கூடவே கூடாது கூடங்குளம் அணுமின் நிலையம்

ஏசு கிறித்து பிறந்த ஆண்டை மய்யப் புள்ளியாகக் கொண்டு, வரலாற்றில், ஆண்டுகள், கி.மு., கி.பி. என்று குறிக்கப்படுகின்றன. ஏசு கிறித்து பிறந்த போது உலகின் மக்கள் தொகை 10 கோடியாக இருந்தது. கி.பி.1804இல்தான் உலக மக்கள் தொகை 100 கோடியை எட்டியது. ஆனால் அடுத்த 123 ஆண்டு களுக்குள் - 1927இல் 200 கோடியாக உயர்ந்தது. அடுத்த 32 ஆண்டுகளில் - 1959இல் 300 கோடி யானது. 2011 அக்டோபர் 31 அன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக இருக்கும் என்று அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மக்கள் தொகை நிதியம் அறி வித்துள்ளது.

1800க்குப்பின் மக்கள் தொகை கிடுகிடுவென்று உயர்ந்ததற்கு, எரிசக்தியைக் கொண்டு இயந்திரங்கள் மூலமாக நடைபெற்ற முதலாளிய உற்பத்தி முறை யின் வளர்ச்சியே பெரிய காரணமாகும். இயற்கை யின் மூலவளங்களைக் கொள்ளையடிக்கவும், உழைக்கும் மக்களின் குருதியை அட்டைகள் போல் உறிஞ்சவும் முதலாளிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. உற்பத்திச் செலவைக் குறைத்து இலாபத் தை மேலும் மேலும் அதிகமாக்க வேண்டும் என்ற உந்துதலின் அடிப்படையில் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், மேம்பட்ட தொழில்நுட்பங்களும் உருவாயின. நோய்களைத் தடுக்கும் - குணப்படுத் தும் புதிய புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் பின்னணிகளில்தான் தாமசு ஆல்வா எடிசன் 1879இல் கார்பன் இழை கொண்ட மின்சாரக் குமிழ் விளக்கைக் (குண்டு பல்பு) கண்டுபிடித்தார். 1900க்குப் பிறகுதான் எடிசன், இன்றும் பயன்பாட்டில் உள்ள டங்ஸ்டன் இழைகொண்ட மின்சாரக் குமிழ் விளக்கைக் கண்டுபிடித்தார். முதலாளிய உற்பத்தியில் மின்சாரத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார் எடிசன். எனவே இவர் ‘மின்தந்தை’ என்று போற்றப்படுகிறார். 400க்கும் மேற்பட்ட புதிய தொழில் நுட்பங்களை இவர் உருவாக்கினார். அவற்றுக்கெல்லாம் காப்புரிமை பெற்று, பெரும் செல்வத்தைக் குவித்தார். முதலாளிய உலகில் முதல் பெரும் பணக்கார அறிவியல் அறிஞர் எடிசனே ஆவார்.

தொழில்கள், வணிகம், வேளாண்மை, அலுவல கங்கள், வீடுகள், வீதிகள் என எல்லாவற்றுக்கும் மின்சாரம் இன்றியமையாத் தேவையாகிவிட்டது. எனவே தான் மின்சாரம் + கூட்டுறவு = சோசலிசம் என்றார் லெனின். (Electricity plus co-operations is equal to socialism) உற்பத்தியின் பயனில் - நுகர்வில் அனைவருக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்பதே சோசலிசத்தின் கோட்பாடாகும். அதனால் தான் கியூபாவில் மின்சார உற்பத்தி, தேவையான அளவை எட்டியபிறகு - சில ஆண்டுகளுக்கு முன் தான், வீடுகளில் மின்சார அடுப்பைப் பயன்படுத்து வதற்கான தடை நீக்கப்பட்டது.

ஆனால், முதலாளித்துவ உற்பத்தி முறை உள்ள நாடுகளிலெல்லாம், உற்பத்தியின் பயன்களில் பெரும் பகுதியைப் பெரும் உடைமை உடைய வர்க்கமா கவும், பணக்காரர்களாகவும் இருப்பவர்களே துய்க் கின்றனர். கல்வி, மருத்துவம், வீடு, பிற வாழ்க்கை வசதிகள் முதலானவற்றிலும் இதே நிலைதான்.

