போரில் வீரர்கள் எதிரியைக் குறி வைப்பார்கள். எப்போதும் பக்கத்தில் நிற்கும் அந்த நல்லவன் நமது அல்லையைக் குறி வைக்கிறான். அவனே அதிகமாகவும் பேசுகிறான். சத்தமும் இரைச்சலும் திசை திருப்பிவிடும் என்பது அவனது நம்பிக்கை (அவன் என்ற உரிச்சொல் கதை நிமித்தம்).

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் கீற்று இணையத்தில் கிரேக்க கதை சொல்லி, ‘கதை அல்ல நிஜம்’ பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் வாழும் ஒருவர், இந்திய அரசின் வல்லாண்மைக்கு கட்டுப்பட்டு வாழும் ஒருவருக்கு கிரேக்க கதைகளை உருவகப்படுத்தித்தான் தமிழகத்தில் அரசியல் சண்டை புரிய முடிகிறது. இது தற்செயல் அல்ல. இந்த விவாத முறைக்கும் மே பதினேழு இயக்கத்தின் தொடர் போராட்ட முறைகளுக்கும் ஒரு தர்க்கத் தொடர்ச்சி இருக்கவே செய்கிறது. அன்பான மே பதினேழு இயக்கத் தலைமையே.. தாழ்மையுடன் உங்களுக்கு சில நினைவுபடுத்தல்கள்... நாம் தமிழ்நாடு என்ற ஒரு மாநில அரசின் கீழ் வாழ்கிறோம். இந்தியா என்ற ஒரு வல்லாதிக்க கட்டமைவின் கீழ் வாழ்கிறோம். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐ.நா சபை, காமன்வெல்த் அவை அனைத்தும் நமக்கு வெகு தூரத்தில் உள்ளன. நிலத்தில் மட்டுமல்ல அதிகாரத்திலும் நமக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்திலும் வெகு தூரத்தில் உள்ளன. படிப்பது கிரேக்க ‘வீரயுக’க் கதை... கத்தி வீசுவதோ காற்றில்...

அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை எதிர்த்த போராட்டக் களத்தில் இந்தியாவை அம்பலப்படுத்தி நடந்த போராட்டத்தை, மடை மாற்றியது மே பதினேழு செய்த அருந்தொண்டு. அமெரிக்க எதிர்ப்பு, அமெரிக்க பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டமாக மாற்றி இழுத்துச் சென்ற மே பதினேழு இயக்க தலைமையைத் தான் ட்ரோஜான் கதையின் ‘சினான்’ என்று சொலல் பொருத்தம். தமிழ்நாட்டின் மாணவர் போராட்டக் களத்தை அமெரிக்க எதிர்ப்பில் மடை மாற்றி அவர்களை தவறான திசையில் கொண்டு சென்று, அமெரிக்கப் பொருள் புறக்கணிப்பு என்ற ட்ரோஜான் குதிரையின் முன் நிறுத்தியது மே பதினேழு இயக்கத் தலைமை தானே?! தேசிய விடுதலை எதிர்ப்பில் இந்திய அரசின் வஞ்சினத்தை மறைக்க அந்த மடை மாற்றம் உதவியது. மாணவன் அமெரிக்க மோசடியை மட்டும் கண்டித்து விட்டு தனது பாரத இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொண்டான்.
 
மான் பக்கமா இல்ல நரி பக்கமா?

அமெரிக்க தீர்மானத்தைப் புறக்கணித்த மே பதினேழு இயக்கத்தை வரவேற்கிறோம். பந்து எடுத்து போடுபவர்கள் அனைவரும் பந்தாளர்கள் (பவுலர்கள்) இல்லை. ஒரு முடிவைப் பேசியதனாலேயே அதற்கு சரியான வழிமுறையில் வந்து சேர்ந்தோம் என்று பொருளல்ல. ஒரே முடிவுக்கு ஒருவர் ஒன்று வழியாகவும் வருகிறார்; ஒருவர் பத்து வழியாகவும் வருகிறார்; ஒருவர் பூஜ்ஜியம் வழியாகவும் வருகிறார். தங்களின் முடிவு பூஜ்ஜிய வழிப்பட்டதுதான் என்ற சந்தேகம் எமக்குண்டு.

