியோ தில்லியிலோ தமிழ்நாடு தவிர்த்து வேறெங்குமோ எப்போராட்டமும் நடைபெற்றதாகத் தெரியவில்லையே! உரிமை உணர்வு இங்குள்ள தமிழனுக்கும் வந்து விடக் கூடாது என்பதில் அனைத்திந்தியக் கட்சிகள் அனைத்தும் தெளிவாக இருப்பதாகத்தான் தெரிகிறது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஓரளவிற்கு இதில் விதி விலக்காகக் கூறலாம். அக்கட்சியின் அனைத்திந்திய மாநாட்டில் முள்ளிவாய்க்கால் படுகொலை விவாதிக்கப்பட்டுள்ளது; தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மீனவர் மீதான தாக்குதல்களும் கண்டிக்கப்பட்டுள்ளன. தில்லியில் அக்கட்சி சார்பில் கண்டனப் பேரணிகளும் நடைபெற்றுள்ளன. ஆனாலும் அக்கட்சியின் தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர் இராசாவிடமிருந்து வெளிப்படும் ஆவேசம் அக்கட்சியின் பொதுச்செயலாளர்  ஏ.பி. பரதனிடமிருந்தோ, குருதாஸ் தாஸ்குப்தாவிடமிருந்தோ வெளிப்படுவதில்லையே? அது ஏன்?

இராசா தமிழர்; மற்ற இருவரும் தமிழர்களில்லையே! அதுதான். ஓரளவாவது ஈழத்தமிழர் சிக்கல் குறித்து இபொக பேசுகிறது என்றால் அது தமிழ்நாட்டுக் கிளையின் அழுத்தமே காரணமாக இருக்கக் கூடும். பன்னாட்டுத் தேசியம் பேசும் இபொகவின் நிலையே இதுதான். இன்னொரு இடதுசாரிக் கடசியான மார்க்சிசுட்டின் நிலைப்பாடு பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை! கட்சியின் பொலிட்பிரோவில் வங்காளிகளும் மலையாளிகளும் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் இறுதியானது. தமிழ்நாட்டுக் கிளை அதை கை கட்டி வாய் பொத்தி நடைமுறைப்படுத்தும். அக்கட்சி இதுவரை தமிழர் நலன் குறித்தோ உரிமை குறித்தோ சுண்டு விரலையும் கூட அசைத்ததில்லை. அதுதான் அக்கட்சியின் பாட்டாளி வர்க்கப் பன்னாட்டுத் தேசியம்.

பாரதிய சனதாக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை இன்று ஈழத்த்திழர்களுக்காய் நீலிக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேரணி நடத்தியுள்ளது. சுசுமா சுவராசு தலைமையில் இராமேசுவரத்தில் கடலில் இறங்கிப் போராடப் போவதாகவும் அறிவித்துள்ளது. இவையெல்லாமே தேர்தல் காலத்து நாடகங்களே அன்றி வேறொன்றும் அல்ல. உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது அக்கட்சி போர் நிறுத்தத்திற்காகக் குரல் கொடுத்துப் போராடியிருக்க வேண்டும்.

எல்லாம் நடந்து முடிந்த பிறகு இலங்கைக்குச் சென்று இராசபட்சேவுடன் கை குலுக்கி மகிழ்ந்தவர்தானே சுசுமா சுவராசு! இராசபட்சே நடத்தியிருப்பது இனப்படுகொலை என்றோ அல்லது குறைந்தளவு போர்க்குற்றம் என்றோ கூட அவரோ அல்லது அக்கட்சியின் வடநாட்டுத் தலைவர்களோ ஒருநாள் கூடக் குற்றம் சாட்டியதில்லையே? அவர்களுடைய மபி முதல்வர் சௌகான் அக்கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அல்லவா வழங்கினார்? ஈழம் சென்று திரும்பிய பாசக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு எல்லாம் சிறப்பாக நடைபெறுவதாக அல்லவா பாராட்டுப் பத்திரம் வழங்கினார்? கொழும்புவில் பொதுநலவய மாநாடு நடைபெறுவதை முதலில் வரவேற்ற பாசக தலைமை தமிழ்நாட்டுத் தலைவர்கள் தலையீட்டிற்குப் பின் அமைதி காத்ததே ஒழிய மன்மோகன்சிங் மாநாட்டிற்குச் செல்லக் கூடாது எனக் கடைசிவரை கோரவில்லையே!

