காமன்வெல்த் -1

தலைப்பை பார்த்ததும் தலை சுற்றுகிறதா. ஆம், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் மாநாடானது அமெரிக்க, சீன, இந்திய ஏகாபத்தியங்களோடு கூட்டு சேர்ந்து இலட்சக்கணக்கான தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத 'இலங்கை'யில் வருகின்ற 2013 நவம்பர் 10 முதல் 17 வரை நடைபெற இருப்பது உலகத்தமிழர்களையும், பல உலக நாடுகளின் தலைவர்களையும், அரசியல் இயக்கங்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் கொதித்தெழ செய்துள்ளது.

இலங்கையில் மாநாடு நடைப்பெற்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதன் தலைவராக இராசபட்சே இருப்பார் என்பது விதி. அப்படியானால் 54 நாடுகளை கொண்ட அந்த கூட்டமைப்பில் இந்தியாவும் இருப்பதால் நமக்கும் அவர் தான் தலைவர். அதைவிட முக்கியமாக அப்படிப்பட்ட பதவியில் இருக்கும் ஒருவர் மீது இனப்படுகொலை தொடர்பாக விசாரிக்கவோ, தண்டிக்கவோ முடியாது. இதன் வழியாக இனப்படுகொலையை மூடி மறைக்கும் வேலைகள் அரங்கேறி வருவதை நாம் தடுக்க போகிறோமா? அல்லது 2009 இனப்படுகொலையின் போது அமைதி காத்ததை போல் செவிடர்களாகவும், குருடர்களாகவும் மாற போகிறோமா? என்பதே தமிழர்களின் முன் நிற்கும் கேள்வி.

காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும், 2013 மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்றும் உலகம் முழுவதும் கண்டனக்குரல்கள் ஒலிக்கின்ற இந்த நேரத்தில் இதன் பின்னுள்ள பேரபாயத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் ஒன்றுதிரண்டு போராட வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் உள்ளோம். அமெரிக்க தீர்மானத்திற்கு எதிரான கடைசிநேர போராட்டம் போலல்லாமல் இதற்கான போராட்டம் இப்பொழுதே தொடங்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளதால் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வையும், போராட்டத்தை துவக்க வேண்டிய அவசியத்தையும் இப்போதிலிருந்தே மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நாம் உணர்த்த வேண்டும். அத்தகைய காமன்வெல்த் மாநாடு குறித்து தமிழ்ச்சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை.

காமன்வெல்த் கூட்டமைப்பு:

காமன்வெல்த் (COMMONWEALTH) என்பது 'பொதுநலவாய' என்று தமிழில் அழைக்கப்படுகிறது. காமன்வெல்த் என்பது அய். நா வுக்கு அடுத்தபடியான உலக நாடுகளின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பில் 54 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. அவை அன்டிகுவா - பர்புடா, ஆஸ்திரேலியா, பகாமாசு, பங்களாதேஷ், பார்படோசு, பெலீச், போட்சுவானா, புரூணை, கமரூன், கனடா, சைப்ரசு, டொமினிக்கா, பிஜித் தீவுகள், கம்பியா, கானா, கிரெனடா, கயானா, இந்தியா, ஜமெய்க்கா, கென்யா, கிரிபத்தி தீவு, லெசோத்தோ, மலாவி, மலேசியா, மாலைதீவு, மால்ட்டா, மொரிசியசு, மொசாம்பிக், நமீபியா, நவூரு, நியூசிலாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, செயிண்ட் கிட்சு நெவிசு, செயிண்ட் லூசியா, செயிண்ட். வின்செண்ட்கிரெனேடின்ஸ், சமோவா, சேஷெல்ஸ், சியெரா லியொன், சிங்கப்பூர், சாலமன் தீவுகள், தென்னாபிரிக்கா, இலங்கை, சுவாசிலாந்து, டொங்கா, திரினிடாட்டொபாகோ, துவாலு, உகண்டா, இங்கிலாந்து, ஐக்கிய தான்ஸானியாக் குடியரசு, வனுவாட்டு, சாம்பியா மற்றும் ரூவாண்டா. http://en.wikipedia.org/wiki/Member_states_of_the_Commonwealth_of_Nations

