1

கடந்த மார்ச் மாதம் காலமான ஒரிய மொழியின் பெண்ணிய எழுத்தாளரான பசந்தகுமாரி பட்நாயக் ஒரு முற்போக்கான எழுத்தாளர்.  இவரது முற்போக்குச் செயல்பாடுகள் பற்றி கடந்த மாத காலச்சுவடு இதழில் (நவம்பர்) எழுதியிருப்பதைப் பார்க்கலாம்:

தனது வாழ்நாள் இலக்கியப்பங்களிப்பைப் பாராட்டித் தரும் விருதை வாங்க மறுப்பது, தனது புகைப்படம் எங்கும் பிரசுரமாவதை விரும்பாமல் ‘அடையாளமற்றிருப்பது’ போன்ற அபூர்வமான சிந்தனைகள் வாய்க்கப்பெற்றவர். இப்படியான முற்போக்குப் பின்புலம் வாய்ந்த அந்த எழுத்தாளர் முன்னிலைப்படுத்தியுள்ள ஒரு விஷயத்தை நாம் அவதானிக்கலாம். அவர் தனது மரணத்திற்குப்பின் நடத்தப்பட வேண்டியவைகளை, ‘உயில்’ என்று நம்பத்தகுந்த எழுத்துப்பதிவாக 9 முற்போக்கான விதிகளை எழுதியிருக்கிறார். அதில் 2 விதிகள் மிக முக்கியமானவை.

விதி.4: எனது எலும்புகளையும் சாம்பலையும் மகாநதியில் தூவவேண்டும்.
விதி.5: ஈமச்சடங்குகள் எதுவும் நடத்தப்படக்கூடாது.

இந்த விதிகளை நுட்பமாக அவதானிக்க வேண்டும். இறந்தபிறகு ஈமச்சடங்குகள் நடத்தப்படக்கூடாது என்பவர், தமது அஸ்தியை மகாநதியில் கரைக்கச் சொல்கிறார். இதுதான் ஆகப் பெரிய சடங்கு என்பதை அவர் ஏன் உணராமல் போனார்..? மதம்சார்ந்த, சடங்குகள் சார்ந்த, வழிபாடுகள் சார்ந்த படிமத்தின் மிக முக்கியமான குறியீடு அது.

அது ஒரு மதம் சார்ந்த பண்பாட்டின் புனிதத்துவத்தைக் கட்டமைக்கும் முயற்சி. ‘எனது அஸ்தியை நான் வாழ்ந்த தெருக்களிலேயே தூவ வேண்டும்’ என்று சொல்லியிருக்கலாமே இந்த முற்போக்காளர்! அல்லது, இது எதுவும் தேவையில்லையென்று, தனது இலக்கிய வாழ்வில் விரும்பியது போலவே ‘அடையாளமற்றிருக்கலாமே’.

இவருக்கு, இப்படியான ஒரு தன்மை அந்தச்சடங்கில் பதுங்கியிருப்பது புலனாகாமல் போனதில் வியப்பொன்றுமில்லை.

பண்டைய ஆதிக்கம் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை அழகியல், தரிசனம், தேடல், மாற்றுச்சிந்தனை போன்ற படைப்புப் படிமங்களாக குறியீடுகள்’ என்னும் பெயரில் படைப்பாளிகளின் மனதில் கட்டமைத்து வைத்திருக்கிறது, ஆதிக்கம் சார்ந்த சமூக அரசியல்வெளி. இந்துத்துவத்தின் மிகப்பெரிய வெற்றி அது.