காங்கிரசு சிங்களத்தைப் பகைத்துக் கொண்டாலும் பாசக சிங்களத்தை என்றுமே பகைத்துக் கொள்ளாது. ஏனெனில் சிங்களவர்கள் ஆரியர் வழி வந்தவர்கள் என்பது அதன் வரலாற்றுப் பார்வை; ஆரியர்களே ஆளப் பிறந்தவர்கள் என்பதும் அசுரர்களான தமிழர்கள் அடக்கி ஒடுக்கி ஆளப்படவேண்டியவர்கள் என்பதும் அதன் கொளகை அடிப்படை. எனவே அங்கு நடந்தது ‘தர்ம யுத்தம்’.  இதை அவர்கள் வெளிப்படையாய்ச் சொல்லித் தமிழ்நாட்டு இளிச்சவாயர்களின் வாக்குகளை இழக்க விரும்பவில்லை. ஏமாளித் தமிழர்களை ஏமாற்ற எத்தனையோ வழிகள் உள்ளன. ஈழத்துக்காரனைப் போல் உரிமைப் போராளிகளாய் மாறாமல் பார்த்துக் கொண்டால் போதுமானது. இதைச் செய்ய அவர்களிடம் ஏராளமான அனுமன்களும் சுக்ரீவன்களும் உள்ளனரே.

காங்கிரசு நம்முடைய பகை சக்தி என்றால் பாசகவோ மற்ற அனைத்திந்தியக் கட்சிகளோ நம் நட்பு ஆற்றல்கள் அல்ல. காங்கிரசும் அதன் அரசும் சிங்களப் பேரினவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழர்களை அரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து அழித்து ஒழித்ததென்றால் மற்றவர்கள் எந்தத் தலையீடும் செய்யாமல் அமைதி காத்தனர்; ஒதுங்கி நின்றனர். இனப்படுகொலை நடைபெறுவதை அறிந்திருந்தும் அதைத் தடுக்க எந்தச் சிறு முயற்சியும் மேற்கொள்ளாமல் குருடராய் செவிடராய் ஊமையராய் ஓரங்கட்டியது கொலைக் குற்றத்திலும் கொடுங்குற்றமே!

தமிழ்நாட்டுக் கட்சிகளின் பச்சைத் துரோகம்

அனைத்திந்தியக் கட்சிகளின் தமிழர் பகைப் போக்கு புரிந்து கொள்ளக் கடியதே! ஆனால் தமிழர் நலம் காக்கவே பிறப்பெடுத்ததாகப் பறைசாற்றிக் கொள்ளும் திராவிடக் கட்சிகளின் அதிலும் குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அப்பட்டமான இரண்டகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது. திமுக அப்பொழுது தமிழ்நாட்டின் ஆளும் கட்சி, தில்லியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கூட்டணிக் கட்சி. அமைச்சரவையில் முகாமையான பதவிகளில் திமுகவினர் அமர்ந்திருந்தனர். மன்மோகன் அரசு திமுகவிற்குத் தெரியாமல் எந்த வெளியுறவுக் கொள்கை முடிவுகளையும் எடுத்திருக்க முடியாது.

மன்மோகன் அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் அறிவுரைகள் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கியதென்றால் திமுக அதற்கு உடன்பட்டே அமைச்சரவையில் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அது அமைச்சரவையிலிருந்து வெளியேறி  இருந்திருக்க வேண்டுமே! எதுவும் செய்யவில்லையே! தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாகப் பதவி விலகுவது என்று எடுத்த முடிவு வெறும் நகைச்சுவை நாடகமாய் முடிந்து போனதே! திமுக அன்று அரங்கேற்றிய நாடகங்களில் உச்சமாய் அமைந்தது கருணாநிதி கடற்கரையில் நடத்திய உண்ணாநிலை ஓரங்க நாடகமே!

