அக்டோபர் 18, 2013
 
போராட்டக்குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்
 
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சி மற்றும் தே.மு.தி.க. தலைவர் அவர்கள்,
மதிப்பிற்குரிய தி.மு.க. தலைவர் அவர்கள்,
மதிப்பிற்குரிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அவர்கள்,
மதிப்பிற்குரிய சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் அவர்கள்,
மதிப்பிற்குரிய சி.பி.எம். மாநிலச் செயலாளர் அவர்கள்,
சென்னை
தமிழ் நாடு
 
அன்புடையீர்:
 
    பொருள்: கூடங்குளம் அணுஉலைகள் 1 & 2 முடங்கிக் கிடப்பது பற்றியும், 3 & 4 விரிவாக்க ஒப்பந்தத்தில் பிரதமர் கையெழுத்திடப் போவது பற்றியும் தங்கள் நிலையை விளக்கக் கோரி...
 
வணக்கம். கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் இயங்கப்போகிறது என்று 2005-ஆம் ஆண்டு முதலே அணுசக்தித் துறை அறிவித்து வருகிறது. பிரதமரே 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்யாவிலும், 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவிலும் “ஓரிரு வாரங்களில் அணுஉலை இயங்கத் துவங்கும்” என்று அறிவித்தார். கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் நாள் அணுஉலையில் எரிபொருள் ஏற்றிவிட்டோம், மின்சார உற்பத்தி விரைவில் துவங்கும் என்று அறிவித்தார்கள். அதன் பிறகு மத்திய இணை அமைச்சர் திரு. வி. நாராயணசாமி “15 நாட்களில் மின்சார உற்பத்தித் துவங்கும்” என்று சுமார் இருபத்தைந்து முறை உண்மைக்குப் புறம்பாகப் பேசியிருக்கிறார்.
 
2013 யூலை மாதம் 13-ம் நாள் அணுமின் நிலையத்தில் அணுப்பிளவு வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது, முப்பது முதல் நாற்பத்தைந்து நாட்களுக்குள் 400 மெகாவாட் மின்சாரம் வந்துவிடும் என்றெல்லாம் அறிவித்து மூன்று மாதங்கள் உருண்டோடிவிட்டன. அங்கே எதுவும் நடக்கவில்லை. ஆனால் மக்களிடம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி தந்தி தொலைக்காட்சியில் அக்டோபர் 6, 2013 அன்று பேசும்போது, கூடங்குளத்தில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி தமிழகத்துக்குக் கொடுத்துவிட்டோம் என்று சொன்னார். ஆனால் இன்னொரு மத்திய இணை அமைச்சர் திரு. சுதர்சன நாச்சியப்பன் அக்டோபர் 8, 2013 அன்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, அணுமின் நிலையத்தில் பல்வேறு பழுதுகள் ஏற்பட்டிருப்பதாகவும், உதிரிப் பாகங்கள் ரஷ்யாவிலிருந்து வந்ததும் சரி செய்யப்படும் என்று கருத்து தெரிவித்தார்.
 
ஆனால் திரு. நாராயணசாமி அக்டோபர் 17, 2013 நாளிட்ட தினமணி நாளிதழில் (பக்கம் 7) “தற்போது கூடங்குளம் மின் உற்பத்தி நிலையத்தில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்” என்று சொல்லியிருக்கிறார். இதற்கிடையே அணு உலை வட்டாரங்கள் “நவம்பர் மாதம் மின் உற்பத்தி தொடங்கும்” என அறிவித்திருப்பதாக அக்டோபர் 17, 2013 நாளிட்ட தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
 
சுருக்கமாகச் சொல்வதென்றால், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்றப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; ஏராளமான ஊழலும், குளறுபடிகளும் நடந்திருக்கின்றன; அந்த நிலையம் ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆனால் அணுசக்தித் துறை அதிகாரிகளும், மத்திய அமைச்சர்களும் தமிழ் மக்கள் உயிருக்குக் கடுகளவும் மரியாதை கொடுக்காமல், பொறுப்புணர்வின்றி பேசிக் கொண்டும், அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டுமிருக்கின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன நடக்கிறது என்கிற முழு உண்மையை யாரும் மக்களுக்குச் சொல்லவில்லை. மத்திய அரசின், அணுசக்தித் துறையின் இந்த மக்கள் விரோதப் போக்கை யாரும் இதுவரை தட்டிக் கேட்கவுமில்லை.
 