புத்தம் புதிய முற்போக்குப் பார்வைகளில் புனைகதைகள் உருவாக்குவது, மாற்றுவெளிகளின் உள்ளடக்கங்களை வைத்துக் கதை நகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய மாற்றுச்சிந்தனை என்பது. உலகமயமாக்களின் வருகைக்குப் பிறகு தற்போதைய மாற்றுச் சிந்தனைகளின் கலை ஆளுமை பல்வேறு பரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. படைப்பாளிக்குத் தெரியாமல் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத் திரிப்புகள், நுட்பமாகக் கதையின் சட்டகங்களுக்குள் மறைந்து உட்கார்ந்து கொள்ளும். அந்த நுட்பமான கூறுகளுக்குள் இயங்கும் நுண்ணரசியல்களை இனங்கண்டு அவைகளை நெறிப்படுத்த வேண்டும். அதுதான் இன்றைய மூன்றாம் உலகநாடுகளின் படைப்பாளிகளின் சவால். 

இந்தத் தருணத்தில் ஜனவரி 29, 2010 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற ஈழ விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் மற்றும் 18 தியாகிகளின் நினைவு நாளை முன்வைக்கலாம். இந்தத் தியாகிகளை வரலாறு நினைவு கூறும் விதமாக, ‘நடுகல்’ நடப்பட்டது. பொதுமக்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆய்வியல் அறிஞர் தொ.பரமசிவன், தமிழர்களது வரலாற்றில் நினைவு நடுகல்லின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். பேராசிரியர்.அறிவரசன், ஈழத்தில் உள்ள நடுகல் வழிபாடு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

நடுகல் வழிபாடு என்பது தமிழர் வாழ்வியலில் தொன்று தொட்டுவரும் அம்சம். மனித வாழ்வியலின் இருப்பை ஒரு சாட்சியமாக முன்னிறுத்தும் இனவரைவியல் அடையாளம்.

மனிதன் இறந்தபிறகு அவனது உணர்வுகளும், செயல்பாடுகளும் இளைப்பாறுதல் செய்ய ஒரு குடிலைப்போல அது அங்கம் வகிக்கிறது.

இதேபோல ஒருசில பழங்குடி மக்களின் இறப்புச் சடங்கு முறை இன்னும் அழகியல் வாய்ந்தது. அவர்கள் நடுகல்லுக்குப் பதிலாக ஒரு மரச் செடியை நட்டு ஆராதித்து பேணிப் பாதுகாப்பார்கள். கற்களையும் மரங்களையும் முன்னோர்களாக எண்ணி வழிபட்டு வரும் திராவிடக் கலாச்சாரத்தின் மாண்புமிக்க கூறுகள் இவை.  

இது போன்ற அழகியல் வாய்ந்த சிறுசிறு இனக்குழுப் படிமங்களின் கலாச்சாரங்களை, இந்துத்துவம் சார்ந்த பெரும் கலாச்சாரங்கள் தங்களுக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டு, அவைகளைத் தங்களுக்கேற்ற வித்ததில் மாற்றும்போது, ‘ஆன்மா சாந்தியடைதல்’ என்கிற கவர்ச்சிகரமான படிமங்கள் தோன்றுகின்றன. அதன்மூலம் கட்டமையும் அரசியலும் தோன்றுகிறது.

இந்த இடத்தில் எழுத்தாளர் ஜெயமோகன், ‘ஆனந்தவிகடன்’ இதழில் எழுதிய ‘சங்கச்சித்திரங்கள்’ என்னும் தொடரை முன்னிறுத்திப் பேச வேண்டியிருக்கிறது.

பண்டைய தமிழர்களின் கலாச்சார ஆவணமாகவும், அடையாளமாகவும் விளங்கும் சங்க இலக்கியப் பாடல்களை முன்வைத்து எழுதப்பட்ட இந்தத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும், அந்த சங்ககாலக் காட்சிகளை விவரித்து அதைத் தற்கால வாழ்வியலோடு பொருத்திச் சொல்கிறது. ஆனால், அதன் பெரும்பான்மையான பகுதிகள் மலையாள மண்குறித்தும், சிந்தனைகள் குறித்தும், மலையாள மக்களின் வாழ்நிலைக் கலாச்சாரங்ளை முதன்மையாக நிறுத்தியுமே பேசுவது ஒரு அவல நகைமுரண்.