திமுகவிற்கு, குறிப்பாய் அதன் தலைவர் கருணாநிதிக்கு ஈழத்தமிழர்களின்பால் கடுகளவேனும் அன்போ இரக்கமோ அல்லது குறைந்தளவு எல்லோரிடமும் இருக்க வேண்டிய அடிப்படை மாந்த நேயமோ இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்திருக்கவே நடந்திருக்காது. பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு தமிழ்நாட்டுத் தெருக்களைப் போராட்டக் களமாக்கியிருந்தால் வரலாறே மாறிப் போயிருக்கும். உலக வல்லரசுகளின் கூட்டுச் சதி தமிழ்நாட்டுத் தெருக்களில் தோற்றுப் போயிருக்கும்; ஈழவிடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கும்; அழிந்திருக்காது. தமிழ்நாட்டு மக்கள் அன்று தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டுதான் இருந்தனர். அவர்கள் போராட்டங்களைத் திசை திருப்பவும் மழுங்கடிக்குவுமே கருணாநிதி நாடகங்கள் பயன்பட்டன. காங்கிரசும் திமுகவும் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகங்கள் அவை.

முத்துக்குமார் மூட்டிய எழுச்சித் தீயை அணைத்ததும் கருணாநிதியே! உலகெங்கும் தமிழர்கள் தெருக்களில் விடிய விடியப் போராடிய பொழுது அப்படி எதுவுமே தமிழ்நாட்டில் நடைபெறாமல் பார்த்துக் கொண்டதும் அவரே! இன்று ஈழத்தமிழருக்கு ஆதரவாய் செயலலிதா உதிர்க்கும் கண்ணீர்த் துளிகள் அவரைப் பார்த்துக் கற்றுக் கொண்டவையே! முன்னவர் தேர்ந்த திரைக்கதை உரையாடல் கலைஞர்; பின்னவர் பேறு பெற்ற திரைப்பட நடிகை.

திமுக அதிமுகக்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஈழத்தமிழர்களக் காப்பாற்றத் தவறியதில் மற்ற கட்சிகளுக்கும் பங்குண்டு. தமிழ்த் தேசியர்களும் இதில் தவறிழைத்துள்ளனர். ஈழத்தமிழர்களுக்கு ஓங்கிக் குரல் கொடுத்த இபொக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உட்பட்ட அனைத்துத் தேர்தல் கட்சிகளும் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே அனைத்து ஆயுதங்களையும் கீழே போட்டு விட்டுத் தேர்தலுக்கு மண்டியிட்டுத் தங்களை ஒப்படைத்துக் கொண்டன. கூட்டணிப் பேரத்தில் தேர்தல் கிளப்பிய ஆரவாரப் பேரோசையில் காதுகள் செவிடாகி ஈழத்தமிழரின் கத்தலும் கதறலும் கேட்காமல் போயின. முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாய் தமிழர் பிணங்கள் விழுந்த பொழுது கருணாநிதி மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்குமாய்க் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்; மற்றவர்கள் தங்கள் கட்சிகளைக் காப்பாற்றக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். வேறுபாடு அவ்வளவே.

வழக்கமாய்த் தேர்தலைப் புறக்கணிக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் ஈழத்துக்கு இரண்டகம் செய்த காங்கிரசையும் அதற்குத் துணை நின்றவர்களையும் தோற்கடிப்பது என்ற முழக்கத்தோடு களம் கண்டன. காங்கிரசைத் தோற்கடிப்பது என்ற முழக்கம் அதிமுக கூட்டணியை ஆதரிப்பதில் முடிந்த சோகமும் நிகழ்ந்தது. ஆனால் அவர்கள் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்பது உண்மையே. சிதம்பரத்தின் தேர்தல் வெற்றியே அய்யத்திற்கு உரியதாகத்தான் பேசப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் ஈழத்திற்கு ஆதரவாகத்தான் உள்ளனர் என்பதை உணர முடிந்தது. ஆனால் இவை எதுமே ஈழமக்களுக்கு விடிவாய் அமையவில்லையே! மீண்டும் காங்கிரசே ஆட்சிக் கட்டலில் அமைந்தது. கருணாநிதி மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் பதவி பெற்றுத் தர முடிந்தது. இன்று வரை இராசபட்சேவிற்கு ஆதரவாகவும் ஈழமக்களுக்கு எதிராகவும் காங்கிரசின் சதி வேலைகள் தொடர்கின்றன.

தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என்று கூட இல்லாமல் தமிழ்நாட்டில் தேர்தலை நடத்த விடாமல் தடுப்பது என்ற முயற்சியில் தமிழ்த்தேசிய ஆற்றல்கள் இறங்கி இருந்தால் ஒருவேளை விளைவுகள் வேறு வகையாக இருந்திருக்கலாம். “போர் நிறுத்தத்திற்கு இந்தியா வழிவகை செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் தேர்தலை நடத்த அனுமதியோம்’’ என்ற முழக்கத்தோடு ஈழ ஆதரவுக் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்துப் போராடியிருந்தால் அனைத்திந்தியக் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். அதிமுக திமுகக்களையும் அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஏன் ஈழ ஆதரவு முகங்கள் பல வெளிறிப் போயிருக்கும். அடக்குமுறைகளை எதிர் கொண்டு போராடியிருந்தால் மக்கள் ஆதரவு கொடுத்திருப்பர். வெற்றியைக் கூட ஈட்டியிருக்கலாம். எது எப்படியோ ஈழத்தமிழர் பெருந்துயரத்திற்கு நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் காரணமாய் இருக்கிறோம். நாம் அனைவரும் குற்றவாளிகளே.

மீண்டும் தேர்தல் மீண்டும் துரோகங்கள்

முள்ளிவாய்க்கால் பெருந்துயரப் பேரழிவு அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கி வருகிறது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக் கூட்டாளி இந்திய அரசின் பதவிக் காலமும் முடிவுடைய உள்ளது. புதிய அரசை அமைக்க பதவிகளைக் கைப்பற்ற எல்லாக் கட்சிகளும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்து விட்டன. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல தமிழ்நாட்டை ஏற்கனவே தேர்தல் சுரம் தொற்றிக் கொண்டு விட்டது.

கடந்த தேர்தலைப் போலவே, ஏன் அதை விடக் கூடுதலாகவே இந்தத் தேர்தலிலும் தேர்தல் வெற்றி தோல்விகளை முடிவு செய்வதில் ஈழச்சிக்கல் முதன்மையான பங்கு வகிக்க உள்ளது. யார் யார் ஈழத்திற்கு இரண்டகம் செய்தவர்கள் என்பதை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். வாக்களிப்பில் அஃது எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை. தேர்தல் அரசியல் கட்சிகள் இதை அய்யந் திரிபின்றி உணர்ந்துள்ளன. அதனால்தான் ஒவ்வொரு கட்சியும் புதிய புதிய நாடகங்களை அரங்கேற்றித் தங்களை ஈழத்தமிழர் ஆதரவாளர்களாகக் காட்டி வருகின்றன.

ஈழப்படுகொலைக் கூட்டுக் களவாணி திமுக தன் கூட்டாளி காங்கிரசைக் கை கழுவி விட்டதாக அறிவிக்கிறது; டெசோவைப் புதுப்பிக்கிறது; ஈழம்தான் தீர்வு என முழங்குகிறது; இனப்படுகொலைக் குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும் எனக் கோருகிறது. அதன் கூட்டாளியான இனப்படுகொலைப் பங்காளி காங்கிரசோ ஈழத்தமிழர் வாழ்வைப் புனரமைக்க கோடி கோடியாய்ச் செலவளிப்பதாகக் கூறுகிறது. இலங்கைக்கு ஆயுத உதவியே செய்யவில்லை எனச் சத்தியம் செய்கிறது. அதன் அமைச்சர் சிதம்பரம் ஒரு படி மேலே போய் இலங்கை போர்நிறுத்தம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றி விட்டதாகவும், நடந்தது இனப்படுகொலையே எனவும் பறைசாற்றுகிறார். இனப்படுகொலைக் குற்றவாளி விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கிறார். ஆனால் வசதியாக யார் விசாரிப்பது என்பதைக் கூறாமல் விட்டுவிட்டார்.  

