நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததின் முலம் பா.ஜ.க. இந்திய அரசியலில் ஒரு புதிய முன்னுதாரண‌த்தை ஏற்படுத்தியுள்ளது. தனது வேட்பாளரான மோடிக்காக, அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலைப் போன்று வேட்பாளர்களுக்கு இடையே நேருக்கு நேர் மோதலை விரும்பும் பா.ஜ.க., இந்திய தேசத்தின் நாடாளுமன்ற குடியாட்சித் தத்துவத்தைப் புறந்தள்ளியுள்ளது. தன்னை மீட்கவல்ல ஒரே தலைவராக மோடியைக் கருதும் பா.ஜ.க., அவரையே தேசத்தைக் காக்கவல்ல ஒரே தலைவராக முன்னிறுத்துகிறது.

மோடி ஒரு திறமை வாய்ந்த நிர்வாகி என்றும், குஜராத் பல துறைகளில் முதலிடம் வகிக்கிறது என்றும் தொடர்ந்து ஓதிக்கொண்டே இருக்கிறது. தன் மாநிலத்தை ஒற்றையாளாகத் தன் தோள்களின் மேல் தாங்கி இருக்கும் வளர்ச்சி நாயகன் என்று அவர் போற்றப்படுகிறார். இவ்வாறான புகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் சாரைசாரையாகப் புள்ளி விவரங்களும், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இணையாக முழுமூச்சாக இயங்கும் ஒரு மக்கள் தொடர்பு இயந்திரத்தையும் பா.ஜ.க. முடுக்கியுள்ளது. ஒரு மாநிலத்தை மோடி ஒற்றை ஆளாக முன்னேற்றியுள்ளார் எனக் கூறி அவ்வாறே நாட்டையும் முன்னேற்றுவார் என மக்கள் மத்தியில் கூறுவது என்பது பா.ஜ.கவின் திட்டமாகும்.

இங்கு நாம் மோடி என்னும் மனிதரின் ஜனநாயகப் பண்பு, மதச்சார்பின்மை, பொருளாதாரக் கொள்கை, நிர்வாக பாணி மற்றும் அவரது அரசியல் தத்துவம் ஆகியவைகளைப் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்குப் பிரதமர் ஆகத் துடிக்கும் மோடி கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தை நாம் சற்று அலச வேண்டியுள்ளது. தனது கட்சியின் மாநிலத் தலைவராக ஆனது, குஜராத்தின் முதலமைச்சரானது, பிரதமர் வேட்பாளரானது, என தனது அரசியல் ஏணியில் மோடி ஒவ்வொரு முறை ஏறியபொழுதும் அவர் தன் முன்னுள்ள மூத்த தலைவர்களையும் தனது கட்சியினரையும் எந்தவித ஜனநாயக முறைகளையும் கடைப்பிடிக்காமல் பின்னுக்குத் தள்ளியே உயர்ந்துள்ளார். கேசுபாய் பட்டேல்கள், சங்கர் சிங் வகேலாக்கள், அத்வானிகள் போன்றோர் மோடியின் ஜனநாயக நடைமுறைகள் பற்றிய கதைகள் பல கூறுவார்கள். பா.ஜ.க கூட, மோடியை பலர் கருத்துகளைக் கேட்டுச் செயல்படும் தலைவராகக் காட்டாமல், தானே முடிவெடுக்கும், தன் சொல்லையே முதலும் இறுதியுமாகச் செயல்படுத்தும் ஒரு தனிப்பட்ட தலைவராகத்தான் முன்னிலைப்படுத்துகிறது. மோடியின் இவ்வகையான செயல்பாடுகளை, பா.ஜ.காவின் அமெரிக்க ஜனாதிபதி போன்ற தனிநபர் தேர்தல் போட்டி விருப்பத்துடன் நாம் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். இவ்வகையில் மற்ற கட்சிகளையும் நாடாளுமன்றத் தேர்தல் வழக்கத்திற்கு மாற்றமாகப் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க பா.ஜ.க மறைமுகமாகத் தூண்டுகிறது. அவ்வாறு மற்ற கட்சிகள் அறிவித்தால் அது கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவற்றை புறம்தள்ளி, தனிநபர் தாக்குதல்களில் வல்லவரான மோடிக்கு வசதியாக இருக்கும் என பா.ஜ.க. கருதுகிறது. நேருக்கு நேர் சவால்களும், சொற்போர்களும் மோடிக்குள்ளே இருக்கும் பேச்சாளருக்கு மிகவும் பிடித்தவைகள்.