அமெரிக்கத் தீர்மானத்தை ராஜபக்சேவும் எதிர்த்தார்.. இந்தியாவும் எதிர்த்தது.. இந்த எதிர்ப்புகளில் இருந்து மே பதினேழு எந்த இடத்தில வேறுபட்டது என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்தினால் நல்லது. எந்த வழியாக நீங்கள் அந்த முடிவுக்கு வந்தீர்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டியது. ஏனெனில் அப்போதும் இந்தியாவை நோக்கி கோரிக்கை வைக்கக் கூடாது என்று லாவகம் காட்டினீர்கள்.
 
கார்ப்பரேட் அரசியலின் ராஜதந்திரம்

மாணவர் போராட்டங்களால் நிரம்பி வழிந்த சாலைகள் இன்று வெறிச்சோடி விட்டதற்கு காரணம்.. அமெரிக்க எதிர்ப்பை நோக்கி திசை திருப்பி, இந்திய அரசைக் காப்பாற்றிய அரசியல் தான். இதை மிக சாதுரியமாக முதலாளிகளுக்கே உரிய ராஜதந்திரங்களைக் கொண்டு மே பதினேழு இயக்கத் தலைமை செய்தது. முழக்கங்களை காசைக் கொட்டி அடித்து வைத்துக் கொள்வது... எந்தப் போராட்டம் நடந்தாலும் ஓரிருவரை அனுப்பி, கலந்து கொள்வோர் கரங்களில் அட்டையைச் சேர்த்து விடுவது.. அட்டையடி வித்தை இது தானோ. அரசியல் இயக்க வரலாற்றில் இதுவரை இல்லாத முதல் முறையாக, மே பதினேழுவின் வியாபார உத்தி... இதில் கருத்துரிமை, ஜனநாயகப் பண்பு எல்லாம் மே பதினேழு தலைமைக்கு கெட்ட வார்த்தைகள்..

“தோழர்களே அரசியல் இயக்கங்களையும் கட்சிகளையும் எதிலும் அனுமதிக்காதீர்கள்; அவர்கள் கொடுக்கும் துண்டறிக்கைகளை கிழித்து எறியுங்கள்.." இது மே பதினேழு தலைமை அக்கம் பக்கம் பார்த்து விட்டு அவ்வப்போது வைக்கும் முழக்கம்.. உண்மையில் மே பதினேழு ‘அரசியல் இயக்கமா’ அல்லது.. அம்பாசடர் இயக்கமா?

இப்போது காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற முழக்கத்தை இந்தியாவிடம் வைக்கக் கூடாது என்கிறார்கள். சரி அதை அமெரிக்காவிடம் வைப்பதா? அல்லது அண்டார்டிக்காவிடம் வைப்பதா? நமக்கு பதில் சொல்ல வேண்டியது யார்? நமது முதல் பொறுப்பாளி யார்? தலைமீது நின்று நமது கொள்கைகளை தீர்மானிப்பது யார்? இந்தக் கேள்விகளை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் எளிதாக கடந்து விடுபவர்கள் யார்? இந்தியாவிற்கு ஏற்கனவே அம்பலப்பட்ட ஏஜெண்டுகள் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் உள்ளனர். அந்தப் பட்டியலில் மே பதினேழு இயக்கம் சுயேட்சையாக போட்டியிடுவது நம்மை வருத்தம் கொள்ள வைக்கிறது.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை யாரிடம் வைக்கிறீர்கள்? காற்றிலா? கனடாவிடமா? காமன்வெல்த்தின் பொதுச் செயலாளரான இந்தியாவின் கமலேஷ் ஷர்மாவிடமா? காமன்வெல்த் நாடுகளுக்கு சுற்றறிக்கை கூட அனுப்பக்கூடாது என்று நேரடியாக தடுத்த அவரை இயக்கியது ஆப்பிரிக்காவா? அல்லது இங்கிலாந்து ராணியா?