இந்த நூல் குறித்து விரிவாகப் பேச எதுவுமில்லை. சங்கப்பாடலின் மரபான மொழியை, புதுக்கவிதை வடிவில் எளியநடையில் மொழியாக்கம் செய்து, அந்தப் பாடல் சார்ந்த காட்சிகளை விவரித்தும், தனது வாழ்வியல் அனுபவங்களெனச் சொல்லும் சம்பவங்களை ஒரு பெரிய தத்துவப் பார்வைகள் போன்ற கட்டமைப்போடு இதனிடையே சொருகி ஒரு செவ்வியல் இலக்கியத் தன்மையை உருவாக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அது கைகூடவில்லை. காரணம், இவரது தத்துவ முத்துக்கள். 

இந்தத் தொடரின் வடிவம் உள்ளடக்க ரீதியாக மிகவும் அருமையானது. ஒரு செவ்வியல் தன்மையுடன் கூடிய சங்ககால வாழ்வியலை, தற்கால வாழ்வியலோடு பொருத்திப் பார்த்தல் என்கிற இந்த வடிவம் ஜெயமோகனின் அசட்டுக்கருத்துக்களால் நீர்த்துப் போய்விட்டது.

தனக்குக் கொடுத்திருக்கும் பணி எவ்வளவு தொன்மை வாய்ந்தது, அதற்கு எவ்வாறெல்லாம் உழைத்து தரவுகளைச் சேகரித்து அந்த வரலாற்றை தற்கால வாழ்வியலாக மறு உருவாக்கம் செய்யவேண்டும் என்ற படைப்பின் மீதான ஈர்ப்பு, இந்த நூலில் இல்லை.    

அந்தக் குறிப்பிட்ட சங்கப்பாடலுக்கு என்ன மாதிரியான வாழ்வியல் அனுபவத்தைக் கொண்டுவந்து பொருத்துவது என்றெல்லாம் கவலைப்படாமல், தனக்கு நேர்ந்ததெல்லாமே தத்துவ தரிசனங்கள்தான் என்கிற இறுமாப்பில் குருட்டாம்போக்காக அள்ளிவிட்டிருக்கிறார்.

மிகமிக மேலோட்டமான பார்வை, இலக்கியக் குறுங்குழுவாத அரசியல் தந்திரங்கள், முடிந்த முடிவென நிறுவிக்காட்டும் தீர்க்க தரிசனச் சிந்தனைகள், நுட்பமாய் இயங்கும் இந்துத்துவ உரையாடல், ஜெயமோகனுக்கே உரித்தான ஒரு ‘தன்மை’ யென நீள்கிற இந்த நூலில், 13 வது அத்தியாயத்தில் வரும் ‘பெருநெருப்பு’ என்கிற பகுதியில் நெளியும் இந்துத்துவ பார்வையை கேள்விக்குட்படுத்தலாம்.  

தமிழீழ விடுதலை சார்ந்த கருத்துக்களையும் போராட்டங்களையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சனப்படுத்திக் கொண்டே வருபவர் ஜெயமோகன். கவனியுங்கள்: தமிழீழ விடுதலைக் கருத்துக்கள் மீது வைக்கும் விமர்சனம் வேறு, எள்ளி நகையாடி கிண்டலுடன் கொச்சைப்படுத்தும் பார்வை வேறு. ஒரு இனத்தின் விடுதலைக்கான தவிப்பை தொடர்ந்து தத்துவம் பேசியும், கேலி பேசியும் விமர்சித்து வந்ததை இதுசம்பந்தமான பார்வையாளர்கள் அறிவார்கள்.

தருணம் கிடைக்கும்போதெல்லாம் அவர் அதைப் பயன்படுத்திக் கொண்டேயிருப்பார். ஒரு சில சமயங்களில் தருணமே கிடைக்காவிட்டால் கூட வலிந்து தமிழீழ விமர்சனத்தை முன்வைப்பார்.