மோடியின் மதச்சார்பின்மை கொள்கையைப் பற்றி நாம் அதிக நேரம் செலவு செய்ய அவசியம் இல்லை. பா.ஜ.க. மற்றும் மோடியின் மதச்சார்பின்மை குறித்தான நிலைப்பாடு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் அவரது கட்சியும் தங்களை ஆர்.எஸ்.எஸ். சீடர்கள் எனக் கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறார்கள் என்பதிலேயே அவர்களின் மதச்சார்பின்மை நிலை முழுவதுமாகப் புலப்படுகிறது. ஆறு மதத்தினர் ஒருங்கே நிம்மதியாக வாழும் வரலாறு இந்தியாவில் மட்டும் நிகழ்ந்துள்ளது. இந்து மதம், சமணம், பெளத்தம், சீக்கியம் ஆகிய மதங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையினால் இங்கே தோன்றின. அதுமட்டுமில்லாமல் இந்தியா தனது பன்மை பண்பாட்டினால் இஸ்லாம், கிறித்துவ மதத்தையும் தன் வரலாற்றில் வரவேற்றுள்ளது. மேலும், இந்தியா தன் பன்மையில் பார்ஸிகளுக்கும், யூதர்களுக்கும் அடைக்கலம் அளித்துள்ளது. இயற்கையிலேயே இவ்வாறான பன்மைத்தன்மை ஊறியுள்ள இத்திருநாட்டிற்கு மோடியின் ஒற்றைத்தன்மையைக் கட்டாயப்படுத்தும் இந்துத்துவக் கொள்கை எப்படிப் பொருந்தும் என்பது பெருத்த கவலையையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

மோடியை முன்நிறுத்துவதில் மிக முக்கியமாக் கூறப்படும் காரணம், அவர் தலைமையில் குஜராத் பொருளாதாரத்தில் அடைந்ததாக‌க் கருதப்படும் முதலிடம். ஏற்கனவே இது தொடர்பாக மோடி ஆதரவாளர்களும், மோடி எதிர்ப்பாளர்களும் பல புள்ளிவிவரங்களை எடுத்து வைத்துள்ளனர். குஜராத்தின் அவ்வாறான முன்னேற்றத்திற்கு மோடியே முழுக்காரணம் எனக்கூறும் அவரது ஆதரவாளர்கள், மோடி குஜராத்தை மின்பற்றாக்குறையற்ற மாநிலமாக்கினார், தொழில் வளர்ச்சியில் முதலிடம் பிடிக்க வழி செய்தார், அவரது ஆளுமையில் குஜராத் மற்ற மாநிலங்களை விட பல மடங்கு வளர்ந்துள்ளது என பலவகையில் மோடியின் ஆட்சியையும், அவரது பொருளாதாரக் கொள்கையையும் வியக்கின்றனர். மறுபுறத்தில் குஜராத்தின் ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நிலை, மற்ற சில மாநிலங்களை விட தாழ்ந்தே உள்ளது. மோடி ஆதரவாளர்கள் கூறுவது போன்று குஜராத் தொழில் வளர்ச்சி அடைந்தது என்று ஏற்றுக்கொண்டாலும், அவ்வளர்ச்சி அம்மாநில நிதி வருவாய் மற்றும் தொழிலாளர் நல சட்டங்களைச் சமரசம் செய்து கொண்டு அடைந்த வளர்ச்சி என்பது பலருக்குத் தெரியாத உண்மை.

பெரும் பணக்காரர்களுக்கு வேண்டுமானால் பொருள் ஈட்டுவதற்கும், வசதியாக வாழ்வதற்கும் ஏற்ற மாநிலமாக குஜராத்தை மோடி வளர்த்திருக்கலாம், ஆனால் அம்மாநில உழைக்கும் வர்க்கத்தினர்க்கு அவ்வளர்ச்சி எந்தப் பயனையும் அளிக்கவில்லை. மேலும் மோடி வந்து முன்னேற்றுவார் எனக் காத்திருக்க குஜ்ராத் (எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும்) ஒன்றும் ஏழை மாநிலம் அல்ல. குஜராத்தின் பொருளதார வளர்ச்சி வரலாற்றை நாம் சிறிது கவனித்தாலும் குஜராத், மோடி வருகைக்கு முன்பே கிராமப்புற பூரண மின்மயமாக்கல், உற்பத்தி தொழில் துறையில் மேம்பட்டிருத்தல் என பல வளர்ச்சிகளைக் கண்ட மாநிலம் என்பது புலப்படும். குஜராத் எப்பொழுதும் ஒரு துடிப்பான வணிக வர்க்கத்தினரைக் கொண்டிருக்கும் மாநிலமாகும். அது எக்காலத்திலும் வியாபார, தொழில் முன்முயற்சிகளை வளர்த்தெடுக்கும் ஒரு முன்னோடி மாநிலம். தொழில் முனைதல் குஜராத்திகளின் பண்பாட்டுக் கூறாகும். ஆக, பலகாலங்களாக இருந்துவரும் செய்திகளையும், வரலாற்று உண்மைகளையும் மோடி தன் ஆட்சியில் நடந்தவை எனக் கூறி புகழடைய நினைப்பது மக்களை ஏமாற்றும் வேலை. மோடி தன் ஆட்சியினால் குஜராத்தை ஒளிரச் செய்தார் என்பதற்கு, அவருக்கு முன்னால் குஜராத் ஒன்றும் பரிதாபத்துக்குரிய பின் தங்கிய மாநிலமாக இருந்திருக்கவில்லை.

