மே – 18ல் மாணவர் பேரணிக்கு வாழ்த்து

ஈழக் கொடுமை பற்றி 40 வருடங்களாகத் தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. இதே கால கட்டத்தில் நம் கண்முன்பே மிகக் கொடூரமான இனப்படுகொலை பெருமளவில் நடந்து முடிந்து விட்டது. ஈழ மண்ணில் அனைத்துவிதமான (ஜனநாயக அரசியல், ஆயுதம்) போராளிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டனர். ஐ.நா. பிரகடனப்படுத்தியிருக்கும் உரிமைகள் எதுவும் இல்லாமல் மீதமிருப்போர் சொல்லமுடியாதத் துயருக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ஈழமக்களின் வாழ்வை மீட்க வேண்டுமானால், இன்றைய நிலையை உணர்ந்து அதேசமயம் இலக்கில் சமரசமில்லாமல் சரியான வழியில் செயலாற்றவேண்டிய அவசர அவசியத்தில் நாம் இருக்கின்றோம்.

இயற்கை சமன்பாட்டு விதிப்படி தனித் தமிழீழம் அமைந்தேத் தீரும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதை அடைவதற்கான வழிகளில் எவ்வழி சரியானதோ? விரைவானதோ? அதைக் கண்டுபிடித்து செயல்படவேண்டும்.

ஈழப்போராட்டங்களின் இன்றைய நிலை :

இந்தப் பின்னணியில் இன்று ஈழ விடுதலைக்காக தமிழத்திலும் பிற உலக நாடுகளிலும் நடத்தப்பட்டு வரும் போராட்டங்களின் நோக்கம், தன்மை பற்றி அலசிப் பார்த்தால், இவைகள் ஈழத்தை வெல்லக்கூடிய நம்பிக்கையை தரும் அளவில் இல்லை என்பதை உணரலாம். இருப்பினும் நீண்டகால நம்பிக்கையின் அடிப்படையில் ஈழவிடுதலை உணர்வை தக்க வைத்துக்கொள்ளும் அளவில் அம்முயற்சிகள் உள்ளன என்பதை மறுக்கமுடியாது. காரணம் உலக நடைமுறைச் சிக்கல் அப்படி இருக்கிறது.

தமிழ்நாட்டில் நடக்கிற போராட்டத்தின் மூலம் இந்தியாவை நிர்பந்தித்து ஐ.நா.வை இந்தியா செயல்பட வைக்கலாம் என்கிற முயற்சி வீண் வேலை என்பதும், இந்தியாவை ஈழமக்களுக்கு ஆதரவாக இலங்கையோடு போரிடவைக்கலாம் என்பதும் கனவில் கூட நடக்காது என்கிற உண்மை இப்போது தெளிவாகி விட்டது. சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் பல சட்ட சிக்கல்கள்! இனப்படுகொலை நடத்த ஆயுதம் கொடுத்து உதவியவர்களிடமே இறைஞ்சுவது எந்த வகையிலும் பலன் தராது. இலங்கையிடமே பொறுப்பை ஒப்படைக்கும் துன்பம் வேறு இதன் கட்டங்களில் ஒன்று.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் சக்திவாய்ந்த ஒரு நாடு ஆக்கபூர்வமான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தாக வேண்டும். அதை பெரும்பான்மை நாடுகள் ஆதரிக்க வேண்டும். சீனா, இரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகளின் வீட்டோ அதிகாரம் இதற்கு எதிராக போகவும் கூடாது. இந்த நிபந்தனைகள் ஒத்து வந்தால் ஐ.நா. மூலம் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கலாம். ஆனால் இது நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக அரிதாக இருக்கிறது. ஏனெனில் நாடுகள் அற நியாயத்தின்படி வெளிநாட்டு கொள்கை முடிவுகளை எடுப்பதில்லை. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வரக்கூடிய சூழல் இப்போது இல்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் உரிமையோடு வாழ வேண்டும்; முடியும் என்று அவைகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. அக்கருத்து உண்மையில்லை என்று அந்தந்த நாட்டு உயர்மட்ட ஆட்சியாளர்கள் உணர்ந்த பின்பும் அதையே அவைகள் சொல்லி வருகின்றன. இதற்கு அவர்களது பொருளாதார நலன் பின்புலமாக இருக்கிறது. தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாடுகளுக்கிடையேயான கூட்டுறவு என்கிற கருத்தினடிப்படையில் அவர்களிடையே ஒரு இரகசிய ஒற்றுமை வேறு இருக்கிறது. உரிமை பெற போராடும் போராளிக்குழுக்களை நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான சக்தி என்று வர்ணிப்பதில் எந்த நாடும் வேறுபடவில்லை.

