கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கனமன’ பாடலுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி பேசிய செய்தி ஏடுகளில் வெளி வந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இப்போது பய்யாஜி அப்படி கூறவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளராக உள்ள (இந்தப் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ்.சில் ‘பிரச்சார் பிரமுக்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது) எம்.ஜி.வைத்யா, பய்யாஜி ஜோஷியின் கருத்துக்கு தனது வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார்.

“மூவர்ண தேசியக் கொடியை அரசியல் சட்டம் ஏற்றுள்ளது. இதை மதிக்க வேண்டும்; அதே நேரத்தல், நமது ‘பாரதத்தின்’ பூர்வீக கலாச்சாரத்தின் சின்னமாக காவிக் கொடி ‘தேசியக் கொடி’ உருவாவதற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. அதேபோல் ‘ஜனகணமன’ பாடல் நமது ‘இராஜ்யம்’ பற்றி கூறுகிறது. ஆனால், ‘வந்தே மாதரம்’, நமது கலாச்சாரத்தின் அடையாளம். எனவே நாம் காவிக் கொடி, வந்தே மாதரம் இரண்டையும், தேசியக் கொடி ‘ஜனகணமன’ பாடலுக்கு இணையாக மதிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு என்ன? எந்த சூழ்நிலையில் எந்தக் கருத்தை முன் வைத்து அது பாடப்பட்டது?

•             பக்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 1880இல் ‘ஆனந்த மடம்’ என்று ஒரு நாவலை வங்காள மொழியில் எழுதினார். அந்த நாவலில் வரும் வங்காள மொழிப் பாடல்தான் ‘வந்தே மாதரம்’.

•             அந்த நாவல் உருவான காலக்கட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம் மன்ன ருடன் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி யினர் சில சமாதான ஒப்பந்தங்களை செய்து கொண்டு சென்னை - பம்பாய் - கல்கத்தா போன்ற நகரங்களில் காலூன்ற முயன்று கொண்டிருந்தனர்.

•             அன்றைய சூழலில் - இந்த ‘ஆனந்த மடம்’ நாவலில் சொல்லப்பட்ட செய்தி என்ன? ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை - ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து - ஆங்கிலேயர் களின் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும். இதுவே இந்த நாவலின் மய்யக் கருத்து.

•             வைணவ இந்து இளைஞர்கள் - ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்பதே கதையின் கரு. இந்த வைணவர்களின் தலைவராக சுவாமி சத்யானந்தா என்று ஒரு துறவியும் - அவரது சீடராக குரு பவானந்தா என்ற வீரமிக்க இளைஞரும் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த பவானந்தா - இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு முஸ்லிம்களை எதிர்த்துப் போராட ஆயுதப் பயிற்சி அளிக்கிறார். (இவைகள் வரலாறு அல்ல; கதையில் வரும் கற்பனை)

•             பவானந்தா-அப்படி ஆயுதப் பயிற்சிக்கு திரட்டும் இளைஞர்களிடம் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’. இதன் பொருள் இதுதான் - “நம்முடைய நோக்கம் நமது தாய்நாட்டை விடுவிப்பதேயாகும். நம்முடைய இனம், மதம், பண்பாடு, பெருமை ஆகிய அனைத்துமே முஸ்லிம்கள் ஆட்சியில் பேராபத்துக்கு உள்ளாகிவிட்டது. நாம் முஸ்லிம்களை ஒழிக்காவிட்டால், நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை. ஏழுகோடி இந்துக்களாகிய நாம் வாளேந்தி களத்தில் குதித்தால்... அது ஒன்றே போதும் நமது மண்ணின் பெருமையை மீட்க” - இதுதான் ‘வந்தே மாதரம்’ பாடலின் பொருள்.

•             ஆனந்த மடத்துக்குள் ‘விஷ்ணு’வின் மடி யில் பலவீனமாக இந்திய மாதா படுத் திருக்கும் படத்தைப் பார்த்து - வைணவ இளைஞர்கள் ‘வந்தே மாதர’த்தை முழங்கி - முஸ்லிம்கள் மீது ஆயுதமேந்தி போரிடு கிறார்கள். பல முஸ்லிம்கள் கொல்லப்படு கிறார்கள். முஸ்லிம் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படு கிறார்கள். எல்லாவற்றையும் வெற்றி கரமாக முடித்து விட்டு காளிதேவியின் முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

•             “நாம்தான் முஸ்லிம்களை ஒழித்து விட்டோமே, ஆனாலும் இந்து இராச்சியம் வரவில்லையே! ஆங்கிலேயர்கள் அல்லவா தொடர்ந்து நம்மை ஆளுகிறார்கள்?” என்று இளைஞர்கள் சத்யானந்தாவிடம் கேட்க - அவர் கூறுகிறார்: “இப்போது நமக்கு எதிரிகள் யாருமில்லை. ஆங்கி லேயர்கள் நம்முடைய நண்பர்கள். அவர்கள் தங்கள் அதிகாரங்கள் அனைத்தையும் விஷ்ணு கடவுளுக்கே காணிக்கையாக்கி யிருக்கிறார்கள்” என்கிறார். சத்யானந்தா வின் இந்தப் பேச்சோடு கதை முடிகிறது.

•             காங்கிரசில் உள்ள இந்து வெறி பார்ப்பன சக்திகள் - காங்கிரஸ் கூட்டங்களில் இந்தப் பாடலைப் பாடி வந்தார்கள்; இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1939ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றியது.

•             1905இல் - வங்காளம் பிரிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இந்தப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தப் பாடலுக்கு தடைவிதித்தது.

•             முஸ்லீம்களைப் புண்படுத்தும் பாடலாக இருந்ததால், காந்தியாரும் இந்தப் பாடல் களைப் பாட அனுமதிக்க மறுத்து வந்தார்.

•             1946-47இல் ‘வந்தே மாதரத்தை’ தேசிய கீதமாக்க முயற்சி நடந்தும், முஸ்லிம்கள் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

•             கவிஞர் இக்பாலின் ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற - இந்தியா முழுவதும் உணர்ச்சிகரமாகப் பாடப்பட்ட பாடலை, தேசிய கீதமாக வைப்பதற்கு ‘இந்து தேசியவாதிகள்’ எதிர்த்தார்கள். காரணம் -- எழுதிய கவிஞர் ஒரு முஸ்லிம் என்பதால்! பிறகுதான் ‘ஜனகணமன’ பாடல் தேசிய கீதமானது.

•             முஸ்லிம்களை எதிர்த்து ஆங்கிலேயர் களுடன் சேர்ந்து இந்து ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் எழுதப் பட்டதுதான் ‘வந்தே மாதரம்’. அது ‘தேச பக்தி’ கலாச்சாரத்தின் அடையாளமா?

•             அது ஆங்கிலேயரை எதிர்த்த தேச பக்திப் பாடல் அல்ல; அதன் காரணமாகத்தான், ‘ஆனந்த மடம்’ ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை; பாடத் திட்டங்களில் இடம் பெறவில்லை; திரைப் படமாகவில்லை; தொலைக்காட்சித் தொடராகவும் உருவாகவில்லை.