இந்திய மக்கள் தொகையில் இருபது விழுக்காட்டுக்கும் மேல் வாழும் முஸ்லிம்கள், இங்குள்ள பண்பாட்டு வேர்களிலிருந்து விலகியே நிற்பதாகவும், பொதுக் களத்தில் கலக்காமல் தனித்த அடையாளங்களைத் தூக்கிப் பிடிப்பதிலேயே குறியாக உள்ளதாகவும், அவர்கள் நெருக்கடிகளைச் சந்திப்பதற்கும், தனிமைப்பட்டுப் போவதற்கும் இதுவே காரணம் என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது.

ஆன்மீக நம்பிக்கைகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் முஸ்லிம்கள் சிலரின் முதிர்ச்சியற்ற அணுகுமுறைகள் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவதற்கு ஒரு வகையில் காரணமெனினும், பொது வெளியிலிருந்து முஸ்லிம்களை ஒதுக்கித்தள்ளும் வகுப்புவாதச் சதிகளே வேர்க் காரணியாய் உள்ளன.

முஸ்லிம்கள் தனிமைப் பட்டார்கள் என்பதை விட தனிமைப் படுத்தப் பட்டார்கள் என்பதே உண்மை. மார்க்க அடிப்படையில் தனித்தன்மையை நிலைநாட்ட விரும்பிய போதும், அரசியல், சமூக ரீதியிலான அம்சங்களில் மைய நீரோட்டத்தில் இணைந்தவர்களாகவே இருந்துள்ளனர்.

‘இந்திய தேசியம்’ எனும் கருத்தியலை ஏற்றுக் கொண்டும், அதைக் கட்டிக் காப்பதற்கான கருவியாக காங்கிரசைப் பற்றிக் கொண்டும் இருந்தவர்களே இந்திய முஸ்லிம்கள். தமக்கென தனி அமைப்பு கட்டுவதையோ, ‘முஸ்லிம்’ என்ற முழக்கத்துடன் அரசியலில் அடையாளப்படுவதையோ ஒருபோதும் அவர்கள் விரும்பியதில்லை. பன்மைச் சமூக அமைப்புள்ள இந்திய நாட்டில் காங்கிரஸ் இயக்கத்தின் மூலமே தமது நலன்களைப் பாதுகாக்க முடியும் என அவர்கள் பெரிதும் நம்பினர். ஆனால், அந்த நம்பிக்கை காப்பாற்றப்படவில்லை. காங்கிரசின் ஒவ்வொரு அசைவுகளையும் அதில் மேலோங்கியிருந்த ஆதிக்கச் சாதியினரே தீர்மானித்தனர். வங்காளப் பிரிவினைக்கு முஸ்லிம்களே காரணம் என்ற அவதூறுப் பரப்புரையின் மூலம் அவர்களைத் தனிமைப்படுத்தும் சதிகள் அரங்கேறின.

ஒருபுறம் ஆங்கிலேயரின் அடக்குமுறைகள், மறுபுறம் காங்கிரசின் ஒதுக்குதல்கள் என இருபக்கத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் உள்ளாயினர். அடக்குமுறைகளிலிருந்தும், அவதூறு நெருக்கடிகளிலிருந்தும் தம்மைத் தற்காத்துக் கொள்ள தனியொரு இயக்கமே தீர்வென்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1906 இல் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானது.

முஸ்லிம் லீக் உருவானபோது, முஹம்மது அலி ஜின்னா அதைக் கடுமையாக விமர்சித்தார். இது, மைய நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களை விலக்கும் முயற்சியாகும் எனக் கண்டித்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான களமாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது என கருத்துரைத்தார். கடைசியில் ஜின்னாவும் உண்மையை உணர்ந்து கொண்டார்.

தொப்பி அணியாமல், தாடி வைக்காமல், முஸ்லிம் கலாச்சார உடை அணியாமல், மேலை நாட்டவரைப் போல கோட்டு சூட்டு உடுத்திக் கொண்டு, சுருட்டுப் புகைத்துக் கொண்டு, மத நம்பிக்கைகளில் ஆர்வமின்றி, ஒரு மதச்சார்பற்றவராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட ஜின்னாவாலேயே காங்கிரசில் காலம்தள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு அங்கே வகுப்பு வெறி தாண்டவமாடியது. விளைவு, முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார் ஜின்னா.