தமிழ்நாட்டில் 2.25 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 4.1% மின் இணைப்பு பெற்றுள்ள உயர் அழுத்த மின்சாரம் பெறும் தொழிலகங்கள் 31% மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. 3% மின் இணைப்பு உடைய குறைந்த அழுத்த மின்சாரம் பெறும் தொழிலகங்கள் 10% மின்சாரத்தை நுகர் கின்றன. மின் இணைப்பில் 65% கொண்டுள்ள வீடு களுக்கு 23% மின்சாரம் செலவாகிறது. 11% மின் இணைப்பு கொண்ட வேளாண்மைக்கு 27% மின் சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்திய அளவில் வேளாண்மைக்கு 17% மின்சாரம் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 11,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 8,500 மெகாவாட் அளவுக்கே கிடைக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலுக்குமுன், தி.மு.க. ஆட்சியில் இருந்ததைவிட அதிக நேரம் இப்போது மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம் “ஆந்திராவில் இராமகுண்டம் அனல் மின்நிலையம், சிம்மாத்ரி அனல் மின் நிலையம், ஒரிசா மாநிலத்தில் தால்சரா அனல் மின்நிலையம், கர்நாடகாவில் கைகா அனல் மின்நிலையம் ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு குறைந்து விட்டது. அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி அனல் மின்நிலையம், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் குறைந்துள்ளது. எனவே வெளிச்சந்தையில் மின்சாரத்தை மேலும் கூடுதலாக வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று முதலமைச்சர் செயலலிதா அறிக்கை வெளியிட்டுள் ளார். அண்மைக் காலமாகத் தனியார் துறையிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2012ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை அடியோடு நீங்கிவிடும் என்று முதலமைச்சர் சொல்கிறார். 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய 5 தனியார் அனல் மின் நிலையங்களை நிறுவ தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தனியார் மின் உற்பத்தி 1400 மெகாவாட்டாக உள்ளது. தற்சமயம் தமிழக மின் வாரியம், தூத்துக்குடி 1000 மெகாவாட், மேட்டூர் 500 மெகாவாட், எர்ணாவூர் 600 மெகாவாட், உடன்குடி (தூத்துக்குடி) 1600 மெகாவாட் திறன்கொண்ட மின் நிலையங்களை நிறுவி வருகிறது. இவை அனைத் தும் உற்பத்தியைத் தொடங்கியதும் மின்பற்றாக்குறை இருக்காது என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இங்கு இவையெல்லாம் அவ்வாறு நிகழ்வதில்லை என்பது அனுபவ உண்மையாகும். ஏனெனில், இந்திய அளவில் 8ஆவது, 9ஆவது, 10ஆவது அய்ந்தாண்டுத் திட்டக்காலங்களில் கூடுதலான மின் உற்பத்தி என்பது முறையே, 30,538, 40,425, 41,110 மெகாவாட்டுகளாக இருக்கும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் உண்மையான கூடுதல் மின் உற்பத்தி முறையே 16,730, 19,119, 27,000 மெகா வாட் என்ற அளவிலேயே இருந்தது.

ஏனெனில் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ப மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதில் நடுவண் அரசும், மாநில அரசு களும் போதிய அக்கறை காட்டவில்லை.

இந்தியத் தொழில்கள் மற்றும் வணிகக் கூட்டமைப்பின் (அசோசாம்) பொதுச் செயலாளர் டி.எஸ். ரவத் 10.10.2011 அன்று தில்லியில், “நம் நாட்டில் நிலக்கரி மூலம் 52.4%, எண்ணெய் மூலம் 31.7%, இயற்கை எரிவாயு மூலம் 10% என மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை நீடிக்கிறது. ஆனால் நிலக்கரிப் படிவங்கள் அடர்ந்த காடுகளில் உள்ளன. அவற்றை வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் ஏற்படுகிறது. நீர்மின் திட்டங்களால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சூரிய சக்தி மின்திட்டம் அதிகச் செலவா னதாக இருக்கிறது. இந்தியாவில் இன்று 40% வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. எனவே அணு மின் சக்தி தான் ஒரே தீர்வு” என்று கருத்துரைத்துள்ளார்.

ஏழைகளின் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லையே என்று முதலாளிகளின் சங்கம் கூறுவதானது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போன்ற தேயாகும்.

இந்தியாவில் 24 கோடி குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 9 கோடி குடும்பங்களுக்கு மின் இணைப்பு இல்லை. கிராமப்புறங்களில் 58% வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. தமிழ்நாட்டில் 2001 மக்கள் தொகைக் கணக்கின்படி 15% வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. இந்திய அளவில் மொத்தம் உள்ள 6,38,000 கிராமங்களில், 1,12,000 கிராமங்களுக்கு மின்வசதி இல்லை. வேளாண்மைக்கு நிலத்தடியிலிருந்து நீரை எடுக்க, 60 விழுக்காட்டிற்கு டீசல் என்ஜின்களே பயன்படுத்தப்படுகின்றன.

“உண்மையான இந்தியா கிராமங்களில் வாழ்கிறது; நாட்டின் முதுகெலும்பு வேளாண்மை” என்று காந்தியடிகள் கூறியதாக ஆளும் வர்க்கம் கூறிக் கொண்டி ருந்தது. கடந்த 25 ஆண்டுகளாகத் தாராளமயம் - தனியார்மயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதால், ஆளும்வர்க்கம் கூறும் உண்மையான இந்தியா நகரங்களுக்குக் குடியேறிவிட்டது. வேளாண் மை சீரழிந்துவிட்டது.

