தாராளமயமாக்கலும், தனியார்மயமாக்கலும், உலகமயமாக்கலும் உலகை ஆட்டிப்படைத்து நிலைகுலைய வைக்கின்றன. இவற்றுக்கு ஈடாக, உலக வர்த்தக அமைப்பும், உலக வங்கியும் பன்னாட்டு நிதி நிறுவனமும் உலக நாடுகளைச் சுரண்டிச் கொள்ளையடித்துக் கூறுபோடுகின்றன,

 அமெரிக்கா, உலகமயக்கொள்கைகளைப் பல நாடுகளில் அமல்படுத்தி, தமது ஆதிக்கத்தையும், பொருளாதாரக் கொள்ளையையும் பூமி எங்கும் பரப்பி வருகிறது.

 உலகமயமாக்கலின் உண்மை நிலையையும், சமூக, பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் அது ஏற்படுத்தி வருகின்ற பாதிப்புகளையும் உலகம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் !

 அமெரிக்கா, வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றிச் சுரண்டுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது, இது உலகறிந்த ரகசியம், அது, குவைத் - ஈராக் போரில் தலையிட்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடித்தது. அமெரிக்கா தன் இராணுவத்தை அனுப்பி, ஈராக் நாட்டு மக்களைப் படுகொலை செய்தது. எதிர்த்துப் போராடிய ஈராக் நாட்டு அதிபர் சதாம் உசேனைக் கைது செய்து தூக்கிலிட்டுச் சாகடித்தது. அங்கு, தமக்கு ஆதரவான பொம்மை அரசை ஏற்படுத்தியது. இன்றும் லட்சக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்களை ஈராக்கில் நிலை நிறுத்தி, தனக்கு எதிரான போராட்டத்தை நசுக்கி வருகிறது.

 பின்லேடனை பிடிக்கிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது படைகளை அனுப்பி அங்குள்ள தாலிபான்களைத் தேடித்தேடி ஒடுக்கி வருகிறது. இசுலாமியர்கள் வாழும் நாடுகளைச் குறிவைத்து அது தாக்குதல் தொடுப்பதற்கு மூல காரணம், எண்ணெய் வளம், தான் என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.

 உலகமயமாக்கல் என்னும் ஊதாரிக் கொள்கையினால் மூன்றாம் உலக நாடுகளும், வளரும் நாடுகளும் வறுமையின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. உலக மக்கள் தொகையின் பெரும் பகுதியினரான இசுலாமியர்களும் சொல்லொணா இன்னலுக்கு ஆளாகி இடர்ப்படுகின்றனர்.

 ‘பொருளாதார – தாராளமயமாக்கல்’ என்னும் கொள்கை இந்தியாவில் 1990களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் நமது நாட்டின் மிகப் பரந்த சந்தையைக் குறிவைத்து இந்தியாவிற்குள் நுழைந்தன. இந்தியா பன்னாட்டு நிறுவனங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்தியும், விற்பனையை விரிவாக்கியும், இந்திய மக்களை அவற்றுக்கான ‘நுகர்வோராக’ மாற்றியது. அதன் மூலம் கொள்ளை இலாபம் கொடிகட்டிப் பறந்தது. பி.வி.நரசிம்மராவ், பி.ஜே.பி.யின் பிதாமகர் அடுத்து வந்த வாஜ்பாயி, அதையே விரும்பினார்! தற்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், நடுவண் அமைச்சக ஆலோசகர், அலுவலியா ஆகியோரும் உலகவங்கியின் தீவிர பக்தர்களாக விளங்குகின்றனர்.

 உலகமயமாக்கல் நவீன இயந்திரங்களையும், தானியங்கி இயந்திரங்களையும் புகுத்தி வேலைவாய்ப்புகளை வேரறுத்துவிட்டது.

 இந்தியாவில் ஒரு கோடி இசுலாமிய இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். சில இலட்சம் இசுலாமிய இளைஞர்கள் வளைகுடா நாடுகளிலும், மற்றய தேசங்களிலும் உழைக்கும் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். படித்து முடித்த இசுலாமிய இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற முடியாத நிலை நாளும் அதிகரிக்கிறது!

