இந்திய தேசிய காங்கிரசு என்பது எதற்காக ஆரம்பிக்கப்பட்ட தென்ற ரகசியம் இப்போதைய அனேக “தேசியவாதிக”ளுக்குத் தெரியாதென்றே சொல்லுவோம்.
அது ராஜ வாழ்த்துப் பாடி, முதலில் ராஜ விஸ்வாசத் தீர்மானம் செய்து பிறகு உத்தியோகங்களை உண்டாக்கி தங்களுக்கே கருணை கூர்ந்தளிக்க வேண்டும் என்று தீர்மானித்து பிறகு அவ்வுத்தியோகங்களை எப்படி எப்படி உற்பத்தி பண்ணுவது என்பதற்கு வழிகள் காட்டுவதும், இவைகள் எல்லாம் பொது ஜனங்களுக்காக, தேசியத்திற்காக, பொது ஜனங்கள் பேரால் கேள்ப்பதாய் இருக்க வேண்டுமென்பதற்காக பொது ஜனங்கள் ஏமாறும் படியாக இரண்டொரு தந்திர வார்த்தை சொல்லி அவர்களை அழைத்து வைத்து கை தூக்கும்படி செய்து, அவர்கள் பேரால் சர்க்காருக்கு அறிக்கை செய்வ தற்குமே காங்கிரஸ் ஏற்படுத்தப்பட்டு நடை பெற்று வந்தது. இதன் உண்மை யை உணரவேண்டுமென்பவர்கள் காங்கிரசு நடவடிக்கைகள் என்ற புத்த கத்தை சுதேசமித்திரன் புத்தகக் கடையில் வாங்கிப் பார்த்தால் விளங்கும்.
இப்படிப்பட்ட இந்த காங்கிரசானது சர்க்காருக்கு மிகவும் அனு கூலமாயிருந்ததால் அதாவது தங்கள் குடி ஜனங்களில் பலரை அதுவும் எழுதப் படிக்கத் தெரிந்த சற்று அறிவுள்ளவர்களை எல்லாம் தாங்கள் குடிகள் பணத்தில் விலைக்கு வாங்கி தங்களுக்கு அடிமையாக்கிக் கொள்ளவும், அவர்களைக் கொண்டே தாங்கள் இங்கு நிலைத்திருப்பதர்க்கு வேண்டிய காரியங்கள் செய்து கொள்ளவும் அனுகூலமாயிருந்தது.
அது மாத்திர மல்லாமல் அரசன் என்பவன் எந்தெந்த விதத்தில் குடிகளுக்கு பொறுப் பாளியாய் இருக்க வேண்டுமோ அந்த பொறுப்புகளுக்கெல்லாம் குடிகளை ஜவாப்புதாரியாக்கி விட்டு தன்னுடைய சுயநலகாரியமும் குடிகளின் பிரதிநிதிகளே போட்டி போட்டு செய்து கொடுக்கத் தயாராயிருக்கவும் செய்து விட்டது.
அதோடு புதிய புதிய சீர்திருத்தக் கிளர்ச்சிகளும்; தேசியக் கிளர்ச்சி களும் அந்த காங்கிரசிலிருந்தே புறப்பட்டு வந்ததால், அவையெல்லாம் அரசாங்கத்தை ஆட்டி, ஆட்டி, கூறு குத்தி பலப்படுத்துவது போல், அரசாங் கத்துக்கு ஆக்கமளித்து அதை நிலையாக நிலை நிறுத்திக் கொண்டும் வந்தது.
இப்படியான முயர்ச்சிகளிலேயே ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களும் இருந்து வந்ததால், மேலும் மேலும் அந்த நிலை வளர்வதற்கு இடம் ஏற்பட்டதே ஒழிய, பொது மக்களுக்கு நன்மையுண்டாகும் படியான காரியம் ஒன்றுமே காணமுடியவில்லை.
காணப்படாதது மாத்திரமல்லாமல் பொதுஜன நன்மைக்கு ஆன காரியம் என்ன என்பது கூட தெரிய முடியவில்லை. உதாரணமாக இன்றைய தினம் பொது ஜனங்கள் பல காரணங்களால் எவ்விதத் தியாகத்திற்கும் தயாராயிருந்தாலும், அவர்கள் எதை வேண்டி என்ன காரியத்தை எதிர்பார்த்து தங்களது ஊக்கத்தை செலவழிப்ப தென்றே தெரியாமல் விழிக்கின்றார்கள்.
இதற்கு உதாரணம், இன்றைய தினம் இந்தியாவில் இருந்து சீமைக்குச் சென்றிருக்கும் வட்டமேஜை மகாநாட்டு பிரதிநிதிகளையும் அவர்களது வார்த்தைகளையும் பார்த்தாலே தெரிய வரும். மற்றபடி இங்குள்ள தேசியத் தலைவர்களோ தாங்கள் சீமைக்கு போவதற்கு சந்தர்ப்பம் ஏற்படாமல் போனதே தாங்களும் தங்கள் மூதாதை களும் “முன் ஜன்மத்தில் செய்த பூஜா பலன்” என்று கருதிக் கொண்டிருக்கின்றார்கள்.