ஒரு வேடிக்கையான கதை ஒன்றிருக்கும்: தேர்வு எழுதுவதற்காக மரத்தைப்பற்றி மிகச்சிறப்பாகப் படித்துப் போயிருப்பான் ஒரு அறிவுசீவிமாணவன். ஆனால் தேர்வில் மாட்டைப் பற்றிக் கேட்டிருப்பார்கள். கொஞ்சமும் அசராமல் மரத்தைப் பற்றி விரிவாக எழுதி இப்பேர்ப்பட்ட மரத்தில்தான் அந்தமாடு கட்டப்பட்டிருந்தது என்று எழுதி வெற்றிச்சிரிப்புடன் வருவான் அ.சீ.மாணவன்.

இப்போது அந்தத் தொடரைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

தனது, ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் வெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்த எண்ணற்ற கூட்டத்தில் ஒருவர் வந்து ஜெயமோகனின் கையைப் பிடித்து நலம் விசாரிக்கிறார்.

அவர், யோகராஜா, இலங்கையைச் சார்ந்தவர். தற்போது ஹாலந்தில் வசிப்பவர். இருவரும் அளவளாவுகிறார்கள்.

அடுத்தநாள், அவர் சென்னையில் தங்கியிருக்கும் சாலிக்கிராமம் வீட்டிற்குப்போய் அவரைச் சந்திக்கிறார் ஜெயமோகன். அவரது மனைவி யாழ்ப்பாணச் சாப்பாடு பரிமாறுகிறார். தனது ‘கேரளநாக்கு’க்கு அது மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்கிறார் ஜெ.

யோகாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 18 பேர், போரிலும் கலவரத்திலுமாக இதுவரை இறந்திருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு ‘சாந்திபலிச் சடங்குகள்’ செய்ய ராமேஸ்வரத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கிறார் யோகா.

இனி ஜெயமோகன் எழுதிய எழுத்தை அப்படியே தருகிறேன்:

அமைதி அடையாத ஆத்மாக்கள் ஹாலந்திலும், நார்வேயிலும், கனடாவிலும் பிரான்ஸிலும் மற்றவர்களைப் பின்தொடர்கின்றன. கனவுகளில் மௌனமாக வந்து கண்ணீர் வடிக்கின்றன. எல்லாருமாக வந்து ராமேஸ்வரம் கடலில் ஒரு பிராயச்சித்தபூசை செய்ய முடிவாயிற்று. யாழ்ப்பாணக் கடற்கரையில் செய்யவேண்டிய சடங்குகள். கரை இரண்டானாலும் கடல் ஒன்றுதானே என்றார் யோகா.

ஆனால் ஒரே ஒருவருக்கு மட்டும் எந்த சாந்திபூசையும் தேவையில்லை என்று யோகா சட்டென்று மாறுபட்ட குரலில் சொன்னார். உங்களுக்கே தெரியும் என் மூத்தமகன் குலசிங்கம் இயக்கத்தில் சேர்ந்து களப்பலியானான். குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு கவச வண்டிக்கு நேராகப் பாய்ந்தான். இறந்த அக்கணமே அவன் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்...”

...எத்தனை கேட்டாலும் எத்தனை கற்பனை செய்தாலும் அந்த வேகம் இந்தியத் தமிழனுக்குப் புரிவதேயில்லை. யோகா உருகிய உலோகம் போன்று கொதிநிலையில் இருந்தார். “ஆயிரம் வருஷம் ஆனாலும் எங்களுக்கெண்டு ஒரு நாடு வராமப் போகாது. அங்க எண்ட மகனுக்கு ஒரு நடுகல் இருக்கும்...” என்றார்.

அப்பொழுது போன் வருகிறது. யோகா வெளியே போனதும் அவர் மனைவி ஜெயமோகனிடம் வந்து பதட்டத்துடன் பேசுகிறார். புட்டபர்த்தி சாய்பாபாவை பார்க்கவேண்டும் என்றும் அதற்கு யோகாவிடம் கூறி சம்மதம் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார்.