2020க்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 10 விழுக்காட்டுக்குமேல் உயர்த்தி, இந்தியாவை உலக வல்லரசாக்கிட வேண்டுமென்று நாள்தோறும் ஆட்சி யாளர்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற் காக இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம், நிலம், சாலை வசதி, நீர், வரிச்சலுகைகள் முதலானவற்றை அளிப்பது தங்களின் தலையாயக் கடமை எனக் கருதி நடுவண் அரசும், மாநில அரசுகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே அணு மின் உற்பத்தியைப் பெருக்க வேண் டும் என்று இவர்கள் கூறுவதெல்லாம், கிராமங்களில் இருண்டு கிடக்கும் 58% வீடுகளில் ஒளி ஏற்றுவதற் கோ, அல்லது இன்னும் கிட்டத்தட்ட நிலவுடைமைச் சமுதாயக் காலத்தின் கொடிய வாழ்நிலையில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற் கோ அல்ல. பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக் காக, இந்தியப் பெருமுதலாளிகளின் தொழில்-வணிக வளர்ச்சிக்காக, பல தலைமுறைகளுக்கும் பல இலட் சம் மக்களின் உயிர்களைக் காவு கொள்ளும் ஆபத் துகள் நிறைந்த அணு மின்நிலையங்களை அமைத் திட ஆளும் வர்க்கம் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது.

இந்திராகாந்தி, இந்தியாவை அணுஆயுத வல்லர சாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 1974 மே மாதம் இராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில், இந்தியாவின் முதலாவது அணுசக்தி வெடிப்புச் சோதனையைக் கமுக்கமாக நிகழ்த்தினார். அதனால்-அமெரிக்காவும் கனடாவும் வழங்கிவந்த அணுசக்தி உற்பத்திக்கான மூலப் பொருள்களை வழங்குவதை நிறுத்திவிட்டன. 1998இல் மே மாதம் வாஜ்பாய், ‘அகண்ட பாரதக் கனவுடன்’ பொக்ரானில் இரண்டாவது அணுவெடிப்புச் சோதனையை நடத்தி னார். அணுசக்திக்கான பொருள்களை வழங்கும் நாடுகள் ((Nuclear Suppliers Group - NSG) இந்தியாவுக்கு அணுசக்திக்கான எரிபொருள்களையோ, அணுஉலை களையோ, தொழில்நுட்பத்தையோ வழங் கக்கூடாது என அமெரிக்கா ஆணையிட்டது. அமெரிக் காவின் முன் முயற்சியால் 1992இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் 46 நாடுகள் உள்ளன.

ஆயினும், அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங் களின் நலன்களைப் பேணவும், வேகமாக வளர்ந்து வரும் சீனாவுக்கு ஓர் அச்சுறுத்தலாக இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளவும், தன் அரசியல், இராணுவ ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் இந்தியாவை இளைய கூட்டாளியாக (ஏவலாளாக) ஆக்கிக் கொள்ளவும் 2005 சூலை 18 அன்று வாஷிங்டனில், அதிபர் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அணு ஒப்பந்தம் செய்து கொள்வதென முடிவு செய்தனர். 2006ஆம் ஆண்டு மார்ச்சு 3 அன்று தில்லியில் புஷ்ஷும் மன்மோகன் சிங்கும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அமெரிக்க-இந்திய அணு ஒப்பந்தத்தை உறுதி செய்தனர்.

இதற்காக, அயல் உறவுக் கொள்கை, இராணுவம், வேளாண்மை, உயர் தொழில்நுட்பம் முதலான வற்றில் அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக்கொண்டது. அணுசக்திப் பொருள்கள் வழங்கும் நாடுகள், பன்னாட்டு அணுசக்தி முகமை (International Atomic Energy Agency-IAEA) ஆகியவை இந்தியா வுக்கு விதித்திருந்த தடைகளை நீக்கும் வகையில் 2008இல், புஷ் அரசு அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புத லைப் பெற்றது. ஆனால் மன்மோகன் இந்த ஒப்பந்தத் தை நாடாளுமன்றத்தின் முன்வைக்காமலேயே இதில் கையெழுத்திட்டார். குரங்காட்டி, குரங்கை ஆட்டுவிப் பதுபோல அமெரிக்காவின் ஆட்டுவிப்புகளுக்கு ஏற்ப இந்தியா ஆடாவிட்டால், அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய தனக்குள்ள அதிகாரத் தை அமெரிக்கா ஏவும். அந்நிலையில் இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள் அப்படியே முடங்கிப் போகும்.

அமெரிக்காவின் ஆணையின்படி, இந்தியா, 2010 இல் அணுசக்தி விபத்து இழப்பீட்டுச் சட்டத்தை நிறை வேற்றியுள்ளது. இதன்படி அணுஉலைகளை, எரி பொருளை, தொழில்நுட்பத்தை - தயாரிக்கின்ற அல்லது வழங்குகின்ற பன்னாட்டு நிதி நிறுவனம், இந்தியாவில் நிறுவப்படும் அணு உலையில் ஏற்படும் விபத்துக்கோ, அதனால் அளிக்கப்பட வேண்டிய இழப் பீட்டுக்கோ எவ்வகையிலும் பொறுப்பு ஏற்க வேண்டிய தில்லை. போபால் நச்சுவாயுக் கசிவின் பாதிப்புக்கான இழப்பீட்டிற்காகவும் குற்றச் செயலுக்காகவும் அமெரிக் காவில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்ததுபோல் இனி செய்ய முடியாது. அணுஉலைகளை - எரிபொருளை வழங்கும் அயல் நாட்டு நிறுவனத்தை அணு விபத்துக்கு எவ்வகை யிலும் பொறுப்பாக்கிட முடியாது. அதனால் அந்நிறுவ னங்கள் தரமான, பாதுகாப்பான உலைகளை வடி வமைக்க வேண்டும், எரிபொருளைத் தயாரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் போகிறது.

