தமிழ்த் தேசிய எழுச்சியை முடக்க இந்தியத் தேசியவாதி தமிழருவி மணியணின் சகுனித்திட்டம்....!

காங்கிரசை விரட்டியே ஆகவேண்டுமாம் அதற்கு பார்ப்பனிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து 'இந்திய ராஜபக்சே' மோடிக்கு மகுடம் சூட்ட வேண்டுமாம்.! தமிழகத்தின் அரசியல் சாணக்கியனாக தன்னை வரித்துக் கொண்டு அலைகிறார் இந்தியக்காவலர் தமிழருவி மணியன்.

திராவிடக் கட்சிகளான தி.மு.க, அ.இ.அ.தி.முக கட்சிகளிருந்து சற்று மாறுபட்டு, தமிழ் மக்களின் போராட்டங்களில் தன்னையும் தனது கட்சியையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர் திரு.வைகோ. காலத்தின் நிலைமை கருதி பல்வேறு புரட்சிகர சக்திகளும் வைகோவின் களப் பணியில் இணைந்து நின்றனர்.

தமிழகத்தில் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பெரிய எழுச்சி உருவாகி வருகிறது. தமிழீழப் போராட்டம், கூடங்குளம் போராட்டம், முல்லைப் பெரியாறு, கெயில் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் என்றவாறு டெல்லியின் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ் மக்களின் ஒற்றுமை அன்றாடம் வலுப்பட்டு வருகிறது.

பிரிட்டன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய துணைக்கண்ட மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினர். மக்களின் போராட்டம் புரட்சிகர சக்திகளிடம் போய்விடாமல் தடுக்க வெள்ளையனால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டவர்தான் மகாத்மா என்றழைக்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்த மகாத்மா தன்னை ஒரு சனாதன இந்து என்றார். மேலும் வர்ணாஸ்ரம தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். காந்தியின் வர்ணக் கோட்பாட்டையும் அதை ஆதரிக்கும் காங்கிரசையும் விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார். தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக போராடி வந்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்று பிரகடனம் செய்தார்.

தமிழ் மொழியின் வரலாறும் பெரியார், பெருஞ்சித்திரனார், பிரபாகரன் போன்றவர்கள் உருவாக்கிய தமிழ்த் தேசிய எழுச்சியும் இந்தியக் கட்சிகளான காங், பா.ஜ.க, சி.பி.எம் போன்ற கட்சிகள் தமிழத்தில் வேரூன்றுவதைத் தடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் 1980களில் தமிழீழ மண்ணில் வீறுகொண்டு எழுந்தது. இந்த விடுதலைப்போரை முடக்க இந்திய விரிவாக்கவாதிகள் தொடக்க முதல் எல்லா சதிகளும் செய்தனர். இந்தியாவின் புவிசார் நலனுக்காக தமிழீழப் போராட்டத்தை முடக்க ரா உளவு நிறுவனம் முழுமூச்சுடன் செயல்பட்டது. காங்., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் டெல்லியின் நலனுக்காக தமிழீழப் போராட்டத்தை ஒழித்துக்கட்ட ஒன்றுபட்டு செயல் பட்டனர்.

காங் அரசு முள்ளிவாய்க்கால் படுகொலையை நடத்தியபோது பா.ஜ.க. என்ன செய்தது?

சர்வதேச போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை சாஞ்சிக்கு அழைத்து பா.ஜ.க. அரசு விருந்து கொடுத்தது. தமிழினப் பகைவனை எதிர்த்துப் போராட வைக்கோ தலைமையில் சாஞ்சி சென்ற தமிழர்களை ஊருக்குள் விடாமல் கைது செய்தது பா.ஜ.க அரசு. இலங்கை சென்று ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்ற வியூகம் வகுத்து கொடுத்தவர்தான் பா.ஜ.க.வின் பாராளுமன்ற கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ்.

உலமயக் கொள்கையில் காங், பா.ஜ.க இரண்டுமே ஒன்றுபட்டு நிற்கின்றன.

தமிழகத்தில் மரணப் படுக்கையில் கிடக்கும் காங்கிரஸை விரட்ட தமிழகத்தில் 2% வாக்குகள் கூட இல்லாத பா.ஜ.கவுடன் கூட்டு வைக்க வைகோ-விற்கு தமிழருவி மணியன் வியூகம் வகுத்துக் கொடுப்பது எதற்கு?

வைகோ தமிழ்த் தேசிய சக்திகளுடன் அணிசேர்ந்து வருகிறார். இதைத் தடுக்க வேண்டும். இதுதான் இந்திய தேசியக் காவலர் மணியனின் சதித்திட்டம்.

இந்திய தேசியக் கட்சிகள் தமிழக மக்களிடமிருந்து முற்றாக தனிமைப்பட்டுள்ளன. மாணவர்கள் நடுவிலும் தமிழக அறிவர்கள் நடுவிலும் தமிழ்த் தேசியத்திற்கான கருத்தியல் வலுப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்வு 1960களில் தொடங்கிய இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டமாக வெடித்தது. மாணவர்கள் சரியான திசையில் கொண்டு சென்ற போராட்டத்தை தி.மு.க தனது பிழைப்புவாத நோக்கத்திற்காக டெல்லிக்கு பலியிட்டது.

தமிழீழப் போராட்டம் இந்திய தேசியக் கட்சிகளின் தமிழின விரோதப் போக்கை தமிழ்மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. தமிழர்களின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளாத எந்தக் கட்சியையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தமிழ்மக்களின் தேவை காங்கிரசுக்கு மாற்றாக பார்ப்பனிய ஜனதாவை ஏற்றுக் கொள்வதல்ல!

தமிழர்களின் அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்ய தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள ஒரு அரசே இன்றைய தேவை. இதற்கான கருத்தியலை முன்வைப்பதே தமிழர்களின் அரசியல்.

மீண்டும் தமிழ்த் தேசிய எழுச்சியை டெல்லிக்குப் பலியிட தமிழருவி மணியன் போன்றவர்கள் செய்யும் சதிவேலைகளை முறியடிப்போம்.

தமிழ்த் தேசியத்திற்கான அரசியலை முன்னெடுப்போம்!.

- தமிழினப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It