அல்லது உலக மக்களுக்கு வெறும் பிரச்சாரம் செய்தோம் என்று மழுப்பப் போகிறீர்களா? எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி இடியாப்பம் பிழிவதில் கூட முக்கியமானது நண்பர்களே.

காமன்வெல்த் எதிர்ப்பில் மட்டுமல்ல எல்லாப் போராட்டங்களிலும் உச்சபட்ச கோரிக்கையை மட்டும் வைத்து விட்டால் எல்லாம் தானாக நடந்து விடும் என்பது மே பதினேழு இயக்கத்தின் சுருக்கவாதம். போராட்டத்தின் அத்தனை கோணங்களிலும் தனது உறுதியை நிறுவ வேண்டிய கடமை கார்பரேட் கம்பெனி ஜென்டில்மேன் அரசியலுக்கு தேவைப்படாது தான். ஆனால் அர்ப்பணிப்பான போராட்டத்திற்கு அது அவசியம்.

ஈழம் என்ற உச்சபட்ச கோரிக்கையை உறுதியாக பற்றிக்கொண்ட விடுதலைப் புலிகள், திம்பு பேச்சுவார்த்தை தொட்டு, பல்வேறு இடைக்கால கோரிக்கைகளை முன்வைத்ததை முடிந்தால் புரட்டிப் பார்க்க. போர், போர் என்று முரசறைந்து விட்டு வீட்டுக்கு கிளம்பிவிட முடியாது. ஒவ்வொரு படைவீரனையும் உரிய இடத்தில உரிய முறையில் எதிர்கொண்டே முன்னேற வேண்டி இருக்கிறது.

'காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது' என்பதும் 'காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது' என்பதும், 'காமன்வெல்த் அமைப்பில் இருந்தே இலங்கையை நீக்க வேண்டும்' என்பதும் வரிசைக்கிரமமான கோரிக்கைகள்... இதில் ஏதொன்றும் விடுபடமுடியாது; விடுபடக் கூடாது.

இது மட்டுமல்ல இனி வரப்போகும் காலங்களிலும் இந்திய அரசின் இனப்படுகொலை பாத்திரத்தையும் அதன் துரோகத்தையும் ஒவ்வொரு அரசியல் நகர்விலும் அம்பலப்படுத்தாத எந்த அரசியல் கட்சியையும் அம்பலப்படுத்தும் கடமையை எமது கட்சி தீவிரமாக செய்யும் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறோம்.
 
மே பதினேழு இயக்கம் வலது சாரி அரசியலுக்குள் சென்று விடக் கூடாது என்று எண்ணுகிறோம். ஆகவே கீழ்காணும் கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.

· தமிழகத்தில் பெரியாரிய மார்க்சிய அம்பேத்கரிய சிந்தனைப் போக்குகள் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் குறியீடுகளாக போற்றப்படுகின்றன. மே பதினேழு இயக்கத்திற்கு என்ன கருத்தியல் பார்வை உள்ளது?

· தேசிய ஜனநாயகம்.. - எதிர் - தமிழ்ச்சாதி என்ற பெயரில் சாதிய தேசியம் இதில் மே பதினேழு எந்தப் பக்கம்.?

· வைகுண்ட ராஜன்களின் தமிழ்த் தேசியம் - எதிர் - உழைக்கும்- ஏழை –நடுத்தர மக்களின் தமிழ்த் தேசியம் ... இதில் மே பதினேழு எந்தப் பக்கம்?
 
· தமிழகத்தைப் பற்றிய புரிதலும் எதிர்கால லட்சியமும் என்ன?
 
- தமிழ்நாடு மக்கள் கட்சி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 9080535115)

Pin It