மேலும் அணு விபத்தால் பாதிக்கப்படுவோர் இழப் பீடு கோரி, இந்திய நீதிமன்றங்களில்கூட குடிமையியல் அல்லது குற்றவியல் வழக்கைத் தொடுக்க முடியாது. இந்திய அரசு அமைக்கும் அணுவிபத்து இழப்பீடு ஆணையத்திடம்தான் பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்ய வேண்டுமாம். அணுஉலையை இயக்கும் பொறுப்பில் உள்ள இந்திய அணுசக்தி மின்கழகம் தான், அணுவிபத்துக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் இழப்பீடு தொகை ரூ.2785 கோடி என வரம்பிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணுமின் கழகம் ரூ.500 கோடி அளிக்கும். மீதியை நடுவண் அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து அளிக்கும், பல தலை முறைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய, அணுவிபத் துக் காரணமாக இருக்கக் கூடிய பன்னாட்டு நிறுவனங் களைத் தப்பவிட்டுவிட்டு, பிச்சைக்காசு போல் இழப்பீடு தொகையைப் பெற இந்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இந்தப் பின்னணியில்தான் கூடங்குளத்தில் மேலும் 1000 மெகாவாட் நிறுவுதிறன் கொண்ட 4 அணுமின் உலைகளை அமைக்க இரஷ்யாவின் ஆட்டம் ஸ்டோரி எக்ஸ்போர்ட் (Atom Story Export) நிறுவனம் முன்வந்துமுள்ளது. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனமும், சப்பானின் ஹிட்டாச்சி நிறுவனமும் இணைந்து ஆந்திரத்தில் கோவாடாவில் 6 அணுஉலைகள், அமெரிக்காவின் வெஸ்டிஸ் ஹவுஸ் நிறுவனம் குசராத்தில் மத்திவிரிடியில் 6 உணுஉலைகள், பிரான்சின் அரேவா மகாராட்டிரத்தில் ஜெய்தாபூரில் 6 அணுஉலைகள், இரஷ்ய நிறுவனம் மேற்கு வங்கத்தில் ஹிராப்பூரில் 4 அணுஉலைகள் என அமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய அணுமின் கழகத்துக்கும் முறையான ஒப்பந் தம் ஏற்படுவதற்கு முன்பே இந்த அணுஉலைகளை அமைப்பதற்கான நிலத்தை அரசு கையகப்படுத்தியது.

இந்நிலையில் சப்பானில் 2011 மார்ச்சு 11 அன்று, ரெக்டர் அளவுகோலின்படி 9 புள்ளி அளவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தின் விளைவாக 27 அடி உயரத்திற்கு எழும்பிய ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கியதில் புகுஷிமாவில் இருந்த மூன்று அணுஉலைகளில் குளி ரூட்டிச் சாதனங்கள் செயல் இழந்தன. அணுஉலை கள் ஒரு குறிப்பிட்ட உயர் வெப்ப நிலையில் அணுக் கள் பிளவுண்டு பெரும் வெப்ப ஆற்றலை வெளியிடு கின்றன. இதுவே மின்சாரமாக மாற்றப்படுகிறது. அணுஉலைகளை ஒரே சீரான வெப்ப நிலையில் வைத்திருக்கும் தன்மையில் நீர் சுழற்சி மூலம் அவை குளிர்விக்கப்பட வேண்டும். இக்குளிர்விக்கும் முறை நிறுத்தப்பட்டால், யுரேனியம் உருகி கதிர்வீச்சு ஏற்படும். புகுஷிமாவில் ஏற்பட்ட கதிர்வீச்சு, பலநூறு கிலோ மீட்டர் பரப்பிற்குப் பரவியுள்ளது.

1945 ஆகசுட்டு மாதம் சப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பின் விளைவின் கொடுமைகளையும் நினைத்தாலே எவர் நெஞ்சும் நடுங்கும்.

1979இல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவுகள் எனும் இடத்தில் உலகின் முதலாவது அணுமின் நிலைய விபத்து நடந்தது. இதில் ஒருவரும் உயிரிழக்க வில்லை. ஆனால் அமெரிக்கா அதன்பின் புதிய அணுமின் நிலையத்தை அமைக்கவில்லை. பாதிக்கப் பட்ட அணுஉலைகளிலிருந்து யுரேனியத்தைப் பிரித் தெடுக்க 14 ஆண்டுகளாயிற்று. பெருந்தொகை இதற் காகச் செலவிடப்பட்டது.

1986ல் சோவியத் நாட்டில் உக்ரைனின் செர்னோபிலில் அணுஉலை வெடிப்பு ஏற்பட்டது. 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கதிர்வீச் சால் ஒரு இலட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். 3.5 இலட்சம் மக்கள் அவர்களின் வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இப்போது 2011 மார்ச்சு மாதம் சப்பானில், புகுஷிமாவில் அணுஉலை வெடித்துள்ளது.