திரு. காந்தி அவர்களும் வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போகாமல் தப்பித்துக் கொள்ள பிரயாசைப் பட்ட தெல்லாம், அங்கு போய் என்ன கேழ்ப்பது என்கின்ற கஷ்டமும், அதற்காக வெள்ளைக்காரர்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்கின்ற நடுக்கமுமேபோக வொட்டாமல் இருக்க வேண்டியதாய் விட்டது.
மீறி ஏதாவது தங்களை சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியமாய் போயிருந்தாலும், தங்களில் ஒருவருக்கொருவர் அடிதடி போட்டுக் கொள்ளும்படியாய் நேருமே, வகுப்புத் தகராறுக்கு என்ன செய்வது என்கின்ற பயமும் கண்டிப்பாய் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவே முடியாமல் செய்து விட்டது.
இங்கிலாந்தில் இன்று இந்து முஸ்லீம் சண்டையே பலமாய் இருப்பதால் எல்லோரு டைய நேரத்தையும் அதுவே கவர்ந்து கொண்டதால் வேறு மற்ற வர்கள் சண்டையைப் பற்றி நினைக்கவே நேரமில்லை.
இது முடிந்த பிறகே, சுதேச மன்னர்களுக்கும், இந்திய சீர்திருத்தத்திற்கும் உள்ள சண்டைகள் புறப்படும். அதுவும் முடிந்த பிறகு பார்ப்பனர் அல்லாதார் முதலிய தத்துவ சூட்சிச் சண்டைகள் புறப்படும்.
ஆகவே இந்த சண்டைகளே பிரதானமாகவும் இது சம்மந்தமான சூட்சிகளே கவலையாகவும் இருக்குமே ஒழிய இந்தியாவுக்கு பொதுவாக வேண்டியது எது என்பது ஒருவருக்கும் தெரியவும் தெரியாது. அது அவர்களுக்கு புலப்படப் போவதுமில்லை.
போனவர்கள் போக இந்தியாவில் இருக்கும் தேசீயவாதிகளோ “ஓடினவனுக்கு ஒன்பதாமிடத்தில் சனி, இருந்தவனுக்கு எட்டாமிடத்தில் சனி” என்பது போல் திகைக்க வேண்டியதாயிருக்கின்றனர்.
அதாவது, என்ன செய்வது என்பதே தெரியாமல் “ஏதாவது ஒரு விதத்தில் சர்க்காருக்கு தொந்திரவு கொடுக்க வேண்டியது நமது கடமை” என்பதைத் தவிர வேறெவ்வித குறியும் இல்லை. உதாரணமாக பலசரக்குக் கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது போல் உப்புக் காச்சலாமா? பாரஸ்ட் சட்டம் மீறலாமா? கள்ளுக்கடை மறியல் செய்யலாமா? ஜவுளிக் கடை மறியல் செய்யலாமா? சர்க்கார் வாங்கிய கடனை மறுக்கலாமா? வரி கொடுக்காமல் இருக்கலாமா?
சென்சஸ் பகிஷ்காரம் செய்யலாமா? சர்க்கார் ஏதாவது ஒன்று வேண்டாமென்று சொன்னால் அதை வேண்டுமென்றே மீறி செய்ய லாமா? கொடியேற்றலாமா? கொடியை வணங்கலாமா? தக்ளி சுற்றலாமா? என்பன முதலாகிய மற்றும் இவை போல ஏதாவதொன்றைச் செய்யலாமா என்பதைத் தவிர, ஜனங்களுடைய நன்மைக்கான காரியம் என்பதாக ஏதாவது ஒன்றைக் கண்டு பிடித்து அதைச் செய்யலாமா என்கின்ற கவலையோ லக்ஷியமோ இல்லாமல் வெறும் கலாட்டாவில் பத்திரிகை களில் பிரமாதப்படுகிறதே அல்லாமல், உருப்படியான காரியம் எதையும் காண எவராலும் முடியவில்லை. வீணான வழியில் ஊக்கமும் உணர்ச்சியும் போய்க் கொண்டிருக்கின்றன.
படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசியல்வாதிகள், தேசீயவாதிகள், தேசபக்தர்கள் ஆகியவர்கள் காரியங்கள் தான் இப்படி இருக்கின்றனவே என்று நினைத்தால் இவர்கள் தவிர மற்றவர்களான பொதுநலத்தில் ஜீவகாருண்யத்தில் - தர்ம காரியத்தில் கவலை கொண்ட மற்ற கனவான்களின் செய்கைகளும் கைங்கரியங்களுமோ இதைவிட மோசமான காரியமாகவே இருக்கின்றன.