தென்னகத்திலும் அதன் தாக்கம் இருந்தது. பழுத்த தேசியவாதியான ஜமால் முஹம்மது சாகிப் 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்டார். புகழ்பெற்ற வணிகரான அவர், காந்தியடிகள் கிலாபத் இயக்கத்துக்காக நன்கொடை வசூலிக்க வந்தபோது, நிரப்பப்படாத காசோலையைக் கொடுத்து எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள் என சொன்னவர். அப்படி தேசியத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரையே காங்கிரசின் வகுப்புவாதம் காலி செய்தது. மாகாணத் தேர்தலில் ஜமால் முஹம்மது சாகிபை தோற்கடிக்கச் செய்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை வெற்றிபெற வைத்தனர். வெறுத்துப்போன ஜமால் முஹம்மது சாகிப், ஜின்னாவைப் பின்பற்றி முஸ்லிம் லீக்கில் இணைந்தார்.

சென்னை கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ இறுதியாண்டு தேர்வு எழுதத் தயாராக இருந்த ஒரு மாணவர், காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்பதற்காக கல்லூரியைவிட்டு வெளியேறினார். காங்கிரஸ் முன்னெடுத்த போராட்டங்களில் பங்கேற்று நாட்டுக்காக கல்வியையே துறந்தார். அப்படி தேசிய உணர்வோடு களமாடி வந்த அந்த இளைஞர், காங்கிரசில் ஜமால் முஹம்மது சாகிபுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைக் கண்டு மிகுந்த வேதனையடைந்தார். ஜமால் சாகிபின் வழியில் அவரும் முஸ்லிம் லீக்கில் இணைந்தார். அவர்தான் பின்னாளில் முஸ்லிம் லீக் தலைவராகவே ஆன காயிதே மில்லத்.

காங்கிரசில் இருந்து கொண்டு பெறமுடியாத அரசியல் உரிமைகளை, முஸ்லிம் லீக்கின் மூலம் அடைந்தனர் முஸ்லிம்கள். 1909 இல் மிண்டோ மார்லி சீர்திருத்தங்களின் மூலம் சமூகநீதியை வென்றெடுத்தனர். இந்தியாவில் இடஒதுக்கீட்டை முதன்முதலில் பெற்றவர்கள் முஸ்லிம்கள்தான். அப்போது தொகுதியே கூட ‘முகம்மதன் – நான் முகம்மதன்’ என்றுதான் இருந்தது. தனி வாக்காளர் தொகுதி முறையும், அரசுப் பதவிகளிலும், அமைச்சரவையிலும் இடஒதுக்கீடு என்பதும், அவை சரியாக நிறைவேற்றப் படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மத்தியிலும், மாநிலத்திலும் தனியே ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்த நிலையும் அன்றிருந்தது.

முஸ்லிம்களின் இத்தகைய அரசியல் எழுச்சி வகுப்புவாதிகளின் கண்களை உறுத்தியது. முஸ்லிம்களை காங்கிரசில் இருந்து விரட்டியதன் நோக்கமே அவர்களை அதிகாரம் அற்றவர்களாக ஆக்க வேண்டும் என்ற திட்டத்தில் தான். ஆனால், வெளியே சென்று தனியே அமைப்பு கண்டு கூடுதல் அதிகாரத்தை அவர்கள் பெற்றதை வகுப்புவாதிகள் எப்படிப் பொறுப்பார்கள்? விளைவு, முஸ்லிம்களை நாட்டை விட்டே விரட்டும் சதிகள் பின்னப்பட்டன.

முஸ்லிம்கள் தமக்கென்று தனியே அமைப்பு உருவாக்குவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவராக இருந்த ஜின்னா, இறுதியில் அந்தத் தனி அமைப்புக்கே தலைமை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது போல், தனி நாட்டுக்கும் தலைமை ஏற்கத் தள்ளப்பட்டார். பிரிவினைக் கோரிக்கை அவர் விரும்பிக் கேட்டது என்பதைவிட, அவர் மீது திணிக்கப்பட்டது என்பதுவே வரலாற்று உண்மை.

பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்து விட்டால், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களும் தமக்கென உருவாக்கப்பட்ட தனி நாட்டுக்குச்  சென்று விடுவார்கள் என்று கணக்குப் போட்டே பிரிவினைக் காய் நகர்த்தப்பட்டது. ஆனால், வகுப்புவாதிகளின் அந்தத் திட்டத்திலும் மண் விழுந்தது. பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள் போக, பெரும்பகுதி முஸ்லிம்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர்.