ஐநாவில் உரிமைப்போர்களுக்கு எதிரான நாடுகளின் கூட்டு :

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். உலகில் உள்ள பல நாடுகளில் மதவாதமோ, இனவெறியோ, சித்தாந்த வெறியோ, மொழிவெறியோ, நிற வெறியோ, சுயநலமிக்க சர்வாதிகாரமோ கொண்ட அரசுகளால் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வாழும் சிறுபான்மை இன மக்கள் இத்தகைய அரசுகளால் அடிப்படை மனித உரிமைகளை இழந்து ஒடுக்கப்பட்டு, சுதந்திரமின்றி பாதுக்காப்பான உணர்வின்றி கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். பெரும் உயிரிழப்புகள் நடக்கின்றன. சித்தரவதைக்கு மக்கள் ஆளாகின்றனர். அதனால் ஆயுதப் போராட்டங்கள் எழுகின்றன. ஆனால் அவர்களை அரசுகள் தீவிரவாதிகள் என்றழைக்கின்றனர்.

இத்தகைய அரசுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. மன்றத்தில் அரசப் பிரதிநிதிகளின் வாதங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. மக்களின் குரல் அங்கு பதியப்பட வாய்ப்பில்லை. இலங்கையில் போர் நடந்தாலும் இலங்கை அரசின் வாதம் ஐ.நா. சபைக்கு வரும் ஆனால் மறுதரப்பு மக்களின் அதாவது தமிழ் மக்களின் நியாயம் அங்கு வருவதற்கு வாய்ப்பில்லை. அரசு என்கிற வகையில் பிற அரசுகளின் ஆதரவையும் இலங்கை அரசால் கோரமுடியும். அதேபோன்றதொரு உள்நாட்டு பிரச்சனைகளை சந்திக்கும் பிற அரசுகளும் தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு இப்பிரச்சனையில் தன்னைபோன்ற அரசுகளின் நிலைப்பாட்டையே ஆதரிக்கின்றன. உதாரணத்திற்கு இந்தியா இலங்கைக்கு சாதகமாக நடப்பதற்கு காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணம். உரிமைப்போர்களுக்கு எதிரான நாடுகளின் கூட்டு ஐ.நா.வில் பலமாக இருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு நாட்டு அரசுகளும் பிற அரசுகளின் நிலைப்பாட்டையே ஆதரிகின்றன சிறுபான்மை மக்களின் நீதி ஐ.நா. மன்றத்தில் பேசப்படுவதில்லை.

இதுதவிர ஐ.நா.அவையில் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. அது ஏற்கனவே அரசுகளின் சபையாக இருக்கின்ற காரணத்தால் வல்லரசுகளின் ஆதிக்கம் நிறைந்ததாக இருப்பது இயற்கையானது. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா,சீனா,ரஷ்யா மூன்றுமே சர்வதேச ஆதிக்கத்தை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசுக்கு ஆதரவாக உள்ளன. எனவே உலக நாடுகளை நிர்பந்தித்து ஐ.நா. மன்றத்தை தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் வண்ணம் செயல்பட வைக்கச் செய்கிற முயற்சி காணல்நீர் போன்றே ஆகிறது.