 இந்தியாவில் இசுலாமியர்கள் மிக அதிக அளவில் கல்வி பெறும் வாய்ப்பு இழந்து வேலைகளின்றி வெறுமனே தவிக்கின்றனர். இந்த உண்மையினை, நீதிபதி சச்சார் குழுவின் நெடிய அறிக்கை தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளது.

 பணம் படைத்தவர்கள் மட்டுமே கல்வி பெற முடியும் என்பதால் ஏழைகள் கல்வி பெற உரிமையும் வாய்ப்புகளும் பெறாத நிலையில், இசுலாமியர்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி மறுக்கப்படும் நிலையே தொடர்ந்து நிலவுகிறது.

 உலகமயம், இளைஞர்களின் உழைப்பை குறைந்த கூலிக்கு உறிஞ்சுகிறது. இளைஞர்களை உயர் இலக்கு இல்லாதவர்களாக, ஆக்கி அலைக்கழிக்கிறது. போராட்ட உணர்வு அற்றவர்களாக்கிப் போட்டு மிதிக்கிறது. புதிய உலகம் படைக்க வேண்டும் என்ற கனவுகளையும், நம்பிக்கைகளையும் தகர்த்துத் தரைமட்டமாக்குகிறது. கேளிக்கைகளிலும், மது போதையிலும், ஆடம்பர மோகங்களிலும் இளைஞர்களைத் தள்ளி மூழ்கடிக்கிறது!

 மொத்தத்தில், ‘உலகமயம்’ நம் இளைஞர்களை ‘எடுப்பார்கை’ப் பிள்ளைகளாக ஆக்கிவருகிறது! ‘அரசியல் வேண்டாம், போராட்டம் வேண்டாம், கொள்கை, கோரிக்கைகள் வேண்டாம்’ என்பன போன்ற மனோ விகாரங்களுடன்  பிற்போக்குத் தனங்களை அற்புதமாகவே விதைத்து வருகிறது! நாட்டுப் பற்று இல்லாத நடைப்பிணங்களின் ஊர்வலத்துக்கே உலகமயம் உதவுகிறது.

 அரசியல் சீரழிவு, பொருளாதார ஏற்றத் தாழ்வு, கலாச்சார சீரழிவு, பண்பாட்டுப் பகைமை, பதவி வேட்டை முதலியவைகளை மதங்களையும், நாடுகளையும் தாண்டி உலகமயம் உருவாக்கிவருகிறது.

 உலகமயம், அரசியலை மட்டும் அல்லாது ஊழலையும் உலகமயமாக்கிவிட்டது. அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க வாக்களிக்கும் மக்களுக்குப் பணம் கொடுப்பதும், மது வழங்குவதும் அதன் அன்றாட நடைமுறையாகிவிட்டது. சனநாயகத்தைப் பணநாயகம் வெல்லும் என்பதை ‘உலகமயம்’ ஊர்ஜிதப்படுத்துகிறது.

 உலகமயக் கொள்கையின் ஒரு பெரும் கிளையாக தகவல் தொழில் நுட்பம் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், இணைய தளங்கள் வாயிலாக ஆக்கபூர்வமான அறிவியல் வளர்ச்சியைவிடவும் பண்பாட்டைச் சீரழிக்கும் பாலியல் காட்சிகளே விளம்பரங்களாய் வெளிச்சமிடுகின்றன. மேற்கத்திய அமெரிக்கப் பண்பாட்டுத் தாக்குதல்கள், உலகெங்கும் உள்ள பல்வேறு உயர்ந்த பண்பாடுகளைப் பாழடித்துக் குழிதோண்டி புதைத்து வருகின்றன. ஒற்றைக் கலாச்சாரத்தை, அதாவது சீரழிந்து சிதலமாகிக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கலாச்சாரத்தை, உலகமக்கள் மீது ஊன்றித் திணித்து வருகிறது. இந்த உலகமயம்!

