2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை சிங்கள - இந்திய கப்பல் படையினருக்கிடையே இருந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள்தான் விடுதலைப் புலிகளின் கப்பல் படையான கரும் புலிகளின் முதுகெலும்பையே முறித்துப் போட்டது என்ற உண்மையை அண்மையில் வெளிவந்துள்ள ஆங்கில நூல் ஒன்று அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்திய கப்பல் படையின் உளவுப் பிரிவு இலங்கை கப்பல் படைக்கு பல முக்கிய தகவல்களைத் தந்தது, இந்த நூலை எழுதியுள்ள நிதின்கோகலே என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் செய்திப் பிரிவில் செய்தியாளர். ஈழத்தில் நடந்த கடைசி யுத்தத்தின் போது அப்பகுதியிலிருந்து செய்திகளை சேகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புக்கான உதவிகள் மட்டுமே இந்தியா செய்தது என்பது பொய் என்றும் இந்த நூல் அம்பலப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் மறைமுகமாக உதவியது என்பதை அம்பலப்படுத்தும் நூல் ஒன்று வெளி யிடப்பட்டுள்ளது.

‘ஸ்ரீலங்கா போரிலிருந்து அமைதிக்கு’ (‘ஸ்ரீலங்கா-ப்ரம் வார் டூ பீஸ்) என்ற புத்தகம் ஒன்றை நிதின் கோகலே என்பவர் எழுதியுள்ளார். அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் ரகசியமாக உதவியது என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியக் கடற்படை அளித்த முக்கியமான புலனாய்வு தகவல் காரணமாகவே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் நிற்கும் இடம் பற்றிய தகவல்கள் இலங்கைக் கடற்படைக்குத் தெரிய வந்தது என்றும், பன்னிரண்டுக்கும் அதிகமான ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் நிதின் அதில் கூறியுள்ளார்.

இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட எந்த ஒரு இராணுவ உதவிகளையும் அளிக்கவில்லை என்று மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறுத்து வந்த போதிலும், 2006 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே எம்.ஐ.-17 ரகத்தைச் சேர்ந்த 5 ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப் படைக்கு இந்தியா அளித்தது. ஆனால், அந்த ஹெலிகாப்டர்களுக்கு இலங்கை விமானப்படை வண்ணத்தைப் பூசிப் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இலங்கை விமானப்படைக்கு இந்தியா விதித்திருந்ததாகவும், அப்போது அரசுக்கு ஆதரவளித்த முக்கியக் கட்சிகளில் ஒன்றான தி.மு.க.வுக்குச் சங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் அந்தப் புத்தகத்தில் கோகலே எழுதியுள்ளார். அதிலும் இலங்கை இராணுவத்திற்கு இந்தியக் கடற்படை அளித்த உதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

குறிப்பாக 2002 ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்படைக்கு, இந்தியக் கடலோரக் காவல்படை ‘சுகன்யா’ என்ற ஆழமற்ற கடலில் பயணிக்கக் கூடிய ரோந்தக் கப்பல்களை வழங்கியது. இவை இலங்கை விமானப்படைக்கு மிகுந்த உதவி யாக இருந்துள்ளன. இலங்கை இராணுவத்தினரின் ஊடுருவும் படையினர் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, அவர்களை இந்தக் கப்பல்களைப் பயன்படுத்தித்தான் இலங்கை விமானப் படையினர் காப்பாற்றியதாகவும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதிகளில் நடைபெற்ற சண்டையின்போது காயமடைந்து சிக்கித் தவித்த இலங்கைப் படையினர், இதில் ஏற்றப்பட்டுத்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த நூலில் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை சேமித்து வைக்கும் கப்பல்களின் இடத்தைக் கண்டுபிடித்து, அது குறித்த தகவலை இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படைதான் தெரிவித்ததாகவும், அவ்வாறு கிடைத்த தகவல் காரணமாகவே புலிகளின் 10 மிதக்கும் ஆயுதக் கப்பல்கள் அழிக்க முடிந்ததாகவும் இலங்கைக் கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் வாசந்தா கரன்னகோட தம்மிடம் தெரிவித்ததாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கோகலே.

மேலும் கடந்த 2002 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்திய மற்றும் இலங்கைக் கடற்படையினரிடையே காணப்பட்ட அபரிதமான ஒத்துழைப்பால் தான், புலிகளைப் போரில் தோற்கடிக்க முடிந்ததாக இரு நாட்டுக் கடற்படை வட்டாரங்களிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்தப் புத்தகத்தில் கோகலே மேலும் தெரிவித்துள்ளார்.

Pin It