மாறவேண்டிய ஐ.நாவின் பணி, தன்மை:

1920ல் உருவான சர்வதேச நாடுகளின் மன்றமானது நாடுகளுக்கிடேயே எழும் பகையை தவிர்க்கவும் போரைத் தவிர்ப்பதும் ஆகும். ஆனால் 1945ல் அமைந்த ஐ.நா.வின் நோக்கம் மிக்க விரிவானது. இனம், நிறம், மதம், கட்சி(கம்யூனிசம், முதலாளித்துவம்) மொழி போன்ற வேறுபாட்டின் அடிப்படையில் நாடுகளுக்கிடையேயும் நாடுகளுக்குள்ளும் எழும் பிரச்சனைகளின் போது உலக மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதும் நீதியை நிலைநாட்டுவதும் அதன் செயல்திட்டங்களில் முக்கியமானதொன்றானது. எனவேதான் அந்நோக்கத்திற்கு எதிராக இலங்கை அரசு நடந்து கொள்கிறபடியால் உலகெங்கும் வாழ்கிற தமிழ்மக்கள் ஐ.நா. மன்றத்தை தங்கள் பாதுகாவலனாக நினைத்து முறையிடுகிறார்கள்.

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாடுகளுக்கிடையே சச்சரவுகள் எழுந்தன. அப்போது ஐ.நா. உலகில் போரை தவிற்க முயன்றது. பிற்பகுதியில் கம்யூனிசம் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு என்கிற வகையில் நாடுகள் அணி திரண்டன. அப்போது ஐ.நா.வின் பணி போர் சூழல் நிலவும் பகுதியில் பதட்டத்தை தவிர்ப்பதாக இருந்தது. 1990களுக்கு பிறகு உள்நாடுகளில் ஆயுதப்போராட்டம் தலைதூக்குகிறது. அதற்கு காரணம் அந்தந்த நாடுகளின் இன, மத, பிரதேச, துவேசமுள்ள சர்வாதிகார அரசாட்சி. சமீபத்தில் அரேபிய ஆப்பிரக்க நாடுகளில் நடந்த புரட்சிகளின் காரணம் இதுதான். இப்போது ஐ.நா. தடுக்கவேண்டியது தன் உறுப்பு நாடுகள் தங்கள் உள்நாட்டு மக்களிடையே நடத்தும் போர் வன்முறைகளையே ஆகும்.

இலங்கை விவகாரத்தில் ஐ.நா. தன் நோக்கத்தை நிறைவேற்றத் தவறுகிறது. அரசுகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு உலக மக்களின் உரிமைகளை பின்னுக்குத் தள்ளுகிறது. எனவே அடுத்த கட்டமாக ஐ.நா.சபை அரசுகளின் சபையாக இருக்கும் நிலையைமாற்றி உலக மக்களின் சபையாக மாற்றவேண்டிய அவசியம் எழுகிறது. ஆகையால் உலக மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கிற பொறுப்பும், தகுதியும், தன்மையும், அதிகாரமும் மிக்க மன்றமாக ஐ.நா.வை மாற்றும் தேவை இப்போது உணரத்தலைப்பட்டுள்ளது.

மாற்று வழியில் மாணவர் போராட்டம் :-

எனவே உலக அரசுகளின் ஆதரவைப் பெற்று அக்குரலை ஐ.நா.வில் ஒலிக்கச் செய்து ஈழம் வெல்ல எடுக்கின்ற முயற்சிகள் பலன்தரவில்லை; தராது என்பது தெளிவு. இந்நிலையை மாற்ற முனைந்தவர்கள் தமிழக மாணவர்கள். அவர்கள் உலக நாடுகளின் கண்துடைப்பு நாடகத்தை முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள். எனவே இராஜிய உறவு முறைகளில் மாற்றம் ஏற்படுத்தி உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்தி ஈழம் வெல்ல வைக்கலாம் என்கிற நம்பிக்கை வீண் என்பதை உணரச்செய்தார்கள். ஏனெனில் உலக நாடுகளுக்கும் ஐ.நா.விற்கும் உண்மை தெரியத்தான் செய்கிறது. ஆனால் அதன்படி செயல்படத் தயாரில்லை என்பது தெளிவான பின் புதிதாக உண்மையை உணரச்செய்வதில் பொருள் இல்லை.