மோடியின் மற்றொரு சிறப்பாகக் கூறப்படுவது அவரது நிர்வாகத் திறன். குஜராத்தில் நடத்தப்பட்ட மதப்படுகொலைகளை பல வாரங்களாக, மாதங்களாகக் கட்டுப்படுத்த முடியாமல் போன மோடியை ஒரு நல்ல நிர்வாகி என நாம் எப்படி மதிப்பிடுவது? அப்படுகொலைகளுக்கு மோடியே காரணம் என கூறப்பட்டு அவர் மேல் விசாரணைகளும், வழக்குகளும், அவரது ஆட்சியில் பணிபுரியும் அரசு அதிகாரிகளின் அவர் மீதான சாட்சியங்களும் நாடறிந்த செய்திகள். அப்படுகொலை நிகழ்வுகளுக்கு மோடி முறையாக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அப்படுகொலைகளுக்கும் மோடிக்கும் தொடர்பில்லை என பா.ஜ.க. வாதிட்டாலும், அப்படுகொலைகளை நிகழ்த்திய கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தாமல் விட்டது மோடியின் திறமையைக் காட்டவில்லை. மாறாக அவரது திறமையின்மையையே காட்டுகிறது.

இறுதியாக, நாம் மோடியின் அரசியல் கோட்படுகளை நோக்க வேண்டும். கல்லூரியில் தன் இளங்கலைப் பாடமாக அரசியல் அறிவியலைப் படித்தவர் மோடி. சமீபத்தில், அவர் தன்னை ஓர் “இந்து தேசியவாதி” என பெருமை பொங்க அறிவித்துக்கொண்டார். இதில் என்ன தவறு இருக்கிறது என நாட்டில் உள்ள அரசியல் பார்வையாளர்களை நோக்கி சவால் விட்டார். இவ்வாறு அறிவிக்கையில் முதலில் தான் ஒரு “இந்து” என்றார், பின்பு தான் ஒரு “தேசியவாதி” என்றார். நன்று, ஒரு இந்துவாகவும், தேசியவாதியாகவும் இருப்பதில் நன்மைதான். ஆனால், பின்பு இவ்விரண்டு தனித்தனியான கோட்பாடுகளையும் சேர்த்து “இந்து தேசியவாதி” என்று அவர் கூறியதுதான் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஒரு நாட்டின் தலைவராக விரும்புபவர் சொற்களைச் சேர்ப்பதாலும், பிரிப்பதாலும் ஏற்படும் பொருள் வேற்றுமைகளைக் கூட அறிந்திருக்கவில்லை என்பது நமக்கு வந்த சோதனை. இந்து மதத்தைப் பின்பற்றி ஒரு அமைதியான, சமுக ஒற்றுமையைப் பேணக் கூடிய ஒரு வாழ்க்கையை ஓர் இந்து வாழலாம், தேசியவாதியாகத் தன் நாட்டிற்காக அந்த நபர் முன்நிற்கலாம். ஆனால், “இந்து தேசியவாதி” என இவ்விரண்டு கோட்பாடுகளையும் தவறாக இணைத்தால் அது வேறொரு முற்றிலும் மாறான சித்தாந்தத்தைக் குறிக்கும், “இந்து தேசியவாதி” என்பது இந்து மதத்திற்கான ஒரு நிலைப்பாடாக அமையுமே தவிர அது இந்திய நாட்டிற்கான நிலைப்பாடாக அமையாது.

ஒரு நாட்டின் தலைவருக்கு எம்மத தேசியவாதமும் நிலைப்பாடாக இருப்பது அபாயகரமானது. குறிப்பாக மதத்தில், வாழ்வு முறையில், பொருளீட்டு முறையில், மொழியில், தத்துவத்தில் பன்மையைப் போற்றும் இந்திய தேசத்திற்கு மோடி போன்றவர்கள் எல்லாவிதத்திலும் முரணானவர்கள்.

- இரா.சிவகுமார், சென்னை ‍- 19 (9962476261)

Pin It