(சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை)

meeeting srilanga 350‘அறிவாயுதம்’ அமைப்பின் சார்பில் நவ.18 ஆம் தேதி தியாகராயர் நகர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் “இனஅழிப்பை சட்டப்பூர்வ மாக்கும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. புகழூர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.

வைகோ, மணியரசன், வேல்முருகன், கவிஞர் காசி ஆனந்தன், ஆய்வாளர் திருநாவுக்கரசு, கா.அய்யநாதன், பேராசிரியர் ஜெயராமன், இராமு மணிவண்ணன், இயக்குனர் கவுதமன், தனியரசு எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரும் பேசினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

ஒவ்வொரு முறையும் இலங்கைப் பேரினவாத அரசு, தன் மீதான சர்வதேச அழுத்தங்கள் வரும் போதெல்லாம் உலக நாடுகளில் கவனத்தை திசை திருப்பு ஒப்பந்தங்கள், சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதும், பிறகுஅவற்றைக் குப்பைக் கூடையில் வீசுவதும் வழக்கமாகிவிட்டது.

இப்போது இலங்கை அரசு அதன் புதிய அரசியலமைப்பில் கொண்டு வரப்பட இருக்கும் மாற்றங்களை முன்மொழிந் திருக்கிறது. இனி எதிர்காலங்களில் ஈழத் தமிழர் தேசிய இனம் தங்களின் அடையாளம் மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவே முடியாது முற்றாக ஒரு இனத்தை ‘உரிமைப் படுகொலை’ செய்யும் பிரிவுகள் இதில் அடங்கியிருக்கின்றன.

இங்கே அந்த சட்டப்பிரிவுகளை பலரும் விரிவாக பேசியிருக்கிறார்கள். நான் இந்த அரசியல் சட்ட உருவாக்கத்தின் பின்னால் நிற்கும் சர்வதேச அரசியல் குறித்து சில  செய்திகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை இனப்படுகொலை அரசாக சர்வதேச சமூகத்தில் பார்க்கப்பட்ட நிலையில் அதிலிருந்து உலகின் கவனத்தை திசை திருப்புவதற்கான முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இனப்படுகொலை அரசு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான வளர்ச்சித் திட்டங்களை நோக்கிப் பயணிப்பதாக உருவகப்பட்டு அதற்கான திட்டங்கள் வகுக்கப் பட்டன. உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக நிறுவனம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இதற்கான திட்டங்களை தயாரித்தனர்.

‘தொலை நோக்கு திட்டம் - 2025’ என்ற பெயரில் (Vision 2025) ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டு, அந்த ஆவணத்தை இலங்கை அதிபர் மைத்திரி பாலசிறிசேனா, பிரதமர் இரணில் விக்ரமசிங்கே இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டனர். இந்த ஆவணத்தில் அடங்கியுள்ள திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்துவதற்கேற்ப இலங்கையின் புதிய அரசியலமைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் அதிகாரிகளே இலங்கையின் புதிய அரசியல் சட்டப் பிரிவுகளை உருவாக்கித் தரும் வேலைகளை செய்திருக்கிறார்கள். ‘தொலைநோக்கு 2025’ ஆவணமும் புதிய அரசியல் சட்டமும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்வதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடியும்.