புகுஷிமா அணுஉலை விபத்து, அணுசக்தி ஆதரவாளர்களையே கூட அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சப்பானில் மொத்தம் 54 அணுஉலைகள் உள்ளன. சப்பானில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 30% அணுசக்தியிலிருந்து கிடைக்கிறது. அணுமின் நுகர் வில் சப்பான் உலகில் இரண்டாவது இடத்தில் இருக் கிறது. இதில் முதலிடத்தில் உள்ள பிரான்சில், மொத்த மின் உற்பத்தியில் 75% அணுசக்தி மின்சாரமாகும். ஆனால் உலக அளவில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் 7% மட்டுமே அணுமின்சாரமாகும்.

இந்தியாவில் தற்போது 20 அணுமின் உலைகள் உள்ளன. இவற்றுள் 19 உலைகள் மட்டுமே செயல் படுகின்றன. இவற்றிலிருந்து 4,680 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மொத்த மின் உற்பத்தியில் இது 3% ஆகும். இனி கூடங்குளம் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அணுஉலைகள் அனைத்தும் இயங்கத் தொடங்கிய பிறகும், அணுமின்சாரத்தின் பங்கு 10%க்குமேல் போகாது என்று இந்திய அணுமின் கழகமே சொல்கிறது. அமெரிக்காவுக்கு அடிமைமுறி எழுதிக் கொடுத்துவிட்டு, பலஇலட்சம் கோடி உருவா முதலீடு செய்து, தலைமேல் தொங்கும் கத்திபோல் ஆபத்தான - இந்த அளவுக்குக் குறை வான அணுமின்சாரம் உற்பத்தி செய்திட, தேவையா?

தற்போது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மின்கடத்தல், மின்பகிர்மானம் என்ற வகையில் - முதலாளிகளால் திருடப் படும் மின்சாரம் உட்பட - மின்இழப்பு 17% முதல் 27% வரை இருக்கிறது. இந்த மின் இழப்பில் பெரும் பகுதியைக் குறைக்க முடியும். வளர்ச்சி பெற்ற நாடுகளில் மின்இழப்பு 2% - 4% என்று உள்ளது. மின்இழப்பைக் குறைத்தாலே போதும், அணுமின் உற்பத்தியை எளிதில் தவிர்த்திடலாம். தமிழ்நாட்டில் குமிழ்மின் விளக்குகளை மாற்றினாலே 2000 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். இந்திய அளவில் குண்டுப் பல்புகளை மாற்றினால் பல ஆயிரம் மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும்.

புகுஷிமா அணுஉலை விபத்தின் எதிரொலியாக, செருமன் நாட்டின் ஆட்சித் தலைவர் ஏஞ்சலா மெர்க்கல், செருமனியில் உடனடியாக 8 அணுஉலைகள் மூடப்படும், மீதியுள்ள 9 அணுஉலைகள் 2022க்குள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார். அணுமின் நுகர் வில் முதலிடத்தில் உள்ள பிரான்சும், மொத்த மின் உற்பத்தியில் அணுமின் உற்பத்தி 75% ஆக இருப்ப தை, 2025க்குள் 50% ஆகக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

உலகில் தற்போது 443 அணுஉலைகள் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 200க்கும் மேற்பட்டவை உள்ளன. சப்பானில் உள்ள 54 உலைகளில் 2011 மார்ச்சு 11இல் ஏற்பட்ட நிலநடுக்கம் - ஆழிப்பேரலை யின் கடும் தாக்குதலுக்குப்பின், 5இல் 1 பங்கு அணு உலை மட்டுமே செயல்படுகிறது. மற்றவை சுனாமி யால் சேதமடைந்துள்ளன. இவற்றைச் சரிசெய்து மீண்டும் இயக்குவதற்கு, அரசு எடுக்கும் நடவடிக்கை களை உள்ளூர்ப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்க் கின்றனர். அதனால் சப்பான் அரசு, உள்நாட்டுப் பயன் பாட்டுக்கு அணுஉலைகளைப் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளது. சப்பானின் அணுசக்தித் தொழில்நுட்பங் களை, மின்பற்றாக் குறையால் தவிக்கும் வியட்நாம், துருக்கி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஆதரிப்பது என்றும் அரசு முடிவு செய்துள்ளது (தி இந்து, 20-10-2011).

சப்பானில் அணுசக்தித் துறையில் ஹிட்டாச்சி, மிட்ஷ்புஷி, டொஷிபா ஆகியவை முன்னணி நிறுவனங்களாகும். இம்மூன்று நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் அணுசக்தி மற்றும் கட்டுமானம் மூலம் 314 கோடி டாலர் இலாபம் ஈட்டின. சிரங்கு பிடித்தவன் கை வேண்டுமானால் சும்மா இருக்கக்கூடும்; ஆனால் மூலதனத்தால் இலாபவேட்டை யில் நாட்டங் கொண்டவர்கள், கொள்ளையில் ஈடு படாமல் இருக்கவே முடியாது. அதனால்தான் சப்பான், பிரான்சு, அமெரிக்கா, இரஷ்ய நாடுகளின் பன்னாட்டு அணுசக்தி நிறுவனங்கள் இந்தியாவிலும் சீனாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் இலாப வேட்டையில் குதித்துள்ளன.