இந்நிலையில் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் தக்க பாதுகாப்புக் கொள்கை, தரம், வழிமுறைகளை உருவாக்கத் தவறிவிட்டது; அணுசக்தி, கதிர்வீச்சு சம்பந்தமாக சர்வதேச தரத்திலான குறியீடுகளை, நடவடிக்கைகளை ஏற்படுத்தவில்லை; போதுமான பேரிடர் மேலாண்மை ஏற்பாடுகளை கைக்கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (Public Accounts Committee) அக்டோபர் 17, 2013 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே மத்திய தணிக்கைக் குழு (Comptroller and Auditor General) 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓர் அறிக்கை வெளியிட்டு (CAG Report No. 9/2012-13) அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி கடுமையாகச் சாடியிருக்கிறது.
 
முறையானக் கட்டுப்பாட்டு வாரியம் இல்லாதது மட்டுமல்ல, அணுக்கழிவு மேலாண்மைத் திட்டமும் இந்தியாவில் இல்லை. கூடங்குளம் அணுக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கங்களில் கொண்டு புதைப்போம் என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தபோது, கர்நாடக மக்கள் வெகுண்டெழுந்துப் போராடினர். அப்போதைய கர்நாடக முதல்வர் பா.ஜ.க.வைச் சார்ந்த திரு. ஜெகதீஷ் ஷெட்டர் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் வேறு எங்குமே வைக்க முடியாது என்று கர்ஜித்தார். கர்நாடகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர் காங்கிரசுக்காரரான திரு. வீரப்ப மொய்லி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று சூளுரைத்தார். கர்நாடக அ.தி.மு.க.வினரும் தெருக்களிலே இறங்கிப் போராடினர். இதன் விளைவாக வெறும் மூன்று நாட்களில் கோலார் திட்டம் கைவிடப்பட்டது.
 
ஆனால் கூடங்குளம் அணுசக்திப் பூங்கா, கல்பாக்கம் அணுசக்திப் பூங்கா, தேவாரம் நியூட்ரினோ திட்டம், மதுரை அணுக்கழிவு ஆய்வு மையம் போன்ற திட்டங்களெல்லாம் தமிழகத்துக்கு வருகின்றன; அவை வரவேற்கப்படுகின்றன. கர்நாடகத்திலும், மராட்டியத்திலும், கேரளத்திலும் இம்மாதிரியான திட்டங்களைக் கடுமையாக எதிர்க்கும் தங்கள் கட்சிகள் சில தமிழகத்திலே அவற்றுக்குக் கட்டியம் கூறுகின்றன.
 
தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகளின் தலைவர்களாகிய தாங்களும், தங்கள் கட்சிகளும் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல், மவுனமாக இருக்கிறீர்கள். இந்த மவுனத்தாலோ, பாராமுகத்தாலோ என்னவோ, பாரதப் பிரதமர் எதிர்வரும் அக்டோபர் 20, 2013 அன்று ரஷ்யாவுக்குப் போய் கூடங்குளத்தில் 3 & 4 அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போடத் திட்டமிட்டிருக்கிறார். எந்த விதமான வெளிப்படையான அறிவிப்புமின்றி, முறையான அனுமதியின்றி கூடுதல் உலைகளுக்கான கட்டிட வேலைகள் கூடங்குளத்தில் இரகசியமாக நடந்து வருகின்றன.
 
முதலிரண்டு அணு உலைகளே ஓடாமல் முடங்கிக் கிடக்கும்போது, அவற்றை இயக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய இழப்பீடு சட்டத்தை அவமதித்து இன்னும் இரண்டு உலைகளைக் கொண்டுவந்து தமிழ் மக்கள் மீது திணிப்பது பற்றி தாங்கள் எதுவுமே கருத்துச் சொல்லாமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
 
கூடங்குளம் அணு உலையில் இயங்காமல் கிடக்கும் 1 & 2 உலைகள் பற்றியும், விரிவாக்கத் திட்டமான 3 & 4 உலைகள் பற்றியும் தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக மக்களுக்கு அறியத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
இந்திய உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் திரும்பப் பெறுங்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும், சுமார் 2,27,000 தமிழ் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் 350-க்கும் அதிகமான வழக்குகளைப் பற்றிய தங்கள் நிலை என்ன என்பதையும் தமிழ் மக்கள் அறிய விரும்புகிறோம்.
 
நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ள மேற்கண்டக் கேள்விகளுக்கு தங்களின் தனிப்பட்ட பதிலை மற்றும் தங்கள் கட்சிகளின் நிலைப்பாட்டை அறிவதற்கு எட்டுக் கோடி தமிழ் மக்களும் ஆர்வமாயிருக்கிறோம்.
 
தங்கள் உண்மையுள்ள,
 
சுப.உதயகுமார்  
ம.புஷ்பராயன்   
மை.பா. நன்மாறன்  
எஃப். ஜெயக்குமார்
இரா.சா. முகிலன்    
பீட்டர் மில்டன்   
வி.இராஜலிங்கம் 
எம்.டி. கணேசன்

Pin It