“கேப்பையில் நெய் வடிகிறது” என்றால் அதைக் கேட்டுத் தலையாட்டும் கேணையர்களாக இன்றைய தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் இல்லை. பராசக்தி வீரவசனப் பருப்பு இனித் தமிழ்ச் சட்டியில் வேகவே வேகாது. ஈழத்தமிழருக்குக் கருணாநிதி இழைத்துள்ள இரண்டகத்தைத் தமிழர்கள் என்றுமே மன்னிக்கமாட்டார்கள். காங்கிரசும் சிதம்பரன்களும் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டுத் துடைத்தெறியப்பட்டவர்கள். இனியும் தமிழகம் அவர்களை ஏற்றுக் கொள்ளாது.

ஆனால் புதிதாக உருவாகி வரும் பாசக கூட்டணி மிக மிக ஆபத்தானது. ஏற்கனவே மேலே  சுட்டிக் காட்டியுள்ளதைப் போல் பாசக எந்த வகையிலும் தாயகத் தமிழர்களுக்கும் உதவாது, ஈழத்தமிழர்களுக்கும் உதவாது. அது மானுட விரோதக் கட்சி. குசராத்தில் அக்கட்சி ஆடிய கோரக் கொலைத் தாண்டவத்தை எப்படி மறப்பது? குசராத்தில் நடந்தது இனப்படுகொலை அல்லவா? அளவிலும் வீச்சிலும் தவிர ஈழப்படுகொலைக்கும் குசராத் படுகொலைக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? தமிழ்நாட்டு பாசக வடிக்கும் நீலிக்கண்ணீர் தமிழர்களை ஒட்டு மொத்தமாய்க் கவிழ்த்து விடும். பிறகு நீந்திக் கரை சேரவே முடியாது.

ஈழத்தமிழருக்கு இந்தந்த வகையில் உதவுவோம் என இதுவரையில் பாசக தலைமை எந்த உறுதிமொழியாவது தந்துள்ளதா? பிறகு எந்த அடிப்படையில் மதிமுக அதனோடு கூட்டுச் சேர்கிறது? எந்தத் தார்மீக அடிப்படையில் மோடியை அடுத்தத் தலைமை அமைச்சராக வைகோ வழி மொழிகிறார்? தமிழ்நாட்டில் தனித்து நின்று எந்த ஓரிடத்தையும் வெல்ல முடியாத ஒரு கட்சியின் தலைமையில் எப்படி மனமொப்பிக் கூட்டுச் சேர்கிறார்? மேடையில் ‘வீரக் கர்ஜனை’ புரியும் அவரின் தன்மானத்திற்கு என்ன நேர்ந்தது?

ஏற்கனவே அவர் அதிமுக கூட்டணியில் பாசகவுடன் நட்புறவு பாராட்டியதும் யாவரும் அறிந்ததே! ஈரோடு மதிமுக மாநாட்டிற்கு அத்வாணியை அழைத்துச் சிறப்பித்ததும் நினைவிற்கு வருகிறது. குசராத் படுகொலையை அவர் கண்டித்ததே இல்லையே. ஆனால் கூடங்குளம் அணுஉலை தொடங்கி அட்டப்பட்டி பழங்குடியினர் நிலச்சிக்கல் ஈறாக அவர் காட்டிய தனித்தன்மை அவரிடம் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. எல்லாவற்றையும் கவிழ்த்து விட்டார். தாமும் ஒரு சராசரித் தேர்தல் அரசியல்வாதியே என்பதை மெய்ப்பித்து விட்டார்.