முதன்முதலாக பிரிட்டன் பேரரசின் கீழ் காலணியாக இருந்த நாடுகள் ஒன்றிணைக்கப்பட்டு 'பிரிட்டிஷ் காமன்வெல்த்' என்ற பெயரில் இது தொடங்கியது. இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் சந்தைகளை ஒன்றிணைக்கும் இடமாக இருக்கிறது. அதாவது கூட்டமைப்பிலுள்ள நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்காக பெரும்பாலும் இது உதவுகிறது. சாதாரண வர்த்தகத்தை விட காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 50 சதவிதம் அதிகமாக இருக்கும்.

இதனை 1867ல் விடுதலைப்பெற்ற கனடாவும், 1884ல் விடுதலையடைந்த ஆஸ்திரேலியாவும் இணைந்து உருவாக்கியது. 1929ல் இயற்றப்பட்ட போல்ஃபோர் தீர்மானமானது கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு இடையேயான சமத்துவத்தை வலியுறுத்தியது. பின்னர் 1949 ல் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைப்பெற்ற நாடான இந்தியா கூட்டமைப்பின் விதிகளில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. லண்டனில் சுதந்திரமடைந்த நாடுகளை கூட்டமைப்பில் இணைந்துக் கொள்வது குறித்து உறுப்பு நாடுகளின் கூட்டம் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது சுதந்திர நாடுகளும் காமன்வெல்த் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு ஒப்புதளித்தது. இது தான் சமகால காமன்வெல்த் கூட்டமைப்பின் தொடக்கமாக கருதப்படுகிறது. (http://www.thecommonwealth.org/Internal/191086/191247/34493/history/)

இந்த கூட்டமைப்பில் இணைய விரும்பும் நாடுகள் தருகின்ற விண்ணப்பம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பரிசீலிக்கப்பட்டு அவை இணைத்துக் கொள்ளப்படும். கடைசியாக இந்த கூட்டமைப்பில் ரூவாண்டா இணைந்து கொண்டது. உறுப்பு நாடுகள் அனைத்தும் விரும்பினால் தொடரலாம் இல்லையேல் விலகலாம் என்ற அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுக்கள் (COMMONWEALTH GAMES) போன்றவையெல்லாம் இந்த காமன்வெல்த் கூட்டமைப்பால் நடத்தப்படக்கூடிய நிகழ்வுகளில் ஒன்று. காமன்வெல்த் என்பது இந்த உறுப்பு நாடுகளுக்குள் சமூக கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கு உதவுவதாக சொல்லப்பட்டாலும், அதைவிட முக்கியமாக தனியார் நிறுவனங்கள் காமன்வெல்த்தின் உறுப்பு நாடுகளில் முதலீடு செய்வதற்கான தளத்தை இந்த கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு உறுப்பு நாடுகளுக்கு இடையேயான மொத்த வர்த்தகம் 4 டிரில்லியன் டாலர்கள் ஆகும். (1 டிரில்லியன் = 1000000000000(1 லட்சம் கோடி டாலர்). ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 60ரூபாய் என்றால் 4X1 லட்சம் கோடிX60 = ? என்பது எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்கள். காமன்வெல்த்தின் மூலம் தனியார் நிறுவனங்களும், வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளின் சந்தைகளில் பின்வாசல் வழியாக எளிதில் நுழைய வழிவகுக்கின்றது என்பதே உண்மை.  http://www.thecommonwealth.org/news/34580/34581/230349/300910tradeseminar.htm

சிறந்த சனநாயகம் என்பது அரசு, வணிகம் மற்றும் மக்களின் கூட்டு என்று காமன்வெல்த் தெரிவிக்கிறது. காமன்வெல்த் கூட்டமைப்பின் முக்கிய விதிகளாக கருதப்படுவது 1971 மற்றும் 1991ல் நிறைவேற்றப்பட்ட சிங்கப்பூர் மற்றும் கராரே தீர்மானங்களில் கூறப்பட்டுள்ள விதிகள் தான். உறுப்பு நாடுகளில் சட்டத்தின்படி நேர்மையான ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, பெண்களுக்கு சமத்துவம், இனம், மொழி, மதம், நிறம் அடிப்படையில் மக்களை பாகுபாடின்றி சமஉரிமையோடு நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.