பொதுக் காரியம் என்பதே நமது நாட்டில் கோவில் கட்டுவது, கும்பாபிஷேகம் செய்வது, பழய கோவில்களை பழுது பார்க்கும் திருப்பணி செய்வது, கும்பாபிஷேகம் செய்து அதிக நாளாய் விட்டதே சாமியின் சக்தி குறைந்து இருக்குமோ என்று சந்தேகத் திற்காக ஒரு கும்பாபிஷேகம் செய்து அந்த சாமிகளுக்கு வாகனம், ரதம், தேர், உற்சவங்கள் முதலியவைகள் செய்வது,சத்திரம் கட்டி வருகின்ற பக்தர் களுக்கு பிராமணர்களுக்கு சாப்பாடு போடுவது, வேத பாடசாலை, தேவார பாடசாலை முதலியவை கட்டுவது, லக்ஷப்பிராமண சமாராதனை, லக்ஷத் தீபம் முதலியவைகளை செய்விப்பது ஆகிய காரியங்களே பொது தர்மமாக நடைபெறுகின்றன.
ஏதாவது மக்களுக்கு பிரசாரம் செய்வது என்றாலோ ஆடு, கோழி, மீன் சாப்பிடக் கூடாது, சாப்பிட்டால் நரகம் என்றும், திருநீரு பூசினால் பாவமெல்லாம் போகும் என்றும், மற்றும் இதுபோல் பிரசாரம் செய்வதும், பொது ஜனங்களுக்கு ஏதாவது ஒழுக்கம் கற்பிக்க வேண்டுமானால் ராமாயணம், பாரதம், பாகவதம், திருவிளையாடல் புராணம் முதலிய புராணங்கள் படிப்பதன் மூலம் ஒழுக்கங்கள் கற்பிப்பதும் ஆகிய காரியங்களே மற்றவர் கள் பிரபுக்கள் நாகரீகமடைந்தவர்கள் ஆகியவர்களின் பொதுநல சேவை யாக இருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்று வேண்டியது இன்னது என்று அறிந்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா என்பதை வாசகர்களையே யோசித்து உணரவிட்டு விடுகின்றோம்.
ஆகவே தேசபக்தியும், கடவுள் பக்தியும் மனிதனை சுயநலஸ்தானாகவும், கண்மூடித்தனமாய் பின்பற்ற வேண்டியதாகவும் செய்கின்றதே தவிர மனித சமூகத்தின் நாட்டின் முன்னேற்றத்தின் ஏ, பி, சி, டி யைக் கூட காணச்செய்ய முடிவதில்லை.
தேசபக்தி என்கின்ற வார்த்தையே வெள்ளைக்காரன் ராஜ்ஜியத்தில் உத்தியோகம் சம்பாதிப்பதற்கு ஏற்படுத்தப் பட்டதல்லால் வேறு எதற்காக வாவது ஏற்படுத்தப் பட்டு வேறு ஏதாவது பலன் கொடுத்தது என்று யாராவது ஒற்ற விரலை நீட்டமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
தேச பக்தியும் கடவுள் பக்தியும் மனித சமூகத்திற்கு என்ன பலனைக் கொடுக்கக் கூடியதாய் இருக்கின்றது? அல்லது கொடுத்தது என்றாவது யாராவது சொல்ல முடியுமா? மற்ற தேசத்தாரெல்லாம் விடுதலையடைய சுதந்தரமடைய இந்த மாதிரிதான் நடந்தார்களா? என்று கேள்க்கின்றோம்.
மக்கள் முன்னேற்றம் அடையவும் அவர்களது கஷ்டமும் சரீரப் பிரயாசையும், அடிமைத் தனமும், ஒழியவும் மனிதத் தன்மை இன்னது மனிதனுடைய இயற்கைத் தன்மை இன்னது என்பவைகளை உணர்த்தி அவைகளை அடையச் செய்வது கவலையற்று வாழச் செய்வதற்கு இதுவரை யார் என்ன கவலை எடுத்து என்ன காரியம் செய்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு மனிதனும் பொது நலத்திற்குப் பாடுபடுகின்றேன் என்கின்ற ஏணியின் மூலம் சுயநலத்திற்கு போகின்றானே அல்லாமல் உண்மையான பொது நலத்துக்காக வேலை செய்வதற்கு யார் இருக்கின்றார்கள்? இருந்தார்கள்? அல்லது அதற்காக வேண்டியது என்ன என்றாவது யார் அறிந்தார்கள்? வீணே சுயநலமும் குருட்டு நம்பிக்கையும் கொண்டவர்கள் செய்கையானது பல வழிகளிலும் இன்றய தினம் நாட்டை, ஜன சமூகத்தை பாழாக்கிக் கொண்டு வருகின்றதை தவிர வேறு ஒரு காரியமும் காண முடியவில்லை. இந்த லக்ஷணத்தில் யாராவது உண்மையைச் சொல்ல வந்தால், அவர்களை தேசத்துரோகி என்றும் நாஸ்திகன் என்றும் மூளாவணம் பேசுவதிலும் குறைவில்லை.
ஆகவே இந்த சமயமானது பொது ஜனங்கள் நன்றாய் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வரவேண்டிய ஒரு முக்கிய சமயம் என்பதை மாத்திரம் குறிப்பிட்டு வலியுருத்தி விட்டு இதை முடிக்கின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 21.12.1930)