‘இது குலம் விஷயமாக. நான் சொன்னேன் என்றால் அவர் ஒப்புக்கொள்ளமாட்டார்...’ அந்த அம்மாளின் கண்களிலிருந்து நீர் உதிர்ந்தது. யோகா போனவழியைப் பதற்றத்துடன் பார்த்தார். “என் கனவில் குலம் வராதநாள் இல்லை. கையில் புத்தகக்கட்டும் அரைடிராயருமாக வருவான். துக்கத்துடன் ஏதோ சொல்ல ஆரம்பிப்பான். அதற்குள் கனவு கலைந்துவிடும். என்குழந்தைக்கு என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும். அது என்ன என்று அவனிடம் நான் கேட்க வேண்டும். பாபா நினைத்தால் முடியும் என்று சொல்கிறார்கள்...”

யோகா வரும் ஒலி கேட்டு, அவர் உள்ளே போனார். நான் மனம் கலங்கி நின்றிருந்தேன். பின்பு புறநானூற்றின் ஓர் அன்னையைக் கண்டடைந்தேன். தமிழ்மரபு வீரம் என்று முன்வைத்துப் போற்றும் அனைத்தையும் தன் அடிவயிற்றுத் தீயால் பொசுக்கும் அன்னையின் குரலை... 

வெள்ளை வெள்யாட்டுச் செச்சைபோலத்
தான்னோர் அன்ன இளையோர் இருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே
(ஔவையார், புறநானூறு, திணை - கரந்தை)

என்கிற இந்தச் சங்கப்பாடலுக்கான தீர்க்கதரிசன வாழ்வியல் அனுபவமாக ஜெ. இந்த நிகழ்வை முன்வைக்கிறார்.

“வெள்ளாட்டு மந்தைபோல அவனைப்போன்ற இளைஞர் கூடியிருந்த போதும் பலருடைய தலைக்கு மேலாக மன்னன் நீட்டிய கள்மொந்தை என் சிறுவனை இதோ காலில்லாத கட்டிலில் கிடத்தி தூய வெள்ளாடையால் போர்த்தியிருக்கிறது.”

என்ற அர்த்தம் பொதிந்த இந்தப் பாடலைத் தனக்கு நேர்ந்த அனுபவத்தின் வாழ்வியல் தரிசனத்திற்னான பாடலாக பொருத்திக் காட்டுகிறார்.

‘எந்தச் சித்தாந்தமும் மரபும் அறமும் அன்னையின் அடிவயிற்றின் தீயைப்புரிந்து கொள்வதில்லை போலும்.’

என்று கட்டுரையை முடிக்கிறார் ஜெயமோகன்.

2

இந்தக் கட்டுரை மூலம் அவர் சொல்ல வருவது, ‘யார் இறந்தாலும் அவர்களது ஆன்மா சாந்தியடைய ஈமச்சடங்குகளும் ‘சாந்தி பூசைகளும்’ செய்யவேண்டும். அவர்கள் போராளிகளாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி. குலசிங்கம் என்கிற போராளிக்கு சாந்தி பூசை செய்யாததனால், அவரது ஆன்மா சாந்தியடையவில்லை, தனது அம்மாவின் கனவில் அடிக்கடி வந்து ஏதோ இறைஞ்சு நிற்கிறார்.. அதற்காக பாபாவைப் பார்த்து பரிகாரம் செய்யவேண்டும்’ என்கிறது கட்டுரையின் உள்ளடக்கம்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி: யோகராஜாவை யோகா என்றும், யோகராஜாவின் மனையியின் பெயரையே எழுதாமலும், குலசிங்கத்தை குலம் என்றும் எழுதுவதன் பார்வைகளையெல்லாம் விட்டுவிடலாம். ‘முதலில் இந்த யோகராஜா என்பவர் யார்? நிஜமான பாத்திரம்தானா, இலக்கிய பவர் ஸ்டார்கள் கற்பனையாகப் புனையும் ரசிகர் மன்றப் பாத்திரமா?’ என்பதுதான் கேள்வி.