மோடியின் இந்திய ஆட்சி, இந்த அரசியல் சட்டத்தின் உருவாக்கத்தில் தலையிடாமல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச நிதி நிறுவனங்களின் தலையீட்டை ஏற்றுக் கொண்டு ‘ராஜதந்திரம்’ என்ற போர்வையில் ஒதுங்கி நிற்கிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இலங்கை பிரதிநிதிகள்மற்றும் தமிழ் தேசிய விடுதலை கூட்டணியின் சம்பந்தம் குழுவினர், ஈழத்தில் மக்கள் ஆதரவே இல்லாத சில சர்வதேச தமிழர் அமைப்புகளின் கூட்டம் ஒன்று நடந்தது. ‘இனப் படுகொலை’ அரசின் இராஜபக்சே தலைமையை மாற்றி தேர்தல் நடத்தி, அதில் தமிழர்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கான திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சுமந்திரன், இலங்கை அரசு சார்பில் ஜெயம்பதி விக்ரமரத்னே, புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இராஜபக்சேவுக்கு எதிராக மைத்திரி பால சிறிசேனாவை அதிபராக முன்னிறுத்தி தனிக்கட்சி நடத்திய இரணில் விக்ரமசிங்கேவுடன் உடன்பாட்டை உருவாக்கி தேர்தலை சந்திக்க திட்டம் தயாரானது. இராஜபக்சே எதிர்ப்பை முன் வைத்து தமிழர்களும் பங்கேற்று வாக்களித்தனர். இந்த சூழ்ச்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை ‘தொலைநோக்கு 2025’ ஆவணம் பாராட்டி ‘வரலாற்றுத் திருப்புமுனை’ என்று விவரிக்கிறது. அதே ஆவணம் இலங்கை அரசு மேற்கொண்ட ‘சீர்திருத்த’ நடவடிக்கைகளை பட்டியலிடுகிறது.

“இலங்கை அரசின் மரியாதையை சர்வதேச அரங்கில் உயர்த்தியிருக்கிறோம். சுதந்திரமான விசாரணை ஆணையங்களை உருவாக்கியிருக் கிறோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். கருத்துச் சுதந்திர உரிமையை மீட்டு தந்திருக் கிறோம். அரசியல் சட்ட உருவாக்கத் திலும், மறு சீரமைப்புக்கான நடவடிக்கைகளிலும் மக்கள் கருத்தை கேட்டிருக்கிறோம். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறோம். புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கிட அதற்கான குழுவை உருவாக்கியிருக்கிறோம்” என்று அரசு ‘சாதனை’களை பட்டியலிடுகிறது இந்த ஆவணம்.

சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு ஒரு புதிய பிம்பத்தை கட்டமைக்க தமிழர்களின் இனப்படு கொலைகளை முற்றாக மறைக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டணியின் சம்பந்தம் பிரிவைச் சார்ந்த சுமந்திரன், ஒரு பிரதிநிதியாகச்  செயல்பட்டு வருகிறார்.

அய்.நா.வில் நடக்கும் விவாதங்களிலும் ஈழத் தமிழர் இனப்படுகொலையை திசை திருப்புவதற்கான திட்டமிட்ட சதி அரங்கேறி வருகிறது. அமெரிக்க-அய்ரோப்பிய நாடுகளின் ‘ஏஜெண்டுகள்’ இந்த திசை திருப்பும் முயற்சிகளில் முழு வீச்சில் இறங்கி யிருக்கிறார்கள். ‘இனப்படுகொலை’ குறித்த விவாதங்கள் நடக்கவில்லை. ‘நீதிக்கான மாற்றம்’ என்ற பெயரில் ஈழத் தமிழர் பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன. ‘போர்க் குற்றம்’ என்று வரும்போது இலங்கை அரசு மட்டுமின்றி விடுதலைப் புலிகள் தரப்பிலும் குற்றங்கள் இழைக்கப்பட் டுள்ளதாகவே விவாதிக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் முழுமையான பின்புலத்தோடு நடக்கும் சூழ்ச்சி வலையில் தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமை முற்றாக மறுக்கப்பட்டு ‘அய்க்கிய ராஜ்யம்’ என்ற பெயரில் இலங்கையின் ஒற்றை ஆட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் சட்டத்துக்கு தமிழர்கள் வாக்குகளையும் பெறுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. ‘சமூகப் பொருளாதார சந்தை’ ((Social Market Economy) என்ற பொருளாதாரத் திட்டத்தை முன்னிறுத்தும் தொலைநோக்கு ஆவணத்தில் ‘ஒற்றை இலங்கை’யில் பன்னாட்டு நிறுவனங்களின் வணிக சுரண்டலுக்கு திட்டமிடப்படுகிறது. அரசு தனியார் கூட்டு நிறுவனங்களை உருவாக்கும் முயற்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு தொடங்கிவிட்டது.