1) http://www.thecommonwealth.org/document/34293/39455/141099/harare_declaration.htm
2) http://www. thecommonwealth.org/shared_asp_files/GFSR.asp?NodeID=141097

மேலும் காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நாடாளுமனறங்கள், நிர்வாகத்துறைகள், நீதித்துறைகள் ஆகியவை சுதந்திரமாகவும் நேர்மையுடனும் நடைபெற வேண்டும். அதற்காக 2002-ல் காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் ஒன்று கூடி வகுத்த விதிமுறைகளை 2003ல் காமன்வெல்த் அரசு அதிபர்கள் மாநாடு ஏற்றுக்கொண்டது.

இந்த விதிகளை மீறும் நாடுகள் மீதான நடவடிக்கை குறித்து காமன்வெல்த் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு அந்த நாடுகள் கூட்டமைப்பிலிருந்து இடைகாலத்திற்கோ அல்லது முற்றிலுமாகவோ நீக்கப்படும். இன்றுவரை பல்வேறு நாடுகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பிஜி என்ற நாடு அங்கு நடந்த இராணுவ ஆட்சியின் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டது.

முதன் முதலாக 1961-ல் கறுப்பின மக்கள் மீது இனரீதியான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட தென்னாப்பிரிக்கா அரசு காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டது. 1994 ஆண்டு சனநாயக அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்ட பின் அது மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டது. http://www.sahistory.org.za/dated-event/south-africa-withdraws-commonwealth

1995-ல் நைசீரியாவில் கென்-சாரோ-வைவா என்ற பத்திரிக்கையாளர் ஷெல் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக போராடியதற்காக சட்டவிரோதமாக தூக்கிலிடப்பட்டார். உரிமைக்காக போராடிய பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட இந்த கொடுஞ்செயலை கண்டித்து காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நைசீரியா இடைநீக்கம் செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் 1999 ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளபட்டது. http://edition.cnn.com/WORLD/9511/nigeria/11-11/

1999-ல் இராணுவத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றியதன் காரணமாக பாக்கிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டது. http://www.thecommonwealth.org/Templates/Internal.asp?NodeID=34708

2007-ல் அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக மீண்டுமொருமறை பாக்கிஸ்தான் நீக்கப்பட்டது, http://www.telegraph.co.uk/news/worldnews/1570323/Pakistan-suspended-from-Commonwealth.html

சிம்பாவேயில் ராபர்ட் மூகாபேயின் மக்கள் விரோத கொள்கையின் காரணமாக அங்கு நடந்தேறிய மனித உரிமை மீறல்களின் காரணமாக அந்நாடு 2002ல் இடைநீக்கம் செய்யப்பட்டது. 2003-ல் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து சிம்பாவே விலகிக்கொண்டது. http://news.bbc.co.uk/2/hi/talking_point/1882060.stm

கடந்த 2000 ஆம் ஆண்டு சூன் 6 அன்று இராணுவம் மூலம் ஆட்சியை கைப்பற்றியதன் காரணமாக பிஜி அரசு கூட்டமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்ததால் இன்றுவரை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருக்கிறது. http://news.bbc.co.uk/2/hi/8231717.stm

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து உறுப்பு நாடுகள் ஏதாவது ஒன்றில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தும். இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கிடையே பல்லாயிரம் கோடி டாலர்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் இடம்பெறும், மேலும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இணைந்து உறுப்பு நாடுகளிலிருக்கும் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், அரசியல், கால நிலை(Climate Change) போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிப்பர். இதன் இறுதி நாளில் அடுத்த காமன்வெல்த் மாநாட்டிற்கான இடம் குறித்து முடிவெடுக்கப்படும். அப்படித்தான் கடந்த 2011 ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின் இறுதி நாளன்று இலங்கையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

---- தொடரும்

- த.ஆனந்த், ஒருங்கிணைப்பாளர், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 9677226318.)

Pin It