ஏனெனில், அவரைப் பொறுத்தவரை, குலசிங்கத்திற்கு ஆன்மா சாந்தியடையவில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். அப்படிச் சொல்வதன் மூலம் போரில் உயிர்நீத்த ஈழப்போராளிகளின் ஆன்மா சாந்தியடையவில்லை, அவை ஆவிகளாக அலைந்து கொண்டிருக்கின்றன என்ற நுட்பமான அரசியலை நைசாக உள்ளே சொருகுகிறார் ஜெ. அதை முன்மொழிய ஒரு போராளிக் குடும்பத்தின் பாத்திரம் வேண்டும். அவ்வளவுதான். இந்த யோகராஜா யாரென்று யார் தேடிப்போய் விசாரிக்கப் போகிறார்கள்?

இரண்டாயிர வருடத் தமிழ் மரபில் ‘ஆன்மா சாந்தியடைதல்’ என்கிற பார்வையோ, கருத்துக்களோ முழுமுற்றாக இல்லை.

திராவிட தமிழிய மரபுக்கு முன்னாலான முதுமக்கள் தாழி கலாச்சாரத்தில்கூட இறந்தோரை தாழிகளில் வைக்கும் பண்பாடுதான் இருந்தது என்பதை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகள் உணர்த்துகின்றன.

ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனது நினைவாக ‘நடுகற்கள் நடுவது’, ‘மரம் நடுவது’ என்பதெல்லாமே திராவிட வழிவழியாக வருகிற தமிழிய மரபுகள். ஆன்மா சாந்தியடைதல் என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம் பின்னால் கட்டமைக்கப்பட்டவை.

காசி, ராமேஸ்வரம், காவிரி போன்ற புனிதஸ்தலங்களில் உள்ள ஆறுகளில் இறந்தோரின் அஸ்தியைக் கரைப்பது, இந்த ஸ்தலங்களில் இறந்தோருக்கான ‘நீத்தார் சடங்கு’ செய்வது என்பதெல்லாம் முழுக்க முழுக்க ஆரிய மரபு சார்ந்த பார்ப்பனியத்தின் பண்பாடுகள்.

இந்தச் சடங்குகள் குறித்தும், அதன் மூலமாகக் கிட்டும் உயர்ந்த அம்சங்களையும் இறையாண்மையுடன் கட்டமைத்து, ஓயாது சமூக வெளியில் உலவவிடுவதும், ஆவிகளாக அலைவார்கள் என்று அச்சமூட்டும் கருத்துக்களைப் பரப்பி அதற்கான சடங்குகளை முன்வைப்பதுமான நடைமுறையில் பார்ப்பனியம் இன்று வென்றிருக்கிறது. சமீபகாலங்களில் இதுபோன்ற சடங்குகள், ஒரு கௌரவத்திற்குரிய விஷயம் என்பதுபோல உயர்சாதிக் கனதனவான்களை பலமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இதை மேலும் பரவலாக்கி இந்தக் கலாச்சாரத்தையும் வாழ்வியல் நடைமுறையையும் மக்களிடையே புகுத்தி ஒரு கட்டுக்கோப்புக்குள் அதிகாரம் செய்யத் துடிக்கும் இந்துத்துவ சக்திகள் இது போன்ற நுட்பமான தந்திரங்களை அள்ளிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

இதிலெல்லாம் எங்கே இந்துத்துவம் இருக்கிறது? என்று என்னை கேலியும் கிண்டலும் செய்யும் நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.

அதாவது, நீ பெரிய புரட்சிப் போராளியாக இருக்கலாம், படை பலகொண்டு தடைபல தகர்த்த தரணியாளும் மன்னவனாக இருக்கலாம். அதெல்லாம் முக்கியமில்லை. நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்கின்ற வாழ்வியல் முறைக்கு அடிபணிந்துதான் வாழவேண்டும். அதற்கு இவைகளையெல்லாம் கற்றுணர்ந்து வைத்திருக்கிற இறையாண்மை கொண்ட அந்தணன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்கிற பார்வைக்குப் பெயர் என்ன? காலங்காலமாய் கட்டி எழுப்பட்ட இந்துத்துவப் பார்வையை மீண்டும் இதில் எழுப்பியிருக்கிறார் ஜெ என்றால் அது மிகையாகாது. மாபெரும் வீரதீரம் மிக்க அரசரை, வேதமந்திரங்களை ஓதி அதிகாரம் செலுத்தி வந்த அந்தணர்களின் ஆதிக்கப்பார்வைதான் அது.

‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற தமிழ்ப்படம் ஞாபகம் வருகிறது. போலீஸ் லாக்கப்பில் ஒரு மாணவன் இறந்து போய்விடுவான். அவனது உடலை காவலதிகாரிகள் மறைத்து விடுவார்கள். அந்த மாணவனின் தந்தையான ஒரு பிராமணர் காவலதிகாரியான சத்யராஜின் காலடியில் விழுந்து மன்றாடுவார். அதாவது, “எனது மகனின் ஆன்மா சாந்தியடைவதற்காக நான் சில சடங்குகள் செய்யவேண்டியிருக்கிறது. அதற்கு அவனது உடல் வேண்டும். ஆகவே அவனது உடலை எங்கு மறைத்து வைத்திருக்கிறீர்கள்..”என்று கதறுவார். ‘எனது மகனை யார் கொன்றீர்கள்? அவனது உடல் எங்கே?’ என்றெல்லாம் கேட்டிருக்கலாம். அதனால் படத்தின் கதையோட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால், அவர் அப்படிக் கேட்பதில்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற திராவிடத்தன்மை கொண்ட தலைப்பு. குடிகூத்தியுடன் கும்மாளம் போடும் காவல்துறை அதிகாரியாக  சத்யராஜ். பிராமண இளைஞனை அடித்துக் கொல்லும் காவல்துறை. தனது மகனின் உடலைப்பெற்று சாந்தி பூசை செய்யத் துடிக்கும் பிராமணர்.. இதுதான் நுட்பமான இந்துத்துவ அரசியல்.

ஜெயமோகனது வாழ்வில் ‘உண்மையாகவே’ நடந்த இந்த சம்பவத்திற்கு, பொருத்தமாக ஒரு சங்கப்பாடலை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தால், மாங்குடிக்கிழாரின் இந்தப்பாடலைத்தான் முன்வைத்திருக்க வேண்டும்.

அடல் அருந்துப்பின்...
குரவே தளவே குறுந்தே முல்லையென்று
இந்நான்கு அல்லது பூவுமில்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணவுமில்லை
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியுமில்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மறுப்பிர் களிறெ றிந்து வீழ்ந்தென
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப்பரவும் கடவுளு மிலவே
மாங்குடிக்கிழார் (புறநானூறு: 335, திணை - முல்லை)

 “வெற்றிச்சிறப்பைச் சொல்ல குரவம், தளவம், குருந்தம், முல்லை ஆகிய நான்கு மலர்களைத் தவிர எங்களுக்கு வேறு மலர்கள் இல்லை. வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு தானியங்களைத் தவிற எங்களுக்கு இன்றியமையாத உணவுப்பண்டங்கள் இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை. பெரும்பலம் கொண்ட யானைகளின் மீது வருகின்ற எதிரிகளை வெட்டி வீழ்த்திவிட்டு, தாமும் விழுப்புண் பட்டு அந்தக்களத்திலேயே இறந்து படுகிறானே, அந்த மாவீரனைப் புதைத்த இடத்தில் நடுகின்ற நடுகற்கள் எங்களது தெய்வங்கள். நெல்போட்டு வழிபடுகிற கடவுள் எங்களிடம் இல்லை”

இந்தப் பாடலின் மூலம் கட்டுரையாளர் சார்ந்த சித்தாந்தமும் மரபும் அறமும் தமிழீழ அன்னையின் அடிவயிற்றுத் தீயைப் புரிந்து கொள்ளட்டும்.

இதுதான் படைப்பு தர்மம்.

Pin It