இந்திய அரசு தந்த அழுத்தத்தால் இலங்கையில் 13ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.  மாகாண கவுன்சிலுக்கான தேர்தல்கள் நடத்தப் பட்டன. 13ஆவது சட்டத் திருத்தம் மாகாண கவுன்சிலுக்கு வழங்கிய உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் சுட்டிக் காட்டி வருகிறார். மக்கள் வாக்கெடுத்து தேர்ந்தெடுத்த மாகாண அரசுகள் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதை தட்டிக் கேட்க இந்திய அரசு தயாராக இல்லை. 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழியாக தமிழர்களுக்கு உரிமைகள் மீட்டுத் தரப்பட்டுள்ளன என்று இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்களும் வெளியுறவுத் துறை பார்ப்பன அதிகாரிகளும் பொய்யாக பெருமை அடித்துக் கொண்டார்கள். இப்போது அந்த சொற்ப உரிமைகளும் பறிக்கப் பட்டு, புதிய அரசியல் சட்டம் அறிமுகப்படுத்தப் படும்போது, இந்திய ஆட்சி மவுனம் சாதிக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் பார்ப்பன அதிகாரவர்க்கம், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஒடுக்கும் கொள்கையை மட்டும் அப்படியே மாறாமல் பின்பற்றிக் கொண் டிருக்கின்றன.

2002ஆம் ஆண்டு நார்வே தலையிட்டது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கு மிடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. நார்வே பிரதிநிதி எரிக்சோல்ஹிம் - இரு தரப்பினரிடையேயும் பேசி உருவாக்கிய ‘ஒஸ்லோ பிரகடனம்’ ஈழத் தமிழர்களுக்கு முழுமையான தன்னாட்சி உரிமையை வலியுறுத்தவில்லை. ஆனாலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டிலுள்ள பகுதிகளை தமிழர் பகுதிகளாக அங்கீகரித்து அங்கே இலங்கை இராணுவம் நுழைவதை தடைப்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், சர்வதேச சூழ்ச்சி வலையில் சிக்கிடாமல் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வுத் திட்டம் ஒன்றை சர்வதேச சட்ட வல்லுநர்களைக் கொணடு தயாரித்து, பிரதமர் இரணில் விக்ரமசிங்கேயிடம் அளித்தது. அப்போது அதிபராக இருந்த சந்திரா குமாரதுங்கா, இத் திட்டத்தை சீர்குலைத்தார். இப்போது அரசியல் தீர்வுக்கு தமிழர்கள் சார்பில் முன் வைக்கக்கூடிய சரியான அரசியல் தீர்வுத் திட்டம். விடுதலைப் புலிகள் தயாரித்த திட்டமாகவே இருக்க வேண்டும். அதை முன்னிறுத்த வேண்டும்.

வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து விலகி நின்று தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான குரலை அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒலித்து வருகிறார். ஈழத்தில் நடந்தது இனப் படுகொலைதான் என்றும் போர்க் குற்றத்துக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாகாண அரசின் இத்தீர்மானத்தை புறக்கணித்துவிட முடியாது.

இலங்கைக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணிகளில் இந்தியா விலகி நின்று அமெரிக்க அய்ரோப்பிய நாடுகளில் சதிக்கு உடந்தையாக இருப்பதால் பிரச்சினையை மீண்டும் இந்தியாவின் பக்கம் திருப்பும் முயற்சிகளில் விக்னேசுவரன் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்ட வேண்டும். 2015 நவம்பரில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வடக்கு மாகாண முதல்வர் ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்களை இலங்கை அரசு பிரதிநிதிகள், வடக்கு-கிழக்கு மாகாண முதல்வர்களை கலந்து ஆலோசித்து உருவாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். சர்வதேச நிதி நிறுவனம் (அய்.எம்.எப்.) பின்னாலிருந்து இயக்கும் சதியை புரிந்த விக்னேசுவரன், யாழ்ப்பாணத்தில் அன்னிய முதலீடுகளைக் குவிக்கும் அய்.எம்.எப். அமைப்பை தயாரித்த புதிய திட்டத்தை இரணில் விக்ரமசிங்கே பரிந்துரைத்தபோது அதற்கு உடன்பட மறுத்து, தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விக்னேசுவரனை முதல்வர் பதவியி லிருந்து நீக்க முயற்சிகள் நடந்தன. யாழ்ப்பாண மக்களின் ஆதரவு பலத்தால் அது முறியடிக்கப் பட்டது.