 குறிப்பாகவும், சிறப்பாகவும், இசுலாமிய மார்க்கத்தின் சமத்துவம், மனித நேயம், சகோதரத்துவம் முதலிய உயர்பண்புகளை அழித்துவருகிறது உலகமயம்!

 தாய்மொழியைத் தகர்த்து ஆங்கிலத்தைத் திணிக்கிறது. சீர்மிகு குடும்ப அமைப்புகளையும் அடித்து நொறுக்கி அலைக்கழித்து வருகிறது! உலகமயத்தின் விளைவுகள், சுய நலத்தையும், குறுகிய மனோபாவத்தையும், லாப வெறியையும் வளர்க்கிறது. தனிநபர் சுதந்திரம், தனிநபர் உரிமை, தனிநபர் நலன் என்று கூறி, சமூக நலன்களை குழி தோண்டிப் புதைக்கிறது.

 “உலகமயமாக்கல் என்பது உண்மையில் மற்றெல்லாப் பண்பாடுகளுக்கும் எதிரான போர்ப்பிரகடனம் ஆகும். உலகமயமாக்கல் என்கிற பெயரில் தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுத் தாக்குதலுக்கெதிராகத் தத்தமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்கான போரில் ஒவ்வொரு உலகக் குடிமகனும் பங்கேற்றே ஆக வேண்டும். இங்கு எவரும் அப்பாவியான பார்வையாளராக முடங்கி இருக்க முடியாது!

 உலகின் புகழ்பெற்ற, தொன்மையான பழஞ்சிறப்புமிக்க பண்பாடுகள் பாழாவதை எப்படி மௌனமாகச் சகித்து கொள்ள முடியும்? கண்முன்னால் பண்பாட்டு மாண்புகள் அடித்து நொறுக்கப்படுவதை எவரால் தாங்கிக் கொள்ள முடியும்? உலகமயமாக்கலினால் வறுமை ஒழியும், பாதுகாப்பு கிடைக்கும் என்று முதலீட்டு மூலவர்கள் பதில் சொல்கின்றார்கள். பன்னாட்டு நிறுவன அதிபர்களிடம் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற மகத்தான திறமை குவிந்து கிடப்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. செல்வம்தான் எல்லாமே. செல்வத்திற்கு முன்னால் எல்லாவகையான சிந்தனைகளும், எண்ணங்களும், கருத்தோட்டங்களும், இன்னும் அனைத்துவிதமான பொழுது போக்குகளும் - எல்லாமே கால் தூசுக்குச் சமம்.
வாழ்க்கையின் பொருள் என்ன என்கிற தேடலுக்குக் கூட இங்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என கொரிய நாட்டு எழுத்தாளர் ஜெரீமி சி புரூக் உலகமயம் குறித்து கருத்துரைத்துள்ளார்.

இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் சிறு வியாபாரிகளாக, தொழிலாளர்களாக கைவினைஞர்களாக, குடிசைத் தொழிலில் ஈடுபடுபவர்களாக, சிறு விவசாயிகளாக உள்ளனர். உலகமயக் கொள்கைகளின் ஒட்டுமொத்த தாக்குதலில் சிறுதொழில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. சில்லரை வர்த்தகம் பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்பட்டுவருகிறது. குடிசைத் தொழில்கள் குப்பை மேட்டில் தள்ளப்பட்டுவிட்டன. இதனால் கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்வுரிமைகளையும் இழந்துவிட்டனர். வறுமைச் சேற்றில் தள்ளப்பட்டு புதையுண்டு விட்டனர்.

 இசுலாமியர்கள் அதிகம் ஈடுபட்டுள்ள தோல்பதனிடும் தொழில், தோல் பொருள் உற்பத்தி, பூட்டுத் தயாரிப்பு, இரும்புப் பெட்டி தயாரிப்பு, ஆயத்த ஆடை தயாரிப்பு முதலியத் தொழில்கள் உலகமயத்தால் முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றன. அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டு தடுமாறும் நிலையில் உள்ளன.