பிரிவினைக்கும், இங்கே எஞ்சிய முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற போதும், நாட்டைப் பிளவு படுத்திய சக்திகளாக இங்குள்ள முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப் பட்டனர். அரசியல் நிர்ணய சபையில், அவர்களின் தனித்த உரிமைகளுக்கு வேட்டு வைக்கப்பட்டது. இடஒதுக்கீடு பறிக்கப்பட்டது. முஸ்லிம் லீக் என்ற பெயரைக்கூட உச்சரிக்க இயலாத நிலை உருவாக்கப்பட்டது. அத்தகைய நெருக்கடிகளையும் அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டு மீண்டுவந்தனர் முஸ்லிம்கள். பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ‘முஸ்லிம் லீக்’ எனும் அதே பெயருடன் இயக்கத்தைத் தொடர்ந்தார் காயிதே மில்லத். முஸ்லிம்கள் மீதான அவப்பெயரைத் துடைத்து, மைய நீரோட்டத்தில் மீண்டும் அவர்கள் நிமிர்ந்து நடைபோட வழிவகுத்தார்.

காங்கிரசில் இருந்து வெளியேற்றியும், நாட்டை விட்டே விரட்டியும், பிரிவினைப் பழி சுமத்தியும் கூட முஸ்லிம்களை அசைக்க முடியவில்லை. அனைத்திலும் தோல்விகண்ட வகுப்பு வெறியர்கள் இறுதியாகக் கையிலெடுத்த கருவிதான் காந்தியார் படுகொலை. இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டும், சுன்னத் செய்து கொண்டும் முஸ்லிம் வேடத்தில் சென்று காந்தியைக் கொன்றான் கோட்சே. ஏற்கெனவே நாட்டைப் பிளந்த பழியோடு, நாட்டின் தந்தையையும் கொன்ற பழியும் இணையும் போது நாட்டு மக்கள் தன்னியல்பாக வீதிக்குவந்து கண்ணில் படும் முஸ்லிமையெல்லாம் கொன்று விடுவார்கள் என்ற கணக்குடனேயே அப்படுகொலை அரங்கேற்றப் பட்டது. கடைசியில் அந்தத் திட்டமும் பொய்த்தது. காந்தியைக் கொன்றது முஸ்லிம் அல்ல என்ற உண்மை அம்பலமானது. முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டனர்.

ஆக, மைய நீரோட்டத்தில் இணைந்து பயணிக்க முஸ்லிம்கள் விரும்புவதையும், அவர்களைப் பழி சுமத்தி வெளியேற்றி தனிமைப்படுத்த வகுப்புவாதிகள் முயல்வதையும் வரலாறு முழுக்கப் பார்க்க முடிகிறது. அதன் நீட்சி இன்றும் தொடர்கிறது.

காலமெல்லாம் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய ஜின்னா, நாட்டை விட்டே போகும் முடிவுக்குத் தள்ளப்பட்டார். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த காந்தியடிகள், படுகொலை செய்யப்பட்டார். ஜின்னா சென்றதும், காந்தி செத்ததும் பழைய வரலாறென்றால், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பும், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பும் புதிய வரலாறாக அமைந்துள்ளன. அஜ்மீர் தர்கா முஸ்லிம்களின் தலம் என்றாலும், அங்கே இந்துக்களும் பெருமளவில் வந்து குவிகின்றனர். சம்ஜவ்தா ரயில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிலும், சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பிலும் ஈடுபட்டு கைதாகி இருப்பவர்கள் இந்துத்துவ சக்திகளே.

இந்துக்களும் முஸ்லிம்களும் இயல்பாகக் கலக்கும் இடங்கள் அனைத்தையும் இந்துத்துவம் தனக்கான சவக்குழியாகக் கருதுகிறது. அதனாலேயே இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான களங்கள் இங்கே தொடர்ந்து குறிவைக்கப் படுகின்றன. இந்துக்களின் எதிரியாக முஸ்லிம்களைக் காட்டுவதும், முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி இந்துக்களைத் திரட்டுவதும் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன.

- ஆளுர் ஷாநவாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It