2010 திசம்பரில் பிரான்சின் அவேரா நிறுவனம் 10 இ.பி.ஆர். அணுஉலைகளை (EpR - European pressurised Reactors) மகாராட்டிரத்தில் ஜெய்தாபூரில் அமைத்திட இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. முதற்கட்டமாக 6 உலைகள் அமைப்பதற்கான பணி களைத் தொடங்கியதும் ஜெய்தாபூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். காவல்துறையினர் அவர்களைத் தாக்கினர். ஆயினும் மக்கள் தொடர்ந்து போராடியதால், பணிகள் தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இ.பி.ஆர். வகை அணுஉலை பற்றி ஒரு செய்தி யை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உலகில் தற்போது இ.பி.ஆர். அணுஉலை ஒன்றுகூட இயக் கத்தில் இல்லை. பின்லாந்து நாட்டில், இ.பி.ஆர். வகை அணுஉலை ஒன்றை பிரான்சின் அவேரா நிறுவி வருகிறது. ஆனால் அந்நிறுவனத்துக்கும் பின்லாந்து அரசுக்கும் இடையே ஏற்பட்ட பல சட்டச் சிக்கல்களால் அதுவும் முடங்கிக் கிடக்கிறது. தற்போது எங்குமே இயக்கத்தில் இல்லாத இ.பி.ஆர். வகை உலைகள் பத்தை ஜெய்தாபூரில் அமைக்க நடுவண் அரசும் அணுசக்தித் துறையும் எப்படி ஒத்துக் கொண்டன?

மேற்குவங்கம் ஹரிப்பூரில் இரஷ்ய நிறுவனத்தின் அணுஉலைகளை அமைக்க, புத்ததேவ் ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டது. இப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அணுமின் உலைகள் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

ஜெய்தாபூரிலும், ஹரிப்பூரிலும் அணுஉலைகள் அமைப்பதற்கு முன்பே எதிர்ப்புத் தெரிவித்ததால் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் இழப்பு இல்லை.

ஆனால் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட முதலாவது அணுஉலை 2011 திசம்பரில் செயல்படத் தயாராக உள்ளது. இரண்டாவது அணு உலை 2012 சூன் மாதம் இயக்கப்படவுள்ளது. இரண்டு அணுஉலைகளுக்காக ஏற்கெனவே ரூ.13,000 கோடிக்குமேல் செலவிடப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் 2000 மெகாவாட் அணுமின்சாரத்தில் தமிழ்நாடு 925, கர்நாடகம் 442, கேரளம் 266, புதுச்சேரி 67, ஒதுக்கப் படாதது 300 மெகாவாட் என்று பகிர்ந்து கொள்ள உள்ளது. கடுமையான மின்பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் கூடங்குளம் அணுஉலைகள் இயக்கப்படு வதைத் தடுத்து நிறுத்துவது நியாயமா? என்ற கேள்வி யை அணுசக்தி ஆதரவாளர்கள் மட்டுமின்றிப் பல தரப்பி னரும் கேட்கின்றனர்.

இதில் மதிப்பில் அடங்கா பல இலக்கம் மக்களின் உயிர்கள், வருங்காலங்களிலெல்லாம் ஏற்படவிருக்கும் கணக்கிடமுடியா கேடுகள், துன்பங்கள், அழிவுகள் ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு இதுவரை செல விடப்பட்ட தொகை அற்பமானது என்றே நாம் கொள்ள வேண்டும்.

1988 நவம்பர் 20 அன்று சோவியத் நாட்டின் அதிபர் கோர்பச்சேவும், இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தியும் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் கொண்ட வி.வி.இ.ஆர். அணுஉலைகள் (VVER-1000) இரண்டை நிறுவுவதற்கு ஒப்பந்தம் செய்தனர். 1990இல் சோவியத் நாடு சிதறுண்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 1998 சூன் 21 அன்று புதிய துணை ஒப்பந்தத்தின் மூலம் இத்திட்டம் புதுப்பிக்கப் பட்டது. அப்போதே கூடங்குளம் வட்டார மக்களும், பொதுநல அமைப்புகளும் இத்திட்டத்தை எதிர்த்தனர். ஆனால் இதைப் பொருட்படுத்தாமல் நடுவண் அரசின் அணுமின்சக்திக் கழகமும், மாநில அரசும் அணு உலை அமைப்பதற்காக 1000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தின. 2001 மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இப்போது இரண்டாவது, மூன்றாவது அணுஉலைகளை அமைக்க நிலம் சீர் செய்யப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

2011 மார்ச்சில் சப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் - ஆழிப்பேரலையின் தாக்குதல்களால், புகுஷிமாவில் அணுஉலை வெடித்து அணுக்கதிர் வெளியேறியதால் ஏற்பட்ட கொடிய விளைவுகளைத் தொலைக்காட்சியில் கண்ட கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள், எதிர்காலத் தில் தங்களுக்கும் இதுபோல் நேரிடுமோ என்று அஞ்சுகின்றனர். அணுஉலைகளைக் குளிரூட்டிய பின் வெளியேறும் வெப்ப நீர் கடலில் கலப்பதால், மீன் வளமும், கடல் வளமும் சீரழியும் என்று மீனவர்கள் எண்ணுகின்றனர். மேலும் அணுவிபத்து ஏற்படும் காலத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதற்கான ஒத்திகை செப்டம்பர் 20 அன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது வீட்டின் சன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு, ஈரத் துணியால் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். மேலும் 30 கி.மீ. சுற்றளவில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது வெறும் ஒத்திகையாக இல்லாமல், தம்மை நிரந்தரமாகத் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற்றிவிடுவார்களோ என்ற அச்சம் மக்கள் நெஞ்சில் குடிகொண்டது. கூடங் குளம் பகுதியைச் சுற்றிலும் 20-30 கிலோ மீட்டர் சுற்றளவில் 3.5 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