பிரச்சினையை அமெரிக்க அய்ரோப்பிய பிடியிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி ஏற்கனவே இந்திய ஆட்சி தந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தியாவுக்கு அழுத்தம் தர வடக்கு மாகாண முதல்வர் கருதிய நிலையில் தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதியான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் இந்தியா தலையிட்டு இலங்கைக்கு அழுத்தம் தருவதை தமிழ் தேசிய கூட்டணி விரும்பவில்லை என்று அறிவித்து, அமெரிக்க அய்ரோப்பிய ‘ஏஜென்சிகளின்’ ஒற்றை இலங்கையை உருவாக்கும் திட்டத்துக்கே மறைமுக ஆதரவினை வெளிப்படுத்தினார்.

சர்வதேச நிதி நிறுவனங்களால் அதன் சந்தைப் பொருளாதார இலாபத்துக்கேற்ப ஈழத் தமிழர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு, ‘அய்க்கிய ராஜ்யம்’ உருவாக்கும் முயற்சிகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை நாம் வலியுறுத்துவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்பெயின் நாட்டிலிருந்து கேட்டலோனியா மாநில மக்கள் தங்களுக்கு தாங்களே வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து போகும் முடிவை அறிவித்துள்ளார்கள். ஸ்பெயின் நாடாளுமன்றம் இந்த வாக்கெடுப்பை ஏற்க மறுத்திருக்கிறது. இத்தாலியில், ஏற்கனவே தனி நாடாக இருந்த லம்பார்டி ((Lombardy), வென்டோ (Vento) என்ற இரு மாநிலங்கள் தங்களுக்கு தாங்களே வாக்கெடுப்பு நடத்தி  ஸ்பெயினிலிருந்து பிரிந்து போவதாக அறிவித்துள்ளன.

ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியான குர்து பகுதியில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி குர்து தேசிய இனமக்கள் தங்களுக்கு தாங்களே வாக்கெடுப்பு நடத்தினர். ஈராக்கிலிருந்து குர்தீஸ்தான் பகுதி பிரிந்து போவதற்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈராக், ஈரான், துருக்கி நாடுகள் இதை எதிர்க்கின்றன. ஈரான், துருக்கியிலும் குர்து இன மக்கள் வாழ்கிறார்கள். அமெரிக்காவும் எதிர்க்கிறது. இஸ்ரேல் ஆதரிக்கிறது. வரலாற்றில் முதல்முறையாக சுதந்திர குர்தீஸ்தான் நாடு உருவாகும் முயற்சி தொடங்கிவிட்டதில் அம்மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.  ஆக அய்ரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த நாடுகளிலும் மேற்காசிய நாடுகளிலும் தன்னாட்சிக்காக வாக்கெடுப்புகள் நடக்கும் அரசியல் சூழலில் தமிழீழ பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு கோரிக்கை நடைமுறைக்கு எதிரானது என்று புறக்கணித்துவிட முடியாது என்பதற்காக இதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஆனாலும், ஈழத் தமிழர்களின் தனித் தாயக கோரிக்கை மாகாண கவுன்சிலாக சுருங்கி அதுவும் அழிக்கப்படுகிறதே என்று குரல் கொடுக்கும் நாம், நமது தமிழ்நாடு ஈழத்து மாகாண கவுன்சில்களைவிட மோசமான நிலையிலிருப்பதை நினைக்கும்போது நமக்கு ஈழத் தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்ற குற்ற உணர்வே மேலிடுகிறது.

தமிழ்நாடு தேர்வாணையம் தமிழ்நாட்டு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பில் தமிழ் தெரியாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுதுமிருந்தும் விண்ணப்பிக்கலாம். நேபாளம், பூட்டான் நாட்டைச் சார்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருக்கிறதே நாம் என்ன செய்ய போகிறோம்? நாம் இறையாண்மையுள்ள ஒரு மாநிலத்தில்தான் வாழ்கிறோமா? - என்று விடுதலை இராசேந்திரன் கேட்டார்.

Pin It