 இசுலாமியர்கள் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் மனித சமத்துவமும் கடின உழைப்பும், கடலில் கரையும் உப்பாகிறது! பெண்களை மரியாதையாகவும், கண்ணியமாகவும், நடத்துகின்ற மாண்பு வாழ்க்கைச் சிதைவில் வற்றி வறண்டு போகிறது! நீதி, நேர்மை, நாணயம், நம்பிக்கை ஆகியவை ஊறுதேடும் உலகமயத்தால், கூர்மை மழுங்கிப் போய் குருடாகி நிற்கிறது!

வாக்குறுதி தவறாமை, மனித உரிமை, எளிமையும், இயற்கையோடு இயைந்த வாழ்வும் நன்றி உணர்வும் நசிந்து சிதைகிறது! ஏழைகளின் நலன் நாடுதல், பொதுநலநோக்கு, பிறர் வாழ உதவுதல் என்பன கனவுலகில் மட்டுமே கைகோர்த்து வருகின்றன. உயர்ந்த மாண்புகளையும் விழுமியங்களையும் அழித்து வருகிறது உலகமயம்!

 இசுலாமிய மார்க்கம், “மனிதனால் கற்பிக்கப்பட்ட அனைத்துவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் முற்றாக அழிப்பது” ஆகும். ஆனால், உலகமயமோ, அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தி மனித சமூகத்தையே அழிப்பது ஆகும்.

மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள், மனிதர்கள் அனைவருக்கும் சம உரிமையும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், அனைவரும் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திட வேண்டும்! இவையே இசுலாத்தின் உயர்ந்த நெறிகள் ….! உலகமயம் என்பதோ, சமூக ஏற்றத்தாழ்வைக் கண்டு கொள்ளாதது! சுரண்டலையும் கொள்ளையையும் சுயமுயற்சி எனப் பாராட்டுவது! நுகர்வு வெறியை ஊட்டி சுயநலத்தில் சொர்க்கம் அமைப்பது! இலாபம் ஒன்றையே இலக்காகக் கொள்வது! தான் நிலைகொள்ள வன்முறையை, சீரழிவை உருவாக்கித் தானே வளர்ப்பது!

 அமெரிக்கா, ‘உலகில் பயங்கரவாதம் பரவுகிறது’ என்று கூக்குரலிடுகிறது. ஆனால், உலக வங்கி மூலம் ‘கடன்’ என்னும் பயங்கரத்தை உலகம் முழுவதும் வளர்த்து வருகிறது.

 “நாங்கள் 1980களில் உலக வங்கியில் வாங்கிய கடன் 5 பில்லியன் டாலர் மட்டுமே. இதுவரை 16 பில்லியன் டாலர் திருப்பிக் கொடுத்துவிட்டோம். ஆனால், இன்னும் 28 பில்லியன் டாலர் பாக்கி இருக்கிறது என்கிறார்கள். உலக வங்கியின் அநியாய வட்டி விகிதம்தான் 28 பில்லியன் டாலர் ஆகிவிட்டது. உலகிலேயே மிகமோசமான பொருள் எது என நீங்கள் என்னிடம் கேட்டால் நான் ஒன்றே ஒன்றைச் சொல்வேன், கூட்டு வட்டிதான் அது!” என நைஜீரியா நாட்டு அதிபர் ஒபாஸஞ்சோ 2002 ஆம் ஆண்டு கூறியுள்ளார்”. பன்னாட்டு நிறுவனங்களும், உலக வங்கியும் கூட்டுவட்டியின் மூலம் உலகின் பல நாடுகளை திவாலாக்கி வருகிறது.

 எனவே, உலகமயமாக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அகிலம் எங்கும் உள்ள மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்! அம்மக்களுடன் ஓரணியாய்த் திரண்டு உண்மையோடும் ஊக்கத்தோடும் போராட வேண்டியது இசுலாமியர்களின் இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.

Pin It