ஈழம் தொடர்பில் பாசக நிலைப்பாடு வேறு, அதில் தவறில்லை எனக் கூறும் வைகோ சேது சமுத்திர வாய்க்கால் குறித்து பாசக மறுஆய்வு செய்யும் என்கிறார். அப்படியானால் ஈழம் தொடர்பில் பாசகவிடம் அவர் எதுவுமே பேசவில்லை அதுவும் எந்த உறுதிமொழியும் தரவில்லை என்றுதானே பொருள்? வைகோ இதுவரை முழங்கிய முழக்கத்திற்குப் பொருள் என்ன? இது கருணாநிதி செய்த இரண்டகத்தினும் கொடியது. புலிகளின் ஓயாத அலை வெற்றியை முந்தைய வாஜ்பாய் அரசு தடுத்து நிறுத்திய போது மவுனம் காத்த வைகோ நம் நினைவில் வந்து செல்வதைத் தடுக்க முடியவில்லை.

அதிமுக கூட்டணியைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. அதிமுக சட்டமன்றத் தீர்மானங்களை நம்பி ஏமாற ஒன்றுமில்லை. கருணாநிதி காலத்திய கடிதங்களுக்கும் தீர்மானங்களுக்கும் அறிக்கைகளுக்கும் இன்றைய அம்மாவின் கடிதங்களுக்கும், தீர்மானங்களுக்கும், அறிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதில் ஈழத்தமிழர் ஆதரவுக் கட்சியான இபொக இடம் பெற்றிருப்பதில் ஒன்றும் வியப்பில்லை. நாடாளுமன்றத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்குத் தேவை ஓரிரு இடங்கள்; அவ்வளவே! அதற்கு மேல் அவை புரட்சி செய்யா. ஆனால் நாளை அதிமுக மோடிக்குக் கை தூக்கும் பொழுது இவர்கள் முகத்தில் வழியுமே விளக்கெண்ணெய் அதை நினைத்தால்தான் நம்மை அறியாமல் அவர்கள் மீது கழிவிரக்கம் தோன்றுகிறது.

சீரழிந்நு போன பாமக பாசகவைப் போலவே தமிழ்நாட்டில் துடைத்தெறியப்பட வேண்டிய சீர்குலைவுச் சக்தி.

தமிழ்த் தேசிய முற்போக்கு ஆற்றல்கள்

வரும் நாடாளுமன்றத் தேர்தல் தாயகத் தமிழர்களுக்கோ ஈழத்தமிழர்களுக்கோ எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை. இது கல்லின் மேல் எழுதப்பட்ட எழுத்து. தமிழ்த் தேசிய முற்போக்கு ஆற்றல்கள் என்ன செய்யப் போகின்றன? கடந்த தேர்தலைப் போல் திமுகவையும் காங்கிரசையும் எதிர்த்து வேலை செய்யப் போகின்றனவா? ஒட்டு மொத்தத் தேரதலையும் புறக்கணிக்கப் போகின்றனவா? தேர்தலைத் தடுத்து நிறுத்தும் சூழல் இப்போதில்லை.

கொள்கை கோட்பாடுகள் அற்ற பதவி ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்ட தேர்தல் கட்சிகள் கூட்டணியைப் பற்றிப் பேசும் பொழுது கொள்கையும் கோட்பாடும் விடுதலைக் குறிக்கோளும் கொண்ட அமைப்புகள் ஏன் கூட்டணி அமைக்கக் கூடாது? கடந்த தேர்தலில் அப்படிப்பட்ட முயற்சி இறுதியில் சிறிது திசை மாறி விட்டது. இந்தத் தேர்தலில் அம்முயற்சியை மீண்டும் தொடங்கலாம். கடந்த தேர்தலை விட இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டிய சீர்குலைவு அமைப்புகள் கூடுதலாக உள்ளன. மதவாத ஆற்றல்களோடு சாதிய ஆற்றல்களையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.  அதற்கேற்ப முற்போக்கு ஆற்றல்கள் ஒற்றுமைப்பட வேண்டியதும் ஒன்றிணைந்து இயங்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். வரலாறு நம்மீது சுமத்தியுள்ள இந்தக் கடமையைச் செய்யத் தவறினால் வரலாறு நம்மையும் இரண்டர்கள் எனப் பழி தூற்றும்.

- கலைவேலு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It