இரஷ்யாவின் அணுஉலைகளை முதலில் ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜுனசாகரிலும், பின்னர், கர்நாட கத்தில் கைக்காவிலும், கேரளத்தில் பூதகான்கெட்டு என்ற இடத்திலும் அமைக்க மேற்கொண்ட முயற்சி அந்தந்த மாநில மக்களின் கடும் எதிர்ப்பால் கை விடப்பட்டன. இறுதியாகத் தமிழகத்தின் தலையில் சுமத்தப்பட்டது. தி.மு.க. அரசோ, அ.தி.மு.க அரசோ இதை எதிர்க்கவில்லை.

இந்த உண்மைகளையெல்லாம் அறிந்த கூடங்குளம் பகுதி மக்கள், இடிந்தகரையில் அணுமின்நிலையம் பின்புறம் உள்ள லூர்து மாதா கோயில் எதிரில் உள்ள திடலில் செப்டம்பர் 11 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். 117 பேர் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத் தை மேற்கொண்டனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, போராட்டத்துக்குத் தம் ஆதரவைத் தெரிவித்தனர். அணுசக்திக்கு எதிரான மக்கள்இயக்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக் கணித்து போராட்டத்தில் பங்குகொண்டனர். கடலுக் கும் செல்லாமல் மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். கடைகளை அடைத்து வணிகர்கள் தம் ஆதரவைத் தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடங்குளத்துக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

செப்டம்பர் 16 அன்று, முதலமைச்சர் செயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன என்ப தைப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டார். ஆனால் போராட்டத்தின் பேரெழுச்சியைக் கண்டும், செப்டம்பர் 7 அன்று பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். செப்டம்பர் 19 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மடல் எழுதினார். அதில், “நடுவண் அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. மக்கள் அச்சத் தால் போராடும் போது, பொறுப்புள்ள நடுவண் அமைச்சரோ, உரிய உயர் அதிகாரிகளோ போராட் டக்காரர்களைச் சந்தித்து அவர்களின் அச்சத்தைப் போக்க வரவில்லையே ஏன்?” என்ற கேள்வியை எழுப்பினார். அடுத்தநாளே நடுவண் துணை அமைச்சர் வி. நாராயணசாமி கூடங்குளத்தில் இடிந்தகரையில் போராட்டத்திடலுக்கு வந்து மக்களிடம் பேசினார். அவருடைய சமாதானத்தை மக்கள் ஏற்கவில்லை.

செப்டம்பர் 22, அன்று தமிழக அமைச்சரவை, “கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வரையில், கூடங்குளத்தின் அணு மின்நிலையத்தில் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தீர் மானம் இயற்றிப் பிரதமருக்கு அனுப்பியது, கூடங் குளத்தில் தற்காலிகமாகப் போராட்டம் நிறுத்தி வைக் கப்பட்டது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலை மையில் அனைத்துக் கட்சிக் குழு 7.10.2011 அன்று தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரும் இக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். பிரதமர், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கிட வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றார். 20.10.2011 அன்று 15 பேர் கொண்ட வல்லநர் குழுவை நடுவண் அரசு அமைத்துள்ளது. தமிழக அரசு அமைக்கும் குழுவுடன் இவர்கள் கலந்துபேசி, கூடங்குளம் அணுஉலையால் எப்போதும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை அப்பகுதி மக்களுக்குப் புரிய வைக்கப் போகிறார் களாம்? இவை எல்லாம் காலம் கடத்தும் அரசியல் சூழ்ச்சிகளேயாகும்.

புகுஷிமா அணு விபத்துக்குப்பின், பிரதமர் மன் மோகன்சிங், இந்தியாவில் உள்ள எல்லா அணு உலைகளிலும், எத்தகைய விபத்து நேர்ந்தாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துமாறு ஆணையிட்டாராம்; அதன்படியே செய்யப்பட்டுவிட்டது என்று அணுசக்தித் துறையின் உயர் அதிகாரிகள் அண்டப்புளுகு - ஆகாயப்புளுகு பேசுகின்றனர்.

உலகில் மிகச்சிறந்த தொழில்நுட்பம் கொண்ட சப்பான் நாட்டிலேயே அணுவிபத்து நடந்திருக்கிறது. 1971ஆம் ஆண்டிலேயே புகுஷிமா கொதிநீர் அணு உலையில் சில குறிப்பிட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன என்பது வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இதைச் சரிசெய்வதற்கு டோக்கியோ மின் சக்திக் கழகம் முயலவில்லை. இதேபோன்று இந்தியா வில் போபாலில் யூனியன் கார்பைடு ஆலையின் பாதுகாப்புக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டும் அவற்றைச் சரிசெய்யாததால் 1984 திசம்பரில் நச்சுவாயு கசிந்து வெளியேறியது. சொல்லொணாத இழப்புகளை உண் டாக்கியது.