எனவே உலக நாடுகளை விட்டு விட்டு உலக நாட்டு மக்களை, மனிதநேய உணர்வாளர்களை உதவிக்கு அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நேரடியாக ஐ.நா.வை உலக நியாயவான்களே கேள்வி கேட்கும் வழிமுறையை உலகுக்குத் தெரியப்படுத்துகிறார்கள் இந்த மாணவர்கள். உலகில் பிறந்த மனிதன் என்கிற வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் உணர்வை அதிகாரத்தை செயல்படுத்த வைக்கும் முயற்சி இது. ஐ.நா.மன்றம் உலக நாடுகளின் முகவராக செயல்படும் நிலையை மாற்றி எந்நாட்டவராக இருந்தாலும் உலகில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் முகவராக செயல்படும் நிலைக்கு தரம் உயர்த்தும் முயற்சியை மாணவர்கள் வலுவாகத் துவக்குகிறார்கள்.

மாணவர்; மக்கள் போராட்டங்களின் தன்மை :-

உலக அரசாங்கங்களின் சட்டதிட்டம், சட்டநடைமுறை சிக்கல், வரட்டு வாதம், நீதியற்ற போக்கு, அரச அதிகாரம், நயவஞ்சகக் கூட்டு என எல்லாவற்றையும் தகர்த்தெறியும் வலிமை மக்கள் சக்திக்கு உண்டு. நீதியை நாடும் பெருந்திரளான மக்களின் எதிரே எந்த அதிகாரமும் போலி சட்ட ஒழுங்கும் நிற்க இயலாது. இதற்கு உலக வரலாற்றில் பலப்பல நிகழ்வுகள் சாட்சிகளாக உள்ளன. சமீபத்தில் லோக்பால் மசோதா இந்திய பாராளுமன்றத்தில் நுழைந்த விதம் ஒரு உதாரணம்.

 ஈழ விவகாரத்திலும் உலக அரசுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு பதில் உலக மக்களின் ஆதரவைத் திரட்டுவது என்பதே சரியான வழி. இன, மத, நிற, மொழி, பிரதேச, தேசிய எல்லைகளைக் கடந்து மனித நேயத்தோடு போராடும் மனித உரிமைப் போராளிகள், நாளைய உலகம் அறிவிற்கொவ்வாத சண்டை சச்சரவில்லாத உலகமாக இருக்கவேண்டும் என விரும்புகிற உலக மாணவ சமுதாயம், அறவழிகளில் போராடும் சிறுபான்மை இன அமைப்புகள், இந்நிலையை ஆதரிக்கும் நாடுகள், உலகப்பொது அமைப்புகள், எல்லோரையும் துணைக்கழைக்கும் போராட்டமே அடுத்த கட்டப் போராட்டமாகும். இந்த சக்திகளை ஒன்றினைக்கும் வழிகளை, எளிய ஆனால் மிக வலிமையான போராட்ட வடிவங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும். இனி அந்த அழுத்தமே ஐ.நா.வை செயல்படவைக்க இயலும்.

அதன் தொடர்ச்சியாக, ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வை வலியுறுத்தி (தமிழ்நாட்டு அரசையோ, இந்திய கூட்டாட்சி அரசையோ அல்ல) ஈழத்தில் பெருமளவு இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்ட நாளான மே மாதம் 18ல், தமிழீழ விடுதலைக்காக மாணவர்கள் மாவட்ட தலைநகர்களில் அணிதிரண்டு பேரணி செல்கிறார்கள்.

புலம்பெயர் தமிழ் மாணவர்களை துணைக்கொண்டு இனி உலக மாணவ சமுதாயத்திற்கு ஈழக்கொடுமையை தடுத்துநிறுத்த வேண்டிய அவசியம் பற்றி பரப்புரை செய்வார்கள். அணிதிரட்டுவார்கள். உலக சிறுபான்மையின மக்களை ஒன்றிணைப்பார்கள். உலக மனித நேயப் பற்றாளர்களை, அமைப்புகளை, அமைதியை விரும்பும் நாடுகளை ஒன்று திரட்டி, ஐ.நா.மன்றத்தை உலக மக்களின் உரிமைகளைக் காக்கும் மாமன்றமாக தரம் உயர்த்துவார்கள்.

ஈழம் வெல்வார்கள்!  மானுடம் வெல்வார்கள்!

- க.சிவசங்கர் - 9444831802

Pin It