கூடங்குளத்தில் இரஷ்ய நிறுவனம் அமைத் துள்ள அணுஉலை (VVER-1000), பிரான்சின் அரேவா நிறுவனத்தின் இ.பி.ஆர். வகையைவிட, புகுஷிமாவில் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் (G.E.) நிறுவனம் அமைத்த அணுஉலையைவிட மிகவும் பாதுகாப்பானது என்று அணுசக்தித் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகில் நம்பகத்தன் மைக்குப் பெயர் பெற்ற நார்வே ஆய்வுக் குழு 2011 சூன் மாதம் இரஷ்யாவின் அதிபர் மெத்வதேவிடம் ஓர் அறிக்கை அளித்தது. அதில் இரஷ்யாவில் இயங்கும் அணுஉலைகளில், இயற்கைப் பேரிடராலோ, மனிதர் களின் தவறினாலோ ஏற்படக்கூடிய விபத்துகளை எதிர் கொள்வதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்று கூறப்பட்டிருந்தது (பிரண்ட்லைன் அக்டோபர் 21, 2011). ஆனால் இந்திய ஆளும்வர்க்கம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலை களுக்குப் பாதுகாப்புச் சான்றிதழ் அளித்து, மக்களை ஏய்க்கப் பார்க்கிறது.

அணுஉலைக் கழிவுகளைக் கையாள, உலகில் எந்தவொரு நாட்டிலும் சரியான தொழில்நுட்பம் கண்டு பிடிக்கப்படவில்லை. அனைத்துக் கழிவுகளையும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் அடைத்துக் கடலுக்கு அடியிலோ, நிலத்துக்கு அடியிலோ புதைக்க வேண் டும். சில கழிவுகளின் கதிர்வீச்சுக்கு வாழ்நாள் 24,000 ஆண்டுகள் முதல் பல இலட்சம் ஆண்டுகள் வரை நீடிக்கும். ஓர் அணுஉலையின் வாழ்நாள் 30-40 ஆண்டுகளாகும். அதன்பின், அவற்றைப் பிரித்து ‘அடக்கம்’ செய்வதற்கும் பலகோடி செலவிட வேண்டும்.

இந்தியாவில் தற்போது காற்றாலை நிறுவுதிறன் 14,723 மெகாவாட். இதில் தமிழ்நாடு, 6,160 மெகா வாட் உற்பத்தி நிறுவுதிறன் பெற்றுள்ளது. தேவை யான அளவில் காற்று வீசும் காலங்களில் 4000 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றா லைகளை நவீனப்படுத்துவதுடன், அதிக எண்ணிக்கையில் காற்றாலைகளை நிறுவி, காற்று அடிக்கும் காலத்தில் அதிக அளவில் மின்உற்பத்தி செய்து கொள்ளலாம். நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற மலர்சாகுபடி அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் மின்சாரத்தைக் கொண்டே செய்யப்படு கிறது.

22.9.2011 அன்று மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் பாரூக் அப்துல்லா,“இந்தியாவில் 2020 க்குள் மொத்தம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 15% மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும். சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி நிறுவுதிறன் 20,000 மெகாவாட்டாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

காற்றாலைகள், சூரிய ஆற்றல் மின் உற்பத்தி, சாண எரிவாயு அமைத்தல் போன்றவைகளுக்கு அரசு பெருமளவில் மானியமும் கடன் உதவியும் அளித்து ஊக்குவிக்க வேண்டும். பெரிய உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் மற்ற பெரிய கட்டடங்கள் ஆகிய வை சூரியசக்தி மூலமே மின்உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயம் என்று ஆக்க வேண்டும்.

புதியதாகக் கட்டப்படும் வீடுகளில் சூரிய சக்தி மின்உற்பத்திச் சாதனங்கள் அமைத்திட அரசு உதவி செய்ய வேண்டும். உலகில் பல நாடுகளும் இத்திசை யை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

கூடங்குளத்தில் ரூ.13,000 கோடி செலவிட்டு அமைத்துள்ள அணுஉலைகளை, அணுசக்தி விபத்தின் பேராபத்துகளையும், மக்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு கைவிட வேண்டும். தமிழகத்தி லோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலோ புதியதாக அணுஉலை அமைப்பதை மக்கள் ஒன்றுதிரண்டு தடுக்க வேண்டும். எல்லா வாக்குவேட்டை அரசியல் கட்சிகளும் பெருமுதலாளிகளின் எடுபிடிகள் என்பதை நாம் மறத்தல் கூடாது.

அமெரிக்காவின் மற்றும் பிற நாடுகளின் பன்னாட்டு அணுசக்தி நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக, நம் நாட்டு மக்களை உயிரியல், வேதியியல் ஆய்வுக் கூடத்தின் எலிகளாக்கும் ஆளும்வர்க்கத்தின் முகத்திரையைக் கிழிப்போம். அணுஒப்பந்தம் என்ற பெயரால் - உலகில் சனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற பெயரால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவலா ளாக இந்திய அரசு மாற்றப்படுவதை எதிர்த்துப் போராடுவோம்.

Pin It